பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 21 ஜூன், 2016

ப்ராப்தி

ப்ராப்தி...
-------------------

(அந்திமழை மாத இதழிலும், விகடன் மின்னிதழிலும் வெளிவந்துள்ள எனது பத்தி)

நல்லா சேவிச்சுக்குங்கோ. மீனாட்சி சுந்தரேஸ்வர் அருள் பாலிப்பார். இது சோழர்களோட படைத் தளபதிகள் பழவேட்டரையர்களால் கட்டப்பட்ட கோயில். ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது". இந்தக் கோயில் அரியலூர் மாவட்டம், மேலப்பழூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இது நான் வேட்பாளராக வாக்கு சேகரிக்க சென்ற போது நடைபெற்ற சம்பவம்.

சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றதில் இருந்தே ஊராட்சி செயலாளர் ரவி அழைத்துக் கொண்டிருந்தார். அறநிலையத் துறை மூலம் புனரமைப்பு பணிகள் நடைபெற முந்தைய ஆட்சிக் காலத்தில் பரிந்துரைத்தவன் என்ற முறையில் அழைத்திருந்தார். ஆனால் நேரம் அமையவில்லை. வாக்கு சேகரிக்க சென்ற போது, கோயிலுக்கு அழைத்து சென்றார்.

அரியலூர் மாவட்டம் முழுதும் ராஜேந்திர சோழன் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட பகுதி. ஊர் பெயர்களும் வரலாற்றோடு தொடர்புடையதாகத் தான் இருக்கும். எங்கு நோக்கினும் சோழர்காலத்து புராதனக் கோயில்கள் தான். இந்தக் கோயில்களால் மக்களும் பக்தி மயம் தான்.

மேலப்பழூர் பழவேட்டரையர்களின் தலைநகராக விளங்கிய ஊர் அருகில் உள்ள ஊர் மலத்தான்குளம். இங்கு உள்ள பெரியகுளம், மலத்தான் என்ற சோழ தளபதியால் வெட்டப்பட்டதாக வரலாறு. அடுத்து உள்ள 'அயன்சுத்தமல்லி' கிராமம் சோழ அரசி 'சுத்தமல்லி' பெயரால் ஏற்படுத்தப்பட்டதாகும். இங்கும் ஒரு புராதனக் கோயில் உள்ளது.

இந்த சோழர்காலத்து கோயில்கள் மாத்திரமல்லாமல் ஊருக்கு ஊர் தற்காலக் கோயில்களும், குல தெய்வக் கோயில்களும் நிரம்ப உண்டு. இப்போதும் புதிதாகக் கோயில்கள் கட்டப்படுகின்றன. இந்தக் கோயில்களில் திருவிழாக்கள், நாடகங்கள் என இன்னும் அரியலூர் தொகுதி பழமை இழையோடவே இருக்கிறது.

நாடகங்கள் என்றால் மூன்று நாட்கள் விமர்சையாக நடக்கும். ஊர் கூடி நடத்துவார்கள். வீட்டுக்கு வீடு உறவினர்களை அழைத்து கொண்டாடுவார்கள். அனைத்துக் கட்சியை சேர்ந்தவர்கள் பெயரும் அழைப்பிதழில் அச்சிடப்படும். ஒவ்வொரு கட்சியை சேர்ந்தவர்களும் தங்கள் கட்சியை சேர்ந்தவரை நாடகத்திற்கு அழைத்து சிறப்பிப்பார்கள்.

இறை மறுப்புக் கொள்கையாளன் என்றாலும் பொதுமக்கள் அழைக்கும் போது, பொதுவாழ்க்கையில் இருப்பதால் கோயில்களுக்கு சென்று தான் ஆக வேண்டும். பூசை, படையல் நடக்கும்.  விபூதி, குங்குமம் வழங்கப்படும். பரிவட்டம் கட்டப்படும். கும்ப மரியாதை கொடுக்கப்படும். அவற்றை ஏற்றுக் கொண்டு தோழர்களையும், மக்களையும் மதிக்க வேண்டும்.

ஒவ்வொரு ஊரிலும் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். மாரியம்மன், பிள்ளையார், முருகன், சிவன், பெருமாள், வீரனார், கருப்புசாமி கோயில்கள் என எங்கும் விட்டு வைக்கவில்லை. சர்ச், பள்ளிவாசலும் பாக்கி இல்லை.

