பிரபலமான இடுகைகள்

திங்கள், 26 ஜூன், 2017

நீட் தேர்வு - சமூக விரோதம்

நீட் தேர்வுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பிய போது, அதை பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் ஏகடியம் செய்தார்கள். ஏனைய இந்தியா ஏற்றுக் கொள்ளும் போது, தமிழகத்திற்கு மாத்திரம் என்ன என்று கேள்வி எழுப்பினார்கள்.

இன்று நீட் தேர்வு முடிவுகள் அதற்கு பதில் சொல்லி விட்டது. முதல் 25 இடத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் வரவில்லை என்று செய்திகள் வருகின்றன.

+2 தேர்வில், 1150 மதிப்பெண் எடுத்தவர்கள் கூட நீட்டில் வெற்றி பெறவில்லை, தமிழகத்தில் தேர்வு எழுதியவர்களில் 40 % பேரே தகுதி பெற்றிருக்கிறார்கள் என்று நேற்றில் இருந்தே தமிழகம் அலையடிக்கிறது.

நீட் தேர்வு எழுதியவர்களில் 2% பேர் தான் மத்தியப் பாடத் திட்டத்தில் பயின்றவர்கள், மீதமுள்ளவர்கள் மாநில பாடத் திட்டத்தில் படித்தவர்கள். இதற்காகவாவது, இந்த ஆண்டு மட்டுமாவது நீட் வேண்டாம் என ஒரு சாரார் குரல் கொடுத்தனர்.

இந்தக் குற்றச்சாட்டை உறுதிப் படுத்தி, தமிழக அரசே புதிதாக ஒரு அறிவிப்பு கொடுத்துள்ளார்கள். மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85%, மத்தியப் பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்கு 15% என இடத்தை பாகம் பிரித்திருக்கிறது.

இது சரி. மாநிலப் பாடத்திட்டத்தில், பொதுத் தேர்வில்  அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு என்ன நியாயம் கிடைக்கப் பெற போகிறது என்பது தான் முக்கிய கேள்வியாக உள்ளது.

எந்தக் கேள்விக்கும் நேராக பதில் சொல்லாத ஒரு மாநில அரசாங்கம், பதிலே சொல்லாத மத்திய அரசாங்கம்.

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான கேள்வித்தாள்கள் . ஒரே மாநிலத்தில் ஆங்கிலத்தில் ஒரு கேள்வித்தாள், உள்ளூர் மொழியில் வேறு கேள்வித்தாள். அதற்கு தமிழகமே சாட்சி. இதில் இரண்டுமே கடுமையான கேள்வித்தாள்கள்.

குஜராத்தில் எளிதான கேள்வித்தாள் என நீட் தேர்வு குளறுபடிகளை சுட்டிக்காட்டி மதுரையை சேர்ந்த மாணவி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதில் நியாயம் இருப்பதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அரசிடம் பதில் கேள்வி கேட்டது.

பதறிப் போன மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது. அந்த வழக்கை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கோரியது.  உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உடனே உத்தரவிட்டது. உயர்நீதிமன்றம் பணிந்தது.

அத்தோடு நில்லாமல் உடனே முடிவை வெளியிட வேண்டுமெனவும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. ஒரு வழக்கு ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் போதே, விசாரணையின்றி தீர்ப்பு வழங்கியுள்ள கொடூரம் அரங்கேறியுள்ளது.

இப்போது நீட் தேர்வு முடிவுகள் வந்துவிட்டன. நீதி கேட்ட பெண்ணின் குரல் காற்றோடு கலந்து விட்டது. அந்தப் பெண்ணின் குரல் போல தான் தமிழகத்தின் குரலும் கேட்க நாதியற்றுப் போயுள்ளது.

இன்னொருபுறம் தேர்வுத்தாள்களில்  இந்த கூத்துகள் என்றால், தேர்வு எப்படி நடைபெற்றிருக்கும் என்ற அய்யமும் எழுகிறது. காரணம், இவர்களது வரலாறு அப்படி.

மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க அரசு நான்காவது முறையாக தொடர்ந்து ஆள்கிறது. அங்கு நடைபெற்ற "வியாபம் ஊழல்" உலகப் பிரசித்தி பெற்றது. வியாபம் என்பது அந்த மாநிலத்தில் நடைபெறும் நுழைவுத் தேர்வுகள், பணிக்கான தேர்வுகளுக்கான அரசு அமைப்பு. மருத்துவக் கல்லூரி சேர்க்கை உள்பட பல்வேறு தேர்வுகளில் நடைபெற்ற குளறுபடிகள் மிக அதிகம்.

