பிரபலமான இடுகைகள்

சனி, 26 நவம்பர், 2016

ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு செவ்வணக்கம்

ஃபிடல் காஸ்ட்ரோ. நாம் வாழும் காலத்தில் வாழ்ந்த ஒரு புரட்சியாளர். அவரை இழந்திருக்கிறோம். தான் வாழும் காலத்திலேயே, தான் கண்ட கனவுகளை நனவாக்கிப் பார்த்த புரட்சியாளர். தன் தாய்நாட்டு விடுதலைக்கு தலைமையேற்று போராடி வெற்றி கண்ட புரட்சியாளர். விடுதலை அடைந்த தன் நாட்டை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்திய புரட்சியாளர் மறைந்திருக்கிறார்.

எங்கோ பிறந்த மனிதர் ஃபிடல் இந்த அளவுக்கு தாக்கம் ஏற்படுத்த காரணம், தலைவர் கலைஞர் அவர்கள் ஃபிடல் குறித்து பலமுறை தன் உடன்பிறப்பு கடிதங்களில் எழுதி ஏற்படுத்திய தாக்கம். அதன் தொடர்ச்சியாக அவர் குறித்து வாசித்தவை.

"உயிரோடிருக்கும்  உலகத் தலைவர்கள் வரிசையில்
உங்களைக் கவர்ந்த ஒருவரின்  பெயரைக் கூறுக என்றார்;
உயிரோடிருப்பவர் மட்டுமல்ல;  என் உயிரோடும் மூச்சோடும் கலந்துள்ள ஒரு தலைவர் உண்டு;  அவர் தான் ஃபிடல் காஸ்ட்ரோ என்றேன்." இது தலைவர் கலைஞரின் கவிதை.

அவரை புரட்சியாளர் என்று அழுத்தமாகக் குறிப்பிடக் காரணம், கியூபாவை புரட்சி மூலமாக விடுவித்தார் என்பதற்காக மாத்திரம் அல்ல. அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு துளியும் புரட்சியின் அடையாளமாக இருந்தது. வசதியான விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர், அந்த வாழ்வோடு நிறுத்த விரும்பவில்லை.  கல்வி பயின்றார், ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டம். மனம் கம்யூனிஸத்தை நாடி சென்றது. அங்கு தான் புரட்சியின் விதை விழுந்தது.

பொலிவியா மற்றும் கொலம்பிய நாடுகளில் வலதுசாரி அரசுகளை எதிர்த்து நடைபெற்ற புரட்சிப் போராட்டங்களில் பாடம் பயின்றார். அப்போதைய கியூப அதிபர் படிஸ்டாவின் அரசாட்சிக்கு எதிராக குரல் கொடுத்தார். 1953ல் படிஸ்டா அரசிற்கு எதிராக ஒரு தாக்குதலை மேற்கொண்டார். அதற்கு முன்பாக தன் தோழர்களிடம் ஒரு உரை நிகழ்த்தினார்.

"இன்னும் சில மணி நேரத்தில் நாம் வெற்றி பெறலாம் அல்லது வீழ்த்தப்படலாம். ஆனால் அதைத் தாண்டி இந்த இயக்கம் வெற்றி பெறும். நாம் வெற்றி பெற்றால் கனவுகள் நிறைவேறும். தோல்வி அடைந்தால், நம் போராட்டம் புதியவர்களை எழுச்சியுற செய்யும், கியூபாவிற்காக உயிர் துறக்க" . இது 27 வயது இளைஞனாக நிகழ்த்திய உரை.  இது தான் பிடல்காஸ்ட்ரோ ஒரு புரட்சித் தலைவனாக உருவாவதை வெளிப் படுத்திய தருணமாக இருக்கும்.

தாக்குதல் ஒரு சிறு பிசகால் தோல்வி அடைந்தது. பலர் உயிரிழந்தனர். அப்போது ஃபிடல் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் அவரே வழக்கறிஞராக வாதாடினார். இந்த வழக்கில் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அந்த நேரத்தில் அவர் நீதிமன்றத்தில் நான்கு மணி நேரம் ஆற்றிய உரை புகழ்வாய்ந்த ஒன்று. அப்போது தான் அந்த பிரசித்தி பெற்ற வாக்கியத்தை உச்சரித்தார்,"வரலாறு என்னை விடுதலை செய்யும்".

