பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

சனிக்கிழமையில் திருமணமா ???

22.09.2012 செந்துறை ஒன்றிய திராவிடர் கழக தலைவர் ராமச்சந்திரன் அவர்களது மகள் இலக்கியா - அன்பரசன் திருமணத்தை, தமிழர் தலைவர் அய்யா கி.வீரமணி அவர்கள் நடத்திவைத்தார்கள்.

வழக்கமான பகுத்தறிவு திருமணம் என்பதை தாண்டி, புரட்
டாசி மாதத்தில் நடைபெற்ற திருமணம். புரட்டாசி மாதத்தில் திருமணம் செய்யமாட்டார்கள். அதிலும் சனிக்கிழமையில் செய்யவே மாட்டார்கள்.

சனிக்கிழமை இந்துக்களுக்கு ஆகாத நாள் ( நாம் இந்துக்கள் கிடையாது, திராவிடர்கள், தமிழர்கள்.). குறிப்பாக எங்கள் பகுதியில், சனிக்கிழமை புதுக்கோடியே ( புதுத்துணி ) கட்டக் கூடாது என்பது ஐதீகம் ( அவாள் பாஷையில் ). புதுத்துணியே கட்டக்கூடாது என்றால் திருமணம் செய்யவே கூடாது.

அதை முறியடித்து, மற்றவர்களுக்கு பகுத்தறிவை புகட்ட, தம் வாழ்வில் செயல்படுத்திக்காட்டிய மணமக்களுக்கும், மணமக்களின் பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

# பின்குறிப்பு : நானும் சனிக்கிழமையில் தான் திருமணம் செய்தவன், மற்றவர்களுக்கு மாத்திரம் பகுத்தறிவு பாடமல்ல ....

ஆமை புகுந்த வீடு உருப்படாது...






இணையத் தோழர்களை சந்திக்க பெரியார் திடலில் காத்திருந்த நேரத்தில், சகோதரர் பிரின்ஸ் அவர்கள், திரு.ஒரிசா பாலு அவர்களை அறிமுகப்படுத்தினார். நீண்ட காலம் ஒரிசா மாநிலத்தில் தங்கியிருந்ததால் இந்தப் பெயர் . ஆமைகள் கு
றித்து ஆய்வு மேற்கொள்பவர்.

சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். ஆமைகள், பழந்தமிழர்களின் கடல் பயணம், உலகில் தமிழ் பரவியிருக்கும் விதம் என அவர் பேச,பேச ஒரு தகவல் களஞ்சியத்தை புரட்டுவது போல இருந்தது.

ஒரிசாவில் இருக்கும் போது, ஆமைகள் மீது RFID கருவியை பொருத்தி அவை குறித்து ஆய்வு மேற்கொண்டபோது, ஒரு நாள் ஆமை நீந்தாமல் மிதந்து செல்வதை காண நேரிட்டிருக்கிறது. எப்படி நீந்தாமல் பயணிக்கின்றன என ஆய்ந்தப்போது தான், கடல் நீரோட்டங்களில் அவை செல்லும் போது, நீந்தத் தேவையில்லாமல் இழுத்து செல்லப்படுகின்றன என கண்டுபிடித்திருக்கின்றார்.

RFID கருவியில் இருக்கும் ஆண்டெனா மூலம் சாடிலைட்க்கு கிடைக்கும் சிக்னலை தொடர்ந்தப் போது, ஆமைகள் பல்லாயிரம் கிலோமீட்டர்கள் கடந்து பல நாடுகளுக்கு செல்வது தெரியவந்தது. அவைகளை மியான்மர், மலேசியா, ஆஸ்திரேலியா, பசிபிக்தீவுகள், மெக்சிகோ, ஆப்ரிக்கா, ஐஸ்லேண்ட் ஆகிய கடற்கரைகளுக்கு ஆமைகளை தொடர்ந்து பாலு அவர்கள் பயணித்தப்போது இன்னும் ஒரு புதிய செய்தி கிடைத்திருக்கிறது.

அங்கு பல ஊர்கள்,துறைமுகங்களின் பெயர்கள் தமிழில் இருந்திருக்கின்றன. தமிழா, சோழவன்,கூழன், ஊரு, வான்கரை, குமரி, சோழா, தமிழிபாஸ் என தமிழ் பெயர்கள். இன்றைக்கும் அதே பெயரோடு இருப்பது தான் இன்னும் வியப்பு.