2000 ஆண்டு துவங்கியது 2009ல் பெரும் பிரச்சினையானது. காவல்துறை வழக்கு தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்தது. வழக்கு தேங்கியது. பிறகு நீதிமன்றம் தலையிட்டு சூடுபிடித்தது. இந்த வழக்கில் குற்றம் சட்டப்பட்டவர்கள், சாட்சிகள் என வழக்கோடு தொடர்புடையோர் கிட்டத்தட்ட 50 பேர் மர்மமான முறையில் மரணமுற்றுள்ளனர். அதற்கும் வழக்குப் பதியாமல் காவல்துறை ஏமாற்றியதும் நடந்தது.

2015 ஜூன் வரை 2000 பேருக்கு கைது செய்யப்பட்டு வழக்கு நடந்தும் இதில் திருப்திப் படாத உச்சநீதிமன்றம் தலையிட்டு வழக்கை சி.பி.ஐ இடம் ஒப்படைத்துள்ளது. இது நுழைவுத் தேர்வு நடத்தியதற்கு, உச்சநீதிமன்றத்திடம்  பா.ஜ.க பெற்றுள்ள தகுதிச் சான்றிதழ்.

இதை விட நம் தமிழ்நாட்டில் மத்திய பா.ஜ.க அரசு நடத்திய தேர்வின் கதை சிறப்பு. மூன்று மாதங்களுக்கு முன் மத்திய அரசின் தபால் துறை அஞ்சலக ஊழியர்களுக்கான தேர்வு நடந்தது. தமிழகத்தில் பணி என்பதால் தமிழ் தெரிவது அவசியம். அதற்கு 25 மதிப்பெண்கள். தேர்வு முடிவு வந்தது. 30 க்கு மேற்பட்ட  கோட்டங்களிலும் தேர்வு பெற்றவர்கள் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள். சந்தேகப்பட்ட நம்மவர்கள் அதில் உள்ளவர்கள் இருவருக்கு அலைபேசியில் பேச ஒருவருக்கும் தமிழும் தெரியவில்லை, ஆங்கிலமும் தெரியவில்லை.

முழுவதும் விசாரிக்க எல்லாமே கோல்மால் எனத் தெரிய வந்தது. புகார் கொடுத்தார்கள், அரசு செவிசாய்க்கவில்லை. அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுத்த பிறகு, விசாரித்து உண்மை வெளிவந்துவிட்டது. இப்போது அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. தவறு நடந்துள்ளது ஒப்புக் கொள்ளப் பட்டுள்ளது. இதற்கு மோடியின் அரசு தான் பொறுப்பு.

வியாபம், தபால்துறை தேர்வுகள் ஒரு அடையாளம். பா.ஜ.க தேர்வை எப்படி நம்புவது என்பதும் இதனால் முக்கியக் கேள்வி.

அடிப்படையாக மாநில அரசின் பட்டியலான கல்வியில் மத்திய அரசு தலையிடுவதே தவறு. இது மாநில சுயாட்சிக்கு எதிரானது.

இது வெறும் தேர்வெழுதிய மாணவர்களின் பிரச்சினை மாத்திரமல்ல. மக்களின் சுகாதாரத்தோடு சம்பந்தப்பட்ட பிரச்சினை. இது அரசின் சுகாதாரத் துறையை நொறுக்கி, கார்ப்பரேட்கள் கையில் கொடுக்கும் நடவடிக்கை.

பதில் சொல்ல வேண்டிய பிரதமர் மோடி பெருமான் எந்த நாட்டில் இருக்கிறாரோ? என்ன விவாதத்தில் இருக்கிறாரோ ?

தமிழக மாணவர்கள் எக்கேடு கேட்டால் அவருக்கு என்ன கவலை ?

# நீதி கேட்டது மதுரைப் பெண், பற்றி எரியும் !

வெள்ளி, 23 ஜூன், 2017

கொச்சி மெட்ரோவும், பாகுபலியும்

கடந்த சில நாட்களாக மலையாள நண்பர்கள் இந்தத் தலைப்பில் பதிவிட்டுக் கொண்டிருந்தார்கள்.  எதேச்சையாக இரண்டு நாட்களுக்கு முன்பாக பாகுபலி-2 திரைப்படம் பார்க்கின்ற வாய்ப்பு கிடைத்தது. அதனால் இந்தத் தலைப்பு கொஞ்சம் கேரளாவை எட்டிப் பார்க்க வைத்தது. யூடியூபில் காட்சிகள் விரிந்தன.