ஒரு வருட சிறை வாசத்திற்கு பிறகு, மெக்சிகோ சென்றார். மீண்டும் படை திரட்டினார். படையை கொரில்லா தாக்குதலுக்கு பயிற்சி பெற வைத்தார். அந்த நேரத்தில் தான் புரட்சியின் அடையாளமாக இன்றைக்கும் பார்க்கப்படுகின்ற, கம்யூனிஸம் அறியாத இளைஞர்களின் டி-சர்ட்டிலும் இடம் பிடித்துள்ள "சேகுவேரா" வும் "காஸ்ட்ரோ"வும் இணைந்தனர். இவர்களோடு காஸ்ட்ரோவின் சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ இருந்தார். காஸ்ட்ரோ, கியூபாவில் இருந்த மற்ற போராளிகளோடு கை கோர்த்தார்.

1959ல் படிஸ்டா அரசாங்கம்,  ஃபிடல்காஸ்ட்ரோ தலைமையில் துரத்தப்பட்டது. அரசு மற்றும் ராணுவத்தின் தலைவராக, பிரதமராக பதவியேற்றார் ஃபிடல். 49 ஆண்டுகள் பிரதமராக, அதிபராக பணியாற்றி வளர்ச்சிப் பெற வைத்தார் கியூபாவை. நிலசீர்திருத்தம், கல்வி, மருத்துவம், சமூகப் பொருளாதாரம் என அனைத்து துறைகளிலும் தான் எண்ணிய இலக்கை எட்டினார். புரட்சி தொடர்ந்தது.

உலக வரைபடத்தில் கியூபா, அமெரிக்காவின் அருகே ஒரு தூசு போல இருக்கும். தூசு தான், ஆனால் அமெரிக்காவின் கண்ணில் விழுந்த தூசாக திகழ்ந்தது, காஸ்ட்ரோவால். கியூபாவின் பரப்பளவு 1 லட்சம் சதுர கிலோமீட்டர். அமெரிக்காவின் பரப்பளவு 98 லட்சம் சதுர கிலோமீட்டர், கியூபா கிட்டத்தட்ட ஒரு சதவிகிதம் தான். கியூபாவின் மக்கள்தொகை 1கோடியே 12 லட்சம். அமெரிக்காவின் மக்கள் தொகை 32 கோடி. உருவு கண்டு எள்ள நினைத்த அமெரிக்காவின் ஆட்டம் ஃபிடலிடம் பலிக்கவில்லை.

உலகத்தையே மிரட்டிய அமெரிக்க ஏகாதிபத்தியம் ஃபிடலிடம் தொடர்ந்து தோற்று போனது. அறுநூறுக்கும் மேற்பட்ட முறை அமெரிக்காவின் உளவு நிறுவனம் சி.ஐ.ஏ, ஃபிடலை கொல்ல முயற்சி செய்து தோற்றுப் போனது. கியூபா மீது பொருளாதாரத் தடை, தாக்குதல் என அமெரிக்காவின் முயற்சிகள் வெற்றி பெற வில்லை. இதை எல்லாம் தாண்டி தான் ஃபிடல் பணியாற்றினார், கியூபாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றார். இதன் மூலம் உலக நாடுகளின் பார்வையில் ஃபிடல் புரட்சியாளராக மிளிர்ந்தார்.

ஃபிடல் குறித்து எழுதினால், ஒரு புத்தகமாக தொகுக்கலாம். இன்றைக்கும் கம்யூனிசத்திற்க்கு நம்பிக்கை அளிக்கிற அடையாளமாக, புரட்சிக்கு தலைவனாக திகழ்ந்த காஸ்ட்ரோ தான், ஏகாதிபத்திய எதிர்ப்பின் அடையாளமும். ஃபிடலின் எண்ணங்கள் தான் இனி வரும் காலத்தில், சோஷலிசவாதிகளை வழி நடத்தக் கூடியது.

இவற்றை விட ஃபிடலின் தோற்றம் அனைவரையும் கவரக் கூடியது. அந்த ராணுவ உடையும், மிடுக்கும், கூர்மையான பார்வையும், துடிப்பான உடல் மொழியும் என்றும் நினைவில் இருக்கும். இதைத் தாண்டி உலகப் புகழ்பெற்ற "கியூப சுருட்டை" ஃபிடல் பிடிக்கும் பாங்குக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உண்டாம்.

ஃபிடலின் புகழ் பெற்ற, "வரலாறு என்னை விடுதலை செய்யும்" வாக்கியம் பொய்த்துப் போனது, ஆமாம் பொய்த்தேப் போனது. "வரலாறு அவரை கைது செய்து விட்டது நிரந்தரமாக, 'புரட்சித்தலைவன்' என".