திருமானூர் ஒன்றியம் பெரியமறை கிராமத்திற்கு சென்றோம். இங்குள்ள சீனிவாசப் பெருமாள் கோயில் பிரசித்தி பெற்றது. கோயிலின் பழைய தர்மகர்த்தா தயாராக இருந்தார். கோயில் பட்டரையும் தயாராக வைத்திருந்தார். பட்டர் மந்திரங்களை ஓதினார். சிலவற்றை தமிழிலும் சொன்னார்.

கோவிலின் பெருமைகளை சொன்னார். பெருமாள் அருமைகளை விவரித்தார். "சீனிவாசப் பெருமாள் இங்கு தம்பதி சமேதராக காட்சியளிக்கிறார். உடல்நலன் காக்கக் கூடியவர்" , என்றார். அந்த கர்ப்பகிரகம் மிகக் குறுகலானது. காற்றோட்டம் இல்லை. குளித்து வந்தது போல் தலை முதல் பாதம் வரை வியர்வை பெருக்கெடுத்து ஓடியது.

"இந்த வியர்வையிலேயே உடல் நலம் பெற்றிடும் போல", என்றார் ஒன்றிய செயலாளர் அண்ணன் கென்னடி. "இதுவரை பல தொகுதிகளில் இருந்து முப்பதுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வந்துட்டாங்க", என்றார் பட்டர். "ஆமாம்ணே புகழ் வாய்ந்த கோயில் இது" என்றார் மாவட்ட துணை செயலாளர் தனபால்.

"இந்தப் பட்டர் ஆகமத்தில் பி.எச்டி செய்தவர். பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்", என்றார் தனபால். பட்டரும் டிரண்டியாக கண்ணாடி அணிந்து ஸ்டைலாக இருந்தார். தலையில் 'ஜடாரி' வைத்தார். துளசி இலைகளை வழங்கினார். தீர்த்தம் அளித்தார். குங்குமம் கொடுத்தார். "ராஜயோகம் பிராப்தி", என்று வாழ்த்தினார்.

தேர்தல் முடிந்து வாக்கு எண்ணப்பட்டது. 2043 வாக்குகளில் வெற்றி வாய்ப்பு பறி போனது. பிராப்தி !

திங்கள், 20 ஜூன், 2016

தோல்வியும் நல்லதே

மறுபடியும் தேர்தல் கதையா என சங்கடப்பட வேண்டாம். ஒரு நண்பர் கூட சமீபத்தில் ஸ்டேடஸ் போட்டிருந்தாரு, "ஏன்யா அந்த இழவயே கட்டிக்கிட்டு அழறீங்க?"அப்படின்னு. வேற வழி இல்ல, இ-விகடன்ல போட்டு உட்டுட்டாங்க நம்ம எலெக்சன் கதைய. அதனால் இத எழுத வேண்டிய கட்டாயம்.

வாக்கு எண்ணிக்கைக்கு முதல் நாள் அசோகன் சார் அழைத்தார். "அந்திமழை" மாத இதழின் ஆசிரியர் அசோகன். நிறைய இலக்கியம் பேசும் புத்தகம் அந்திமழை, கொஞ்சம் கமர்ஷியலும் உண்டு. நம்மையும் கணக்கில் வச்சு, விருந்தினர் பக்கம் எழுத சொன்னார் அசோகன் சார். அதில் எழுத ஆரம்பிச்ச பிறகு, சில முக்கியஸ்தர்கள் கண்ணில் நம்ம எழுத்து சிக்க ஆரம்பிச்சிருக்கு.

முதல்ல அசோகன் சார், பத்தி கேட்டப்ப கொஞ்சம் கிறுகிறுப்பாகத் தான் இருந்தது, பயமாகவும் இருந்தது. அதில் எழுதறவங்க எல்லாம் அப்புடி, இலக்கியவாதிகள், தமிழுலகம் அறிந்த எழுத்தாளர்கள் . இருந்தாலும் சமாளிச்சி ஆறு மாசம் எழுதிட்டேன். இப்படித்தான், இலக்கிய வண்டி மெதுவா ஓடிக்கிட்டு இருக்கு.

