பிரபலமான இடுகைகள்

திங்கள், 19 டிசம்பர், 2016

தொண்டனுக்கு அடையாளம்

"1967க்கு முன்னால் திமுக பொதுக்குழு கூட்டம். 'சி.பா.ஆதித்தனார் கழகத்தின் சார்பில் போட்டியிட  விருப்பம் தெரிவித்துள்ளார்', என்றார் அண்ணா. பொதுக்குழு நிசப்தமாகி விட்டது. பின் வரிசையில் உட்கார்ந்திருந்த ஒரு இளைஞர் கரம் உயர்த்தி கேள்வி கேட்டார், 'எந்த சின்னத்தில் போட்டியிட போகிறார்'. அவர் தான் கோ.சி.மணி.  அண்ணா, மணியிடத்தில் கொண்டிருந்த உரிமையின் காரணமாக சொன்னார்,'உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட போகிறார். உட்கார் மணி' என்றார்.

அடுத்து மதுரையில் இன்னொரு பொதுக்குழுவிற்கு சென்றார் மணி. சில நண்பர்கள் விவகாரத்தை ஆரம்பித்து விட்டார்கள், பொதுக்குழு வேறு மாதிரி சென்றது. தலைவர் கலைஞர் கழுத்தைத் தூக்கி அப்படி பார்த்தார். காரணம், மணி உட்கார்ந்திருக்கிற இடம் தலைவருக்கு தெரியும். வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல் பாய்ந்து வந்து கேட்டார்  மணி, 'நான் மூன்று கேள்வி கேட்கிறேன்'. கேள்வி கேட்டவன் இருந்த இடம் தெரியவில்லை. அது தான் மணி.

இன்னொரு முறை வேறொரு சம்பவம். தலைவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளா தஞ்சை வந்தார். எதிரிகள் வேல், கம்போடு நிற்கிறார்கள் என்று ஒருவர் நகர்ந்து விட்டார். தலைவர் கோபமாகி, 'என்ன மணி?' என்றார். 'கொஞ்சம் இருங்க,பொறுங்க' என்றார் மணி. பிறகு அங்கு போனால், ஒருத்தரும் இல்லை, எந்த பிரச்சினையும் இல்லை. 'என்ன மணி?' என்றார் தலைவர். 'அவன் அரை பர்லாங் அந்த பக்கம் போயிட்டான்' என்றார் மணி. தலைவர் சொன்னார்,"இது தான் மணி".

இந்த இயக்கம், கொடி, சின்னம் எங்களுக்கு சொந்தம் என்று ஒருவன் சொன்னான். வழக்கு உச்ச நீதிமன்றம் போய்விட்டது. பொதுக்குழு எங்கு நடத்தலாம் என்ற போது, தலைவர் சொன்னார் 'மணி இருக்கும் ஊரில் நடத்துவோம்'. அந்த பொதுக்குழு தான் வழக்கை வெல்ல வைத்தது. அதற்கு பிறகு தான் சின்னம், கொடி, அறிவாலயம் ஆகியவை திமுகவுக்கு சொந்தம். திமுக கலைஞருக்கு சொந்தம் என்று வந்தது. இந்த இயக்கத்தை காத்த பெருமகனை வணங்குகிறேன்", என்று தன் புகழாரத்தில் குறிப்பிட்டார் கழகத்தின் முதன்மை செயலாளர் அண்ணன் துரைமுருகன்.

மறைந்த முன்னாள் அமைச்சர் மரியாதைக்குரிய கோ.சி.மணி அவர்கள் படத்திறப்பு நிகழ்ச்சி இன்று (18.12.2016) மாலை, கும்பகோணம் நகரில் நடைபெற்றது.

தலைவர் கலைஞர் உடல்நலம் குன்றியிருக்கிற நேரத்தில், தளபதி அவர்கள் வர இயலுமா என்ற கேள்வி, தஞ்சை மாவட்டக் கழக தோழர்கள் மத்தியில் எழுந்திருந்தது. ஆனால் வருத்தம் நீக்கும் வகையில் தளபதி வருகை தந்து, அய்யா மணி அவர்கள் படத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் ஆற்றிய உரை.