# புரட்சியாளர் ஃபிடலுக்கு செவ்வணக்கம் !

வெள்ளி, 18 நவம்பர், 2016

நம்ம ஜாக்கிசான்

பல்கலைக்கழகம் போன புதிதில் ஒரு கூட்டம் "இங்கிலீஷ் பில்ம்ஸ்" குறித்தே பேசி 'பீட்டர்' விடுவார்கள். பட்டிக்காட்டில் இருந்து போன நமக்கு இங்கிலீஷ் படம் பார்த்த அனுபவம் கிடையாது. அப்போது வெளிநாட்டு படங்கள் எல்லாமே நமக்கு இங்கிலீஷ் படம் தான். ஒரு நாள் (சிதம்பரம்) புளுடைமண்ட் தியேட்டரில் இங்கிலீஷ் படம் என்றார்கள். பீட்டர் விடாத நண்பர்கள் கிளம்பினோம்.

இங்கிலீஷ் படம் நாமும் பார்ப்போம் என தியேட்டர் உள்ளே நுழைந்து,  அவரது ரசிகராக வெளியே வந்து சேர்ந்தோம். போஸ்டரில் பார்க்கும் போது, ஹீரோவுக்கான கட்டுமஸ்தான உடல் இல்லை, உயரம் இல்லை, லுக் இல்லை அவருக்கு. அப்போது ஆங்கில பட ஹீரோக்கள் என ஆர்னால்ட் ஷிவார்ஸ்னெகர், சில்வஸ்டர் ஸ்டாலோன் ஆகியோரை 'வெல் பில்ட்டாக' பார்த்து பழகிய கண்களுக்கு, இவர் சிறுபிள்ளையாக தோன்றினார்.

தியேட்டருள் நுழைந்தோம். படம் துவங்கியது. ஒரு காட்டுப் பிரதேசம்.  பழங்குடி மக்கள் குழுமியிருக்கின்றனர், ஒரு பெரிய கடவுள் சிலை முன். காட்டுவாசி நடனம். அப்போது ஒரு சிறு குகை போன்ற இடத்தில் ஒரு கல்லை உடைத்துக் கொண்டு இரண்டு கால்கள் நுழைகின்றன. தியேட்டரில் விசில் பறக்கிறது. தமிழ் ஹீரோ அல்லாத ஒருவருக்கு அப்படி ஒரு வரவேற்பை அப்போது தான் நான் பார்க்கிறேன்.

காடுவாசி நடனத்தை அங்கிருந்து எட்டிப் பார்க்கிறார். அப்பாவியான முகத் தோற்றத்தோடு பாறையில் சாய்ந்து அமர்கிறார். ஒரு நரபலி கொடுப்பதற்கான ஏற்பாடு நடந்துக் கொண்டிருக்கிறது. அது குறித்து கவலை கொள்ளாமல் ஹீரோ ஒரு அம்பை அந்த கடவுள் சிலையின் தலை மீது எய்து,  அதனுடன் செலுத்திய கயிற்றை பிடித்து தொங்கி செல்கிறார். அந்த பழங்குடி கடவுளின் தலை ஹீரோ கால் பட்டு உடைந்து விழுகிறது. கடமையே கண்ணாக அங்கிருக்கும் வாளை எடுத்துக் கொள்கிறார்.

குனிந்து கும்பிட்டுக் கொண்டிருக்கும் பழங்குடிக் கூட்டம் அண்ணாந்து பார்க்க, ஹீரோவின் தலை கடவுளின் தலை இல்லா முண்டத்தின் தலையாக தோன்ற, அனைவரும் விழுந்து வணங்குகின்றனர், புதிய கடவுள் தோன்றியதாக. இயக்குநர் தெரிந்து தான் வைத்தாரோ அல்லது தெரியாமல் வைத்தாரோ தெரியவில்லை. அந்த ஹீரோ "ஆசிய சினிமா மார்க்கெட்டின் புதிய கடவுளாக" அவதாரமெடுத்தார்.

அது வரை ஆசிய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் புரூஸ் லீ. ஒரு கட்டத்தில் உலகளாவிய மார்க்கெட்டாக விரிவடைந்தது. 1986ல் ஜாக்கிசான் ஆசிய சினிமாவின் புதிய சூப்பர் ஸ்டாராக உதயமானார். கிட்டத்தட்ட அப்போதே உலகளவிலும் பிரபலமானார், வசூலில் "புதிய கடவுளானார்". இதில் இன்னொரு சினிமாட்டிக் டச்'சும் உண்டு. புரூஸ் லீயை ஹீரோவாகக் கொண்ட திரைப்படத்தில், ஸ்டண்ட்மேன் ஆக தோன்றிய ஜாக்கிசான் பின்னர் அவர் இடத்தையே நிரப்பி விட்டார்.

நாங்கள் அன்று பார்த்த படம் "ஆர்மர் ஆப் காட்". படம் பார்த்த நாங்கள் வெளியே வரும் போது ஜாக்கிசானாகவே மாறிப் போனோம். திறந்திருந்த தியேட்டர் கதவை விடுத்து, பூட்டியிருந்த கதவை தாண்டிக் குதித்தோம். சைக்கிளை ஸ்டண்ட் போல வேகமாக மிதித்து ஹாஸ்டலை அடைந்தோம். அடுத்த ஒரு வாரம் எங்கு சென்றாலும் நடப்பது கிடையாது, ஓட்டம் தான், தாவிக் குதித்தல் தான். அந்த அளவுக்கு எங்களை பாதித்து விட்டார் ஜாக்கி.