17.05.2016. அசோகன் சார் மொபைலில் அழைத்தார். "சார், அடுத்த இரண்டு நாள்ல நிறைய பிசி ஆயிடுவிங்க, அப்ப பேச முடியாது. அதனால தான் இப்பவே கூப்பிட்டுட்டேன். வெற்றி மகிழ்ச்சியில் இருப்பீங்க. இருந்தாலும் மறக்காம பத்தி எழுதிடுங்க. தேர்தல் குறித்து இருந்தாலும் பரவாயில்ல. எப்படியோ எழுத்த மட்டும் விட்டுடாதீங்க".

"சார், எவ்வளவு வேல இருந்தாலும் எழுதி அனுப்புறேன். எழுத்த விட முடியாது சார், அப்படி ஆயிடுச்சி" என்றேன்.

19.05.2016. தேர்தல் முடிவு வந்தது. வெற்றி விழா, தோல்வி விழா ஆனது. நான் முடிவு வருவதற்கு முன்பே தயாராக இருந்தேன், அதனால் எதிர்கொண்டேன். ஆனால் மற்றவர்கள் தயாராக இல்லாத காரணத்தால் துவண்டு விட்டார்கள், தோல்வியால். எதிர்பாராத தோல்வி என்ற காரணத்தால், மீள்வது சிரமமாகிவிட்டது அவர்களுக்கு.

24.05.2016. மாலை அசோகன் சார் அழைத்தார். "சார், பேச சங்கடமாத் தான் இருக்கு. ஆனா நீங்க மீண்டு வரனும். அதற்காகவாவது எழுதனும் சார். ஏதாவது நம்ம புத்தகத்துக்கு எழுதுங்க சார்",என்றார். "சார், நான் எழுதிட்டேன். மெயில் அனுப்பி ஒரு மணி நேரம் ஆச்சி",என்றேன். "சார்,எழுதிட்டீங்களா?.  இது தான் சார் எஸ்.எஸ். என்ன சப்ஜெக்ட் சார்?".

"தேர்தல் தான் சார் சப்ஜெக்ட். அது தான இப்ப டைமிங். படிச்சிட்டு சொல்லுங்க சார்",என்றேன். அடுத்த அய்ந்து நிமிடத்தில் அழைத்தார். "சார், கலக்கிட்டீங்க. இதத் தான் சார் நெனைச்சேன். வேற யாரும்னா எழுத மாட்டாங்க, தோல்விக்கு அப்புறம். எஸ்.எஸ் கிட்ட கேக்கலாமா, கேட்டா என்னா எழுதுவார்னு நான் நெனைச்சனோ, அதயே எழுதி இருக்கீங்க. டாப் சார்", என்றார்.

அந்திமழை இதழில் பத்தி வெளியானது. பலரும் பாராட்டினார்கள். நான் விட்டுவிட்டேன், பெரிது படுத்தாமல். ஆனால் இன்று Vikatan.comல் இது வெளியாகி விட்டது. அதில் அவர்கள் கொடுத்துள்ள அறிமுகம் சூப்பர். தோல்வி இதையும் கொடுத்துள்ளது.

விகடனின் அறிமுகம். "தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.எஸ்.சிவசங்கர் நுட்பமாக எழுதுவதில் கை தேர்ந்தவர். சமூக வலைத்தளங்களில் அவர் பதிவு செய்யும் கருத்துக்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே உண்டு. சட்டமன்றத் தேர்தலில் அரியலூர் தொகுதியில் தோல்வி அடைந்தது பற்றி வரலாற்றுப் பார்வையோடு மிகுந்த நகைச்சுவையோடு தனது கருத்துக்களை அப்டேட் செய்திருந்தார்". (பத்தி நாளை வரும்).

# தோல்வியும் நல்லதே, மற்ற திறமைகள் வெளிப்பட !

வியாழன், 16 ஜூன், 2016

மருந்து தடவிய மயிலிறகுகள்

அந்தப் பள்ளிக்கு செல்வதென்றால் எங்களுக்கு எப்போதும்  மகிழ்ச்சி தான். காரணம், அந்தப் பள்ளிப் பிள்ளைகளின் அன்பு எங்களை அப்படி அவர்களோடு ஒன்ற வைத்து விட்டது. அது ஒரு சிறப்புப்பள்ளி. காது கேளாத, வாய் பேசாத பிள்ளைகளுக்கானப் பள்ளி. சென்னை - கும்பகோணம் சாலையில், ஜெயங்கொண்டம் குறுக்கு ரோட்டில் அமைந்துள்ள ஹெலன் கெல்லர் காது கேளாதோர் மேல்நிலைப் பள்ளி. 

