பிரபலமான இடுகைகள்

வியாழன், 23 மார்ச், 2017

வேப்ப மரத்தடி கேக் கட்டிங்

"அண்ணா சுண்டக்குடியில இருந்து பத்திரிக்கை வைக்க வரணும்னு சொல்றாங்க", அரியலூர் ஒன்றியம் ஜோதி அலைபேசினார். "வர சொல்லுங்கண்ண", என்றேன். வந்து திருமண அழைப்பிதழை அளித்தார்கள். தேதி பார்த்தேன். மார்ச் 23. "ஒன்றியம் தேதி சொன்னாரா? நான் அன்னைக்கு ஊரில் இருக்க மாட்டேனே", என்றேன். " நாங்க தான் இந்த தேதி போட்டோம். ஒன்றியத்துக்கு தெரியாது. அன்னைக்கு நீங்க தான் வந்து தாலி எடுத்துக் கொடுக்கணும்", என்று அன்பாக வலியுறுத்தினார் மணமகன் சுப்ரமணியன்.

நான் அவர்களை சமாளித்து அனுப்பி விட்டு ஒன்றியத்துக்கு போன் அடித்தேன். "என்னண்ணே இப்படி மாட்டி விட்டுட்டிங்க. நான் அன்னைக்கு ஊருல இருக்க மாட்டேன்னு உங்களுக்கு தெரியுமே?", என்றுக் கேட்டேன். " இல்லண்ணே. எனக்கும் பத்திரிக்கை அடிச்சது தெரியாது" என்றார். அடுத்த நாள் நைசாக "தீவிரமான பையன். அவங்க தெருவில் இது தான் முதல் கட்சி திருமணம். அவசியமா போகணும்", என்றார் ஒன்றியம்.

மார்ச் 23, வழக்கமாக தலைமறைவாகும் நாள். அந்த வழக்கப்படி, இன்றும் வெளியூர் பணி முடித்து நேரே திருமணத்திற்கு வருவேன் என்று சொல்லி இருந்தேன். ஆனால் காலையில் சிமெண்ட் தொமுசவினர் வந்துவிட்டனர். அவர்களிடம் வாழ்த்து பெற்று, நகரம் முருகேசனுடன் சுண்டக்குடி கிளம்பினேன். கைக்காட்டியில் ஒன்றியம் ஜோதி இணைந்தார். கழகத் தோழர்கள் சுண்டக்குடியில் வரவேற்று காரில் இருந்து இறங்க சொன்னார்கள். ரோடு ஓரத்தில் இருக்கும் வேப்பமரத்துக்கு கீழ் அழைத்து சென்றார்கள்.

அங்கு ஒரு மர ஸ்டூல் இருந்தது. அதன் மீது ஒரு கேக் காத்திருந்தது. கையில் பிளாஸ்டிக் கத்தியை கொடுத்தார்கள். நான் மறுக்க, அன்பாக திணித்தார்கள். கேக்கை வெட்டி ஆளுக்கொரு துண்டு கொடுக்க, மூத்தவர் ஒருவர் கேக்கை ஊட்டி விட்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தை துவக்கி வைத்தார். ரோட்டோர வேப்ப மரத்தடியில் "ஹேப்பி பர்த்டே" இதுவாகத் தான் இருக்கணும்.

வழியில் இந்த எதிர்பாராத நிகழ்வுகளோடு மண்டபத்தை அடையும் போது மணி 10.05. மணமேடையில் மணமக்களை காணோம். முகூர்த்த நேரம் 09.00 - 10.00. திருமணம் முடிந்து சாப்பிட போய் விட்டார்களோ என சந்தேகத்தோடு கேட்டேன். " இல்லை. உங்க எல்லோருக்காகவும் தான் காத்திருக்காங்க", என்று எங்களை அமர செய்தனர்.

மணமக்கள் சுப்ரமணியன், ரேகா வந்தனர். புரோகிதர் அங்கேயும், இங்கேயும் பொருட்களை மாற்றி வைத்துக் கொண்டிருந்தார். ஓமகுண்டத்தில் புகையை கிளப்ப எண்ணெய்யை ஊற்றினார். மணமகனின் அண்ணன் அவரை ஒதுங்கச் சொல்லி விட்டு எங்களை மேடைக்கு அழைத்தார். கைக்கு மாங்கல்ய தட்டு வந்தது. என் வழக்கப்படி மங்கல நாணை மணமக்கள் பெற்றோரை அழைத்து அவர்களிடம் கொடுத்து, மணமகனிடம் கொடுக்க சொன்னேன்.