கொச்சியில் மெட்ரோ ரயில் துவக்க விழா ஜூன் 17ம் தேதி நடைபெற்றது. மாண்புமிகு இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் திட்டத்தை துவக்கி வைத்தார். மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டத்தை பிரதமர் துவக்கி வைப்பது மரபு. அதில் பிரச்சினை இல்லை. ஆனால் அதற்கு முன்பாக நடந்த சில நிகழ்வுகள் தான் சர்ச்சையாகி இருக்கின்றன.

பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்வு என்பதால், யார் யார் கலந்து கொள்ள வேண்டுமென்ற பட்டியலை, 14 பெயர்களோடு, மாநில அரசு பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியிருக்கிறது. அதில் சில பெயர்களை நீக்கி பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்திருக்கிறது. உள்ளுர் சட்டமன்ற உறுப்பினர், மேயர் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. பணி நடக்கும் போது, உள்ளூர் பிரச்சினையை தீர்க்கக் கூடியவர்கள் அவர்கள் தான்.

இதை விட இன்னும் சில பெயர்கள் நீக்கப்பட்டது சர்ச்சையானது. கொச்சி மெட்ரோ திட்டத்தை 2012ல் துவக்கி வைத்தவர் அன்றைய பிரதமர் மன்மோகன்சிங். அப்போது கேரளாவில் காங்கிரஸ் ஆளுங்கட்சி. அப்போது முதல்வர் உம்மன் சாண்டி, அவர் பெயரும் நீக்கப்பட்டிருந்தது. இப்போது காங்கிரஸ் எதிர்கட்சி. இப்போது எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா. அவர் பெயரையும் நீக்கியிருந்தது பிரதமர் அலுவலகம். இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. திட்டத்தை துவங்கியதே காங்கிரஸாக இருந்தாலும், இந்த எதிர்ப்பை அரசியல் நடவடிக்கை என கருத இடம் உண்டு.

இன்னொரு பெயர் நீக்கப்பட்டது தான் ஒட்டு மொத்த கொந்தளிப்புக்கு காரணமாக இருந்தது. அந்த பெயர் "சிரீதரன்". அவருக்கு ஒரு செல்லப் பெயர் உண்டு.  அது " மெட்ரோ மேன்". டெல்லி மெட்ரோ திட்டத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்து, குறிப்பிட்ட செலவை விடக் குறைவாக முடித்து, எல்லோருடைய பாராட்டையும் பெற்றவர். அப்போது பத்திரிக்கைகள் அவருக்கு இந்த சிறப்புப் பெயரை வழங்கினார்கள்.

1990ல் அவர் ரயில்வே துறையில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் பணி சிறப்பை உணர்ந்து, புகழ்பெற்ற "கொங்கண் ரயில்வே" திட்டத்திற்கு அவரை ஒப்பந்த அடிப்படையில் தலைவர் ஆக்கியது. அதற்கு பிறகு தான் டெல்லி மெட்ரோ. அதன் பின் எங்கு மெட்ரோ பணிகள் நடைபெற்றாலும் இவர் தான் பொறுப்பு. கொச்சி மெட்ரோவும் இவர் கைவண்ணமே. இப்போது இவருக்கு வயது 85. ஆனாலும் இவர் தேவை தொடர்கிறது.

கொச்சினில் மெட்ரோ திட்டத்தை செயல்படுத்துவது மிகுந்த சிரமமானப் பணியாக இருந்தது. நில அமைப்பு, குறுகிய சாலைகள், தட்பவெப்பம் என பல இடர்பாடுகள் இருந்தாலும், இவரால் தான் திட்டம் நிறைவேறியது. இதனால் இவர் பெயர் இல்லை என்பது கொந்தளிக்க வைத்தது. இன்னொன்று, இவர் மண்ணின் மைந்தன். ஆமாம், இவர் கேரளாவை சேர்ந்தவர். எரியும் மாட்டுக்கறியில் இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றியதாகியது.

மக்கள் எதிர்குரல் வலுத்தது. முகநூலும், ட்விட்டரும் அனல் தகித்தன. முதல்வர் பினராயி விஜயன், மீண்டும் பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதினார். ஏற்கனவே "பிரதமர் மோடி, கவர்னர் சதாசிவம், மத்திய அமைச்சர் வெங்கையா, முதல்வர் பினராயி விஜயன் " ஆகியோருக்கு மட்டுமே மேடையில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எதிர்ப்பிற்கு பிறகு, இறங்கி வந்தது மத்திய அரசு.

திறப்பு விழா நாள் வந்தது. மோடியும் வந்தார். மென் நீலநிற பைஜாமா அணிந்து ஒய்யாரமாக வந்தார். திரும்பிய பக்கமெல்லாம் ரம்மியமாக கையசைத்தார். புதிய மெட்ரோ நிலையத்தில் கட்டப்பட்டிருந்த ரிப்பனை நறுக்க நின்றார். வெங்கையாவும், பினராயியும் சிரீதரனை முன்னே அழைத்தார்கள். திரும்பிப் பார்த்து விட்டு ரிப்பனை நறுக்கினார் மோடி. முடித்து சம்பிரதாயமாக முதல்வருக்கும், சிரீதரனுக்கும் கை கொடுத்தார். புதிய மெட்ரோவில் ஏறினார்கள். 17 நிமிடப் பயணம். தன் பக்கம் திரும்பிய மோடியை முதல்வர் பினராயி சட்டை செய்யவில்லை. அமைதி நிலவியது ரயிலில். பிரதமர் அலுவலகமே வீடியோ வெளியிட்டுள்ளது. அடக்கமாக அமர்ந்திருந்தார் சிரீதரன்.

பாகுபலி-2 திரைப்படத்தில் எதிர்பாராத திருப்பமாக, மன்னராக பொறுப்பேற்பார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அமரேந்திர பாகுபலியை ஒதுக்கி விட்டு, பல்வாள்தேவன் பொறுப்பேற்பார் என ராஜமாதா சிவகாமி அறிவித்துவிடுவார். யாருக்கும் அதில் விருப்பம் இருக்காது. மக்கள் மனம் கவர்ந்தவர் பாகுபலி தான். ஆனால் அறிவித்தவர் ராஜமாதாவாயிற்றே.

அரசனாக பதவியேற்பார் பல்வாள்தேவன். அவர் தந்தை கைத்தட்ட மெல்ல கரவொலி எழும்பி அடங்கும். மன்னனாக எதிர்பார்க்கப்பட்ட பாகுபலி சேனாதிபதியாக பதவியேற்க வருவான். அப்போதே வாழ்த்துக்குரல் எழ ஆரம்பிக்கும். "அமரேந்திர பாகுபலி என்னும் நான்" என சொன்னவுடன் அரங்கே அதிரும்.

மெட்ரோ விழாவில் மோடி மலையாளத்தில் தன் உரையை துவங்கினார், லேசான கரவொலி. அதன் பின் கொச்சி மெட்ரோவின் அருமை பெருமைகளை அடுக்கினார். அரங்கத்தில் அசைவில்லை. ஆங்கிலத்தில் உரையாற்றி முடித்து அமர்ந்தார். கையொலித்தார்கள் மக்கள்.

கொச்சி மெட்ரோ திட்டத்தின் நிர்வாக இயக்குநர் எலியாஸ் நன்றி கூற வந்தார். ஒவ்வொருவராக விளித்து நன்றி கூறினார். பிரதமருக்கு நன்றி கூறினார், கைத்தட்டல் எழுந்தமர்ந்தது. அடுத்து "சிரீதரன்" என்று உச்சரித்தார் எலியாஸ். எழுந்த கரவொலி அடங்கவில்லை. காத்திருந்து கரவொலி அடங்கிய பிறகு பேச்சை தொடந்தார் எலியாஸ். கேமராவை பிரதமர் பக்கம் திருப்பவில்லை.

அமரேந்திர பாகுபலி உறுதிமொழி எடுத்து முடித்த உடன் மக்கள் கரவொலி எழுப்புவார்கள், வீரர்கள் வேல்களை தரையில் தட்டுவார்கள், யானைகள் பிளிரும்,  தரை மெல்ல அதிரும், பொருட்கள் உருளும், மன்னனின் கொற்றக் கொடை சரியும்.

கொச்சி மேடையில் அது எதுவும் நடக்கவில்லை. ஆனால் கரவொலியிலேயே தட்டிக் காட்டிவிட்டார்கள் சேட்டன்களும், சேச்சிகளும்.

மெட்ரோவில் ரிலீஸான "பாகுபலி".

# மக்கள் தட்டத்தட்ட மகுடமும் சரியும்  !

ஞாயிறு, 18 ஜூன், 2017

என்று தணியும் இந்த....

குவைத், எண்ணெய் வளத்தால் பொருளாதார வளமாக இருக்கும் ஒரு நாடு. 1990 ஆகஸ்ட் 2 அன்று ஈராக் படைகள் குவைத் நாட்டின் உள் நுழைந்தன. சுதந்திரத்திற்கு போராடும் புரட்சியாளர்களுக்கு ஆதரவான படையெடுப்பு என ஈராக் அறிவித்தது. ஆகஸ்ட் 4, "சுதந்திர குவைத்" என அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆகஸ்ட் 8, குவைத் ஈராக் நாட்டோடு இணைக்கப்பட்டது என்ற அறிவிப்பு வந்தது. ஆகஸ்ட் 28, குவைத் ஈராக்கின் ஓர் மாநிலம் என அறிவிக்கப்பட்டது.