" ஒரு ஊராட்சியின் தலைவராக இருந்த ஒருவர், உள்ளாட்சித் துறை அமைச்சராக வந்தார் என்றால் அது அண்ணன் கோ.சி.மணி அவர்களாகத் தான் இருக்கும். நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது , உள்ளாட்சியில் நல்லாட்சி கண்டவர் என்பார்கள் என்னை. ஆனால் என்னை பொறுத்த வரையில், அதற்கு மிகப் பொருத்தமானவர் அண்ணன் கோ.சி.மணி அவர்கள் தான்.

அண்ணன் மணி அவர்கள் மறைவுற்ற நேரத்தில் மருத்துவமனையில் இருந்த தலைவர் கலைஞர் அவர்களிடம், தயங்கி, தயங்கி சொன்னோம். கலைஞர் அழுது விட்டார்.

கட்சிக்கு சோதனை ஏற்பட்ட போது, பொதுக்குழுவை கூட்ட தஞ்சையை தேர்ந்தெடுக்க காரணம், அண்ணன் கோ.சி.மணி அவர்கள் மாவட்ட செயலாளராக இருந்தது தான்.

ஒரு மாவட்ட செயலாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளம் தான் அண்ணன் கோ.சி.மணி அவர்கள். ஒரு அமைச்சர் எப்படி பணியாற்றிட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு அவர் தான். ஒரு இயக்கத்தினுடைய தளகர்த்தர் எப்படி வழி நடத்திட வேண்டும் என்பதற்கும் அண்ணன் கோ.சி.மணி அவர்கள். ஆக தளகர்த்தர், அமைச்சர், மாவட்ட செயலாளர் என்பதை தாண்டி ஒரு கட்சியினுடைய தொண்டன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாக இருந்திருக்கிறார் கோ.சி.மணி.

2001ல் எதிர்கட்சியாக கழகம் செயல்பட்ட நேரம். ஜெயலலிதா முதலமைச்சர். நமது ஆட்சியை குற்றம் சாட்டி பேசும் போது ஜெயலலிதா, 'சோடியம் விளக்குகளை திமுக ஆட்சியில் போட்டதால் மின்சாரம் அதிகமாகிறது. எனவே அதனை மாற்றி டியூப்லைட் போட்டேன்' என்று சாதனை போல் பேசினார். உடனே 'சிக்கனம்னா  அதையும் மாத்திட்டு அரிக்கேன் விளக்கை ஏற்றி வையுங்களேன்' என்று சொன்னவர் அண்ணன் கோ.சி.மணி. நாங்கள் அசந்து போய் உட்கார்ந்திருந்தோம். அப்போது நாங்கள் சிரித்து விட்டோம். ஆனால் இப்போது நினைத்தால் அழுகை வருகிறது.

இதைவிட இன்னொரு செய்தி. அண்ணன் கோ.சி.மணி கூட்டுறவுத் துறை அமைச்சர். அவரது மனைவி இறந்து விட்டார். நான் அஞ்சலி செலுத்த வந்தேன். மாலை வைத்து வணங்கினேன். என்னை கையை பிடித்து சற்று தள்ளி அழைத்து சென்றார். நான் அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சர். 'கும்பகோணம் தேரோடும் வீதியை சீர் செய்ய வேண்டும். அதற்கு நிதி ஒதுக்கி தர வேண்டும்' என்று என்னிடத்திலே கேட்டார். இப்போது நினைச்சாலும் என் நெஞ்சு பதறுகிறது. அவர் எந்த அளவுக்கு ஏற்றுக் கொண்டிருக்கிற பொறுப்பிலே கவனம் செலுத்தினார் என்பதற்கு இது தான் சான்று".

தளபதியின் இந்தப் பேச்சை கேட்ட நிகழ்வில் இருந்தவர்கள் கலங்கி விட்டோம்.

# இன்னொரு மனிதன் கோ.சி.மணியாக பிறக்கவும் முடியாது, உருவாகவும் முடியாது !