பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 8 மார்ச், 2016

கூரை வீட்டு கோடீஸ்வரி !

கானா கைக்காட்டியில் முக்கியச் சாலையில் இருந்து காட்டுப்பிரிங்கியம் திரும்பியது கார். சாலை பிரிவு திருப்பத்தில் ஒரு மூதாட்டி நின்றுக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்தவுடன் அண்ணன் பாலு என்னைத் தொட்டார். உணர்ந்து காரை நிறுத்தச் சொன்னேன்.

அது கழகத்தில் புதிதாக இணைந்தவர்களை சந்திக்கும் நிகழ்ச்சிக்கானப் பயணம். அரியலூர் தொகுதி. கடந்த பிப்ரவரி 28அன்று, அண்ணன் அரியலூர் பாலு அவர்கள் தலைமையில் 5,000 பேர் கழகத்தில் இணைந்தனர். அரியலூர் ஒன்றியத்தில் கடந்த 28ஆண்டுகளாக மக்கள் பணியாற்றியவர்.

இவரது துணைவியார் அருணா அவர்கள் அரியலூர் ஒன்றியக் குழு தலைவராக பணியாற்றியவர்.  தலைவர் கலைஞர் தான் சமூக நீதிக் கொள்கைக்காக உழைக்கும் தலைவர் என தன்னை கழகத்தில் இணைத்துக் கொண்டார் அண்ணன் பாலு அவர்கள்.

கழகத்தின் கொள்கைபரப்பு செயலாளர் அண்ணன் ஆ.ராசா அவர்கள் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். அரியலூர் கீதா மஹால் திணறிப் போனது. உணர்ச்சிமயமான விழாவாக அமைந்தது. அண்ணன் பாலு அவர்களது மக்கள் பணிக்கு சரியான அங்கீகாரம் கிடைத்தது என அவரோடு இணைந்தத் தோழர்கள் மகிழ்ந்தனர்.

வந்த அவ்வளவு பேருக்கும் துண்டு அணிவித்து வரவேற்க, வந்திருந்த
தோழர்களின் எண்ணிக்கை அனுமதிக்கவில்லை. அவ்வளவு கூட்ட நெரிசல். அதனால் ஒவ்வொரு ஊராக சென்று கழகத்தில் இணைந்தவர்களுக்கு கருப்புசிவப்பு மப்ளர் அணிவிப்பது எனத்தான் இந்தப் பயணம்.

திருப்பத்தில் காரை நிறுத்தி இறங்கினோம். மூதாட்டி,"வாப்பா பாலு" என்று வரவேற்றார். 85 வயது இருக்கும். ஆனால் வயதைத் தாண்டிய உறுதியோடு இருந்தார். அவர் கையில் ஒரு தட்டு இருந்தது. அதன் மீது ஒரு கைத்தறித் துண்டு இருந்தது. தட்டின் ஓரத்தில் திருநூறு தெரிந்தது.

என்னைப் பார்த்த மூதாட்டி தட்டில் இருந்து திருநூற்றை எடுத்து நெற்றியில் இட்டு ஆசிர்வதித்தார். "கலைஞர் ஜெயிப்பாரு. ஜெயிக்கனும்", என்றார். அருகில் இருந்த அண்ணன் பாலு, அரியலூர் ஒன்றிய செயலாளர் ஜோதிவேல், நகர செயலாளர் முருகேசன், அவைத் தலைவர் சந்திரசேகர்  ஆகியோருக்கும் திருநூறு இட்டார்.

"இவர் தனக்கோடி அம்மாள். அண்ணா காலத்தில் இருந்து திமுகவிற்கு வாக்களிப்பவர். உள்ளாட்சித் தேர்தலில் அண்ணன் பாலுவுக்கு வாக்களிப்பார்கள். வள்ளலார் கொள்கையில் ஈடுபாடு கொண்டவர். தைப்பூசத்தின் போதும், கோடையிலும் வீட்டின் முன் தண்ணீர் பந்தல் அமைத்து மக்களுக்கு உதவுவார்" , என்று வீட்டைக் காட்டினார்.

முக்கத்திலேயே ஒரு கூரை வீடு. ஏழ்மை நிலை.  கையில் இருந்த தட்டை அருகில் இருந்தவரிடம் கொடுத்து விட்டு, துண்டை எடுத்து எனக்குப் போர்த்தினார். தட்டில் மூன்று நூறு ரூபாய் நோட்டுகள் இருந்தது. தட்டில் இருந்தப் பணத்தை எடுத்து என் கையில் கொடுத்தார். நான் அவர் சூழ்நிலையை யோசிக்க, அவரோ மீண்டும் திணித்தார்," ஜெயிக்கனும்பா".

வழக்கமாக இது போல் ஆரத்தி எடுத்தால், அந்தத் தட்டில் பணம் வைப்பது தான் வழக்கம். இங்கோ நிலைமை தலைகீழ். ஏழ்மையிலும் கொடை. வாடியப் பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலார் கொள்கையை கடைபிடிப்பவர் அல்லவா.

# கூரைவீட்டு தனக்கோடி, மனதால் கோடீஸ்வரி !