வழக்கமாக தலைவர் கலைஞர் பிறந்தநாள் மற்றும் தளபதி பிறந்த நாளில் இந்தப் பிள்ளைகளோடு ஒரு வேளை கொண்டாடுவது எங்கள் வழக்கம். இந்த ஆண்டு தலைவர் பிறந்தநாளுக்கு, பொதுக்குழு உறுப்பினர்  மணிமாறன், அவர்களுக்கு காலை உணவு வழங்கினார். தேர்தல் முடிவுக்கு பதினைந்தாம் நாள்.

உணவருந்தும் ஹாலில் நுழைந்த உடனே வணக்கம் சொல்வார்கள். பேச இயலாது என்பதால் சத்தம் மட்டுமே வரும். ஆனால், அதில் அவ்வளவு உற்சாகம் வெளிப்படும். எல்லோரும் வரிசையில் கட்டுப்பாடாக அமர்ந்திருந்தனர். நான் இனிப்பு பரிமாறினேன். சிலர் குறைவான அளவு வைக்க சொல்லி சைகை காட்டினர்.

அவர்களை பராமரிக்கும் கன்னியாஸ்திரி கண்ணசைவுக்காக காத்திருந்தனர். அவர் "இன்னைக்கு என்ன விசேஷம் ?" என்று சைகையில் வினவினார். கலைஞர் என்பதற்கான சைகையை காட்டினார்கள் குழந்தைகள். அடுத்து 93 என்பதற்கான குறீயீடு செய்தார்கள். பிறகு தலைவர் கலைஞருக்காக வணங்கி ஜெபம் செய்தார்கள். பிறகு சாப்பிட ஆரம்பித்தார்கள்.

பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடியில் அமர்ந்து அவர்களுக்கு வழங்கிய உணவான கேசரி, பொங்கல், இட்லியை நாங்களும் சாப்பிட ஆரம்பித்தோம். அப்போது ஒரு பையனும், பெண்ணும் என் அருகில் வந்தார்கள். வணக்கம் வைத்தார்கள். எனக்கு தெரிந்த முகமாக இல்லை.

பையன் என்னைப் பார்த்து சைகை செய்தான், ஆனால் எனக்கு புரியவில்லை. பிறகு நான் கும்பிடுவது போல காட்டினான். தேர்தலில் நின்றதை சொல்ல வருகிறான் என்பது புரிந்தது. "ஆமாம். நின்றேன்", என்றேன். அதை புரிந்து கொண்டது அவனுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

அடுத்து ஜீப்பின் மேல் நின்று வாக்கு கேட்டதை சைகையில் சொன்னான்.  அப்போது பார்த்ததாக விளக்கினான். "எந்த ஊர்?", என்றுக் கேட்டேன். அவன் சொன்னதில் "பெ" என்பது மட்டுமே எங்களுக்கு விளங்கியது. சுற்றி இருந்தவர்கள் ஆளுக்கு ஒரு ஊர் பெயரை சொன்னார்கள். இல்லை என்று தலையசைத்தான்.

நான் பேனாவையும், துண்டு சீட்டையும் கொடுத்தேன். எழுதினான்,"பெரியத் திருக்கோணம்". அரியலூர் ஒன்றியத்தில் இருக்கும் ஊர். இப்போது இருவர் முகத்திலும் அவ்வளவு மகிழ்ச்சி. பெயர் கேட்டேன். அவர்கள் சொன்னது புரிந்தது, "பாலமுருகன், மீனா".  நன்றாக படிக்க வாழ்த்தினேன். கைக் கொடுத்து சென்றனர்.

நாங்கள் உணவருந்தி கிளம்பினோம். கார் அலுவலகத்தைத் தாண்டியது. அங்கே படிக்கட்டில் பாலமுருகனும், மீனாவும் தயாராக நின்றனர். எங்களைப் பார்த்து உற்சாகமாக கையசைத்து புன்னகைத்தனர். அந்தப் புன்னகை "நூறு பாட்டில் குளுக்கோஸ் " ஏற்றிய தெம்பு தந்தது. அந்த 2043 வாக்கை இந்த இரண்டு புன்னகை வென்றது.

# மருந்து தடவிய மயிலிறகுகள் !

ஞாயிறு, 5 ஜூன், 2016

சாதனைத் தலைவர்

1991மே மாதம். தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்திருந்தது. அதிமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு பிரச்சாரம் மேற்கொள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி வந்தார். திருப்பெரும்புதூர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றார். மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்.

அது விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதல், காரணம் திமுகவினர் என அதிமுக பொய் பிரச்சாரத்தில் குதித்தது. ராஜீவ் கொலையில் கொதித்து போன மக்கள், அந்தப் பிரச்சாரத்தை நம்பி திமுகவிற்கு எதிரான மனநிலைக்கு சென்றனர். அதிமுகவினர் திமுகவினர் இல்லங்களை தாக்கினர், கொடிக் கம்பங்களை வீழ்த்தினர்.

ஊருக்கு ஊர் ராஜீவ்காந்தி படத்தை வைத்து மாலை அணிவித்து, மக்களை துக்க மனநிலையிலேயே  வைத்திருந்தனர். தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டன. ராஜீவ் மரணம் சுனாமியாக திமுகவை தாக்கியிருந்தது. போட்டியிட்ட தொகுதிகளில், ஒன்றைத் தவிர அத்தனையிலும் தோல்வி.

திமுக வெற்றி பெற்ற அந்த ஒரு தொகுதி துறைமுகம். வெற்றி பெற்ற அந்த ஒரே திமுக வேட்பாளர் தலைவர் கலைஞர். (பொதுத் தேர்தல் அன்று தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு, சில நாட்கள் கழித்து, எழும்பூர் தொகுதிக்கு தேர்தல் நடைபெற்று, பரிதி இளம்வழுதி வெற்றி பெற்றார்.)

அந்த மாபெரும் அனுதாப அலையை எதிர்த்து வென்றது மாத்திரமல்ல, இது வரை போட்டியிட்ட 13 தேர்தல்களில் தோல்வியே காணாமல் வெற்றி பெற்று சாதனைப் படைத்திருக்கிறார். இது இந்திய சாதனை. உலக சாதனையாகவும் இருக்கும்.

1977 தேர்தலில், திமுக நெருக்கடி நிலையால்(மிசா) பாதிக்கப்பட்டு தேர்தலை சந்தித்த சூழல். 1980 தேர்தலில், அதற்கு முன்பான எம்.ஜி.ஆர் ஆட்சி கலைக்கப்பட்டதால் ஏற்பட்ட அனுதாப அலை. 1984 தேர்தலில், அன்னை இந்திரா இறப்பாலும் எம்.ஜி.ஆர் உடல்நலக்குறைவாலும் ஏற்பட்ட அனுதாப அலை (சாவுக்கு ஒரு ஓட்டு, நோவுக்கு ஒரு ஓட்டு என்ற சொற்றொடர் அப்போது பிரபலம்).

இப்படி தொடர் தாக்குதலில் மூன்று சட்டப்பேரவை பொதுத் தேர்தலிலும், தோல்வி சுற்றி வந்தது திமுகவை. திமுகவின் வெற்றி பாதிக்கப்பட்ட போதும், தலைவர் கலைஞருக்கு மக்கள் வெற்றியையே அளித்து வந்துள்ளனர். அது இந்தத் தேர்தலில் இன்னும் பல சாதனைகளாக வடிவெடுத்துள்ளது.

92 வயதில் தேர்தலை சந்தித்தார். இந்த வயதின் தளர்ச்சியைப் புறம் தள்ளி, வேன் மூலம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். வென்றார். அதிலும் சாதனைப் படைத்தார். தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மண்ணின் மைந்தராக திருவாரூர் மக்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார்.

92 வயதில் வெற்றி. அதுவும் 13வது முறையாக வெற்றி. அதுவும் தோல்வியே காணாத வெற்றி. இனி ஒருவர் இந்த சாதனையை முறியடிப்பது எளிதல்ல. எளிதல்ல என்று சொல்வதை விட வாய்ப்பே இல்லை.

# சோதனைகளையும் சாதனைகளாக்கும் தலைவர் கலைஞர் வாழ்க !
 

வியாழன், 2 ஜூன், 2016

மனசு முழுசும் இசை தான்

காரில் ஏறினால் அந்தக் கேசட் தான், கல்யாணத்துக்குப் போனால் அந்தப் பாடல் தான் என அந்த சீசனில் கொடிக் கட்டி பறந்தது அந்தப் படத்துப் பாடல்கள் தான். அத்தனைப் பாடல்களும் ஹிட். இயல்பாக கிராமத்துப் படம் என்றால் சொல்லி அடிப்பவர், இதில் இன்னும் அழுத்தம். படம் - பாண்டி நாட்டுத் தங்கம். இசை அவரே தான்.

