பிரபலமான இடுகைகள்

புதன், 2 ஜனவரி, 2013

விஜய் டிவி - நீயா, நானா நிகழ்ச்சி - இட ஒதுக்கீடு

 
 
விஜய் டிவி-யின் நீயா, நானா நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்....

இன்றைய மாணவர்கள் தமிழகத்தின் பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறார்களா என்ற தலைப்பிலான விவாதம்.

ஒருபுறம் கல்லூரி மாணவர்கள் 30 பேர். எதிர்புறம் சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசியல் இயக்கத்தை சேர்ந்தோர் மற்றும் பல்வேறு தளங்களில் இயங்குபவர்கள் என 30 பேர்.

எனக்கு இருபுறத்திலும் பத்திரிக்கையாளர்கள் கார்த்திக் மற்றும் கவிதா. எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன், களப்பிரன், மருத்துவர் சிவராமன், ஷாநவாஸ், ஜெயின் கூபி என பலதரப்பட்டோர்.

கோபிநாத் இயல்பாக துவங்கினார் விவாதத்தை. மாணவர்களிடம் துவங்குவோம், எனக் கூறி, " தமிழகத்தின் தலையாய பிரச்சினையாக எதை கருதுகிறீர்கள் ?" என்ற கேள்விக்கு ஒவ்வொருவராக பதில் சொல்லுங்கள் என்றார்.

ஒவ்வொருவராக பதில் சொல்ல ஆரம்பித்தனர். மாணவிகள் அனைவரும், ஒன்றுபட்ட குரலில், " பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை, பெண் சுதந்திரம் மறுக்கப் படுகிறது " என்று கருத்து சொன்னார்கள்.

மாணவர்களின் பதில் பல தரப்பட்டதாக இருந்தது. பயனுள்ள கல்வியாக இல்லை, லஞ்சம், மின்வெட்டு, சாதிப் பிரச்சினை என ஒவ்வொருவரும் சொல்லி வர... ஒரு மாணவன் சொன்ன பதில் எங்களை நிலைகுலையச் செய்தது.

" இட ஒதுக்கீடு - தமிழகத்தின் முக்கியமான பிரச்சினை " என அந்த மாணவன் சொல்ல, கோபிநாத் "ஏன் சொல்கிறீர்கள் ?" எனக் கேட்க, " என்னை விடக் குறைவான மதிப்பெண் எடுத்தவர்களுக்கு கல்லூரியில் இடம் கிடைத்தது, எனக்கு கிடைக்கவில்லை " என சொன்னார்.

அதற்கு பிறகும் தொடர்ந்து நான்கு, அய்ந்து மாணவர்கள் இட ஒதுக்கீட்டை குறை சொல்ல, அருகில் இருந்த சகோதரர் கார்த்திக்கு முகம் சிவந்தது. சகோதரி கவிதா அவர்களுக்கு உட்கார இருப்பு கொள்ளவில்லை.

இன்னும் கொடுமை, ஒரு ஆதிதிராவிட மாணவன் சொன்ன பதில், " என்னோடு இருக்கிற நான்கு நண்பர்கள் வேதனைப் படுகிறார்கள், எங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பை நீங்கள் பறித்துக் கொள்கிறீர்கள் என்று வருத்தப் படுகிறார்கள். " .

எங்கள் பகுதி கொதிநிலைக்கு வந்தது.

பின் வரிசையில் இருந்த தோழர்களிடமிருந்து வருத்தக் குரல்கள். நான் கார்த்தியிடம் சொன்னேன், " நாம் தான் இப்போது மாணவர்கள், நமக்கு தான் பாடம் நடக்கிறது " . அவரும் ஆமோதித்தார்.

ஒரு கட்டத்தில் கோபிநாத், " இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறவர்கள் கையை உயர்த்துங்கள்" எனக் கேட்க , அய்ந்து பேர் கை தூக்கினர். எதிர்ப்பவர்கள் கை உயர்த்துங்கள் " எனக் கேட்க 25 பேர் கை உயர்த்தினர்.

இது அறியாமை, மிதப்பான நடுத்தர வர்க்க மனோபாவம் எனப் புரிந்தது. இவர்களை தெளிவுபடுத்த என்ன வழி என்ற கேள்விதான் மனதில் எழுந்தது.

இடஒதுக்கீடு மட்டுமல்ல, இன்னும் சில சமூக பிரச்சினைகளில்  மாணவர்களின் கருத்து சமூக நிலைக்கு எதிராகவே இருந்தது. நிகழ்ச்சியின் முடிவில் எங்களது கருத்துகளை மாணவர்கள் ஏற்றுக் கொண்டபோது, ஒன்று புரிந்தது.

அவர்களிடம் உரிய செய்திகள் சென்றடையவில்லை. தெளிவு பெற்றால், அவர்கள் நிலைப்பாடு மாறுபடுகிறது.

கோபிநாத் கேட்டார், " தவறு யாரிடத்தில் ? ". அதற்கு சில பதில்கள் வந்தன, எங்கள் பக்கத்திலிருந்து. குற்ற உணர்வில், அங்கு என்னால் பதில் சொல்ல இயலவில்லை.

என்னைப் பொறுத்த வரை, " பெற்றோர்களின் நோக்கம் ( பிள்ளைகள் வேலைக்கு செல்வதற்காக மட்டுமே கல்வி கற்க வேண்டும் ), ஆசிரியர்களின் மனோபாவம், ( சம்பளத்திற்கு மட்டும் வேலை செய்தால் போதும் ), இயக்கங்களின் பணியில் தேக்கம் ".

நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஒளிப்பரப்பான பிறகு மேலும் பேசுவோம்.....

பேசுவது மாத்திரம் அல்ல, செயல்படவும் தேவை ஏற்பட்டிருக்கிறது.

# புத்தாண்டில் பணிகள் காத்திருக்கின்றன....

3 கருத்துகள்:

  1. அரசியல் மற்ற விஷயங்களிலும் புரிதல் இல்லை. ஒரு மாணவன் தமிழ் கல்வி வேண்டும் என்கிறான். கோபி அவரோடம் நா ன்கு தமிழ் எழுத்தாளர்கள் பஎர் கேட்கிறார்.அவரால் சொல்ல முடியவில்லை. மாணவர்களிடம் படிக்கும் அவா மிகவும் குறைந்துள்ளது கவலை பட வேண்டிய விஷயம்

    பதிலளிநீக்கு
  2. இப்படிப்பட்ட மிக மட்டமான மாணவர்கள் எப்படித்தான் அவர்களுக்குக் கிடைத்ததோ!

    பல மாணவர்களுக்கு இடப்பங்கீட்டைப் பற்றிய முழு விவரமும் தெரியவில்லை என்பது தெரியும்.

    ஆனாலும் இப்படிப்பட்ட ஒரு மாணவர் குழுவை எங்கே தேடிப்பிடித்தார்களோ! தமிழில் முதுகலை செய்யும் மாணவரிடம் இப்போதுள்ள நான்கு எழுத்தாளர்கள் பெயர் கேட்டார் கோபி. பதில் சொன்ன மாணவரைப் பார்த்துத் திகைத்து விட்டேன்.

    பதிலளிநீக்கு