மானமகன் மங்கல நாணை அணிவிக்க, உறவினர்கள் அட்சதை தூவி வாழ்த்த இனிதே திருமணம் நடந்தேறியது. எங்களை சாப்பிட்டே ஆக வேண்டும் என்று வலியுறுத்த, மணி பார்த்தேன். 10.30. அன்பை மறுக்க முடியாமல் அமர்ந்து ஒரு கை சாம்பார் சாதம், ஒரு கை மோர் சாதம் சாப்பிட்டேன். இதற்கிடையே இடையறாது அலைபேசி வாழ்த்துக்கள். ஒரு நண்பர் கேட்டார், " பர்த்டே ஸ்பெஷல் என்ன ?". "கல்யாண வீட்டில் மோர் சாதம் சாப்பிடறேன்", என்றேன். " என்னது?", என்று நொந்துவிட்டார்.

சாப்பிடும் போது பக்கத்தில் நிழலாடியது. பார்த்தால் மணமக்கள். "சாப்பிடப் போறீங்களா? உட்காருங்க", என்றேன். " இல்ல. நீங்க சாப்பிடுங்க அண்ணே", என்றார். உபசரிக்க வந்திருக்கிறார்கள். போக சொன்னால், மறுத்தார்கள். போட்டோ எடுக்க சொல்லி, அனுப்பி வைத்தோம். சாப்பிட்டு வந்து விடைபெற்றோம். மறுபடியும் மணமக்கள் மேடையை விட்டு கீழே இறங்கி வந்து வழியனுப்ப வந்தார்கள். நெகிழ்ந்து போனோம். "ஒற்றுமையா வாழ்ந்து பேரக் காப்பாத்துங்க. இன்னைக்கு உங்களுக்காகத் தான் வந்தேன்", என்றேன். " தெரியும்ணா. பிறந்தநாள்ல வந்துருக்கீங்க. நன்றி அண்ணா" என்றார் மணமகன் சுப்ரமணியன். பிறந்தநாள் பரிசு அந்த 'நன்றி'.

கிளம்பினோம். அடுத்த நிறுத்தம் வாலாஜாநகரம். வாலாஜாநகரம் கழகத் தோழர் ரமேஷ் தாயார் இறந்துவிட்டார். என் பதிவுகளை படிக்கும் நண்பர்களுக்கு ரமேஷை தெரிய வாய்ப்பு உண்டு. நான்கு வருடங்களுக்கு முன் ரமேஷின் பதினோரு வயது மகன் மணீஷ் இறந்த துயர சம்பவம். பேரன் இறந்ததில் இருந்து மனம் பாதிக்கப்பட்டு இருந்த ரமேஷின் தாயார் இறந்து விட்டார். அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, ரமேஷுக்கு ஆறுதல் கூறிவிட்டு கிளம்பினேன்.

இந்த நிகழ்வுகளால் , நான் ஊரில் இருக்கும் விஷயம் தெரிந்து விட இன்னும் சில நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து  தெரிவித்தனர். ஆர்.கே.நகர் தேர்தல் பணிக்கு கிளம்பினேன்.

திருமண வாழ்த்து, துக்க ஆறுதல், தோழர்கள் வாழ்த்துக்களோடு, "வேப்பமரத்தடி கேக் கட்டிங்" சேர  இந்த ஆண்டு பிறந்தநாள் சற்று வித்தியாசம்.

# ஒவ்வொரு நாளும் புது அனுபவமே !

புதன், 15 மார்ச், 2017

'படுகொலை'க்கழங்கள் !