"ஏலேலோம் குயிலே, இளம் வயசுப் பொண்ண, மயிலாடும் பாறையில, சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு, உன் மனசுல பாட்டுத் தான் இருக்குது", என அனைத்துப் பாடல்களும் போன இடமெல்லாம் ஒலித்தது. இது ராஜாவுக்கு மட்டுமே சாத்தியம். படத்தில் எல்லாப் பாடல்களையும் ஹிட் கொடுப்பது, வருடத்தில் எல்லாப் படங்களையும் இசையால் தாங்கிப் பிடிப்பது என உச்சம் தொட்டவர்.

பாட்டு "தந்தனன தானானா
தந்தனன
தானானா
தந்தானா
தந்தானா
தந்தனா னானா" அப்படின்னு ஆரம்பிக்கும் போதே நம்மை உள்ளே இழுத்து விடும். அது தானே ராசா.

பாடல் தொடர்ந்து கிறங்கடிக்கிறது.

"உன் மனசுல பாட்டு தான் இருக்குது
என் மனசுஅதை கேட்டு தான் தவிக்குது
அதில் என்னை வச்சு பாட மாட்டியா
நெஞ்ச தொட்டு ஆளும் ராசைய்யா
மனசு முழுதும் இசை தான் உனக்கு
அதிலே என்னக்கோர் இடம் நீ ஒதுக்கு

பாட்டாலே புள்ளி வச்சேன்
பார்வையிலே கிள்ளி வச்சேன்
பூத்திருந்த என்னை சேர்ந்த தேவனே
போடாத சங்கதி தான்
போட ஒரு மேடை உண்டு
நாளு வச்சு சேர வாங்க ராசனே
நெஞ்சோடு கூடு கட்டி நீங்க வந்து வாழனும்
நில்லாம பாட்டு சொல்லி காலம் எல்லாம் ஆளனும்
சொக்க தங்கம் உங்களை தான் சொக்கி சொக்கி பார்த்து
தத்தளிசேன் நித்தம் நித்தம் நானனும் தான் பூத்து

நீ பாடும் ராகம் வந்து நிம்மதியே தந்தயா
நேற்று வரை நெஞ்சில் ஆசை தோணல
பூவான பாட்டு இந்த பொண்ண தொட்டு போனதைய்யா
போன வழி பாத்து கண்ணு மூடலை
உன்னோட வாழ்ந்திருந்த ஊருகெல்லாம் ராணி நான்..
என்னோட ஆசை எல்லாம் ஏத்துக்கணும் நீங்க தான்..
உங்கல தான் எண்ணி எண்ணி என் உசுரு வாழும்
சொல்லுமய்யா நல்ல சொல்லு சொன்ன போதும்

பாடலை கேட்கும் போது, வழக்கமான காதல் பாடலாகத் தோன்றும். ராஜாவின் ரசிகர்களுக்கு தான் கவிஞர் வாலியின் வரிகளின் அர்த்தம் புரியும். முதல் வரியில் ஒளிவுமறைவாக ஆரம்பிப்பவர் "நெஞ்சைத் தொட்டு ஆளும் ராசையா
மனசு முழுசும் இசை தான் உனக்கு", என்ற வரியில் நேரடியாக சொல்லி விடுகிறார்.

இதற்கு பிறகு ஒவ்வொரு வரியாக கவனித்தால், வாலியின் ராஜா மயக்கம் புரியும். கடைசியாக ராஜா பதில் சொல்வது போல் முடித்திருப்பார்.

"என் மனசுல பாட்டு தான் இருக்குது
உன் மனசுஅதை கேட்டு தான் தவிக்குது
நான் உன்ன மட்டும் பாடும் குயிலு தான்
நீ என்னை எண்ணி வாழும் மயிலு தான்
மனசு முழுதும் இசை தான் எனக்கு
இசையோடு உனக்கும் இடமும் இருக்கு"

ராஜா, உன் மனசுல பாட்டு தான் இருக்குது, பல மனசு அதை கேட்டுத் தான் தவிக்குது, தமிழ் உலகமே அதக் கேட்டு தான் தூங்குது.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் இசையே.

# மனசு முழுதும் இசை தான் உனக்கு, இசையோடு உனக்கும் இடமும் இருக்கு எங்கள் மனதில் !