தொடர்ந்த ஆய்வில், சோழர் சார்ந்தப் பெயர்கள் மூலம் சோழ மன்னர்கள் கடல் கடந்து படையெடுத்து ஆட்சி நடத்தியிப்பது தெரிய வருகிறது. ஆமை குறியீடுகள், ஆமை உருவம் கொண்ட படகுகள் போன்றவற்றின் மூலம் ஆமைகளை பின்பற்றியே இவர்கள் பயணித்திருப்பதும் உறுதியாகிறது.

இப்படி ஆமைகளை பற்றி தொடங்கிய திரு.பாலு அவர்களின் ஆய்வு, பழந்தமிழரின் கடல் பயணம், குமரிக்கண்டம், கடலில் மூழ்கிய பூம்புகார் என விரிந்துக் கொண்டிருக்கிறது. அரசின் உதவி இல்லாமலே தனது ஆய்வை திரு. பாலு அவர்கள் தொடர்ந்து வருகிறார். விரைவில் இது குறித்து ஆவணப்படுத்தி புத்தகம் வெளியிட இருக்கிறார்.

இவரது ஆய்வுகளை ஆவணப்படுத்த உதவி வரும், எனக்கு அறிமுகப்படுத்தி வைத்த சகோதரர் Prince Ennares Periyarஅவர்களுக்கு நன்றி. Orissa Balu அவர்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்.http://www.facebook.com/orissa.balu

ஆமைகளை பின் தொடர்ந்து, வீட்டை மறந்து, நாடு நாடாக கடல் பயணம் மேற்கொண்டதால் தான் , ஆமை புகுந்த வீடு உருப்படாது எனப்பட்டிருக்கிறது.

# ஆனால் ஆமையை பின்பற்றிய பயணமே உருப்பட்டிருக்கிறது, பல வழிகளை திறந்திருக்கிறது, அன்றும்,இன்றும்....

வியாழன், 13 செப்டம்பர், 2012

சோழமண்டல தளகர்த்தர் கோ.சி.மணி


தலைவர் கலைஞர் அவர்களால் " சோழ மண்டல தளகர்த்தர் " என அன்பாக அழைக்கப்படும் அய்யா கோ.சி.மணி அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.

மேக்கிரிமங்கலம் ஊராட்சிமன்ற தலைவராக பொதுவாழ்க்கையை துவங்கியவர். அதனாலேயே அடித்தட்டு மக
்களின் தேவைகளை உணர்ந்தவர். இதனால் தான், தலைவர் கலைஞரால் உள்ளாட்சித்துறை அமைச்சராக்கப்பட்ட நேரத்தில், அடிப்படை வசதிகளை மேம்படுத்திட பம்பரமாக சுழன்றார். காலையில் காஞ்சிபுரத்தில் ஆய்வுக்கூட்டம் நடத்தியதாக செய்தி வரும், மாலையில் கன்னியாக்குமரியில் கள ஆய்வு புகைப்படம் வரும். மறுநாள் காலை உதகையில் இருப்பார்.

ஊராட்சிமன்றத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர், சட்டமேலவை உறுப்பினர், அமைச்சர் - ஆட்சி பொறுப்பில், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட செயலாளர், சோழமண்டலத்திற்கு தளகர்த்தராக- கழகப்பொறுப்பில்...

இரண்டாம் கட்டத் தலைவர்களை உருவாக்கி அழகு பார்த்தவர். ஒரு நிகழ்ச்சிக்கு வருகிறார் என்றால் உடன் ஒரு படை வரும். எஸ்.கல்யாணசுந்தரம், குத்தாலம் கல்யாணம், திருவிடைமருதூர் ராமலிங்கம்,சாக்கோட்டை அன்பழகன், திருப்பனந்தாள் ரவிச்சந்திரன் என. இவரால் இன்று ஒவ்வொருவரும் தனி அடையாளத்தோடு திகழ்கிறார்கள். சிறந்த மாவட்ட செயலாளர்.

1996-2001 ஆட்சிக்காலத்தில், சனிக்கிழமை தோறும் அதிகாலை ஒரு கார் தனியாக கும்பகோணத்தில் தெருதெருவாக சுற்றும். காரில் அமைச்சர் கோசி.மணி இருப்பார், உடன் அதிகாரிகள் இருப்பார்கள். இந்த சாக்கடையை அகற்றி வாய்க்கால் அமையுங்கள் என்பார். இந்த சாலை அடுத்த வாரத்திற்குள் அகலப்படுத்த வேண்டும் என உத்தரவு பிறக்கும். இப்படித்தான் யானைக்கால் வியாதி முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழிகாட்டி.

ஒரு முறை ஒரு தோழர், " ஒரு டெண்டர் வருகிறது, நீங்கள் உதவிட வேண்டும்" எனக் கோரினார். " கோரிக்கையை ஏற்று பணியை நிறைவேற்றுவது மட்டுமே என் பொறுப்பு, டெண்டர் விடுவதெல்லாம் அதிகாரி வேலை. இனி நீ என் முகத்தில் விழிக்காதே " என வெடித்தார். ஆடுதுறை பேரூரை கடக்கிறவர்கள், அவர் வீட்டை பார்த்தவர்களுக்கு அவரது நேர்மை, எளிமை புரியும். நெருப்பு.

2011 பொதுத்தேர்தல் - கழகம் தோல்வி. " தமிழக மக்கள் ஓய்வு அளித்திருக்கிறார்கள் " என தலைவர் கலைஞர் பேட்டியளிக்கிறார். தலைவரை சந்திக்கிற அய்யா கோசி.மணி கேட்கிறார், " எப்படி நீங்கள் ஓய்வு என்று சொல்லலாம் ?, மக்கள் அறியாமல் வாக்களித்திருக்கிறார்கள். நீங்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்". " மணியே இவ்வளவு உணர்வோடு இருக்கும்போது, எனக்கும் அந்த உணர்வு தானாக வருகிறது" என்றார் தலைவர் கலைஞர். தலைவனுக்கான தலைமைத் தொண்டன்.

எம்.எல்.சி, அமைச்சர், மாவட்டம் என அழைக்கப்பட்டாலும் அன்போடு " மணியண்ணன் ".

# பின்பற்றப்பட வேண்டிய தொண்டர் - களவீரர் !

இளைஞரணி நேர்காணல்

11.09.2012 காலை, இளைஞரணி தலைமையகமான அன்பகத்தில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது. காலை முதல் தஞ்சை, நாகை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் குவியத்தொடங்கினர்.

முதல் மூன்று
 மாவட்டங்கள் முடிந்து, அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களை அழைக்கும் போது நண்பகல் ஆகிவிட்டது. மாநில துணை செயலாளர்கள் மா.சுப்ரமணியன், இராஜேந்திரன், சுப.த.சம்பத், சுபா.சந்திரசேகர், ஜின்னா ஆகியோர் உடன் இருந்தனர்.

மா.சு அவர்கள் கேள்வி கேட்கத் தொடங்குகிறார். வயது உறுத்திப்படுத்துவதற்கான சான்றிதழை இராஜேந்திரன் சரிபார்க்கிறார். வருகின்ற ஒவ்வொருவர் குறித்தும் சிறுகுறிப்பினை சுபா.சந்திரசேகர் சொல்கிறார். எடுத்து வருகிற புகைப்படங்கள், துண்டறிக்கைகளை சரிபார்த்து தளபதியிடம் காட்டுகிறார் ஜின்னா.

எப்போதிலிருந்து உறுப்பினர், பொறுப்பு ஏதும் வகிக்கிறீர்களா, கல்வித்தகுதி என்ன, தொழில் என்ன, போராட்டங்களில் பங்கேற்றிருக்கிறீர்களா, நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறீர்களா என சில கேள்விகள்.

வயது சான்றிதழ் குறித்து சந்தேகம் எழுந்தால் தளபதி அவர்களிடமே காட்டப்படுகிறது. நிகழ்ச்சிகள், போராட்டங்கள் குறித்த புகைப்படங்களையும் தளபதி அவர்கள் பார்த்து விளக்கம் கேட்டுக்கொள்கிறார்.

தொழில் குறித்த கேள்வியை தளபதியே கேட்கிறார்கள். ஒருவர் பள்ளிக்கூடம் நடத்துகிறேன் என்று சொன்னபோது, இந்தப் பொறுப்பிற்கு வந்தால் உங்களுக்கு அரசால் பாதிப்பு ஏற்படதா என்று கேட்கிறார்.

தனியார் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறேன் என்று சொன்னவரிடம், பொறுப்புக்கு வந்தால் எப்படி சமாளிப்பீர்கள் என்று கேட்டார். வேலையை விட்டுவிடுவேன் என்று சொல்ல, இல்லையில்லை வேலையை விட்டுவிடாதீர்கள், வருமானம் இல்லாமல் சிரமப்படுவீர்கள் என்று அறிவுரை கூறினார்.

ஒருவர் முன்னாள் ஒன்றிய செயலாளர் மகன் என்று விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருப்பதை பார்த்துவிட்டு, அவர் தந்தை நலன் குறித்து கனிவோடு விசாரிக்கிறார். இப்படி ஒரு அன்பான சூழ்நிலையில் நேர்காணல் 21பேருக்கு நடந்தேறியது.

காலை துவங்கி நண்பகல் வரை நேர்காணல் நடைபெற்றாலும் தளபதி அவர்கள் அயர்ச்சி இல்லாமல் காணப்படுகிறார். மதிய உணவுக்குப் பிறகு ,மீண்டும் மாலை நான்கு மாவட்டங்களுக்கு நேர்காணல் தொடரும்.

காரில் ஏறுமுன், "ஊருக்கு எப்போது கிளம்புகிறீர்கள் ", எனக் கேட்கிறார். " உடனே கிளம்புகிறேன், நாளை ஜெயங்கொண்டம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் இராஜேந்திரன் மகள் திருமணத்தில் கலந்து கொள்ள" என்றேன். " எனது வாழ்த்துகளையும் தெரிவியுங்கள்" என்கிறார்.

# தளபதியின் பாச உணர்வு... கழகத்தின் பலம்

எஸ்.சிவசுப்ரமணியன் - பவளவிழா காணும் தலைவரின் தொண்டர் !


எஸ்.சிவசுப்ரமணியன் 
தி.மு.க சட்டத்திட்ட திருத்தக்குழு உறுப்பினர்.

துணைவியார் : இராஜேஸ்வரி.

மகன்கள் : எஸ்.எஸ்.சிவசங்கர் ( நான் )
எஸ்.எஸ்.சிவக்குமார்.

கல்வி : எம்.ஏ., பி.எல்.,



பிறந்த தேதி : 10.09.1937.



பெற்றோர் : சாமிதுரை - ராசாம்பாள்.



ஊர் : தேவனூர், அரியலூர் மாவட்டம்.



கல்லூரி காலத்திலேயே, தந்தை பெரியாரின் அணுக்கத் தொண்டர். தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் கல்லூரித் தோழர்.



தி.க துணை பொது செயலாளர் சாமிதுரை அவர்களிடம் இளையராக பயிற்சி.



அரியலூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்.



1965 - தேவனூர் ஊராட்சி மன்றத் தலைவராக போட்டியின்றி தேர்வு.



1966 - திருமணம், தேவனூர் கிராமத்தில். தலைமை: தந்தை பெரியார், முன்னிலை: கி.வீரமணி,வே.ஆனைமுத்து.



1971 - தேவனூர் ஊராட்சி மன்றத் தலைவராக மீண்டும் தேர்வு



1971 - ஆண்டிமடம் ஒன்றிய பெருந்தலைவராக தேர்வு.



1971 - தி.மு.க-வில் இணைவு.



1973 முதல் 1993 வரை ஆண்டிமடம் ஒன்றிய கழக செயலாளர்.



1988 முதல் 1993 வரை ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் துணை செயலாளர்.



1984 - சேலம் கழக மாநாட்டு திறப்பாளர்.



1984 - ஜெயங்கொண்டத்தில் நடத்திய பொதுக்கூட்டம், தலைவரால் "அறிவிக்கப்படாத மாநாடு" எனப் பாராட்டப்பட்டது.



1977,1980,1984 சட்டமன்றத் தேர்தல்களில் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வி.



1986 - ஆண்டிமடம் ஒன்றிய பெருந்தலைவராக மக்களால் தேர்வு.



1989 - ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு.



1993 - பெரம்பலூர் மாவட்ட தி.மு.க செயலாளராக தேர்வு. (2000 வரை )



1993 - ஜெயங்கொண்டத்தில் நடத்திய நிதியளிப்புக் கூட்டம் தலைவரால் பாராட்டப்பட்டது.



1991,1996 சட்டமன்றத் தேர்தல்களில் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வி.



1998 - நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக தலைவர் கலைஞர் அவர்களால் தேர்வு


.
2000 - கழக வெளிமாநிலத் தொடர்பு செயலாளர்.



2010 - கழக சட்டத்திட்ட திருத்தக்குழு உறுப்பினர்.




# 10.09.2012 - பவளவிழா ( எழுபத்தைந்தாவது ஆண்டு பிறந்தநாள் )

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

ஆழம் - கிழக்கு பதிப்பகத்தின் புதிய முயற்சி


ஆழம் - மாத இதழாக மலர்ந்திருக்கிறது. எட்டாவது இதழாக செப்டம்பர் இதழ் வந்திருக்கிறது, ஒரு வித்தியாசமான கட்டமைப்பில். இதில் அரசியல் இருக்கிறது, சினிமா இருக்கிறது, சமூகப் பிரச்சினைகள் இருக்கிறது, விளையாட்டு இருக்கிறது, நடப்பு நிகழ்வுகள் இருக்கிறது, வர்த்தக செய்திகள் இருக்கிறது. ஆனால் மேலோட்டமாக இல்லாமல், அலசலாக, விவாதமாக.


கடந்த மாத இதழின் முகப்பு செய்தியாக, நரேந்திர மோடி குறித்த கட்டுரை. அதையொட்டி "மோடி பிரதரமாக வேண்டும்", " மோடி பிரதமராகக்கூடாது" என இரண்டு கட்டுரைகள். முகப்பு செய்தியில், மோடி குறித்து பாரபட்சமற்ற செய்திகள். மோடி வேண்டும், என்ற கட்டுரை ஆர்.எஸ்.எஸ் செயற்குழு உறுப்பினரால் எழுதப்பட்டது. முழுவதும் எதிர் கருத்தாக ஒரு கட்டுரை. இவற்றை படித்து வாசகர்களே முடிவுக்கு வர வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.


இந்த மாத இதழில் டெசோ மாநாடு குறித்த அலசல்.  டெசோ குறித்த இரண்டு பத்திரிக்கையாளர்களின் கட்டுரைகள், ஈழத்தமிழர்கள் இருவரின் பார்வைகள் என அலசப்பட்டுள்ளது. டெசோவால் விளையக்கூடிய நன்மைகள், எதிர்ப்புகள், ஏமாற்றங்கள், எதிர்பார்ப்புகள் என விரிவாக ஆரயப்பட்டுள்ளது.


அசாம் குறித்த அலசல், திருப்பூர் வர்த்தக சரிவு குறித்த கட்டுரை, சமூக வலைதளங்கள் குறித்த பார்வை என ஒருபுறம், விளையாட்டு தலைப்பில் ஒலிம்பிக்ஸ் சாதனைகளும் சோதனைகளும் என இன்னொருபுறம். துணுக்கு செய்திகளாக இல்லாமல், சினிமா விமர்சனம் நறுக்கென இருக்கிறது .


இலக்கியத்திற்கு ஒதுக்கப்பட்ட பகுதியில், பாகிஸ்தான் எழுத்தாளர் ராசா நயீம் என்பவருடன் ஓரு அழுத்தமான நேர்காணல், புத்தக அறிமுகமாக மூன்று புத்தகங்கள் குறித்த சிறு விமர்சனம். வரலாறு பகுதியில் சிரியா நாட்டை குறித்து கட்டுரை. மாநிலங்கள் பகுதியில் பிகார் மாநிலத்தில் ரண்வீர் சேனா என்ற அமைப்பின் சாதி வெறியாட்டம் குறித்த கண்டனக்குரல் என விரிகிறது புத்தகம்.


அனைத்து பதார்த்தங்களையும் கொண்ட ஓர் தலை வாழை விருந்தாக இருக்கிறது. அதே சமயம் சில பத்திரிக்கைகளை போல் நொறுக்கு தீனியாக போய்விடாமல், சத்தான உணவுகளுடன் கூடியதாக இருக்கிறது.


துப்பறியும் பத்திரிக்கையாக, ஜனரஞ்சக பத்திரிக்கையாக, இலக்கியப் பத்திரிக்கையாக இல்லாமல் வித்தியாசமான கோணத்தில் இருக்கிறது . இதே திசையில் நகர வேண்டும்.  விற்பனையை உயர்த்த திசை மாறிவிடக்கூடாது.


மாறுபட்ட அனுபவத்திற்கு படியுங்கள்.


#   இடைவெளியை இட்டு நிரப்புகிறது  - ஆழமாக....

புதன், 5 செப்டம்பர், 2012

அரியலூர் மாவட்ட ஆட்சியர் பணிக்கு பாராட்டும் - பரிசும் !



நெஞ்சு பிளக்கும் துயரம்...


குன்னம் வட்டத்திற்கு உட்பட்டது பெரியம்மாபாளையம் கிராமம். 02.09.2012 நண்பகல், குட்டையில் குளிக்கச் சென்ற நான்கு குழந்தைகளும், இரண்டு குழந்தைகளின் தந்தை ஒருவரும் நீரில் மூழ்கி பலியாகிவிட்டனர்.

ஊருக்கு ஒதுக்குபுறமாக, விவசாயத்திற்கு வெட்டப்பட்ட பண்ணைக் குட்டையில், சமீபத்தில் பெய்த மழையால் நீர் பிடித்திருந்தது. அதில் ஆழம் தெரியாமல் இறங்கி மாட்டிக் கொண்ட பிள்ளைகளும் காப்பாற்ற சென்றவரும் மரணம்.

பெரம்பலூர் தலைமை மருத்துவமனைக்கு உடல்கள் கொண்டு செல்லப்பட்டு, உடற்கூறு பரிசோதனைக்கு காத்திருந்தன. உடன் பரிசோதனை மேற்கொள்ள நானும் நேரில் சென்று முயற்சி செய்தேன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் (அதிமுக) தமிழ்செல்வனும் நேரில் வந்து முயற்சி செய்தார். இரவு பரிசோதனை மேற்கொள்ளகூடாது என்பது அரசு விதி என்பதால் மறுநாள் தான் பரிசோதனை.

பிணவறையில், அந்தப் பிள்ளைகளின் உடல்களை பார்த்தேன். தூங்குவது போன்றே இருந்தனர். கனவில் கூட அந்தக் காட்சியை காணக்கூடாது

மறுநாள்அந்த கிராமத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்றோம். அனைத்துக் கட்சியினரும், சுற்று வட்டாரத்தினரும் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

மூன்று குடும்பங்களில் மரணம். மன்னாதி (45 வயது) அவரது மகன்கள் சிந்தனைச்செல்வன் (12), சுரேஷ்மேனன்(9) ஆகியோரை இழந்து இவரது மனைவியும், முதல் மகனும் துடிக்கின்றனர். ஒரே குடும்பத்தில் மூன்று மரணம் பெரும் சோகம், பெரும் இழப்பு.

சச்சின் (10) குடும்பத்து சோகம் இன்னொரு வகை. ஒரே மகன். இவரது தந்தை, சச்சின் எட்டு மாதக் குழந்தையாக இருந்தபோது துபாய் சென்றவர் , என்ன ஆனார், எங்கிருக்கிறார் என தெரியாத நிலை. கணவன் நிலை அறியாத, அவரது தாய் ஒரே ஆதரவான சச்சினையும் இழந்து இன்று தனிமரம்.

அருண்குமார் (13). இவரது ஒன்பதாம் வகுப்பு படிக்கிற அண்ணனும் , தங்கையும் சரியாக நடக்க இயலாத மாற்றுத் திறனாளிகள். இந்த குடும்பத்தின் நம்பிக்கையாக விளங்கிய துடிப்பான அருண்குமாரை இழந்து தவிக்கிறது இந்தக் குடும்பம்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு சோகம். ஒட்டு மொத்த ஊரும் பேரிழப்பில் தவிக்கிறது. மயானத்தில் எங்கு நோக்கினும் விசும்பல் குரல். யாரை பார்த்தாலும் கலங்கியக் கண்கள். யாருக்கு யார் ஆறுதல் சொல்வதென தெரியாமல் தடுமாற்றம். பச்சிளம்பிள்ளைகளை எரிக்காதீர்கள், புதையுங்கள் என சிலர் குரல்.