'படுகொலை'க்கழகங்கள் ஆகிக் கொண்டிருக்கின்றன பல்கலைக்கழகங்கள். அதில் குறிப்பாக தலைநகர் டெல்லி பல்கலைக்கழகங்கள். ஏற்கனவே ஹைதரபாத் பல்கலைக்கழகம் ஒரு உயிரை பலி வாங்கியது. அது ரோகித் வெமுலாவின் உயிர். அவர் ஓர் தலித் மாணவர். தன் தோழர்களின் பிரச்சினைக்கு குரல் கொடுக்க 'அம்பேத்கர் மாணவர்கள் சங்கம்' என்ற அமைப்பை துவக்கினார். இது ஒழுக்கக் கேடானது என பலகலைக்கழகம் கருதியது. அவருக்கு வழங்கப்பட்ட தகுதி உதவித்தொகை ரூ 25,000 உடனே நிறுத்தப்பட்டது.

அகில பாரதிய வித்ய பரிஷத் ( ABVP), பா.ஜ.கவின் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு புகார் கடிதம் எழுதியது. அவர் அந்தக் கடிதத்தை, துணை வேந்தருக்கு நடவடிக்கைக்காக அனுப்பி வைத்தார். அவ்வளவு தான், உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அது "நீக்கம்". நீக்கப்பட்டதோடு மாணவர் விடுதியில் இருந்து வெளியேற்றப் பட்டார் ரோகித். சஸ்பெண்ட் நடவடிக்கை ரோகித் வெமுலா மனதை நசுக்கியது. மன அழுத்தம் கொடுக்க நினைத்த அதிகார வர்க்கம் வெற்றிப் பெற்றது, நியாயம் தோற்றுப் போனது. 2016 ஜனவரி 17.  ரோகித் தற்கொலை செய்து கொண்டார்.

ரோகித்தின் நண்பர் தான் நேற்று டெல்லியில் தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படும் முத்துகிருஷ்ணன். முத்து அப்போது ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் எம்.பில் ஆய்வுப் படிப்பில் இருந்தார். ரோகித் வெமுலா தற்'கொலை' இவரை பாதித்தது. அதற்கான போராட்டத்தில் பங்கேற்றார். ரோகித்தின் தாயாரோடு போராட்டத்தில் உடனிருந்தார்.

பிறகு முத்துக்கிருஷ்ணனுக்கு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. இங்கு வந்து சேர்கிறார். டெல்லி கனவுகள் அவரை இங்கு கொண்டு வந்து நிறுத்தியது. அரசுப் பணிகளுக்கான தேர்வு எழுதுவதும் அவரது சிந்தனையில் இருந்தது. அதனாலும் டெல்லி. ஆனால் டெல்லி அவர் நினைத்தது போல் இல்லை. டெல்லிப் பல்கலைக்கழகங்கள் அதற்கு முன் சுதந்திர பூமி. ஆனால் கடந்த சில வருடங்களாக நிலைமை மாறிவிட்டது.

கடந்த மார்ச் மாதம் டெல்லிப் பல்கலைக்கழகங்களின் நிலையை அப்பட்டமாக வெளிப்படுத்தியது. டெல்லி பல்கலைக்கழகத்தின் இடதுசாரி அமைப்புகளின் நிகழ்ச்சிக்கு இதே ஜே.என்.யூ மாணவர்களை அழைத்திருந்தனர். அதற்கு ஏபிவிபி எதிர்ப்பு தெரிவித்தது. "தேசவிரோதிகளை சுட்டுத் தள்ளுங்கள்" என்ற கோஷம் தான் ஏபிவிபியின் துருப்பு சீட்டு. ஆனால் பல்கலைக்கழக மாணவர்கள் இதற்கு எதிப்பு தெரிவித்தனர்.

ஏபிவிபி கூட்டம், அகில இந்திய மாணவர் சங்க உறுப்பினர்களை தாக்கியது. பத்திரிக்கையில் வந்த செய்திகளை முதல மறுத்த ஏபிவிபி, பிறகு தனது இரண்டு உறுப்பினர்களை நீக்கியது. ஏபிவிபியின் ஒப்புதல் வாக்குமூலம் அது. இதற்கிடையில் 'குர்மெஹர் கவுர்' என்ற மாணவியை மிரட்டியது தான், ஏபிவிபியின் முகத்திரையை கிழித்தது. குர்மெஹர் ஏபிவிபியின் நடவடிக்கைகளை எதிர்த்தார்.

அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தது ஏபிவிபி. எப்படி ? "உன்னை வன்புணர்வு செய்வோம். உன்னை கொல்வோம்". நினைத்துப் பார்க்க முடியாத மிரட்டல். ஆனால் குர்மெஹர் அஞ்சவில்லை. ஒரு அட்டையை ஏந்தி புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டார். அதில் இருந்த வாசகம் நெத்தியடி. "I am a student from Delhi University. I am not afraid of ABVP. I am not alone".

ஏபிவிபி என்பது பா.ஜ.கவின் மாணவர் அமைப்பு. குட்டி இவ்வளவு பாய்ந்தால் தாயும் பாய வேண்டுமல்லவா? "குர்மெஹர் தேசவிரோதி. பாகிஸ்தான் ஆதரவாளர். நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்" சொன்னவர் அனில் விஜய். அவர் ஒரு பா.ஜ.க அமைச்சர். இதில் கொடுமை குமெஹரின் தந்தை மன்தீப்சிங் ராணுவத்தில் பணிபுரிந்த போது, காஷ்மீரில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டவர். தேசத்திற்காக உயிரை அளித்தவரின் மகளைத் தான் 'தேச துரோகி' என்றார்கள் பா.ஜ.கவினர்.

இப்படியாக டெல்லியில் உள்ள பல்கலைக்கழகங்களில் சுதந்திரத்தின் குரல் ஏபிவிபி வகையறவால் நெரிக்கப்பட்டது. இன்னொருபுறம் உயர்சாதி அல்லாத மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக்கப் பட்டார்கள். அவர்களில் ஒருவர் தான் நமது முத்துக்கிருஷ்ணன். முத்துக்கிருஷ்ணனின் முகநூல் பதிவில் அவரது அனுபவம் வெளிப்பட்டது.

" There is no Equality in M.phil/phd Admission, there is no equalitiy in Viva – voce, there is only denial of equality, denying prof. Sukhadeo  thorat recommendation,  denying Students protest places in Ad – block, denying the education of the Marginal’s. When Equality is denied everything is denied".

எம்.பில், பி.எச்டி இடம் அளிப்பதில் சமத்துவம் இல்லை. வாய்மொழி தேர்வில் சமத்துவம் இல்லை. பேராசிரியர் சுக்தேவ் முன்மொழிவுகளுக்கு மறுப்பு, மாணவர் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு. ஒதுக்கப்பட்டவர்களுக்கான கல்வி மறுப்பு. சமத்துவம் மறுக்கப்பட்டால் எல்லாம் மறுக்கப்படுவதாக அர்த்தம். இது தான் முத்து பதிந்ததின் அர்த்தம்.

மிக அழுத்தமாக தன் உணர்வுகளை பதிவு செய்துள்ளார் முத்து. தலித் என்ற காரணத்தால்,  உரிமை மறுக்கப்பட்டது தான் அவர் மன அழுத்தத்திற்கு காரணம். அது உயர்சாதி ஆசிரியர் வட்டத்தின் கைங்கர்யம். இவர்களது ஆட்டம் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தான். இவர்களில் சிலர் ஏபிவிபியின் நிர்வாகிகள்.

டெல்லியை பொறுத்தவரை உயர்சாதியை தவிர தலித், பிற்பட்டோர் அனைவரும் ஒன்று தான். ஒரே  நடவடிக்கை தான், அது தவிர்ப்பு, ஒதுக்கித் தள்ளுதல்.

கடந்த ஆண்டு திருப்பூர் மாணவர் சரவணன் டெல்லியில் உயிரிழந்தார். மருத்துவப் படிப்பை தமிழகத்தில் முடித்தவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் நுழைவுத் தேர்வு எழுதி வெற்றி பெற்றார். மர்மமாக மரணமடைந்தார் டெல்லியில். இன்னும் உண்மை வெளி வரவில்லை.

முத்துக்கிருஷ்ணன் மரணம் கொலையா, தற்கொலையா என்ற கேள்வி எழுந்துள்ளது இப்போது. தற்கொலை செய்து கொண்டிருந்தாலும், அதுவும் கொலை தான்.