அரபு நாடுகள் அல்லோகல்லோப்பட்டுப் போயின. இதன் அடுத்தடுத்த நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என பதறிப் போனார்கள். படையெடுப்புக்காகப் பயப்படவில்லை. படையெடுத்த மனிதரை கண்டு பயம். ஈராக்கின் தன்னிகரற்ற தலைவனாக முடிசூட்டிக் கொண்ட "சதாம் உசேனை" கண்டு தான் அந்த பயம். உலகின் வல்லாதிக்க நாடுகளின் பார்வையும் அந்தப் பக்கம் திரும்பியது.

அமெரிக்கா தன் எதிர்ப்பை வெளிப்படுத்தியது. ஐக்கிய நாடுகள் சபையில் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தியது. அப்போதைய அமெரிக்க அதிபர் ஹெச்.டபிள்யூ. புஷ், போர் தான் வழி என்றார்.

ஈராக் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டது. காரணம், பொருளாதார அரசியல். ஈராக் குவைத்தை கைப்பற்றியதற்கும், அமெரிக்கா குவைத்தை விடுவித்ததற்கும் காரணமும் அதே பொருளாதார அரசியல் தான். அதிலும் குறிப்பாக எண்ணெய் அரசியல். மத்தியகிழக்கு நாடுகளில் கிடைக்கும் பெட்ரோலிய எண்ணெய் தான் கிட்டத்தட்ட உலக பொருளாதார சுழற்சிக்கான மைய அச்சு. எனவே அதை சுற்றி தான் உலக அரசியல்.

மத்திய கிழக்குப் பகுதியில் பெரும் முதலீடு செய்த உலகப் பெரு நிறுவனங்கள், சதாம் ஜுரத்தால் பீடிக்கப்பட்டன. அடுத்து சதாமால் "உலக எண்ணெய் விலை"க்கு பாதிப்பு வரும், அதனால் உலக பொருளாதாரத்திக்கு பாதிப்பு வரும் என ஆதிக்க நாடுகள் கவலை கொண்டன. குவைத்தின் பெரும் பணம் பிரிட்டன் நாட்டில் முதலீடு செய்யப்பட்டிருந்தது. அதனால் குவைத்திற்கு 'தேள் கொட்டியது', பிரிட்டனிற்கு 'நெரி' கட்டியது. பெரு நிறுவனங்கள், ஆதிக்க நாடுகள், பிரிட்டன் ஆகியவை அமெரிக்காவிடம் கதறின.

உலக பாதுகாப்பு கவுன்சில் ஆதரவுடன் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் 1991 ஜனவரி 16ல் குவைத்தின் உள் நுழைந்தன. பிப்ரவரியில் சதாமின் ஈராக் படை வெளியேற்றப்பட்டது. அத்தோடு பிரச்சினையை விடவில்லை அமெரிக்கா. அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. ஈராக்கிடம் "அணு ஆயுதங்கள், ஆந்த்ராக்ஸ், விஷவாயு ஆயுதங்கள் குவிந்திருக்கின்றன" என அறிவித்தது.

1993ல் ஈராக் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. அதிலிருந்து படிப்படியாக அமெரிக்கா ஈராக்கிற்கு நெருக்கடி கொடுத்து வந்தது. ஈராக் தீவிரவாதத் தாக்குதலுக்கு தயாராகிறது என ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் அமெரிக்காவிற்கு தகவல் கொடுத்தார். எதிரிகளான இவர்கள் எண்ணெய் அரசியலில் மட்டும் ஓரணி. அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் போர் அறிவித்தார்.

போருக்கு முன்பாகவே ஈராக் கிட்டத்தட்ட தளர்ந்து போயிருந்தது. ஈராக் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது ஐக்கிய நாடுகள் சபை. ஈராக்கிற்கு உணவுப் பொருட்கள் செல்ல முடியவில்லை. ஈராக்கால் பெட்ரோலியப் பொருட்களை விற்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் ஈராக் அடிபணிந்தது. 1996 ஆம் ஆண்டு "உணவுக்கு எண்ணெய்" திட்டத்திற்கு ஈராக் ஒப்புதளித்தது. ஆனாலும் அமெரிக்க விடவில்லை.