காலம் மாறி எத்தனையோ ஹீரோக்கள் வந்து போய் விட்டார்கள். ஆனால் ஜாக்கி அதே வேகம் குறையாமல் சுவற்றை தாண்டி கொண்டிருக்கிறார், அந்தரத்தில் பறக்கிறார், விழுந்து எழுகிறார், மகிழ்வாய் சிரிக்கிறார். மற்றோரையும் சிரிக்க வைக்கிறார். இதற்காக அவர் தன் உடலை வருத்திக் கொண்டதற்கு அளவு கிடையாது, அவர் உடலில் எலும்புகள் முறிந்ததற்கு கணக்கு கிடையாது. அவரது ஒரே நோக்கம், தன் ரசிகர்களை மகிழ்விப்பது. என் மகனும் இன்று ஜாக்கியின் ரசிகர்.

தமிழகம், இந்தியா மாத்திரமல்ல, உலக அளவில் மொழி கடந்து, இனம் கடந்து, நாடு கடந்து மக்கள் மனம் கவந்தவர் நம் ஜாக்கிசான். அறுபத்து இரண்டு வயதானாலும் இன்றும் இளைஞர், இளைஞர்களின் நாயகன். 1962ல் நடிக்க ஆரம்பித்தாலும், 1980க்கு மேல் தான் ஹீரோவாக அங்கீகரிக்கப்பட்டார். அதற்கு பிறகு உலக சூப்பர் ஸ்டார் தான்.

திரையுலகில் நீண்ட நெடிய பயணத்திற்காக கடந்தவாரம் ஆஸ்கர் விருது பெற்றிருக்கிறார்.

விருதை பெற்றவர்," திரை உலகில் 56 ஆண்டுகளுக்கு பிறகு, 200 படங்களை கடந்த பிறகு, எண்ணற்ற எலும்புகளை உடைத்துக் கொண்ட பிறகு, கடைசியாக இது என்னுடையதாகி இருக்கிறது", என்றார். அதிலும் காமெடி பன்ச்.

# அது தான் ஜாக்கிசான், அதனால் தான் அவர் ஜாக்கிசான் !

புதன், 16 நவம்பர், 2016

மிஸ்டர் மோடி !

இந்தியப் பிரதமர் மோடி அவர்களுக்கு,

இந்த நாட்டின் கடைக்கோடி குடிமகன் சிவசங்கர்  எழுதுவது.

வணக்கம் !

உங்கள் கருப்புப் பண ஒழிப்பு  நாடகம் ஒரு சோக முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. உங்கள் வீர வசனம் சாரம் இழந்துக் கொண்டிருக்கிறது. உங்கள் கண்ணீரின் கிளிசரின் வாசம் மூக்கை துளைக்க ஆரம்பித்துள்ளது. உங்கள் நாடக வசன  சாயம் வெளுக்க துவங்கி விட்டது, அந்த நோட்டை போல. உங்கள் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க 'மை' கொடுக்கும் நேரம் வந்துவிட்டது.

முகம்மது பின் துக்ளக் பற்றிய தகவல்களை கேள்விப்பட்ட தலைமுறைக்கு நடைமுறையில் நிகழ்த்திக் காட்டி விட்டீர்கள். ஆனால் துக்ளக் கூட தனது தன்னிச்சையான முடிவுகளை அமல்படுத்தி தான் "பேர்" வாங்கினார். ஆனால் நீங்கள் கார்ப்பரேட்டுகளின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்தியும், மற்றவர்களின் முடிவுகளை உங்களுக்காக பயன்படுத்தியும் "பெரும்பேரு" பெற்று விட்டீர்கள்.

500, 1000 ரூபாய் நோட்டுகளை ஒழிப்பது என்பது "கள்ள நோட்டை" ஒழிப்பதற்கான ரிசர்வ் வங்கியின் ஆலோசனை. பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற நாடுகள் அச்சடித்த கள்ள நோட்டுகளை இந்தியாவில் புழங்க விட்டதிலேயே உங்கள் தலைமையிலான அரசின் உளவுத்துறையின் கையாலாகாத்தனம் வெளிப்பட்டு விட்டது. அதனை சரி செய்ய ரிசர்வ் வங்கி கொடுத்த ஆலோசனையை நீங்கள் 'ஹைஜாக்' செய்ததாலேயே இந்தக் குழப்பம்.