ஒரு தமிழனின் உயிர் இந்தியாவின் தலைநகரில் கொடூரமாக பறிக்கப்பட்டுள்ளது. தமிழன் என்பதைக் கூட விடுங்கள். மத்தியப் பல்கலைக்கழகத்தின் மாணவனுக்காக  மத்திய அரசு இதுவரை வாய் திறக்கவில்லை. வாய் திறக்க வைப்போம்.

# முத்துகிருஷ்ணன்களை வாழ  விடு டெல்லியே !

செவ்வாய், 14 மார்ச், 2017

இரோம் ஷர்மிளாவும் சமூகமும்

இரோம் ஷர்மிளாவும் சமூகமும்.

நாடே பொங்கிக் கொண்டிருக்கிறது, இரோம் ஷர்மிளா தோல்விக்காக.

2000மாவது வருடம் நவம்பர் மாதம் 2ம் தேதி, மதியம் 03.30.  மணிப்பூர் மாநிலத்தில் 'மலோம்' என்ற கிராமம். பொதுமக்கள் பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காக காத்திருக்கிறார்கள். ராணுவம் வந்து இறங்குகிறது, இந்திய ராணுவம் தான். கண்மூடித் திறப்பதற்குள் எல்லாம் முடிந்து விட்டது. ஆமாம் துப்பாக்கியால் அந்தப் பகுதியை துளைத்தெடுத்து விட்டார்கள். மலோம் இந்தியாவில் தான் இருக்கிறது.

பேருந்திற்கு காத்திருந்த அப்பாவிப் பொதுமக்கள் 10 பேர் உயிர் பறிக்கப்பட்டது. அதில் 62 வயது பெண்மணியும் உண்டு, 19,18 வயது சிறார்களும் உண்டு. ஆனால் அவர்கள் "தீவிரவாதிகள்". ஆமாம், அரசு அப்படித் தான் சொன்னது. இவர்கள் இல்லாமல் இன்னும் 42 'தீவிரவாதிகளும்' குண்டுக்காயங்களை பெற்றார்கள். 14 வருடங்கள் கழிந்து, உச்சநீதிமன்றம் அமைத்த குழுவின் அறிக்கை வந்தது.  உயர்நீதிமன்ற தீர்ப்பும் வந்தது. " இவர்கள் அப்பாவிகள்".

இந்தத் துப்பாக்கிச்சூட்டின் போது பார்த்த ஒரு நேரடி சாட்சி தான் கவிஞர் இரோம் ஷர்மிளா. அந்த சம்பவம் கவிஞரை "போராளி" ஆக்கியது. மனம் பாதித்த இரோம் உண்ணாவிரதத்தை துவங்கினார். யாருக்கு எதிராக?

இரும்பு கரத்தில் மணிப்பூரை நெருக்கிப் பிடித்திருந்த அரசுக்கு எதிராகத் தான் உண்ணாவிரதத்தில் உட்கார்ந்தார். இந்திய பேரரசின் கைப்பாவையான மணிப்பூர் அரசு.

தீவிரவாதிகளை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் மாநில அரசு கொண்டு வந்திருந்த AFSPA ( Armed Forces Special Powers Act) சட்டம், யாரையும் கேள்வி கேட்க அனுமதிக்கவில்லை. இந்த சட்டத்தின் தைரியத்தில் தான் மலோமில் நடந்த படுகொலைகள். அந்த படுகொலையை நடத்தியவர்கள் "அசாம் ரைபிள்ஸ்" என்ற துணை ராணுவப்படை. அவர்களது வாகன அணிவகுப்பின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்கான பதிலடி தான் அந்த படுகொலைகள்.

உண்ணாவிரதத்தில் உட்காரும் போது இரோம் ஷர்மிளாவிற்கு தெரியாது, இது பதினாறு ஆண்டுகள் நீளுமென. ஆம், தீர்வு கிடைக்குமென நம்பி போராட்டத்தை தொடர்ந்தார். அரசு இரோமின் போராட்டத்தை "தற்கொலை முயற்சி" என்றது. கைது செய்து, மருத்துவமனையில் சேர்த்தார்கள். மூக்கில் குழாய் செருகப்பட்டு, உணவு செலுத்தப்பட்டது.  ஆனாலும் போராட்டத்தை தொடர்ந்தார் இரோம். அந்த பதினாறு வருட வரலாற்றை புத்தகமாகத் தான் படிக்க வேண்டும்.