2003 மார்ச் 20, போர் துவங்கியது. அமெரிக்கப் படைகள் மெல்ல முன்னேறின,  அவர்களின் கை ஓங்கியது. சதாம் தலைமறைவானார். ஏப்ரல் 9ல் நெடிதுயர்ந்த சதாமின் சிலை கீழே தள்ளப்பட்டது. சதாமின் சகாப்தம் முடிந்ததற்கான குறியீடாக இது அமைந்தது.

அப்புறம் தான் எதிர் கிளைமாக்ஸ். எந்த ஆயுதங்கள் எல்லாம் குவிக்கப்பட்டிருக்கிறது என போர் தொடுத்தாற்களோ, அதன் பிளாஸ்டிக் மாடல்கள் கூட ஈராக்கில் இல்லை. இந்தப் போரின் நோக்கம் "எண்ணெய் அரசியல்" தான் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது. ஆனாலும்  வெட்கப்படவில்லை, அமெரிக்கா.

2017 ஜூன் 5.  ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற தீவிரவாத அமைப்பிற்கு கத்தார் ஆதரவு தருகிறது என சவுதி அரேபியா குரல் கொடுத்தது. இதற்கு ஐக்கிய அரேபிய குடியரசு, பஹ்ரைன், எகிப்து ஆகிய அரபு நாடுகள் சவுதி அரேபிய குரலுக்கு ஆதரவு தெரிவித்தன. இது என்ன புதிய பிரச்சினை என்ற கேள்வி எழுந்தது. பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதியில் உலக அளவில் கத்தார் முன்னணியில் இருந்து வரும் நிலையில், இந்த நாடுகளின் குரலுக்கான வேறு அர்த்தம் என்ன என ஆராயப்பட்டது. கத்தார் மீது இந்த நாடுகள் பொருளாதாரத் தடை விதித்தன.

அப்போது தான் அமெரிக்க அதிபர் பெரியண்ணன் டிரம்ப் காட்சிக்கு வந்தார். "தீவிரவாதத்திற்கு ஆதரவளிப்பதை கத்தார் நிறுத்த வேண்டும்" என எச்சரித்தார்.

கத்தார் இன்றைய தேதிக்கு உலக அளவில் குறிப்பிடத்தக்க பணக்கார நாடு. ஆனால் சுண்டைக்காய் அளவு நாடு. நாட்டில் இருக்கும் மக்களில் முக்கால்வாசி பேர் வெளி நாட்டினர், வேலைக்காக வந்தவர்கள்.

"இந்தத் தடையால எங்களுக்கு எந்த பாதிப்பும் வராது" என கத்தார் அறிவித்தது. இன்னொரு ஈராக்கா என்ற பேச்சு வந்தது. ஆனால் சதாம் போல் நாங்கள் வீம்பு காட்டி ஏமாந்துவிட மாட்டோம் என கத்தாரின் அடுத்த  நடவடிக்கை காட்டி விட்டது.

ஜூன் 14 அன்று ஒரு அறிவிப்பு. அமெரிக்காவுக்கும் கத்தாருக்கும் ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. ரூபாய் 77,460 கோடி மதிப்பிலான எப்-15 ரக விமானங்கள் 72ஐ கத்தாருக்கு விற்க அமெரிக்காவின் ஒப்பந்தம் தான். அப்போது இரண்டு நாட்டு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் நடவடிக்கை குறித்து விவாதித்தது தான் ஹைலைட்.

கத்தார், பொருளாதார அரசியலின் நுட்பம் உணர்ந்து அடி எடுத்து வைப்பதாகத் தோன்றுகிறது. பலத்தால் அடிக்காதே, பணத்தால் அடி.

# என்று தணியும் இந்த எண்ணெய் மோகம் !

வியாழன், 8 ஜூன், 2017

டாக்டர் சாமிநாதன்

"ராசேந்திரன கம்பத்துல கட்டி வச்சிருக்காங்களாம்".  மகனை கட்டி வைத்திருக்கும் சேதி கேட்டு பதறி ஓடுகிறார் தந்தை சாமிநாதன்.  " கடவுள் இல்லை, கடவுள் இல்லை" என்று ஊர் சுவர் எல்லாம் எழுதி வைத்தது தான் ராசேந்திரன்  செய்த குற்றம். கோபத்தில் இருந்த நாட்டார்களிடம் "இதுக்கு மேல இப்புடி செஞ்சான்னா, அடுத்தத் தடவ கெடா வெட்டும் போது சேத்து வச்சி இவன வெட்டிடுறேன்"என்று சமாதானம் சொன்னார்.

