பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

பெங்களூரு வழக்கும்.... தில்லி வழக்கும்....

அங்கும் ஒரு வழக்கு நடக்கிறது, இங்கும் ஒரு வழக்கு நடக்கிறது…

ஆனால் தாம் கண்ணை மூடிக் கொண்டதால், உலகம் இருண்டு போகும். அந்த இருட்டில், இது யாருக்கும் தெரியாமலேயே போய்விடும் எனபது பூனைகளின் நினைப்பு. 

பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு எப்படி, எத்தனை வருடமாக இழுத்தடிக்கப்படுகிறது என்பது நாடறிந்த உண்மை. வாய்தா வாங்குவதிலேயே கின்னஸ் சாதனை படைக்கும் கட்டத்தில் ஜெ.

2ஜி வழக்கில், தில்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் 2011 ஏப்ரல் 2-ம் தேதி குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல் இன்று வரை முழு ஒத்துழைப்பு கொடுத்து தன் மீதான வழக்கை நடத்தி வருகிறார் அண்ணன் ஆ,ராசா.

           

வழக்கை இழுத்தடிப்பதற்காக, சி.பி.ஐ தான் நேற்று நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற குறிப்புரையையும், நீதிமன்ற உத்தரவையும் படித்தால் புரியும்.

நீதிமன்றக் குறிப்புரை :
கேட்ட கேள்வியையே வெவ்வேறு வகையில் கேட்டும், சுற்றி வளைத்து கேட்டும், ஒரே கேள்வியை திரும்ப திரும்ப கேட்க வேண்டாம் என மூத்த அரசு வழக்கறிஞரை நீதிமன்றம் கேட்டுக் கொள்கிறது.

நீதிமன்ற உத்தரவு :
“ஏற்கனவே 17-07-2014 அன்று, மூத்த அரசு வழக்கறிஞர், ”இது பெரிய வழக்கு என்ற அடிப்படையில் குறுக்கு விசாரணைக்கு தயார்படுத்திக் கொள்ள கூடுதல் நாட்கள் வேண்டும்” என்று கோரியதின் அடிப்படையில் இரண்டு நாட்கள் வழங்கப்பட்டன.

ஆகவே, 18-07-2014 மற்றும் 19-07-2014 ஆகிய வேலைநாட்களில் வழக்கு தள்ளி வைக்கப்பட்டு, இன்று 21-07-2014 எடுத்துக் கொள்ளப்பட்டது. இப்போது மேலும் நாட்கள் கேட்கிறார்.

07-07-2014-ல் குறுக்கு விசாரணை துவங்கியது, ஆனால் இன்னும் முடிவை எட்டவில்லை. முடிவுத் தேதி(கட்-ஆப் டேட்) குறித்து குறுக்கு விசாரணை துவங்கியது, ஆனால் இன்னும் அதே முடிவுத் தேதி குறித்தே விசாரணை நீடிக்கிறது, பல நாட்களுக்குப் பிறகும்.

இதனடிப்படையில் இந்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட வேண்டியது. ஆனால் எனது விருப்பமின்மைக்கு இடையிலும், வழக்கு விசாரணை தாமதப்படாத வகையில் குறுக்கு விசாரணையை விரைவாக முடிக்க வேண்டுமென்ற உத்தரவோடு, வேண்டுதல் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

மூத்த அரசு வழக்கறிஞரின் வேண்டுதலுக்காக குறுக்கு விசாரணை தள்ளி வைக்கப்படுகிறது”

வழக்கமாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தான் வழக்கை இழுத்தடிப்பார்கள், ஜெயலலிதாவைப் போல. ஆனால் இங்கே அரசுத் தரப்பு இழுத்தடிக்கிறது. இதன் காரணமாக, மூத்த அரசு வழக்கறிஞரை இந்த அளவிற்கு கண்டித்திருக்கிறார் நீதிபதி,

அதே போல நேற்றைய விசாரணையில் பிரதமரின் ஒப்புதல் பேரிலேயே அனைத்தும் நடைமுறைப் படுத்தப்பட்டது என்று அண்ணன் ஆ.ராசா அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளார்.

தானே வாதாடி, இப்போது தானே சாட்சியமும் வழங்கி அரசுத் தரப்பை திணறடித்துக் கொண்டிருக்கிறார் அண்ணன் ஆ.ராசா.
ஆனால் இது எதுவும் உலகின் கண்களுக்கு தெரியக்கூடாதென கண்களை இறுக மூடிக் கொண்டுள்ளன, சில பத்திரிக்கைப் பூனைகள்.

# உதயசூரியனும் உதிக்கையிலே… !