கடந்த வருடம், டெல்லிக் கோர்ட்டில் கண்ணீரோடு இரோம் கூறியவை தான் கவனிக்கப் பட வேண்டியவை. " நான் உயிரோடு இருக்க ஆசைப்படுகிறேன். நான் வாழ விரும்புகிறேன். நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். நான் காதல் செய்ய விரும்புகிறேன். ஆனால் இதை எல்லாம் செய்யும் முன் 'ஆயுதப்படை சட்டம்' (Armed forces act) திரும்பப் பெற வேண்டுமென விரும்புகிறேன்". அவரை 'இரும்புப் பெண்மணி' என்று சொல்வதில் இருக்கும் உண்மையை இந்த கூற்று உறுதி செய்தது.

உலக வரலாற்றில் இல்லாதப் போராட்டம் இது. தனி ஒருப் பெண்ணாக நின்று போராடியது பெரும் வரலாறு. அந்தப் பதினாறு வருடங்கள் உணவு இல்லை, வேறு உணர்வு இல்லை, காதல் இல்லை, குடும்பம் இல்லை, தனி வாழ்க்கை இல்லை, பொழுதுபோக்கு இல்லை, பொழுதே அவர் கையில் இருந்ததில்லை, போராட்டமே வாழ்க்கையாய் கழிந்து விட்டது. அவருக்கு இவ்வளவுக்கும் கிடைத்த பரிசு தான் " 90 வாக்குகள்".

போராட்டக் களத்தில் தீர்வு கிடைக்காது என்ற காரணத்தினால் தான் அரசியல் களத்திற்கு வந்தார். இந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். மணிப்பூரின் முதல்வர் இபோபி சிங் போட்டியிட்ட தொகுதியில் இரோம் போட்டியிட்டார். இபோபி மூன்றாவது  முறை முதல்வர். அவர் தொகுதியில் போட்டியிட்டது தவறு என்ற வாதமும் உண்டு. அதே போல் போராட்டத்தை கைவிட்டதை மக்கள் ஏற்கவில்லை, அதனால் தோல்வி என்ற வாதமும் உண்டு. மணிப்பூரி அல்லாதவரை காதலித்தார், அதனால் தோல்வி என்ற வாதமும் உண்டு.

மொத்தத்தில் அவரது "தியாகம்" தோல்வி. இவ்வளவு தான் சமூகம்.

அவர் யாரது கனவுக்காக போராடினோரோ, அந்த மக்களே இரோமின் 'ஜனநாயகக் கனவை' கலைத்து விட்டார்கள். இதில் இரோம் வருத்தப்பட எதுவுமில்லை. பதினாறு வருடப் போராட்ட வாழ்வின் சோதனைகளில் இதுவும் ஒன்று. "இனி இங்கு கால் வைக்க மாட்டேன்", கனவோடு வந்த இரோம் கண்ணீரோடு சொன்னவை. கனவை கலைத்தவர்களின் பின் தலைமுறை காலத்திற்கும் வருத்தப்படும்.

இரோம் ஷர்மிளாவிற்கு வாக்களிக்காததற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம் பொதுமக்களுக்கு. ஆனால் அத்தனைக் காரணங்களும் அவரது தனிமனித தியாகத்தின் முன் தூசு.

போராளிகளை மக்கள் கொண்டாடுவார்கள், ஆனால் தேர்ந்தெடுக்க மாட்டார்கள், என்ற பொது புத்தி இனி வந்துவிடும். அதற்காக போராளிகள் ஒதுங்கி விடக்கூடாது. போராடுவோர் இல்லை என்றால் சமூகம் 'சாக்கடையாகி' விடும். மக்கள் மக்களாகவே இருக்கட்டும், போராளிகள் போராளிகளாகவே இருக்க வேண்டும்.

பொதுமக்களின் அரசியலை, அவர்கள் மனவோட்டத்தை வெளிப்படுத்துவதற்காகவே தோல்வி என்று தெரிந்தும் போட்டியிட்டார் இரோம் ஷர்மிளா என்ற வாதம் ஏற்கக் கூடியதாகவே இருக்கிறது. எப்படியோ, அரசியல் வாழ்க.