நிண்ணியூர் கிராமத்தில் கோயில் படைக்க வேண்டுமானால் சாமிநாதனை தான் அழைப்பார்கள். சாமிக்கு வேண்டி கொண்ட ஆட்டுக் கெடா வெட்டவும் இவரைத் தான் நாடுவார்கள். அவர் மகனே 'கடவுள் இல்லை' என்று எழுதினால் அதிர்ச்சியாகத் தானே இருக்கும். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் தான் ராசேந்திரன். செந்துறை பள்ளிக்கு போகும் போது, புலவர் பொன்னம்பலனார் அவர்களை நலம் விசாரிக்க வந்த தந்தைப் பெரியாரைப் பார்த்திருக்கிறார் ராசேந்திரன்.

பெரியார் மீது ஈர்ப்பு ஏற்பட்டு, திராவிடர் கழக கொள்கைகளை உள்வாங்கி இருக்கிறார். அதன் விளைவு தான், 'கடவுள் இல்லை' சுவர் எழுத்து. இது போல் எழுதக் கூடாது என்று மகனுக்கு அறிவுரை சொன்னார் சாமிநாதன். மகன் ராசேந்திரனோ கொள்கை பேசியிருக்கிறார்.  மகன் சொன்ன செய்திகள் மீது  ஆர்வம் ஏற்பட்டது சாமிநாதனுக்கு. கீழமாளிகை கிராமத்திற்கு சென்ற போது, உறவினர் பாவாடைராயனை சந்தித்திருக்கிறார் சாமிநாதன். அந்தப் பகுதி திராவிடர் கழகத்தின் முக்கியமானவர் பாவாடைராயன்.

அங்கு நடைபெற்ற திராவிடர் கழகக் கூட்டத்தை பார்த்திருக்கிறார் சாமிநாதன். அவர்களது வாதம், பகுத்தறிவு மீது இவருக்கு ஒரு மரியாதையை ஏற்படுத்தி விட்டது. அதற்கு பிறகு மகனின் கொள்கை விஷயங்களில் தலையிடவில்லை. பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்த ராசேந்திரன் முழு நேர திராவிடர் கழக செயற்பாட்டாளர் ஆனார். பிற்காலத்தில் மாவட்ட செயலாளராகவும் பணியாற்றினார்.

ஒரு கட்டத்தில் சென்னைக்கு குடிபெயர்ந்தார் ராசேந்திரன். ஒரு கூட்டத்தில் அவரது உரையையும், சமூக ஆர்வத்தையும் கண்ட திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வியந்துப் போனார். புழல் சிறையில் இருக்கிற கைதிகளுக்கு பாடம் நடத்த இயலுமா என்று கேட்கிறார் மாவட்ட ஆட்சியர். ஒப்புக் கொண்ட ராசேந்திரனை, புழல் சிறைக்கு அழைத்து சென்று அறிமுகப்படுத்துகிறார். ஒன்பது ஆண்டுகளாக தமிழ் ஆசிரியர். அத்தோடு, அங்கேயே கைதிகளில் படித்தவர்களை தேர்வு செய்து சிறைக்குள்ளேயே ஒரு பள்ளியை கட்டமைத்து விட்டார் ராசேந்திரன். செய்தித் தாள்களில் இது குறித்து வந்த செய்திகளைப் பார்த்து உள்ளம் பூரித்துப் போனார் சாமிநாதன்.

சாமிநாதனுக்கு ஆறு மகன்கள், இரண்டு மகள்கள். விவசாயியாக வாழக்கை நடத்தினார். மழை பொய்த்த நேரத்தில், இறந்த மாடுகளின் எலும்பை சேகரிக்கும் வேலைக்கு சென்றார். பதறிப் போன அந்தத் தொழிலாளர்கள், "சின்னவரே, நீங்க இந்த வேலைக்கு வரக்கூடாது" என சொல்ல, "பிள்ளைகளை காப்பாற்றி, படிக்க வைக்க எந்தத் தொழிலும் இழிவு இல்லை" என்று மறுத்து வேலை செய்தார்.

ஒரு மகன் ராணுவத்தில் பணியாற்றினார், மற்றொருவர் வெளிநாடு சென்று பொருளீட்டுகிறார். நான்காவது மகன் வழக்கறிஞர் பகுத்தறிவாளன். இவருக்கு சூட்டப்பட்டப் பெயர் திருஞானம். கல்லூரி காலத்தில் தன் பெயரை தமிழ்படுத்தி 'பகுத்தறிவாளன்' ஆக்கிக் கொண்டார். கல்லூரி கடைசி ஆண்டில் செந்துறையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் ஒரு உறுதிமொழி எடுத்துக் கொண்டார். "சாதி மறுப்பு அல்லது விதவை மறுவாழ்வு திருமணம் செய்து கொள்வேன்".