பொது சிவில் சட்டம் அமலாக்கம் என அச்சுறுத்தல், வெளிநாட்டில் இருந்து கருப்புப் பணத்தை கொண்டு வருவதாக சொல்லி செயல்படுத்த முடியாமல் போனது, வேலைவாய்ப்பை பெருக்குவதாக கொடுத்த வாக்குறுதி மறந்து போனது, "ஸ்வச் பாரத், மேக் இன் இந்தியா" போன்ற திட்டங்கள் வெற்று வசனமாகிப் போனது என உங்கள்  பா.ஜ.க அரசின் தோல்விகளில் இருந்து திசைதிருப்ப ஒரு 'கவனத் திருப்பல்' தேவைப்பட்டது உங்களுக்கு.

இந்த நேரத்தில் கிடைத்த அரிய வாய்ப்பாக "கள்ள நோட்டு ", "கருப்புப் பண ஒழிப்பாக'' கையில் எடுத்தீர்கள். ஆனால் அதற்கான முன்னேற்பாடுகளை செய்ய நேரம் இல்லாத அளவிற்கு ஏதோ ஒரு பிரச்சினை  விஸ்வரூபம் எடுக்கக் காத்திருந்திருக்கும் என நினைக்கிறேன். அதனால் தான் இந்த அளவு அவசரத்தோடு அறிவித்து விட்டீர்கள்.

அரசும், அரசை சார்ந்த நிறுவனங்களும் சட்டப்படி தான் இயங்க வேண்டும். அது மூளையின் ஆணைப்படி உடல் இயங்குவது போல. ஆனால் இதயத்தின் வழிகாட்டுதலையும் கருத்தில் கொள்ள வேண்டும். மூளையின் ஆணை அதிகாரிகளின் வழிமுறை. மக்கள் பிரதிநிதிகள் இதயத்தின் வழியில் செயல்பட வேண்டும், அன்போடும் கருணையோடும். ஆனால் நீங்கள் லாபக்கணக்கு பார்த்து மூளையின் வழியிலேயே செயல்பட்டு விட்டீர்கள்.

அறிவிப்பின் போது, " நாளை முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் வெற்றுக் காகிதங்கள்" என்று முழங்கினீர்களே, என்ன மமதை ? அப்பாவி மக்கள் தங்கள் உடலை வருத்தி சம்பாதித்து வைத்திருந்த பணத்தை குறித்து இந்த வார்த்தையை சொல்ல என்ன தைரியம்? இந்த மக்கள் அளித்த வாக்குகள் கொடுத்த அதிகாரத்தின் திமிர் உங்கள் கண்ணை மறைத்து விட்டது, காலம் பதில் சொல்லும்.

இப்போது இந்தியத் திருநாடே வங்கிக் கிளைகள் முன்பும், ஏ.டி.எம்-கள்  முன்பும் விடியற்காலையில் இருந்தே, தவமிருக்கிறது. ஓரிரு . பிரச்சினை தீர்ந்து விடும் என முழங்கினீர்கள். ஓரிரு நாட்கள் கடந்த பிறகு அருண்ஜெட்லி வாய் திறந்தார், " இன்னும் மூன்று நாட்கள் ஆகும்". ஆனால் இன்றோடு எட்டு நாட்கள் கடந்து விட்டன. பிரச்சினை தீரும், என்ற நம்பிக்கை பொய்த்தே போய் விட்டது, மக்களுக்கு.

திட்டத்தை அறிவித்து விட்டு வழக்கம் போல் வெளிநாட்டு சுற்றுப்பயணம் கிளம்பி விட்டீர்கள். இந்திய மக்கள் ஏ.டி.எம் முன் வதங்கிய போது, புல்லட் ரயில் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்ந்தீர்கள். அதைவிட மக்கள் நொந்து போனது, நீரோ மன்னன் போல், நீங்கள் பிடில் வாசிக்கும் ஆனந்தப் புகைப்படம்.

இன்னும் ஆழமாகப் போனால், கார்ப்பரேட்டுகளின் திட்டம் தான் இந்த நடவடிக்கை என்பது புலப்படும். ஏழை, நடுத்தர மக்களின் பணத்தை வங்கிக்கு கொண்டு வந்து, கார்ப்பரேட்டுகளுக்கு கடனாக அள்ளிக் கொடுக்க துடிக்கும் உங்கள் ஆர்வம் தெரிய வரும். உண்மை விரைவில் வெளிவந்து விடும். அதானியின் விமானத்தில் ஊர் சுற்றும் நீங்களா நியாயம் பற்றி முழங்குவது ? அதானிக்கு கடன் வழங்க ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவை ஆஸ்திரேலியாவிற்கு அழைத்து சென்ற நீங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களை வங்கி வாசலில் நிர்கதியாய் விட்டது உங்கள் வாழ் நாள் சாபமாக மாறும்.

