பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

பன்னீரின் கண்ணீர் கடிதம்

பெறுநர்:
மேதகு. ஆளுநர் அவர்கள்,
ஆளுநர் மாளிகை, கிண்டி,
சென்னை,
தமிழ்நாடு.

அய்யா, வணக்கம்!

எப்படியாவது உடனே என்னை பதவி விலக்க ஏற்பாடு பண்ணுங்க. நான் சொந்த விருப்பத்தின் பேரில் தான் பதவி விலகுகிறேன். பல காரணங்களால் மனசு பாதிக்கப் பட்டிருக்கிறேன். அதனால் என்னால் சரியாக பணியாற்ற இயலாத சூழ்நிலை. இதை மனதில் கொண்டு இந்தக் கடிதத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன்.

நான் எப்போதும் சேர்ல ஒண்டி, ஓரமா உட்கார்ந்தே பழகிட்டேன். இப்போ அம்மா இல்லாத சபையில அம்மா உக்காந்த நாற்காலியில என்னை சபாநாயகர் உட்கார வச்சிட்டாரு. இடம் நெறய இருக்குன்னு, ஹாயா உட்கார்ந்துட்டேன். இரண்டு நாள்ல உடம்புல ஒவ்வாமை வந்துடுச்சி. ராத்தியிரில தூக்கமும் வர மாட்டேங்குது. உடம்பு ஒரு மாதிரி ஆயிடுச்சி. பழைய மாதிரி ஒண்டி உட்கார்ந்தா தான் சரியா வரும்.

எனக்கு அரசியலில் முக்கியத்துவம் கொடுத்தவர் முன்னாள் எம்.பி தினகரன். அவருக்கு பின் நின்றே பழகி விட்டேன். பிறகு அம்மா பெரும் வாய்ப்பு கொடுத்தார்கள். அதிலிருந்து அவர் பின் நின்றே பழகி விட்டேன். இப்போது திடீரென முன்னே நிற்கும் போது "வெட, வெட" என நடுக்குகிறது. அதனால் முதல்வர் பதவி எனக்கு சரியாக வராது.

2001ல் நீதிமன்றம் சொன்னதால், அம்மா பதவி விலகிய போது முதல்வர் ஆக்கினார் என்னை. அடுத்து அம்மா பெங்களூரு சிறைக்கு சென்ற போது, மீண்டும் என்னை பொறுப்பேற்க சொன்னார். நானும் ஏற்றேன். அம்மா மீண்டும் வந்தார். நான் போய் விட்டேன். அம்மா சொல்லும் போது வருவதும், போவதும் எனது பணி. "இடைக்கால முதல்வரே" பழகி விட்டது. இது செட்டாகவில்லை.

அடுத்து இப்போது அம்மாவே போய் விட்டார்.  மீண்டும் என்னை அழைத்து பணியேற்க சொன்னார்கள். நானும் கனத்த மனதோடு வந்தேன். அம்மா இல்லாத பிள்ளையை ஆளாளுக்கு மிரட்டுகிறார்கள். டெல்லியில் இருந்து ஃபோன் வந்தால், கார்டனில் இருந்து ஆள் வருகிறது. சின்ன, சின்ன பசங்க எல்லாம் வம்பிழுக்கறாங்க. முடியல.

அந்தப் பசங்க ஒரு பக்கம்னா, காலேஜ் பசங்க பாடாபடுத்திட்டாங்க. போராட்டம் பண்ணி மிரட்டிபுட்டாங்க. ஆளாளுக்கு போட்ட கோஷம் இன்னும் காதுல கொய்ங்குது. என் பேரப் பசங்களே எனக்கு மிக்சர் அன்பளிப்பு கொடுக்கிற அளவுக்கு இவங்க மீம்ஸ் வேல செய்யுது. சரின்னு வாடிவாசல் போனா அவங்க பூட்டி வச்சிக்கிட்டாங்க. சரின்னு கலைக்க சொன்னா, இந்த போலீஸ் கொளுத்தியே உட்டுட்டாங்க. டெரராவுது.

இன்னொரு பக்கம் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பாடாபடுத்தறாரு. எதுக்கெடுத்தாலும் நேரா பத்து மனு குடுக்கறாரு. தமிழ்நாட்டுலயே என்ன ஓவரா மதிக்கறது அவரு தான். என் காரப் பார்த்தா, ஒதுங்கி வழிவிடறாரு. வாழ்த்து சொல்றாரு. பயம்மா இருக்கு. பத்தாததுக்கு துரைமுருகன் "5 வருசம் முதல்வரா இருங்கன்னு" வாழ்த்தறாரு. மெர்சலாவுது.

அடுத்து சின்னாம்மா பொதுச்செயலாளர் ஆன பிறகு கொஞ்சம், கொஞ்சமா அம்மாவாகவே மாறி வர்றது நாட்டுக்கே தெரியும். புடவை, கொண்டை, வாட்ச், மேக்கப்னு மாறுனவங்க அம்மா மாதிரி இரும்பு மனுஷியாகறதுக்கு முன்னாடி நானே ஒதுங்கிக்கறது நல்லது. நைட்ல கனவுல 'அப்போலோ ஹாஸ்பிடலும், பிரதாப் ரெட்டியும்' வர்றாங்க. பயமாருக்கு.

இப்போது சின்னம்மா ஃபுல் மேக்கப்பில் இருக்கிறார். அது கலையும் முன், நீ கிளம்பு என்கிறார்கள். அதனால் நான் கிளம்பிவிட்டேன். என் பணி முடிந்தது.

(ஆள உடுங்கய்யா...)

இவண்
பி.பி.கண்ணீர்செல்வம்,
பெரியகுளம்.