சொன்னபடியே, இரண்டு குழந்தைகளோடு நிராதரவாக இருந்த 'தவமணி' அவர்களை மணமுடித்தார் பகுத்தறிவாளன். தஞ்சையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில், இரவு எட்டு மணிக்கு, "சுயமரியாதை திருமணம்" நடைபெற்றது. துவக்கத்தில் இந்தத் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை சாமிநாதன், பிறகு உணர்ந்து திருமணத்தில் மகிழ்ச்சியாய் கலந்து கொண்டார். விஜய் டிவியில் இந்த திருமண நிகழ்வு குறித்த செய்தி வெளியான போது, கூடுதல் மகிழ்ச்சி அடைந்தார்.

கடைசி மகள் சாதி கடந்து, மொழி கடந்து ஆந்திரத்து மருமகனை கைபிடித்ததையும் ஏற்றுக் கொண்டார் சாமிநாதன். கிராமத்து பூசாரி மெல்ல, மெல்ல பகுத்தறிவாளரானார் மகன்களால்.

இளம்வயதில்  மாட்டுவைத்தியம் பார்க்க  துவங்கிய சாமிநாதன், அதனால் சுற்றுவட்டாரத்தில் பிரபல்யமானார். மாட்டை தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டு விலாவை தடவி விட்டால், மாடு நலம் பெறும். கன்று போட திணறும் பசுக்களுக்கு வைத்தியம் பார்க்க இவரை அழைத்து செல்வார்கள். இவர் கை நுழைந்தால், எவ்வளவு சிக்கலான நிலையிலும் கன்றை கையோடு இழுத்து விடுவார்.

ஊரில் இவரது பங்களிப்பு பெரிது. யார் வயலில் ஏர் வோட்டுவதாக இருந்தாலும், இவரை முதல் ஏர் ஓட்டச் சொல்வார்கள். பயிர் விதைப்பிலும் இவரது கைராசி அந்தப் பகுதியில் பிரபலம். மிக முக்கியமானது, ஏரியில் கட்டைப் போடுவது. அடை மழை காலத்தில், ஏரியில் நீரை தேக்க, மூன்று ஆள் மட்டம் மூழ்கி,  மதகில் மரக்கட்டையை செலுத்தி நீரை தடை செய்ய வேண்டும். அதில் முதன்மையாக இருந்து செய்வார் சாமிநாதன். சிறுவயதில்,நண்பர்களோடு சாராயம் காய்ச்சினார் எனவும் செய்தி உண்டு.

இப்படி மக்களோடு வாழ்ந்தவர் 90வது வயதில், கடந்த ஜனவரி மாதம் மறைவுற்றார். இவரது சிதைக்கு மருமகள்களே கொள்ளி வைத்தனர். குடும்ப நிகழ்வுகளை சுயமரியாதை நிகழ்வாக நடத்தியவரது, இறுதி நிகழ்வும் அவ்வாறே நிகழ்வுற்றது.

அவரது இறப்புக்கு ஒரு மாதம் முன்,  ஆசிரியர் கருணாநிதி படத்திறப்பு நிகழ்விற்கு சென்றிருந்தேன். முதல் வரிசையில் பெரியவர் 'சாமிநாதன்'. நிகழ்ச்சி முடிந்து அருகே சென்றேன், எழுந்து விட்டார். உட்கார சொன்னேன், மறுத்து விட்டார். வயதை தாண்டி, பதவிக்கான மரியாதையை கொடுத்தார். கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

படத்திறப்பு நிகழ்வில், அமெரிக்காவில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் அவரது இளையமகன் தங்கசாமி பேசியது,"கடவு சீட்டில் என் பெயர் சாமிநாதன் தங்கசாமி என்று இருக்கும். நான் முனைவர் பட்டம் பெற்ற போது,  சாமிநாதன் பெயருக்கே சான்றிதழ் வழங்கப்பட்டது. அது மிகச் சரியானது தான். படிக்காமலே மாட்டுவைத்தியம், பயிர் செய்தல், கோவில் பூசை, சாராயம் காய்ச்சுதல், கடைசியில் பகுத்தறிவு என ஆய்வு செய்து வாழ்ந்திருக்கிறார். அவர் 'டாக்டர் சாமிநாதன்' தான்"என்றார்.

**********************

(அந்திமழை மே 2017 மாத இதழில்  விருந்தினர் பக்கத்தில் வெளிவந்த எனது கட்டுரையின் திருத்தப்படாத வடிவம்)