வங்கிக்கு வருவோர் கையில் உங்கள் அரசு வைக்கப் போகும் மை தான், உங்கள் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி என அறியாமல் ஆனந்தமாக இருங்கள்.  இந்தப் பிரச்சினை தொடர்பாக இருபது பேர் உயிர் இழந்தும் உங்கள் பிடிவாதம் தளரவில்லை. உயிரிழந்த அந்த உடல்களுக்கு வைக்கப்பட்ட 'தீ' தான், உங்கள் ஆட்சிக்கு இடப்பட்ட "தீ" என்பதறியாமல் அதிகார மயக்கத்தில் உள்ளீர்கள்.

முடிவு நெருங்குகிறது, நோட்டுகளை போலவே.

வெறுப்புடன்,
இந்தியக் குடிமகன் 'சிவசங்கர்'.

செவ்வாய், 8 நவம்பர், 2016

சுற்றிலும் நம்மவர்களே

தெரியாத இடத்தில் ஏதோ ஒரு வகையில் தொடர்புடையவரை சந்திக்கும் போது ஏற்படும் ஆனந்தமே தனி தான். தஞ்சை தேர்தலுக்கு பணி ஒதுக்கப்பட்ட போது அதே நிலை. பக்கத்து மாவட்டமாக இருந்தாலும், மாவட்ட அளவிலான தலைவர்களை தெரியும் என்றாலும் வார்டு அளவில் யாரையும் பழக்கம் கிடையாது என்ற நிலையில் சென்றோம்.

கொடிமரத்து மூலை பஸ் ஸ்டாப் அருகே உள்ள பெட்ரோல் பங்க் முன் ஒரு நண்பருக்காகக் காத்திருந்தோம். நேரத்தை செலவிட டீ குடிக்க முடிவெடுத்தோம். டீயை வாங்கி குடிக்கும் போது எதிரில் இருந்த கடையின் விளம்பரப் பலகையை பார்த்தேன். எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. முதல் நாள் பார்த்த விசிட்டிங் கார்டின் விரிவாக்கப்பட்ட உருவம்.

தஞ்சாவூர் தேர்தல் பணிக்காக கரந்தை 5வது வார்டு செயலாளர் கார்த்திகேயன் அலுவலகத்தில் முதல் நாள் பார்த்த போது, முகநூல் நண்பர் சுலைமான் கொடுத்த விசிட்டிங் கார்ட். சுலைமான் இருக்கிறாரா என்று பார்த்தோம், அண்ணன் 'மா.சு'வை பார்க்க சென்றிருந்தார். தஞ்சை தேர்தலுக்கு வந்ததில் இருந்தே யாராவது ஒருவரை பழைய தொடர்புகளோடு சந்திக்கும் வாய்ப்பு.

முதல் நாள் 4 வது வார்டு செயலாளர் டி.எஸ்.கார்த்திகேயனை பார்க்க செல்லும் வழியில் ராஜா நின்று கொண்டிருந்தார். கடந்த பொதுத் தேர்தலின் போது தஞ்சை இணையதள கூட்டத்திற்கு அழைத்து சிறப்பித்தவர் ராஜா, இளைஞரணி இணையதள நிர்வாகி. ராஜா 4வது வார்டை சேர்ந்தவர் என்று அறிந்து மகிழ்ச்சி அடைந்தோம்.

தஞ்சை செல்லும் போது ஒரு அலைபேசி அழைப்பு. பள்ளி நண்பர் மோகன் அழைத்தார். "எங்க பெரியம்மா மகன் வெங்கட் கரந்தையில் இருக்கிறார். உங்களை சந்திக்க சொல்லி இருக்கிறேன். எந்த உதவியாக இருந்தாலும் செய்வார்". ஆண்டிமடத்தை அடுத்த கவரப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர். வார்டுக்கு சென்ற போது நிர்வாகிகள் வரவேற்றனர். புறப்படும் போது, பிரதிநிதி அருகே வந்து சொன்னார், "நான் தான் வெங்கட்". மோகன் சொன்ன   பக்கத்து ஊர்காரரே கழக நிர்வாகி வெங்கட்.

மீண்டும் கொடிமரத்து மூலை. டீ கடையை தாண்டி அலுவலகத்திற்கு நடந்த போது பெட்டிக்கடையில் இருந்து ஒருவர் வெளியே வந்தார். திமுக கரை வேட்டி. என்னை உற்றுப் பார்த்தார். அருகே வந்தார். "நீங்க சிவசங்கர் தானே ?" என்றார். ஆமாம் என்றேன். "நான் முருகேசன், 7வது வார்டு அவைத்தலைவர்" என்றார். " மகிழ்ச்சி. உங்க வார்டு நிர்வாகிகளை தான் இன்னும் சந்திக்கவில்லை" என்றேன்.