சூரியன் மறையும் நேரம், ஒரே நேரத்தில் , அருகருகே அடுக்கி தீ வைக்கப்பட்டன அந்த ரோஜாக்கள் . மூன்று குடும்பங்களின் எதிர்கால நம்பிக்கைகள் பொசுக்கப்பட்டன. வெள்ளந்தி மக்களாய் வாழும் இந்த கிராமத்து மக்களுக்கு ஆண்டுகணக்காகும் இந்தக் கெட்டகனவிலிருந்து மீள.

காலம் தான் மருந்து, இவர்களை தேற்ற ....

நன்றி பாராட்டல்


2006-11 ஆம் ஆண்டு, ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, ஆண்டிமடம் ஒன்றியம் கூவத்தூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சிறு சமுதாயக்கூடம் , சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டித் தரக் கோரிக்கை வைத்தனர்.

அதற்கு நான்கு லட்சம் ரூபாய் நிதி வழங்கி, ஊர் மக்களே கட்டிடம் கட்டும் பணியை மேற்கொள்ள ஏற்பாடு செய்து கொடுத்தேன். அந்தக் கட்டிடப் பணி தற்போது தான் முடிவுற்றது.

நான் தற்போது அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இல்லாத நிலையிலும், திறந்து வைக்க நான் வரவேண்டும் என அழைப்பு விடுத்தனர்.

எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்  நான் வருவது, அந்த ஊருக்கு அரசு மூலம்  நடைபெற வேண்டிய மற்ற பணிகளை பாதிக்கும் என எடுத்து சொன்னேன்.
இந்தப் பணிக்கு ஒதுக்கப்பட்ட நிதியும் பெரிய அளவு கிடையாது.

இருப்பினும் நான் கலந்துகொள்ள வேண்டுமென அன்பு கட்டளை இட்டனர். சென்று கலந்து கொண்டேன். மக்களும் அதே அன்போடு கலந்துக் கொண்டனர்.

இது போன்று சமூகப் பணியாற்றுபவர்களை மக்கள் சிறப்பித்தால் , பணியாற்றுவோர் இன்னும் உற்சாகமாக பணியாற்றுவார்கள்.




# நன்றி உற்சாகம் ஊட்டும் , கூட்டும் ...

ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

பெரியாரின் பேரன்

வடசென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி செயலாளர் கலையரசன் அவர்களது திருமணம், தமிழர் தலைவர் மானமிகு அய்யா வீரமணி அவர்கள் தலைமையில் 31.08.2012 அன்று,அவரது சொந்த ஊரான உல்லியக்குடி கிராமத்தில் நடைபெற்றது.

உல்லியக்குடி, அரியலூர்
 மாவட்டத்தில் உள்ள உள்ளடங்கிய சிறு கிராமம். ஒரே நேரத்தில் நான்கு வாகனங்கள் சென்றாலே, பரபரப்பாகக்கூடிய ஊர். இந்த குக்கிராமத்திற்கு திராவிடர் கழகத்தின் தலைமைக் கழகமே படையெடுத்ததில் ஊர் மக்கள் பிரமித்து போயினர்.

ஊர் மக்களை பொறுத்தவரையில், கலை ஒரு எளிய குடும்பத்தை சேர்ந்த பெரியார் திடலில் பணிபுரியும் தோழர். அவரது திருமணத்திற்கு தமிழர் தலைவர், அவரது துணைவியார், தலைமை நிலைய செயலாளர் அன்புராஜ், துணை செயலாளர் ஒரத்தநாடு குணசேகரன் என திரண்டிருந்ததில் அவரது தகுதி உணர்ந்தனர் .

அதிலும் லண்டன் சுற்றுப் பயணம் சென்றிருந்த, தமிழர் தலைவர் அவர்கள் உடல் நலிவுற்று சிகிச்சை பெற்று திரும்பியுள்ள நிலையில் இவ்வளவு தூரம் பயணம் செய்து வந்தது அவரது அன்பை காட்டுகிறது.

விடுதலை பத்திரிக்கைக்கு, தந்தை பெரியார் அவர்களது படைப்புகள் தேவைப்பட்டால் அதனை எடுத்துக் கொடுக்கும் பணியை தொடர்ந்து செய்து, தற்போது பெரியார் எந்த தலைப்புகளில் என்ன பேசியிருக்கிறார் என்பதை விரல் நுனியில் வைத்திருப்பவர்.

இது குறித்து சொல்லும்போது, " நம்மை எல்லாம் படிக்க வைத்த பகுத்தறிவு பகலவன் பெரியாரின் எழுத்துக்களை படித்து தொகுப்பது எனது பேறு " என்று பெருமிதப்படுபவர். இந்தக் கடமை உணர்வும் பொறுப்புணர்வும் தான் இவரது சிறப்பு. இதனால் தான் அனைவரும் வந்திருந்து வாழ்த்தினர்.

தோழர் கலையின் பணி சிறப்பு குறித்து குறிப்பிட்டு, தமிழர் தலைவர் மணமக்களை வாழ்த்தி பேசினார்கள். தாலி அடிமை சின்னம் என்பதை வலியுறுத்தி, மணமக்கள் மோதிரம் அணிவித்து திருமண வாழ்வை துவங்கினர்.

எளிமையான, சிக்கனமான, சுயமரியாதை திருமணம், பெரியார் வழியில்.

# உண்மையான பெரியாரின் பேரன்கள்...

சனி, 1 செப்டம்பர், 2012

கண்ணதாசன்... வனவாசம்..... கலைஞர் !

சில நண்பர்கள் கண்ணதாசனின் வனவாசம் புத்தகத்தில் எழுதியதை எடுத்து நிலைத்தகவலாக போட்டு மகிழ்கிறார்கள். 

கண்ணதாசன் தலைவர் கலைஞரை குறித்து விமர்சிப்பதை சொல்லி சொல்லி சந்தோஷப்படுகிறார்கள். குட்டரோகி சொறிந்து சொறிந்து இன்பம் காண்பதை போல் தான் இதுவும்....

நண்பர்களே....

கண்ணதாசன் யோக்கியர் போலவும், அவர் உண்மை மட்டும் பேசுவார் என்பதும் உங்களது கற்பனை. 

திராவிடர் கழக மேடையை பார்த்தவுடன், தனது நெற்றியில் இருந்த வி
பூதி பட்டையை அழித்துக் கொண்டு மைக் கிடைக்குமா என்று அலைந்த மகான் தான் இவர்.

உங்களை பற்றி நான் அவதூறாக ஒரு நிலைத்தகவல் போட்டால் எப்படி உண்மையாகாதோ அப்படி தான் இதுவும். 





எங்கள் தலைவனின் சமூக உழைப்பை ஒப்பிட்டால், கண்ணதாசன் கால் தூசுக்கு ஒப்பாக மாட்டார். பாடல் எழுதியதை தாண்டி கண்ணதாசனின் சமூக பங்களிப்பை பார்த்தால் நாடு சிரிக்கும்...

# போதும் அரிப்பு....

பகுத்தறிவு

திருமானூர் அருகே ஆண்டவர் கோவில் என்ற இடத்தை கடக்கும்போது, ஒரு கூட்டம் வானத்தை பார்த்து உட்கார்ந்திருந்தது. 

உடன் வந்த திருமானூர் ஒன்றிய செயலாளர் அண்ணன் கென்னடி அவர்களிடம், " என்ன செய்கிறார்கள் " என்று கேட்டேன்.

" பருந்து வருகைக்காக காத்திருக்கிறார்கள்" என்றார். "என்ன ?"என்றார் உடன் வந்த மா. இளைஞர் அணி துணை அமைப்பாளர் லூயி கதிரவன். 

" ஆம். இரை தேடி அலையும் பருந்தை, கடவுள் வாகனம் கருடன் என்று கும்பிடக் காத்திருக்கும் கூட்டம் இது, " என்றார் அண்ணன் கென்னடி. 

சொந்த உழைப்பை நம்பாமல் கடவுள் கருணைக்கு காத்திருக்கும் சோம்பேறிக் கூட்டம் . 


# கருடனை வணங்குவதற்கு முன், அது உணவு தேடுகிறது என்பதை பகுத்தறிவால் உணர்ந்திடு தோழா