பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 31 ஜனவரி, 2016

என்ன வாழ்க்கை

திருமண அழைப்பிதழ் கொடுக்க வேல்மணி வந்தார், நேற்று முன்தினம். தயங்கி, தயங்கி அழைப்பிதழை கொடுத்தார். பா.ம.க பிரமுகர்கள் படம் போட்ட அழைப்பிதழ், அதனால் தான் தயங்கியிருக்கிறார். பெற்றுக் கொண்டு கேட்டேன், "முகூர்த்தத்திற்கு வரவா, உங்களுக்கு சங்கடம் இல்லையே".

"எப்போ முடிந்தாலும் வாங்கண்ணா. வந்து வாழ்த்தினீங்கன்னா சந்தோஷம்" என்று சிரித்தார். "தா.பழூர் திருமணத்திற்கு போகும் முன் வந்து விடுகிறேன்", என்று சொல்ல, மகிழ்வாய் விடைபெற்றார். அவர் பா.ம கவை சேர்ந்தவர், பொன்பரப்பியில் உணவு விடுதி நடத்தி வருகிறார்.

ஒரு முறை இரவு பொதுக்கூட்டத்தை ஒரு கிராமத்தில் கலந்து கொண்டு வரும் போது கடும் பசி. பொன்பரப்பி பாண்டியனிடம் தொடர்பு கொண்டு சொன்னவுடன், "வேலு கடையில் சொல்லி வைக்கிறன். வாங்க" என்றார். மணி 11.00. கடையை மூடும் நிலையில், எங்களுக்காக தோசை சுட்டுக் கொடுத்தார் வேலு. அது தான் அறிமுகம். அவர் கடைக்கு சென்று சாப்பிட்டதில், என் மீது அன்பு.

சென்னை சென்று ஒரு உணவு விடுதியில் பணியாற்றி மெல்ல, மெல்ல முன்னுக்கு வந்தவர் வேல்மணி. பிறகு சொந்த ஊர் பொன்பரப்பிக்கு திரும்பி, கடை ஆரம்பித்து நல்ல நிலையில் இருப்பவர். நண்பர்களுக்கு கணக்கு பார்க்காமல் உதவும் மனம் கொண்டவர்.

அவருக்கும் சுகந்திக்கும் திருமணம் உறுதியாகியது. அந்த அழைப்பிதழை வைக்க தான் வந்தார் வேல். 31.01.2016 அன்று  திருமணம் என்ற நிலையில் திருமண வேலைகளை பரபரப்பாக பார்த்து வந்தார் .

மணமகள் சுகந்தி அதே பொன்பரப்பி கிராமத்தை சேர்ந்தவர். ஏழ்மையான குடும்பம். திருமண செலவுகள் முழுமையையும் வேல்மணி பார்த்து வந்தார். நேற்று நண்பகல் சுகந்தியிடம் இருந்து அழைப்பு. "அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று திருமண உதவி தொகைக்கு விண்ணப்பம் அளித்து வருகிறேன்", என்று தெரிவித்திருக்கிறார்.

"அம்மா சாவித்திரி மற்றும் அக்காள் கணவர் ஸ்டாலினுடன் பைக்கில் போகிறேன்" என சுகந்தி சொல்ல, வேலு காரில் போக சொல்லியிருக்கிறார். மறுத்த சுகந்தி "பைக்கிலேயே போகிறேன்" என்று சொல்லி கிளம்பியிருக்கிறார்கள். அடுத்த அரைமணி நேரத்தில் அலைபேசி அழைப்பு.

அரியலூர் நெருங்கும் முன் தாமரைக்குளம் கிராமத்தில் சிமெண்ட் லாரி, பைக் மீது மோதி மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே மரணம். லாரி டிரைவர் மீது தவறு.

இரண்டு ஆண்டுகள் முன், இதே சாலையில் சிமெண்ட் லாரி, பேருந்து மீது மோதி 15 பேர் மரணம். கடந்த ஆண்டு பள்ளி வேன் மீது லாரி மோதி 2 குழந்தைகள் உட்பட 4 பேர் மரணம். இப்போது இது. இன்னும் ஆட்சி நிர்வாகம் தூங்குவதே காரணம்.