நான்கு நாட்களாக தஞ்சை சென்ற போதும் மற்ற வார்டு நிர்வாகிகளை தான் சந்தித்தோம், 7வது வார்டு நிர்வாகிகளை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. செல்போன் பேசி முடித்த முருகேசன்,"வார்டு செயலாளர் சந்திரனை இங்கேயே வர சொல்லிட்டேன், வந்துடுவாரு",என்றார். பிறகு, " எனக்கு சொந்த ஊர் தேவனூர். சந்திரனுக்கும் சொந்த ஊர் தேவனூர் தான்" என்றார் முருகேசன்.

" அப்படியா?", என்றுக் கேட்டேன். "ஆமாம். நான் தலையாரி ரத்தினம் மகன்.  40 வருஷத்திற்கு முன்ன வேல தேடி தஞ்சாவூரு வந்துட்டேன். சந்திரன் அப்பா காலத்திலய இங்க வந்துட்டாங்க. எனக்கு கணக்கப்பிள்ளை தான் தாலி எடுத்துக் கொடுத்து கல்யாணம் செஞ்சி வச்சாரு. எங்க வக்கிலு அய்யா ஆக்சிடண்ட்ல கால் முறிஞ்சு, இங்க தஞ்சாவூர் ராஜா மிராஸ்தார் ஹாஸ்பிடல்ல வைத்தியம் பார்த்தப்ப, நானும் சந்திரனும்  போய் கூடவே இருந்தோம். ஆனா இப்ப தான் உங்கள பார்க்கிறேன்" என்றார்.

செயலாளர் சந்திரன் வந்தார். அவரும் என்னை சந்தித்ததில் அகம் மகிழ்ந்தார். நானும் மகிழ்ந்தேன்.

தேவனூர் தான் எனக்கும் சொந்த ஊர். கணக்கப்பிள்ளை தான் என் தாத்தா சாமிதுரை. வக்கிலு அய்யா, என் தந்தையார் சிவசுப்ரமணியன்.

# உலகம் மிக சிறியது. எங்கு சென்றாலும் நம்மவர்களே !

வியாழன், 3 நவம்பர், 2016

ஆனந்தம், விகடம் !

வீட்டிற்கு புத்தகம் வந்தால், யார் கைப்பற்றுவது என்ற போராட்டம் ஆரம்பித்து விடும். பத்தாவது பொதுத் தேர்வு காலத்திலும் இது தொடர்ந்தது. முடிந்தவரை முதலாவதாக அல்லது அடுத்ததாக அந்த வார இதழைக் கைப்பற்றி விடுவேன். அது அப்படி ஈர்க்கும், இப்போதும் 'சமயங்களில்' ஈர்க்கிறது. இதழை படித்தால் ஏற்படும் உணர்வும், நெகிழ்வும், மகிழ்வும் அப்படித் தூண்டும். அது தான் ஆனந்த விகடன்.

வடிவம் மாறியது போல், சில நேரங்களில் நிலைப்பாடும் மாறுவது உண்டு. அது போன்ற நேரத்தில் கண்டித்து கடிதம் எழுதியவன் தான் இந்த வாழ்த்தையும் எழுதுகிறேன். காரணம், என் ரசனையை மேம்படுத்தி, பரவலாக்கி, கூர்மையாக்கி, இன்றைய என் எழுத்துக்கு ஒரு தூண்டுகோலாக அமைந்ததில் இந்த "ஆனந்தவிகடனு"க்கும் பங்கு உண்டு.

சிறு வயதில் மாமா கே.ஆர்.பி.என். இராமசாமி அவர்களுடைய சிறு லைப்ரரி தஞ்சம் கொடுக்கும். அங்கு ஆனந்த விகடனில் வந்த தொடர்களை சேகரித்த பைண்டட் தொகுப்பு இருக்கும். அதில் இருக்கும் துணுக்குகளை படிக்கும் ரசனை தான் அப்போதும், இப்போதும்.  "ரெட்டை வால் ரெங்குடு, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா" என்று எனக்கு சிரிப்புலகை திறந்து விட்டது இந்த 'ஆ.வி' தான்.

அடுத்தக் கட்டம் சுஜாதா காலம். அவரது எழுத்துக்களை வெகுசனத்திடம் கொண்டு சேர்த்ததில் 'ஆ.வி' பங்கு பெரும் பங்கு வகுத்தது. 'என் இனிய இயந்திரா', 'மீண்டும் ஜீனோ' என வாத்தியார் சுஜாதாவின் அறிவியல் தொடர்களை படித்து அறிவியல் அறிவு மாத்திரமல்லாமல்,  எளிய தமிழையும் கற்றுக் கொண்டேன். இப்படியாக சுஜாதா விரல் பிடித்து நடை பழகிய பாதை 'ஆ.வி' தான்.

எல்லோரையும் கவர்வது சினிமா தான். அந்த சினிமாவிற்கு மார்க் கொடுத்து, ஆர்வத்தை தூண்டியது 'ஆ.வி' தான். ஒரு கட்டத்தில் ஆ.வி கொடுக்கும் மார்க்கே சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு என்பது போல ஆயிற்று. சில நேரங்களில் விமர்சனத்தில் கொள்கை மாறுபாடுகள் இருந்தாலும், ஆ.வி சினிமா விமர்சனம் அக்மார்க் முத்திரை ஆனது. மார்க் பார்த்து தான் படம் பார்ப்பது என்பது ஒரு தலைமுறையின் வழிமுறை.

'ஆ.வி' விழுதுகள் விட ஆரம்பித்தது.  முதல் விழுது ஜூனியர் விகடன் தழைத்தோங்கி வளர்ந்து வருகிறது. இடையில் வந்த 'ஜூனியர் போஸ்ட்' நின்றுப் போனது. ஆனால் அதற்கு பிறகு வந்த அத்தனை 'கிளை' இதழ்களும் தொடர்ந்து வந்து ஆனந்தவிகடனின் பெருமையை ஓங்க செய்து விட்டன. 'பசுமைவிகடனும்', நாணயம்விகடனும்' பலருக்கும் வாழ்க்கைக்கு வழி காட்டுகிறது. டைம்பாஸ் கூட ஆ.வியின் 'தழை தான்', கொஞ்சம் பச்சை.

பெரியவர் வாசன் காலத்தில், ஆனந்தவிகடன் இதழ் தாண்டி திரை உலகில் பிரவேசித்தார். " சந்திரலேகா" படம் எடுத்து பிரம்மாண்டத்திற்கு அளவுகோல் வகுத்தார். அதற்கு பிறகு இப்போது தொலைக்காட்சி தொடர்கள், சினிமா என்று விகடன் நிறுவனம் வளர்ந்து வருகிறது. இந்த வேகத்தில் "விகடன் தொலைக்காட்சி" உதயம் ஆகும் என்ற எதிர்பார்ப்பு அமைந்தது. ஆனால் இன்னும் தகையவில்லை. அப்படி ஒரு தொலைக்காட்சி வந்தால் சிறந்த "ஜனரஞ்சக தொலைக்காட்சி" யாக அமையும் என்பது பொதுக்கருத்து.

விகடனின் இலச்சினைக்கு தனி மகத்துவம் உண்டு. விகடன் தாத்தா முகம், பெயரில் இருக்கும் ஆனந்தத்தையும், விகடத்தையும் தாங்கியுள்ளது. தாத்தா தலையில் இருக்கும் கொம்பு யாருக்கும் அஞ்சோம் என்பதைக் காட்டுகிறது. சில சமயம் அது குடுமியாக செயல்படும் போது தான் வருத்தம் தருகிறது.

கலை, கவிதை, கட்டுரை, சிறுகதை, தொடர்கதை, அரசியல், சினிமா என பல்வேறு தலைப்புகளையும் ஒருங்கிணைத்து ஒரு ஜனரஞ்சக இதழாக வரும் ஆனந்தவிகடன் சில நேரங்களில் தடம் மாறும் போது, வாசிப்பாளர்கள் விடுவதில்லை. நேயர்களின் 'சுக்கான் அசைப்பிற்கு' ஏற்ப ஆனந்தவிகடன் பாதையை அமைத்துக் கொண்டால்,   90ம் ஆண்டை  தாண்டும் 'ஆ.வி' 200ஐ தாண்டும் என்பது உறுதி.  தாண்ட வேண்டும் என்பது எமது விருப்பமும் கூட.

பலரின் ரசனையை மேம்படுத்திய விகடன், இன்னும் பணியை தொடர வேண்டும். தரம் குறையாமல், மற்றவரின் மனத் தரம் உயர உழைக்க வேண்டும். தலைவர் கலைஞர் வாழ்த்துக்களோடு நம் வாழ்த்துகளையும் இணைக்கிறோம். மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும் வாழ்த்தினார் கலைஞர், பத்திரிகை சுதந்திரம் வாழ்ந்திட. பத்திரிக்கை சுதந்திரம் வாழ்க, கலைஞர் மீதான விமர்சனம் தொடர்ந்திட. பத்திரிகை சுதந்திரம் வாழ்க, விகடன் வாழ்க !

# பல நூற்றாண்டு காண வாழ்த்துகிறேன் விகடனை, தமிழின் 'பல்சுவை' உணர்த்திட !