பிரபலமான இடுகைகள்

புதன், 1 பிப்ரவரி, 2017

ஏலகிரி மேகம்

"மாம்ஸ் நீ வந்துடு". " இல்ல. நான் வர்றது சிரமம்னு நினைக்கிறேன்". "நீ வர்றன்னு ஸ்ரீதர் சொல்லி தான் நாங்க கன்ஃபார்ம் பண்ணோம். வந்துடு", சங்கரும் செந்திலும் அழுத்தினார்கள். சும்மாவே ஊர சுத்திக்கிட்டிருக்கோம், இதுல ஏலகிரி மலைப்பயணம்னு வேற சொன்னா, சகாராப் பாலைவன ஹீட் வரும். "நீங்க மட்டும் எல்லா இடமும் போய்ட்டு வந்துடுங்க. நாங்க இங்கேயே இருக்கோம்".

வேற வழியில்ல, ஓப்பன் செய்தேன். மூன்றாவது முறை சொல்லும் போதும் "எங்கப் போறீங்க?", அப்படின்னு கேள்வி வரும் போது தான் இன்னும் மனசுல ரெஜிஸ்டர் ஆகலன்னு தெரிஞ்சுது. ஆனா அங்க கதை வேற. "அண்ணே பேர ரெஜிஸ்டர் பண்ணியாச்சி, நீ வர்ற", இது ஸ்ரீதர். கல்லூரி நண்பர்கள் சந்திப்பு. அதுக்குள்ளயா? அது சென்னை, ஒரு வருஷம் ஆச்சி. இப்போ ஏலகிரி.

கிளம்பும் முன் மகன் கேட்டார்," அப்பா, சொல்லவே இல்ல". "அம்மாகிட்ட சொல்லிட்டேன்பா. எத்தனை பர்மிஷன்பா வாங்கறது?". ஒரு வழியா கிளம்பியாச்சி. வழியில் தான் வேலூரில், "சோழநாடு சோறுடைத்து, வேலூர் மாவட்டம் பிரியாணியுடைத்து" கண்டுபிடித்தது. சங்கர் ஆற்காடு என்பதால் தன் பவரை காட்ட வேலூர் கிச்சனில் சாப்பாடு ரெடி செய்தார்.

ஏற்பாடு செய்ய சங்கர் அண்ணன் சேகரும், மச்சான் ரமேஷும் இருந்தார்கள். ரமேஷ் கழக தொழிற்சங்க செயலாளர். மத்திய சங்க செயலாளர், மாவட்ட செயலாளரை வரவேற்க புரோட்டாக்கால் படி பத்து தொழிற்சங்க தோழர்களோடும் சால்வையோடும்  காத்திருக்க, நானோ கல்லூரி நண்பர்களை மகிழ்விக்க முந்தைய சந்திப்பின் போது கொடுத்த "AUETAA 1990"  பொறித்த டி-ஷர்ட்டோடும் ஜீன்ஸோடும் போய் இறங்கினேன்.

வேட்டி, சட்டையில் எதிர்பார்த்தவர்களுக்கு ஒரு ஜெர்க். " ஹிஹி. கல்லூரி நண்பர்களோடு வந்ததால இந்த டிரெஸ்" என சமாளித்தேன். ஒரு கல்லூரி மாணவனுக்கு தான் எவ்ளோ சோதனை. அப்புறம் தான் அந்த வேலூர் பிரியாணி, நெய் வறுத்த கோழி, இளநீர் பாயசம். பீடாவுடன் வண்டி ஏறினால், கத்தாரிலிருந்து மதன் மொபைலில் பிடித்தார்,"அண்ணே தம்பி ஹரிபாபுவ ஆம்பூர்ல வெயிட் பண்ண சொல்லிருக்கேன்".

"இல்ல மதன். ஃபிரெண்ட்ஸ் மூனு வண்டியில் போறோம். இன்னும் ஜாயின் பண்றாங்க. வரும் போது பாக்கிறேன்". வேலூர் கிச்சன் ஸ்டேடஸின் எபெக்ட். இன்பாக்ஸுகளுக்கு பதில் சொல்லிக் கொண்டே மலையடிவாரம் அடைந்தோம். இது தான் ஏலகிரிக்கு முதல்முறை. ஒரு முறை தலைவர் கலைஞர் சென்றதை கேள்விப்பட்டதிலிருந்து போகனும்னு நினைச்சது, இப்ப தான் வாய்த்தது.

மற்ற மலைவாசஸ்தலங்களை ஒப்பிடும் போது, குறைவான உயரம் தான். ஆனால்,  இயற்கை இன்னும் அவ்வளவு கெடவில்லை. ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவுக்கும்  கம்பர், இளங்கோ என தமிழ் ஆளுமைகள் பெயரையும், பாரி, அதியமான் என தமிழ் வள்ளல்கள் பெயரையும் சூட்டியிருக்கின்றனர். தமிழ் மணக்கிறது. ஊர் பெயர்களும் நிலாவூர், அத்தனாவூர், கோட்டூர் என தமிழ் வாழ்கிறது.

ஆனால் வேலூர் மாவட்ட தமிழ் தான் தெலுங்கும் கலந்து மணக்கும். " இன்னாபா செய்றது. ஒஸ்தேனு" டபக்கென்று தெலுங்கு வந்து விழும். அந்த மாவட்டத்தை சேர்ந்த தமிழ் தாய்மொழியாகக் கொண்ட அரசியல்வாதிகள் அனைவரும் தெலுங்கு அறிவார்கள். அண்ணன் துரைமுருகன் உள்பட அனைவரும் சுந்தரத் தெலுங்கில் மாட்லாடுவார்கள். மனவாடு தேசம் ஆந்திரா பக்கனே காதா?

மலை மீதேறினோம். ஸ்டெர்லிங் குரூப்பின் ரிசார்ட். ஊர் பேர் அத்தனாவூர் என்றிருந்தது. "ஹலோ, ஏலகிரின்னு சொல்லிட்டு என்னப்பா இங்கக் கூப்பிட்டுகிட்டு வந்துட்டீங்க?". என் மைண்ட் வாய்ஸை இன்னொரு நண்பர் ஒலித்தார். "இது ஏலகிரி இல்ல. இந்த மலைப் பேர் தான் ஏலகிரி மலை. ஏலகிரி அப்படிங்கற ஊர் ஜோலார்பேட்டை பக்கத்தில் இருக்கு" வரலாற்று தகவலை சொன்னார் சிவஞானம்.

"குமரா கூலிங்கிளாஸை கழட்டு. ஊரே கூலா தான் இருக்கு". மீட் ஆரம்பித்து விட்டது.

# ஏலகிரி மேகம் பன்னீர் தூவ ஆரம்பித்தது !