இன்று, சுகந்தி உடல் அருகே நொறுங்கி உட்கார்ந்திருந்த வேல்மணியை தேற்ற முயன்று தோற்றோம். "போகிறேன்" என்று சொல்லி போய் விட்டாளே என்று புலம்பியபடி இருந்தார். இறந்த ஸ்டாலின், நண்பர் பாக்கியராஜின் தம்பி.  ஸ்டாலினின் 7வயது, 4வயது குழந்தைகள் இருவரையும் பார்த்து எங்களுக்கும்  கண் கசிய ஆரம்பித்தது.

இறுதிப்பயணத்தில், சுடுகாடு நோக்கி மூன்று உடல்களும் ஒருங்கே பயணிக்க, ஊரே கண்ணீர் வடித்தது. சுடுகாடு சென்று கிளம்பினோம். மாலை மணி 5.30. காரின் முன்பக்கம் அந்த அழைப்பிதழ் இருந்தது. முகூர்த்தம் நாளை காலை "7.30-9.00".

# என்ன வாழ்க்கை இது.

சனி, 30 ஜனவரி, 2016

ஒரு பாலத்தின் கதை - 1

"ஏன் சங்கர் அது உங்க தொகுதியும் இல்ல. அதிமுக எம்.எல்.ஏ தொகுதி. அந்த ஊருக்கு இவ்வளவு பெரிய பாலம் கேக்கறீங்களே?". இது நான் எதிர்பார்த்த கேள்வி தான். அதனால் பதிலோடு தயாராகத் தான் இருந்தேன். கேட்டவர் அன்றைய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன்.

அது 2007 ஆம் ஆண்டு. நான் ஆண்டிமடம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர். நான் கேட்ட பாலம் " கொள்ளிடம் ஆற்றின் மேல், நீலத்தநல்லூர் - மதனத்தூர் பாலம்". நீலத்தநல்லூர் தஞ்சை மாவட்டப் பகுதி. மதனத்தூர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியை சேர்ந்தது.

"இந்தப் பாலம் வந்தால் ஜெயங்கொண்டம்  தொகுதிக்கு மட்டும் இல்ல அண்ணா, மொத்த அரியலூர் மாவட்டத்துக்கே பயன்படும். இப்போ நாங்க கும்பகோணம் போகனும்னா ஜெயங்கொண்டத்தில் இருந்து அணைக்கரை வழியா போறோம். இந்தப் பாலம் கட்டுனா 20 கிலோமீட்டர் மிச்சமாகும்.

அரியலூருல இருந்து கும்பகோணம் போக, திருவையாறு போய் போகனும். அவங்களுக்கும் இதனால் தூரம் குறையும். இது ஜெயங்கொண்டம் பகுதி மக்களின் 40 ஆண்டுகால கனவு".

"அப்படியா அவ்வளவு கால கோரிக்கையா?"

"மறைந்த ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ அண்ணன் க.சொ.கணேசனின் நீண்ட நாள் கோரிக்கை. சட்டமன்றத்தில் பல முறை இது குறித்துப் பேசி இருக்கிறார். அதே போல கொள்ளிடத்தின் அக்கரை தஞ்சை மாவட்டம்.

அந்த மாவட்ட அமைச்சர் என்ற முறையில் அண்ணன் கோ.சி.மணி அவர்களும் இது குறித்து ஏற்கனவே கடந்த ஆட்சியில் முயற்சி எடுத்திருக்கிறார். இப்போது உடல் நலம் சரியாக இருந்திருந்தால் உங்களை விட்டிருக்கமாட்டார்" என்றேன்.

"நீங்க சொல்லறத பார்த்தா முக்கியம் தான் போலருக்கே"

"ஆமாம் அண்ணா. இது மட்டுமில்லாம 1996ல் இது குறித்து நான்கு  எம்.எல்.ஏக்கள் ஒருங்கிணைந்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார்கள். அவர்கள் குத்தாலம் தொகுதி ச.ம.உ கல்யாணம், ஜெயங்கொண்டம் தொகுதி ச.ம.உ க.சொ.கணேசன், திருவிடைமருதூர் ச.ம.உ இராமலிங்கம், பாபநாசம் தொகுதி கருப்பண்ண உடையார்.

கேள்வி எழுப்பி பேசிய அண்ணன் குத்தாலம் கல்யாணம்,"இந்தப் பாலம் அமைந்தால், கும்பகோணத்தில் இருந்து சென்னை செல்லும் தூரம் குறையும். நான்கு எம்.எல்.ஏக்கள் மட்டுமல்ல உள்ளாட்சித்துறை அமைச்சர் கோ.சி.மணி பரிந்துரையும் உண்டு" என சொல்ல..

அப்போது பதிலளித்த அன்றைய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் தா.கிருஷ்ணன், நான்கு எம்.எல்.ஏக்களும் அமைச்சரும் இணைந்து கோரிக்கை எழுப்புவதன் முக்கியத்துவத்தை உணர்கிறேன். அரசு நடவடிக்கை எடுக்கும் என்று பதில் அளித்திருக்கிறார். அவ்வளவு தொடர் முயற்சிகள் இந்தப் பாலத்திற்கு எடுக்கப்பட்டிருக்கு அண்ணா" என்றேன்.

எனது நீண்ட பதிலை கேட்ட அண்ணன் சாமிநாதன் திரும்பி சீனியர் பி.ஏவை பார்த்தார். "அந்த மேப்பை எடுத்துட்டு வாங்க" என்றார்.

(தொடரும்)

திங்கள், 25 ஜனவரி, 2016

தாய்மொழி காக்க...

பெங்களுருவில் 2012ம் ஆண்டு டிசம்பரில் நடைப்பெற்ற எம்.எல்.ஏக்கள் பயிற்சி பட்டறையில் பல மாநிலங்களில் இருந்தும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர். பாண்டிச்சேரியில் இருந்து கிட்டத்தட்ட பத்து எம்.எல்.ஏக்கள் கலந்துக் கொண்டனர். தமிழகத்தில் இருந்து அய்ந்து பேர் கலந்து கொண்டோம்.

வகுப்பெடுத்த பேராசிரியர்கள் பெரும்பாலோர் ஆங்கிலத்தில் பேசினர். ஒரு சிலர் இந்தியை கலந்து பேசினர். வட இந்தியாவில் இருந்து வந்திருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பலருக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்று காரணம் கூறினர்.

ஒருவர் முழுவதுமாக இந்தியிலேயே உரையாற்றிட முயன்றார். அப்போது பாண்டிச்சேரி எம்.எல்.ஏக்களிடம் இருந்தும், தமிழகத்தை சேர்ந்த எங்களிடமும் இருந்து எதிர்குரல் கிளம்பியது. எங்களை சமாதானப்படுத்த முயன்றார்கள்.

"ஆங்கிலமே சுத்தமாக தெரியாதவர்கள் இருக்கிறார்கள்" என்று  சால்ஜாப்பு சொல்லிப் பார்த்தார்கள். "அதே போல நாங்கள் இந்தியே தெரியாதவர்கள் இருக்கிறோம்" என்று கூறினோம்.  ஒரு வழியாக ஆங்கிலத்திலேயே வகுப்பு நடக்கும் என்று முடிவானது.

இதுவே அடுத்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற பயிற்சி பட்டறையில் காட்சி வேறு விதமாக இருந்தது. டெல்லியில் வகுப்பு எடுத்தவர்கள் வட இந்தியாவை சேர்ந்தவர்கள் பெரும்பாலோர். அதனால் "ஹிந்தி" கொஞ்சம் முண்டியது.

ஆங்கிலம், இந்தி இரண்டையும் கலந்தே பேசினார்கள். அங்கேயும் ஒருவர் முழு இந்திக்கு தாவினார். அப்போதும் ஒரு எதிர் குரல் முதலில் ஒலித்தது. அதற்கு பல குரல்கள் ஆதரவாக ஒலித்தன.

ஒருவர் "ராஷ்டிரிய பாஷா இந்தி. அதிலேயே வகுப்பு நடத்தலாம்" என்று வாதிட்டார். முதல் குரல் கொடுத்தவர் எழுந்து "இந்தி ராஷடிரிய பாஷை கிடையாது. இந்தியாவில் இருக்கும் எல்லோரும் இந்தி பேசுபவர்கள் அல்ல" என்றார். குரல் கொடுத்தவர் தமிழகத்தை சேர்ந்தவர் அல்ல, தென்னிந்தியாவை சேர்ந்தவரும் அல்ல.

அவர் ஹரியானாவை சேர்ந்தவர். அது எங்களை ஆச்சரியப்படுத்தியது. காரணம் தமிழகத்தை சேர்ந்த நமக்கு, வட இந்தியர்கள் என்றால் இந்தி வெறியர்கள் என்று பொது எண்ணம். அப்போது அவர்  மேலும் சொன்னார்," எங்கள் தாய் மொழி ஹரியாண்வி. இந்தி மேலாதிக்கத்தால் என் மொழி அழிந்துக் கொண்டிருக்கிறது".

இதற்கு ஆதரவான குரல் குஜராத்தில் இருந்தும் வந்தது. ஆமாம் பிரதமர் மோடியின் குஜராத்தில் இருந்து தான். அவரும் இதே கருத்தை சொன்னார். இந்தி தேசத்தில் இருந்தே இந்த உணர்வு குரல்கள் எழுந்தது. பிறகு தென்னிந்தியாவை சேர்ந்தவர்களும் குரல் கொடுக்க, ஹிந்தி பின் வாங்கியது.

இந்த உணர்வை கடந்த ஆண்டு முகநூலில் கண்டேன். மோடி தலைமையிலான பாஜக அரசு இந்தியையும், சமஸ்கிருதத்தையும் தூக்கிப் பிடிக்க, திணிக்க முயற்சித்த போது திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து மாத்திரமில்லாமல் கட்சிசார்பற்ற இளைஞர்களிடம் இருந்தும் எதிர்குரல் எழுந்தது.

நணபர் ஒருவர் என்னை ஒரு குழுவில் இணைத்தார். அதில் கர்நாடகா, கேரளா, ஆந்திராவை சேர்ந்த பலரும் இந்தி மேலாதிக்கத்தை எதிர்த்து குரல் கொடுத்தனர். இது தொடர் போராட்டம். நாம் விழித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் தாய்மொழி கொல்லக் காத்திருக்கும் கும்பல் முன்னேறி விடும்.

எம் மண்ணின் மைந்தர், மொழிப் போர் வீரர் கீழப்பழூர் சின்னசாமி தன் தேகத்திற்கு தீ வைத்துக் கொண்டு துவங்கிய போராட்டம் இது.

# அந்தத் தீ இன்னும் கொழுந்து விட்டு எரிகிறது !

ஞாயிறு, 24 ஜனவரி, 2016

ஒரு கட்டுரையின் கதை

சட்டமன்றக் கூட்டத் தொடரின் கடைசி நாள். நக்கீரன் அலுவலகத்தில் இருந்து இணை ஆசிரியர் அண்ணன் லெனின் அழைத்தார். "சட்டப்பேரவையின் இறுதிக் கூட்டத் தொடர். விமர்சனம் எழுதிரலாமா?". "அனுப்பிடறேன் அண்ணா" என்றேன். "நாளைக் காலை 10மணிக்கு அனுப்பிடுங்க".

சென்னையில் இருந்து அரியலூருக்கு கிளம்பினேன். கார் பயணம்.  ஏறி அமர்ந்ததும் அலைபேசியை எடுத்து விமர்சனக் கட்டுரையை தட்டச்ச ஆரம்பித்தேன். தொடர்ந்து வந்த அலைபேசி அழைப்புகளுக்கு இடையில் தட்டச்சு தொடர்ந்தது.

இடையில் சிங்கப்பூரில் இருந்து ஒரு அழைப்பு. அந்த அழைப்பு தான் இந்த நிலைத் தகவலுக்கு காரணம். அதை கடைசியில் சொல்கிறேன்.

பாதி கட்டுரையில் தூங்கிப் போனேன். நள்ளிரவு அரியலூர் வந்தேன். காலையில் 10 மணிக்கு தொண்டப்பாடி கவுன்சிலர் மகராஜன் புதுமனைப் புகுவிழா சென்று விட்டு, ஜெயங்கொண்டம் பயணத்தில் கட்டுரையை தயார் செய்யலாம் என்று இருந்தேன். அப்போது தான் அந்த செய்தி.

புதுமனைப் புகுவிழாவுக்கு வந்த டாடா ஏஸ் கவிழ்ந்து 20 பேர் கடுமையாக அடிபட்டு அரியலூர் மருத்துவமனையில் உள்ளார்கள். நேரே மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் கூறி, மருத்துவர்களை சந்தித்து விட்டு கிளம்பும் போது மணி 11.30. கட்டுரை தயாராகவில்லை. அண்ணன் லெனின் அழைத்துவிட்டார். நேரம் வாங்கினேன்.

ஜெயங்கொண்டம் நகராட்சி கவுன்சிலர் தேவீஸ்வரி புதுமனைப் புகுவிழா. கலந்து கொண்டு கங்கை கொண்ட சோழபுரம் விரைந்தேன். கத்தார் சென்ற போது உடன் இருந்து உபசரித்த  குமார் புதுமனைப் புகுவிழா. இதற்கிடையில் அலைபேசி அழைப்புகள். "மருதூர் துக்கத்திற்கு எப்ப வர்றீங்க?".

12.30 இடைப்பட்ட பயணத்தில் இரண்டு பத்தி தயாராகியது. 01.20 மருதூர் கிராமத்தை அடைந்தேன். செயலாளர் விஸ்வநாதன் உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினேன். "கீழப்பட்டி கங்காசலம் இறந்துட்டாரு. மாலை வச்சிடலாமா?". "சரி, போகலாம்".

அங்கிருந்து வாளரக்குறிச்சி பயணம். மதியம் 02.15க்கு அடைந்தேன். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கண்ணன் பாட்டி வள்ளியம்மை படத்திறப்பு விழா. 12.30க்கு சென்றிருக்க வேண்டிய நிகழ்ச்சி. படத்தை திறந்து வைத்து இரங்கல் உரையாற்றினேன். அதற்கிடையே அண்ணன் லெனின் அழைத்து விட்டார்.

"அண்ணா, தொடர் பயணம். தயாராகிக்கிட்டு இருக்கு". "04.30க்குள் அனுப்பிடுங்க". காரில் ஏறியவுடன் மீண்டும் தட்டச்சு.  நிண்ணியூரை சென்றோம். "சாமிநாதன்-தையல்நாயகி" தம்பதியினரின் திருமணம் நடந்து அறுபதாம் ஆண்டு விழா. வாழ்த்து பெற்றோம்.

அங்கிருந்து முள்ளுக்குறிச்சி பயணம். மணி மாலை 04.00. ஊராட்சி செயலாளர் பாண்டியன் இல்லத்தில் தேநீர் அருந்துவதற்குள் ஒரு பத்தி. வெள்ளாற்றில் சேதமடைந்த தரைப்பாலத்தை பார்வையிட ஒன்றிய செயலாளர் அண்ணன் ஞானமூர்த்தி அழைத்தார். பயணத்தில் இறுதி பத்தி தட்டச்சு.

வெள்ளாற்றை பார்வையிட்டோம். காரில் ஏறி கட்டுரையை முடித்து இமெயில் அனுப்ப முயன்றால், சிக்னல் இல்லை. கொஞ்சம் பயணித்து, சிக்னல் வந்தவுடன் மெயிலை அனுப்பி அலைபேசியை வைத்தேன். அண்ணன் லெனின் அழைத்தார். மணி 05.00.

ஒரு கட்டுரை தயாராக இவ்வளவு நெருக்கடி. என்னிடம் பெறுவதற்குள் அண்ணன் லெனினுக்கு ரத்த அழுத்தம் எகிறி இருக்கும். இப்போ இந்த நிலைத் தகவலும் நடிகர் வாகை சந்திரசேகர் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் பொதுக் கூட்ட மேடையில் தட்டச்சியது.

எதுக்கு இவ்வளவு பில்டப்ன்னு கேட்பீங்க. சிங்கப்பூரில் இருந்து வந்த அந்த அழைப்பு தான் காரணம். கல்லக்குடி மது அழைத்தார். "அண்ணா, ரொம்ப நாள் சந்தேகம். நீங்க தான் எழுதுறீங்களா? நீங்களே டைப் பண்றீங்களா?". இதுக்கு எப்படி நேரம் கிடைக்குது?". இது போல நிறையப் பேருக்கு சந்தேகம். சிலர் கேட்கிறாங்க, பலர் கேட்பதில்லை.

இப்படித்த்த் தான் எழுதறேன் மது.

# ஒரு கட்டுரையே,  ஒரு கட்டுரையை உருவாக்கிட்டுதே !

சனி, 23 ஜனவரி, 2016

குறிஞ்சியும் ப்ராஜெக்ட்டும்

"குறிஞ்சி நிலம் என்பது மலையும், மலை சார்ந்த நிலப்பரப்பும் ஆகும். எழுதியாச்சா?"
"விக்கிப்பீடியா பார்த்தீங்களா?"
"எனக்கு தெரியும்"
"இல்லை. விக்கிப்பீடியா எடுங்க"
"எடுத்துட்டேன்"
"மொபைல என் கிட்ட கொடுங்க". 

ஏதோ ஆய்வுக் கட்டுரைக்கான தயாரிப்புன்னு நினைச்சுடாதீங்க. நாலாம் வகுப்பு தமிழ் செய்முறைப் பயிற்சி. சிம்பிளா ப்ராஜெக்ட் ஒர்க். வெள்ளைத் தாள்ல சுத்தி கோடு போட்டு, ரூல் போட்டு பக்காவா ரெடி செஞ்சிருந்தாங்க அவர் அம்மா.

26 வருஷம் முன்னாடி எஞ்சினியரிங் அஸைன்மெண்ட் தயார் செஞ்ச ஞாபகம் வந்தது. இப்போ நாலாவதுலேயே. சோபாவில் வசதியாக சாய்ந்து உட்கார்ந்தார் சூர்யா. அவர் தான் நான்காம் வகுப்பு படிக்கும் அந்த வி.ஐ.பி.

மொபைலை வாங்கினார். "ஸ்கிரீன் ஷாட் எடுத்து வச்சிருக்கீங்களா?. இது சரியா வராது. ப்ரவுசர் ஓப்பன் பண்ணுங்க". இதுக்கு மேல தப்ப முடியுமா, ஓப்பன் பண்ணினேன். "அப்பா, ஸ்கிரீன ரொடேட் பண்ணுங்க. அப்ப தான் படிக்க ஈசியா இருக்கும்".

குறிஞ்சித் திணை முடிந்து அடுத்த திணை போவதற்குள் மூச்சு வாங்கி விட்டது, எனக்கு. "அடுத்து முல்லைப்பா", என்றேன். "இல்லை. நான் நெய்தல் டைட்டில் எழுதிட்டேன். அத எடுத்துக் கொடுங்க",என்றார் அழுத்தமாக. அதை எடுத்துக் கொடுக்க, எழுத ஆரம்பித்தார்.

எதிர் சோபாவில், போர்க்கால அடிப்படையில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தனர் மூத்த மகனும், இணையரும். அங்க இவருக்கு சயின்ஸ் ப்ராஜெக்ட்க்கு தயாரிப்பு நடந்து கொண்டிருந்தது.

இணையர்,"ஸ்டிக்கர் ஒட்டியாச்சா?" என்றார். "ஜெயலலிதா ஸ்டிக்கரா?"என்றேன். மூத்த மகன் சரண், " நானும் நினைச்சேன்" என்றார்.  பதினோராம் வகுப்பு மாணவன் வரை புரட்சித்தலைவியின் புகழ்.

நில வகையின் படம் கொண்ட ஸ்டிக்கரைக் கொடுத்தார் இணையர். சரண் கத்தரிகோல் கொண்டு நறுக்கினார். எழுதிய தாளை அண்ணனிடம் கொடுத்தார் சூர்யா, ஸ்டிக்கர் ஒட்ட. "குறிஞ்சிக்கு அடுத்து முல்லை தானே. நெய்தல எழுதியிருக்க?". "எனக்கு அப்படி தான்".

ஒரு வழியாக, மூன்றாவதாக மருதம் எழுத முடிவானது. இப்போதும் விக்கிப்பீடியா வேண்டும் என மொபைலை வாங்கிக் கொண்டார். அந்திமழை இதழ் ஆசிரியர் கூட நான் எழுதறத அப்படியே போட்டுடறாரு.  நாலாம் கிளாஸ் கிட்ட முடியல.

அசந்துப் போன என்னைப் பார்த்து இணையர் ," அப்பப்போ தப்பிச்சிக்கறீங்க இல்ல. என் கஷ்டம் இப்ப புரியுதா?" என்றுக் கேட்டார். "அந்த சபாநாயகரே பரவாயில்லை" என்றேன். கண்ணாடியை தூக்கி விட்டுக் கொண்டு ஒரு பார்வை பார்த்தார் சூர்யா.

# சபாநாயகரின் வானளாவிய அதிகாரம் ! 

திங்கள், 18 ஜனவரி, 2016

மீண்டும் பராசக்தி

நீதிமன்றம் தலைவர் கலைஞருக்கு புதிதல்ல. வழக்குகளை சந்திப்பதும் புதிதல்ல. அவர் சந்தித்த வழக்குகள் ஏராளம். ஆனால் அவை எதுவும் சொத்துக் குவிப்பு வழக்கல்ல. ஊழல் வழக்குகளும் புனையப்பட்டவை என நிரூபணமாயின.

ஜெயலலிதா போல், ஊழல் வழக்குகளில் தீர்ப்பு வரப்பெற்று சிறை சென்ற தலைவர் அல்ல அவர். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சிறை சென்றவர் அவர். கல்லக்குடியில் தமிழுக்காக போராடி சிறை சென்றவர் அவர்.

இந்தி எதிர்ப்பு போராட்டம், தமிழக மக்களுக்காக போராடிய போராட்டங்கள், ஈழத் தமிழருக்கான போராட்டம் என பல வழக்கிற்காக அவர் நீதிமன்றம் சென்றிருக்கிறார். ஜெயலலிதா இப்போது தொடுத்திருக்கிற அவதூறு வழக்கு அவருக்கு தூசு.

இந்த அவதூறு வழக்குகள் மூலம் அவரை முடக்கலாம் என ஜெயலலிதா நினைத்தால், அதை விட முட்டாள்தனமான எண்ணம் இருக்க முடியாது. இது போன்றவை தான் அவரை புத்துணர்வோடு வீறு கொண்டு எழ வைக்கும்.

அவர் அடிக்க, அடிக்க எழுகிற பந்து என்பதை பல முறை நிரூபித்திருக்கிறார் கலைஞர். இது ஜெயலலிதாவிற்கும் தெரியும். நள்ளிரவு கைதின் போது, புனைந்த வழக்கை , தொடர்ந்து நடத்த ஜெயலலிதாவிற்கே வெட்கமாகிப் போனது. வழக்கு காணாமல் போனது.

ராஜீவ் கொலை வழக்கில் அபாண்டமாக திமுக மீது குற்றம் சுமத்தி, ஒரு தேர்தலை வென்றார்கள். பிறகு ஜெயின் கமிஷன் வைத்த போது, அதையும் எதிர் கொண்டவர் தான் கலைஞர் அவர்கள். கொலைப் பழியை சுமத்திய போதே, கலங்காமல் நீதியை நிலை நாட்டியவர்.

அவரா இந்த அவதூறு வழக்குக்கு அஞ்சப் போகிறார். இன்று நீதிமன்றம் சென்று, எதற்கும் தயார் என காட்டி விட்டார். 92 வயதிலும் சிங்கம் என்பதை நிலை நாட்டி விட்டார். அரசியல் தலைவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு அவரே உதாரணம்.

1952ல் "பராசக்தி" திரைப்படத்திற்கு, தலைவர் கலைஞர் எழுதிய வசனம், 64 ஆண்டுகள் கழித்தும் இந்தக் காட்சிக்கு அப்படியே பொருந்துகிறதே....

"நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருகின்றது.
புதுமையான பல மனிதர்களை கண்டிருகின்றது.
ஆனால் இந்த வழக்கு விசித்திரமும் அல்ல.
வழக்காடும் நானும் புதுமையான மனிதன் அல்ல.

வாழ்க்கை பாதையிலே சர்வ சாதாரணமாக தென்படும் ஜீவன்தான் நான்.
குழப்பம் விளைவித்தேன்.
அவதூறு செய்தேன்.
குற்றம் சாட்ட பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம்.
நீங்கள் எதிர்பார்பீர்கள் நான் இதை எல்லாம் மறுக்க போகிறேன் என்று.
இல்லை. நிச்சயமாக இல்லை."

# இதுவும் மெகா ஹிட் தான். மீண்டும் பராசக்திடா !

ஞாயிறு, 17 ஜனவரி, 2016

பகுத்தறிவு பொங்கல்

"சுப்ரமணியன் பார்க்கனுமாம், எங்க வந்தாப் பார்க்கலாம்?". "எந்த சுப்ரமணியன்?". "சிங்கப்பூர்ல டைலர் கடை வச்சிருக்காரே, அவரு தான்". "என்ன விஷயம் ?". "அவரு செந்துறையில் மாட்டுப் பொங்கலன்னைக்கு  ஒரு டைலர் கடை திறக்கிறார். அழைப்பதற்காக பார்க்கனுமாம்".

"இரண்டு நாட்களும் நான் பிஸி. ஏரியாவில் சுற்றிக் கிட்டு தான் இருப்பேன். நேரில் பிடிப்பது சிரமம். நிகழ்ச்சிக்கு வந்துடுறேன்". கடந்த வருடம் நான் சிங்கப்பூர் சென்றிருந்த போது, அவரது தையலகத்திற்கு வந்தாக வேண்டும் என்று அன்பு உத்தரவிட்டார், சென்று வந்தேன்.

மாட்டுப் பொங்கல் அன்று காலை செந்துறை சென்றேன். பெரியார் படம் போட்ட வரவேற்பு தட்டி முன்னால் இருந்தது. சுப்பிரமணியன் கருப்புசட்டையில் நின்றார். அவர் திராவிட இயக்க உணர்வாளர் என்பது தெரியும், ஆனால் இவ்வளவு வலுவான கொள்கையாளர் என்பது தெரியாது.

அன்று சனிக்கிழமை. சனிக்கிழமையில் எந்த நிகழ்வுமே வைத்துக் கொள்ள மாட்டார்கள். இவரது தனது தையலகத்தை ஆரம்பிப்பது, அவரது தன்னம்பிக்கையை வெளிப்படுத்தியது.

பத்து ஆண்டுகளுக்கு முன் பொருளாதார நெருக்கடியால் சிங்கப்பூர் சென்றார். உழைத்து முன்னேறி, கடனை அடைத்து, பொருளாதாரம் மேம்பட்டு, இன்று செந்துறையிலும் ஒரு கடை திறக்கிறார். பாரத்தை கடவுள் மேல் போட்டுவிட்டு உழன்று விடாமல், போராடியதால் தான் இந்த வெற்றி.

திராவிடர் கழக பொதுச்செயலாளர் அய்யா துரை.சந்திரசேகரன் அவர்கள் வருகை தந்து கடையை திறந்து வைத்தார்கள். எந்தவித சடங்கு, சம்பிரதாயமும் இல்லை. குத்துவிளக்கு போன்ற குறைந்தபட்ச சமரசமும் இல்லை. எளிமையாகவும், இனிமையாகவும் நடைபெற்றது.

வாழ்த்துரை நிகழ்வு. தி.க மண்டலத் தலைவர் அண்ணன் காமராஜ்,"வாகனங்களை பரிசோதித்து பைன் போடும் காவல்துறை, கடந்த ஒரு மாதமாக ஜெயங்கொண்டத்தில் நடக்கும் திருட்டை தடுக்க முடியவில்லை"என்று நாட்டு நடப்பை வெளுத்து வாங்கினார். ஒன்றிய செயலாளர் ஞானமூர்த்தி மாட்டுக்கறி அரசியலையும், ஜல்லிக்கட்டு அரசியலையும் தெளிவுப்படுத்தினார்.

அய்யா துரை.சந்திரசேகரன் அவர்கள்,"சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த போது, இரண்டு விஷயங்களை கவனித்தேன். மழை பெயத சிறிது நேரத்தில், நீர் வடியும் அளவு வடிகால் வசதி. பள்ளி வாகனம் நின்றால், மற்ற வாகனங்கள் இடைஞ்சல் செய்யாமல் நிறுத்தி விடுகிறார்கள். நம் நாட்டில் இது செயல்படுத்தப் பட வேண்டும்" என்றார்.

"சிங்கப்பூருக்கும், செந்துறைக்கும் சுப்ரமணியன் வணிகப் பாலம் அமைத்திருக்கிறார். பலருக்கு வேலை அளிக்க, வளர வேண்டும்", என்று வாழ்த்தினார். ஒரு அரசியல் வகுப்பில் கலந்துக் கொண்ட உணர்வு.  நல்ல கருத்துகளை பரப்பும் பயனுள்ள வகையில் அமைந்தது விழா.

சுப்ரமணியன், அவரது வாழ்விணையர் கீதா, மகன் இனியவன் எல்லோரையும் வரவேற்று சிறப்பித்தனர். பகுத்தறிவுக் குடும்பம்.

# பகுத்தறிவுப் பொங்கல் !