இரோம் ஷர்மிளா ஆதரவாளர்கள் வருத்தத்தில் சொல்லி இருந்தாலும், அது சரி தான்.

# "அந்த 90 வாக்குகளுக்கு நன்றி !"

வெள்ளி, 3 மார்ச், 2017

கன்யாமரி பயணம்

புது வருட பிரகடன நிலைத்தகவலை முகநூலில் பார்த்துவிட்டு அண்ணன் எம்.எம்.அப்துல்லா அழைத்தார். "படகுப் பயணம்  போகனும்னு போடிருக்கீங்கள்ல. போலாமா?", என்றுக் கேட்டார். "எங்கண்ணே?". "கேரள எல்லை. உங்க ஸ்டேட்டஸ் பார்த்துட்டு ஜோ மில்டன் கூப்பிடச் சொன்னார். சிங்கப்பூரிலிருந்து கிறிஸ்துமஸ்க்கு வந்திருக்கார்".

காரில்  சென்றடைந்தோம். நாறோயில் தாண்டி கடற்கரை நோக்கி பயணித்தோம். ஜோவின் ஊரான பள்ளம்துறையை அடைந்தோம். வழி எல்லாம் பெரியதும், சிறியதுமாக சர்ச்சுகள். கேரள சாயல் அடிக்கிறது. கடலை ஒட்டி வீடுகள். சில சமயங்களில் கடல் அலைகள் வீட்டை வந்து தொட்டு விளையாடுமாம்.  குழந்தைகளுக்கு தாலாட்டெல்லாம் தனியாகப் பாட வேண்டாம். அலையே தாலாட்டுகிறது.

கடலூரில் பணியாற்றும் ஜோவின் மாமா இல்லத்தில் எங்கள் தங்கல். பெங்களூர் தனசேகர், கோவை உதயமாறன் இணைந்தார்கள். காலை உணவுக்கு ஜோ இல்லம் சென்றோம். ஆப்பம்,ஸ்டூ. மலையாள சுவை. "காலையிலேயே மட்டனா?"என்றார் டாக்டர் செந்தில். " இது பீஃப்", என்றார். இரண்டு பேர் ஷாக் ஆனார்கள். "வீட்ல பீஃப்பா?", என்ற மெல்லியக் குரல். நான் கேரள பயணத்தில்  பரோட்டா-பீஃப் ரசிகர் என்பதால் மகிழ்வாய் சுவைத்தேன்.

அப்போது ஜோ தன் அனுபவத்தை சொன்னார். "பிளஸ் டூ வரை கன்யாமரி தாண்டியது கிடையாது. காலேஜ்க்கு திருச்சி போனேன். ஞாயிற்றுக் கிழமை ஆனதும் பீஃப் நினைவு. எங்கே கிடைக்கும் என்று கேட்டால் வேற்றுக் கிரகவாசி போல பார்த்தார்கள். பீஃபே பார்க்காத ஆள்லாம் இருக்காங்கன்னு கேள்விப்பட்டு எனக்கு வெளிநாடு வந்தமாதிரி ஆயிடுச்சி. அப்புறம் சிங்காரத்தோப்பு கிட்ட ஒரு கேரள மெஸ் கண்டுபிடிச்சேன். திருச்சியில அது தான் வாழவச்சது".

" மீனவர் கிராமத்தில் மாட்டிறைச்சி இவ்வளவு விருப்ப உணவா?". "ஆமாம். சின்ன வயசுல ஞாயிற்றுக் கிழமை காலையில் சர்ச்க்கு போகும் போது பார்த்தா மாடு நிற்கும். வெளியில வரும் போது, இறைச்சியா இருக்கும். அரை மணி நேரம் தான். விற்று தீர்ந்துடும்". மலரும் நினைவுகள் சொன்னார் அண்ணன் ஜோ.

பயணம் கிளம்பினோம். கடற்கரையை ஒட்டியே கார் சென்றது. கண்ணுக்கு எட்டும் தூரத்தில் கடல்.   தெரு முனையில் ஒரு தூண். தூண் மேல் ஒரு சிறு மாடம். அதனுள் மாதா சிலை. அடுத்த கிராமத்தில் வித்தியாச அமைப்பு. தெரு முக்கில் இருக்கும் பிள்ளையார் கோவில் அளவுக்கு. " இது என்ன?" என்று கேட்டேன். "இது குருசடி அல்லது கெபி எனப்படும், இங்கேயும் வழிபடுவார்கள்". "அப்போ சர்ச்?". " சர்ச்சும் செல்வார்கள். அங்கே தான் பூசை வழிபாடு நடைபெறும்". குருசடியை இங்கு தான் முதலில் பார்க்கிறேன். உடன் வந்த டாக்டர் மன்றாடி புருசோத்தமராஜன்," கெபி, சர்ச், கதீட்ரல்க்கான வித்தியாசங்களை" விளக்கினார். கதீட்ரல் மறை மாவட்ட அளவில் இருக்கும் தலைமையகம்.

வழியில் புத்தன் துறை, கேசவன் புத்தன்துறை, பெரியகாடு, ராஜாக்கமங்கலம் என மீனவ கிராமங்கள். கன்யாமரி மாவட்டத்தில் இருந்து கேரள எல்லை நீரோடி வரை கிட்டத்தட்ட 45 மீனவ கிராமங்கள். ஒவ்வொரு கிராமத்திலும் குருசடி தவிர்த்து பிரம்மாண்ட சர்ச் இருக்கிறது. ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வடிவமைப்பில்.  பள்ளத்தில் இருக்கும் சர்ச் ரஷ்ய கிரெம்ப்ளின் மாளிகையை நினைவூட்டுகிறது.

இந்தப் பிரம்மாண்ட சர்ச்சுகள் புயல் போன்ற பேரிடர் காலங்களில் அபயம் அளிக்கும் இடம். கிட்டத்தட்ட 250 ஆண்டுகாலப் பழமையானவை. இந்தக் கடலோர கிராமங்களில் முழுவதும் கிறித்தவ கத்தோலிக்கர்கள் தான். 480 ஆண்டுகளுக்கு முன் கிறித்தவத்தை தழுவியவர்கள்.  மூச்சு விடாமல் மண் பெருமையை சொல்லி வந்தார் ஜோ. சிங்கப்பூர் சென்று பதினெட்டு வருடங்கள். ஆனாலும் மண் பாசம் விடவில்லை.

கேரள-தமிழ்நாடு எல்லையில் உள்ள பூவார் சென்றடைந்தோம், இளையராஜாவோடு. படகுப் பயணம். சிறு அளவில் அலையாத்திக் காடுகள். இரண்டு மணி நேரம் சுற்றி வந்தது படகு. கடல் வரை சென்று திரும்பினோம்.  அண்ணன் ஜோ அன்பில் புத்தாண்டு பிரகடனம் ஒன்று நிறைவேறியது. பயணம் முடிவதற்குள், சூழலில் லயித்த துணை இயக்குநர் டான் அசோக் இரண்டு சீன்களை எழுதி இருந்தார்.

இரவு உணவுக்கு மீண்டும் ஜோ இல்லம். ஜோ அண்ணன் பிரிட்டோ, பொன்னாரை மீன் குழம்பு, விளை மீன் பொழிச்சது, அயிலை மீன் கட்லெட் ஆகியவற்றோடு காத்திருந்தார். உபசரித்தே திணறடித்தார் அண்ணன் பிரிட்டோ. "போதும்ணே". "இல்ல. உங்க ஊர்ல இதெல்லாம் கிடைக்காது", அன்பில் மூழ்கடித்தார். பெங்களூரில் பணிபுரியும் டாக்டர் ஆல்டோ," ஆக்சுவலாயிட்டு எங்க ஊர்ல மட்டும் தான் கிடைக்கும் இதெல்லாம்"என்றார். உண்டு முடித்து, மூச்சு விட முடியாமல் நெளிந்தேன். கடற்புறத்து மக்களின் அன்பும் கடல் போல் பெரிதாய்.

"குருசடி அந்தோணியப்பரே இவர்களைக் காத்தருள்வீராக"

(மார்ச் மாத அந்திமழை இதழில் விருந்தினர் பக்கத்தில் எனது பத்தி)