பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

சொர்க்கமே என்றாலும்...

கல்லூரி நினைவுகள் நம்மை 'டைம் மெஷினில்'  ஏற்றி கடந்த காலத்திற்கு அழைத்துச் செல்லும். அதே போல் இன்னொரு விஷயம் இருக்கிறது. நம் வாழ்வின் ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும் நம்மை கொண்டு நிறுத்தும் அது. அந்த காலக்கட்டத்திலேயே, அந்தப் பொழுதிலேயே இருத்தி விடும். அது தான் இசை. அதிலும் குறிப்பாக அவரது இசை. ஆம், இசைஞானியின் உயிர் ஊடுருவும் இசை.

ஏலகிரி கல்லூரி நண்பர்கள் சந்திப்பில் இசைஞானியும் பங்குக் கொண்டார், இசை வடிவில். பாடகர் ஸ்ரீராம் அவர்கள்  80-களின் பாடல்களை பாடி எங்கள் நினைவுகளை கடத்துவதற்காக சென்னையில் இருந்து வந்திருந்தார். பிண்ணனியில் பாடலின் இசை ஒலிப்பேழை மூலம் ஒலிக்க, அவர் பாடல்களை பாடி மகிழ்வித்தார். அதில் நேயர் விருப்பம் கேட்டு நண்பர்கள் கோரிக்கை வைத்தவாறு இருந்தனர்.

ஸ்ரீராமும் அசரவில்லை. கேட்டப் பாடல்களையும், அவர் தெரிவு செய்து வைத்திருந்தப் பாடல்களையும் பாடினார். பாடல்களின் வரிசையில் எங்களை தூண்டும் பாடல் வந்தது. அது நாங்கள் கல்லூரி காலத்தில் கொண்டாடிய பாடல்.

"நீ ஒரு காதல் சங்கீதம். வாய்மொழி சொன்னால் தெய்வீகம்". மனோ, சித்ரா குரல்களில் பாடல் தேனருவியாக ஓட, எல்லோருக்கும் கல்லூரி நினைவு. ஸ்ரீனிவாசா தியேட்டரில் 'நாயகன்' திரைப்படம் பார்த்த நினைவு. கமலஹாசன், சரண்யா இணையின் அன்னியோன்னியம் இன்றும் பசுமை. ஸ்ரீராம் இழைத்துப் பாடினார், அது இன்னும் இனிமை. 'நாயகன்' எங்களது கல்லூரி காலத்தின் இரண்டாம் ஆண்டில் 1987ல் வந்தது.

"பருவமே புதிய பாடல் பாடு. இளமையின் பூந்தென்றல் ராகம்  ". மிக அருமையான, ரம்மியமான, மென்மையானப் பாடல். பாடல் பாட ஆரம்பித்தவுடன் சிலருக்கு கல்லூரி நினைவே வந்து விட்டது. பாடல் துவக்கத்திலும், பிறகும் 'டொக், டொக்' என ஓடுகின்ற ஒலி ஒலிக்கும். கல்லூரி காலத்தில் இந்தப் பாடல் பாடப்பட்டால் செய்வது போன்றே, இப்போதும் சிலர் மேடையில் ஜாகிங் போனார்கள். அதில் சிவசங்கரும் அடக்கம்.

அடுத்த ஹிட், "மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு, ஒன்ன மாலையிட தேடி வரும் நாளு எந்த நாளு". கல்லூரி காலத்தின் கடைசி ஆண்டுப் பாடல். கிராமத்து இசையால் பாமர மக்களை மட்டுமல்ல, அந்தக் காலக்கட்டத்து கல்லூரி மாணவர்களான எங்களையும் இளையராஜா கட்டிப் போட்டது, இப்போதும் ரிப்பீட் ஆனது. ஆமாம், இப்போதும் அனைவரும் மயங்கி ரசித்தோம். ஆடாத செந்திலும் நடனமாடினார்.

அப்புறம் சத்தியசீலனை பாடச் சொல்லி கோரிக்கை எழுந்தது. சத்தியசீலன் பிரபல பாடகர். பாடகர் மாத்திரமல்ல, சிறந்த ஓவியர். நாங்கள் கேள்விபட்டது இல்லையே, எப்படி பிரபல பாடகர் என்ற கேள்வி எழும். எங்கள் கல்லூரியின் பிரபல பாடகர் அவர். ஆமாம், சத்தியசீலன் எங்கள் கல்லூரி நண்பர். கல்லூரி மேடைகளின் இன்னிசைப் பாடகன். நாங்கள் எங்கு சந்தித்தாலும், சத்யா பாடியாக வேண்டும்.

சத்யா மைக்கை பிடித்தார். " சிந்தனை செய் மனமே சிவகாமி மகனே சண்முகனே" எனத் துவங்க ஒரே சலசலப்பு. பழையப் பாடலாக இருக்கிறதே என. பாடிக் கொண்டெ வந்தவர் அதே மெட்டில்,"ஜனனி ஜனனி ஜகத்தாரணி நீ" என அடுத்தப் பாடலுக்கு தாவ, ஒரேக் கைத்தட்டல். அப்போது தான் புரிந்தது அவர் ஒரே ரிதத்தில் வருகின்ற பாடல்களை தொகுக்கிறார் என.

அடுத்து 'மன்னவன் வந்தானடி'. இதை இழைத்துக் கொண்டே போனவர்," அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே" எனத் தாவினார். சத்யாவின் இசைஞானம் எல்லோருக்கும் புலப்பட்டது. அடுத்து 'இசைக் கேட்டால் புவி அசைந்தாடும்'. அப்படியே "சாச.. ரீரீ... நீ.. ச ச நீ" என சாஸ்திரீய சங்கீதம் போல் முழங்கியவர் திடீரென "காற்றினில் வரும் கீதம்" என தாவினார். கைத்தட்டல் ஏலகிரியை எழுப்பியிருக்கும்.

அடுத்த நேயர் விருப்பத்தையும் நிறைவேற்றினார் சத்யா. அது வெளிநாடு வாழ் தமிழ்மக்களின் விருப்பப் பாடல். முகில்வண்ணனின் ஃபேவரைட். இசைஞானி இசையமைக்கும் போதும், கங்கை அமரன் பாடல் எழுதும் போதும் நினைத்திருக்க மாட்டார்கள், இது வாழ்வு தேடி வெளிநாடு சென்ற தமிழர்களின் தேசியகீதம் ஆகுமென்று. தம் கிராமம் விட்டு சென்னை வந்தவர்களுக்கும் இது மனதுக்கு பிடித்தப் பாடலாகத் தான் இருக்கும்.

"சொர்க்கமே என்றாலும்
அது நம்மூர போல வருமா?
அட எந்நாடு என்றாலும்
அது நம் நாட்டுக் கீடாகுமா?
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்
தமிழ் போல் இனித்திடுமா?"

பாடலின் சில வரிகள் தெரியாத சத்யா தன் மனம் போனப் போக்கில் வார்த்தைகளை நிரப்பி சமாளித்தார். அதுவும் ஒரு சுவாரசியம். அதில் அவர் முடித்த விதம், கைத்தட்டல்களை அள்ளியது.

# சொர்க்கமே என்றாலும் நம் 'அண்ணாமலை'க்கு ஈடாகுமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக