பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 8 நவம்பர், 2013

சட்டமன்றம் 28.10.2013 - கேள்வி நேரம்

28.10.2013 திங்கட்கிழமை, 

 "துணை மின் நிலையம் அமைக்கப்படுமா ?" என்ற தன் கேள்விக்கு மின்துறை அமைச்சர் சொன்ன பதிலை கூட காதில் வாங்கவில்லை. அரியதாய், பெரியதாய், வலியதாய் என்று மெல்ல கூச்சத்தோடு இழுவையாக ஆரம்பித்தார். லேசாக பிக்கப் ஆகி பாட ஆரம்பித்தார். அப்போது தான், "அரிய'தாய்', பெரிய'தாய்', வலிய'"தாய்' என்று ஒவ்வொரு வார்த்தையிலும் தாய் வருகிறது என்பதை எல்லோரும் உணர்ந்து கவனிக்க ஆரம்பித்தோம். உடனே நன்றாக ராகம் போட்டு எட்டுகட்டையில் பாட ஆரம்பித்து விட்டார். ஒழுங்காக கேள்வி கேட்டாலே இரண்டு நிமிடத்திற்கு மேல் அனுமதிக்காத சபாநாயகர் ஒன்றும் சொல்ல முடியாமல் வேடிக்கை பார்த்தார், ஐந்து நிமிடம். இதை குனிந்தபடியே கேட்டு ரசித்து சிரித்துக் கொண்டிருந்தார் ஓ.பி.எஸ். ( தேனி மாவட்ட அரசியலில் இருவரும் எலியும், பூனையும்)

பிறகும் நிறுத்தவில்லை தமிழ்செல்வன். "சபாநாயகரிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன், அம்மா சட்டசபையில் பொற்பாதம் பதித்தது 1989. அடுத்த ஆண்டு வெள்ளிவிழா. அன்னை தெரசா போல் மக்களுக்காக வாழும் அம்மா அடுத்த ஆண்டு பாரதபிரதமர் ஆவது உறுதி. அப்போது வெள்ளிவிழா கொண்டாடப்படுமா ?" என்று அவருடைய கேள்விக்கு தொடர்பில்லாததை எல்லாம் பேசி அமர்ந்தார். பத்து நிமிடம் அனைவருக்கும் எண்டர்டெயின்மெண்ட் ஆக கழிந்தது.

கம்யூனிஸ்ட் உறுப்பினர் டில்லிபாபு, "அரூரில் குடிசைமாற்று வாரியத்தில் 25 ஆண்டுகளாக குடியிருக்கும் பேருராட்சி தொழிலாளர்களுக்கு பட்டா வழங்கப்படுமா ?" , "அரூர் வீட்டுவசதிவாரியக் குடியிருப்பில் உள்ளவர்களுக்கு பட்டா வழங்கப்படுமா ?" என்று இரண்டு கேள்விகள் கேட்டார். பதில் சொன்ன அமைச்சர் வைத்திலிங்கம், " நியாயமான கோரிக்கை, ஆய்வில் உள்ளது, நடவடிக்கை எடுக்கப்படும்" என பொத்தாம் பொதுவாக பதில் சொல்லி எஸ்கேப் ஆனார்.

பொன்னேரி அ.தி.மு.க பொன்.ராஜா, "தன் தொகுதியில் நிலக்கரி சேமிப்பு கிடங்கால் மாசு படுவதாக" சொல்லி மாற்று வழிகளை அடுக்க, சபாநாயகர்"சீக்கிரம் முடிங்க" என உத்தரவிட்டார். ராஜா தடுமாற "பாட்டா பாடிடுங்க" என குரல் வர அ.தி,மு,க தரப்பிலேயே சிரிப்பு எழுந்தது.
பேருந்து வசதிக்காக கேள்வி கேட்ட தே.மு.தி.க (அதிருப்தி) செங்கம் சுரேஷ்குமார், " ஆளும் வளரனும், அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி, நீ அம்மாவ சந்தித்தா தாண்டா வளர்ச்சி என்று சொன்னார்கள். சந்தித்தேன், தொகுதியில் வளர்ச்சி இப்போ. ஆதிதிராவிட சமுதாயத்தின் காவல் தெய்வம் அம்மாவிற்கு நன்றி" என்று முடித்தார்.

ம.ம.கட்சியின் ஜவாஹிருல்லா,"கீழக்கரையில் படகு நிறுத்தும் தளத்தின் இருபுறமும் தடுப்புசுவர் கட்டப்படுமா ?"என்று கேட்டார். மீன்வளத்துறை ஜெயபால்,"அந்த துறையே அம்மா ஆட்சியில் கட்டியது தான்" என்று பதிலளித்தார். தான் சொன்னதை அமைச்சர் புரிந்துக் கொள்ளவில்லை என புன்னகையோடு,"அது மீன்பிடி தளம் தான். ஆனால் மக்கள் வேடிக்கை பார்க்க வருகிறார்கள். பாதுகாப்புக்காக கட்ட வேண்டும். அல்லது மக்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்" என சொன்னார், அப்போதும் அமைச்சர்" அது சுற்றுலா தளம் அல்ல" என்று பதிலளித்துக் கொண்டிருந்தார்.

வேதாரண்யம் காமராஜ் (அ.தி.மு.க), "மக்களின் மனசாட்சி, நல்ல அரசாட்சி, அம்மா திட்டங்கள் சாட்சி" என ரைமிங்காக கவிதை சொல்லி, "ஈழத்தமிழர்களின் தாய், ஈழத்து எதிரிகளுக்கு தீ அம்மா ஆட்சியில் வேதாரண்யம் மருத்துவமனையில் காலி பணியிடங்கள் நிரப்பப்படுமா ?" எனக் கேட்க, அமைச்சர் வீரமணி வழக்கம் போல் "நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். கவிதையில் குளிர்ந்து போன ஜெ எழுந்து," பெண்களுக்கான மகப்பேறு பிரிவு, தாய்சேய் பிரிவு இடங்களை நிரப்ப உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்" என அமைச்சர் சொன்னதை அழுத்தமாக திரும்பவும் உறுதியளித்தார்.

கேள்வி நேரம் முடிந்தது. வேப்பனஹள்ளி ச.ம.உ செங்குட்டுவன் எழுந்து கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு வாய்ப்பு கோரினார். முதலில் மறுத்த சபாநாயகர் பிறகு :சொல்லுங்க" என்றார். "கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2000 மாடுகள் இறந்தப் பிரச்சினை" என்றவுடன், "ஆய்வில் இருக்கு, உக்காருங்க" என்றார். கம்பம் ராமகிருஷ்ணன் ஈரோடு வீட்டுவசதி வாரியப் பிரச்சினை குறித்து பேச அனுமதி கேட்டார், மறுக்கப்பட்டது. டாக்டர்.கிருஷ்ணசாமி ஆரம்பத்திலே இருந்து வாய்ப்பு கேட்டுக் கொண்டிருந்தார், ஆசிரியர் தேர்வில் இட ஒதுக்கீடு கடைபிடிக்காததை குறித்து பேச. அவரையும் "உக்காருங்க, உக்காருங்க" என்று உட்கார வைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக