பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 29 ஜனவரி, 2017

மனதை வெற்றி கொண்டவர் !

வெற்றிகொண்டான் என்றால் நகைச்சுவை பேச்சாளர் என்பது தான் பொதுவான எண்ணமாக இருக்கும். எந்த அளவிற்கு நகைச்சுவையா பேசுவாறோ, அதே அளவு உருக்கமாக பேசக் கூடியவர். பேச்சாளர்களுக்கு அது அவ்வளவு எளிதில் கைவராத விஷயம். ஏதாவது ஒரு சுவையில் தான் திறமையானவர்களாக இருப்பார்கள். அதே போல எந்த ஒரு செய்தியையும் அவர் அணுகுகிற கோணம், யாரும் அணுகாததாக இருக்கும்.

பத்திரிக்கைகளில் செய்தியை படிக்கும் போது, பக்கத்தில் ஒரு பரிட்சை அட்டையும் பேனாவும் இருக்கும். சில செய்திகளை படித்தவுடன் குறிப்பெடுப்பார். அது மேடையில் சில நேரங்களில் இருக்கும். புத்தகங்களை படித்து, அதில் குறியிட்டிருப்பார். அதே போல கூட்டத்திற்கு முன்பாக எளிமையாக தொண்டர்களிடம் உரையாடிக் கொண்டிருப்பார். பேச்சின் போது இந்த செய்திகள் எல்லாம் வரும். ஆனால் நாம் நினைத்து பார்க்க முடியாத கோணத்தில் இருக்கும்.

அட்டையில் இருக்கும் குறிப்புகளில் கடைசியில் இருப்பது முதலில் வரும். அப்புறம் இடையில் இருப்பது வரும். நூல்களில் படித்த செய்தி வரும். தொண்டர்களின் கருத்து இடம் பெறும். ஆனால் எங்கே எதை முடிச்சிட்டு சுவாரஸ்யமாக சொல்ல வேண்டும் என்பதில் கை தேர்ந்தவர். தன்னை அப்டேட் செய்து கொண்டே இருப்பார். ஒவ்வொரு மேடையிலும் புதிதாக பேச வேண்டும் என்று செயல்படுவார். பேச்சாளராக விருப்பப் படுபவர்களுக்கு ஒரு வழிகாட்டி அவர்.

ஜெயலலிதா ஆட்சியின் போது, அவர் மீது நூற்றுக்கும் மேலான அவதூறு வழக்குகள் தொடுக்கப்பட்டன. வேறு பேச்சாளராக இருந்தால் அதை சொல்லும் போது இயல்பாக கோபப்பட்டு பேசுவார்கள்.

ஆனால் அய்யா வெற்றி அதையே அதகளப்படுத்தி விடுவார். "அது ஒன்னும் இல்ல. நானும் ஜெயலலிதாவும் நேர்ல சந்திச்சிக்கிட்டது கிடையாது. இந்தப் பேச்சு பேசுறானே வெற்றி, எப்டி இருப்பான்னு பாக்கலாம்னு நெனச்சி தான் கேஸ் போட சொன்னது.  ஆனா இந்த காவல்துறை இருக்கே எல்லா ஊர்லயும் கேச போட்டுடுச்சி. அதுல ஒன்னும் பிரச்சினை இல்லை. இப்போ நாம தான் எல்லா கோர்ட்டுக்கும் இன்ஸ்பெக்‌ஷன் ஆபிசர். ஆமா" என்று இடைவெளி விடுவார். காத்திருக்கும் கூட்டம் கைத்தட்டி ஆர்ப்பரிக்கும்.

"கோர்ட்டுக்கு ரெகுலரா போறதுனால ஜட்ஜே கோர்ட்டுக்கு என்ன தேவைன்னு நம்ம கிட்ட தான் கோரிக்க வைக்கிறாரு. நான் பேசுனா குறிப்பெடுத்து முதலமைச்சருக்கு போயிடும்னு நெனைக்கிறாங்க". கலாய்ப்பதில் அதன் உச்சத்துக்கே சென்றவர்.

அதே போல தன் பேச்சில், எதிர்கட்சி தலைவர்களுக்கு நேரடியாக கேள்வி போடுவார். அந்தத் தலைவர்கள் அந்தப் பேச்சை கேட்டாலும் அவர்களை அறியாமல் சிரித்து விடும் அளவிற்கு இருக்கும். நகைச்சுவையும் தெறிக்கும், அதே சமயம் வாதப் பொருளும் வலுவாக இருக்கும்.

அதே போல சேம்சைட் கோலும் போடுவார். சமயங்களில் தலைவர் கலைஞரையே வாருவார். " நான் தெரியாம தான் கேட்கிறேன். இப்போ உங்கள யாரு போராட்டம் அறிவிக்க சொன்னது? ஓட்டு போட்டது அந்த ஜனங்க. இப்ப கஷ்டப்படறது அந்த ஜனங்க. அவங்களே அதப் பத்தி கவலப்படல. நீங்க ஏன் கவலப்படறீங்க?". வாருவது போல தான் இருக்கும். ஆனால் அந்த பாணியில் சொல்ல வேண்டியதை சொல்லிவிடுவார்.

இதுவே வேறு எந்தப் பேச்சாளராவது பேசினால் சிக்கிவிடுவார்கள். தலைவருக்கு எதிர்கருத்தாக அமைந்துவிடும். ஆனால் தலைவரை பற்றி இவர் பேசுவது கைத்தட்டலை அள்ளும். இது தான் அய்யா வெற்றிகொண்டான் பாணி. சில மேடைகளில் தலைவரை வைத்துக் கொண்டு இது போல் பேசி, தலைவரையே குலுங்க குலுங்க சிரிக்க வைத்துவிடுவார்.

1993ல் நடந்த துரோக நடவடிக்கையின் போது, தமிழகம் எங்கும் சுற்றி கழகத்தின் நிலையை வலுப்படுத்தியது இவரது பெரும் பணி. எது குற்றச்சாட்டாக கழகத்தின் மீது வீசப்பட்டதோ, அதையே பிடித்து திருப்பி ஆயுதமாக வீசினார்.

ஆம், அப்போது "தளபதியை தலைவராக்கத் தான் வைகோ நீக்கம்" என அவதூறை அள்ளி வீசினார்கள். உடனே பதிலடி கொடுத்தார் அய்யா வெற்றி. "ஆம். எங்கள் வருங்கால தலைவர் தளபதி ஸ்டாலின் தான். எதிர்காலத்தில் கழகத்தை அவர் தான் வழி நடத்துவார்". 

அவர் சொல் பலித்து விட்டது, அவர் எண்ணம் நிறைவேறிவிட்டது. ஆம், அய்யா வெற்றியின் அளப்பறிய அன்பிற்குரிய தளபதி அவர்கள் செயல் தலைவர் ஆகிவிட்டார். ஆனால் பார்த்து ரசிக்க, அய்யா வெற்றி தான் இல்லை.

இன்று அவரது நினைவு நாள், என்றும் நினைவில் இருப்பார்.

# கழகத் தொண்டர்களின் மனதை வெற்றி கொண்டவர் !

வியாழன், 26 ஜனவரி, 2017

கொடியரசு தின வாழ்த்து

இரண்டு வருடத்திற்கு முன்னால அப்படி சொல்லி இருந்தா, நானே விழுந்து புரண்டு சிரிச்சிருப்பேன்.  இப்போ நண்டு, சிண்டு வரைக்கும் அத சர்வசாதாரணமா சொல்ல ஆரம்பிச்சிடுச்சிங்க. எல்லாம் இந்த மனுசனால வந்தது தான். வந்தப்ப பயங்கர டெரர்றா தான் இருந்தாரு. ஆனா அப்படியே பயங்கர காமெடியா ஆவாருன்னு  நினைக்கல.

இதுக்கு, அந்த காலத்தில நாம தான் முக்கிய கோரிக்கையா அத வச்சிருந்தோம். பின்னாடி நாட்டு நிலமைய நினைச்சி கைவிட்டோம். நாமளாவது சனநாயக வழி. இயக்கம் கட்டி, ஆயுதம் ஏந்தி போராடினவங்க உண்டு. அதில் உயிரிழப்பும் உண்டு. இப்படில்லாம் போராடி அரச பயங்கரவாதத்ல அந்த இயக்கம் அழிஞ்சே போச்சி. இப்படில்லாம் வரலாறு இருக்கறதனால, இனி வழியே இல்லன்னு மூடின சேப்டர் அது. பொசுக்குன்னு ஒப்பன் பண்ணிட்டாரு அண்ணன்.

கடந்த மாசம் நண்பர்கள் சிலரோட சந்திப்பு. அப்போ சர்வசாதாரணமா அவங்க அந்த சப்ஜெக்ட கையாண்டாங்க. கொஞ்சம் அட்வான்ஸா சிந்திக்கிற குரூப் தான். இருந்தாலும், இது ஓவர் திங்கிங்ஆ இருக்கேன்னு தோணுச்சி அப்போ.  ஆனா இப்போ சரியா தான் யோசிக்கிட்டு இருக்காங்கன்னு ஆயிடிச்சி. எல்லாம் அண்ணன நம்பி தான் யோசிருக்காங்க.

அண்ணன் அந்தத் திட்டத்த அறிவிச்சதுல முதல் பொறி விழுந்துருக்கு. ஆனா சரியா வெளியில தெரியல.  ரெண்டு, மூணு இடத்துல இந்தப் பேச்சு கிளம்பியிருக்கு. இங்க அப்போ கிளம்பல. இப்போ கிளம்பிடுச்சி. நண்டு ஒன்னு வாட்ஸ் அப் வீடியோல பேசுனப்ப இத சொல்லிச்சி. நான் பெருசா நெனைக்கல. ஆனா இன்னைக்கு முகநூல்ல பலரும் கதற்றத பார்த்தா பொறி வலுவாயிருக்குன்னு தெரியுது.

என்னாடா சப்ஜெக்ட்ட சொல்லாம இழுக்கறேன்னு பார்க்கறீங்களா? அவங்க சர்வசாதாரணமா சொன்னாலும், எனக்கு அத சொல்ல தயக்கமா தான் இருக்குது.

ம். அதே தான். தனி நாடு.

முன்னாடி அந்த நண்பர்கள் சொன்னப்ப நானே சிரிச்சேன். அப்ப தான் அவங்க சொன்னாங்க, நாங்கக் கூட இத நாங்களா நினைக்கல. எல்லாப் புகழும் அண்ணனுக்கு தான். அண்ணன் வேற யாரு, நம்ம மோடி அண்ணன் தான். அண்ணன் அவரு கட்சியில எல்லாரையும் காலி பண்ணி கைப்பிடிக்குள் வந்தது அவங்க கட்சிப் பிரச்சினை.

ஆனா அதே டேஸ்ட்ல இந்தியாவையும் கைக்குள்ள கொண்டு வரணும்னு பார்த்தாரு. குஜராத்த டைட்டா வச்சிருந்தது போல இந்தியாவையும். அது ஒரு மொழி பேசற, ஒரு கலாச்சாரம் கொண்ட மாநிலம். அத வச்சிருக்கறது வேற கதை. ஆனா இந்தியா பல மொழி, பல கலாச்சாரம் கொண்ட நாடு. இது மொத்தமா கைக்குள்ள வர்றது சிரமம்னு அண்ணனுக்கு புரிஞ்சுது.

அப்புறம் அவங்க வழிகாட்டி குரூப்போட ஏக இந்தியாவ நிர்மாணிக்க முடிவெடுத்தாரு. அப்பத் தான் இந்தி, சமஸ்கிருதம், பொதுச்சட்டம், பொதுக்கல்வின்னு ஆரம்பிச்சாரு. அப்பவே நம்ம நண்பர்கள் தனி நாடு கோரிக்கைக்கு அண்ணன் உயிர் குடுத்துடுவாருன்னு முடிவெடுத்துருக்காங்க.  பேசிக்க ஆரம்பிச்சிருக்காங்க.

அப்போ பாத்து தான் அண்ணன் ஒரு சிக்ஸர் அடிச்சாரு. பந்து ஸ்டேடியத்துக்கு வெளியில போயிடுச்சி. ஆமாம், "செல்லாக்காசு" திட்டம் தான். மேற்கு வங்காளம் கிளம்புச்சி.  அது ஏதோ மம்தாவுக்கு மட்டும் பிரச்சினைன்னு நினைச்சாங்க. வங்காளம் தமிழ்நாடு மாதிரி தான், தனி சிந்தனை.  மொத்த இந்தியாவின் நிலைப்பாட்டில் இருந்து வித்தியாச சிந்தனை. அதனால அங்க கம்யூனிஸ்ட் கோலோச்சறது.  இப்போ மம்தா.

வடகிழக்கு மாநிலங்கள் பூரா ஒட்டிக்கிட்டு தான் இருக்கு. அதன் போக்கே வேற. காஷ்மீர் கதை தான் தெரிஞ்சது. கேரளா "செல்லாக்காசு" பிரச்சினையில  750 கி.மீ மனிதசங்கிலி நின்னு போராடி இருக்காங்க. இப்புடி ஆளுக்கொரு பக்கம் இழுக்கற நிலை.

அப்போ தான் நம்ம மேல உழுந்துது அடி.  காவேரி தீர்ப்ப ஒத்துக்க முடியாதுன்னு அண்ணன் கம்பெனி சொல்ல, லேசா.  அடுத்து அண்ணன் பொதுக்கல்வி, நீட் பொதுத் தேர்வு, பொங்கலுக்கு விடுமுற இல்லன்னு போட்டுத் தாக்க பொறி நெருப்பாச்சி. ஜல்லிக்கட்டு காள குறுக்க நெடுக்க ஓட, நெருப்பு காட்டுத் தீயாயிடிச்சி. மெரினா புரட்சியப்ப எதிரொலிக்க ஆரம்பிச்சுது. இளைஞர்கள் கோஷமாவே போட்டுட்டாங்க.

இப்போ கூட எந்த அரசியல் கட்சியும் "தனி நாடு" கோரிக்கையை பேசல, பேசவும் மாட்டாங்க. ஆனா இளைஞர்கள்கிட்ட இருந்து கேஷுவலா கிளம்பிடுச்சி.

அனல் பறக்கும் ஸ்டேடஸ்கள் தெறிச்சிது.

'நீ அனுமதி தரலன்னா, எங்க நாட்டுல ஜல்லிக்கட்டு நடத்திக்கிறோம்'

'கிரிக்கெட்டில் வென்ற அண்டை நாடான இந்தியாவுக்கு வாழ்த்துக்கள்'

'அண்ணா அப்போவே தமிழ்'நாடு'ன்னு தொலைநோக்கோடு தான் பேர் வச்சிருக்காரு'

இதெல்லாம் டிரெண்டிங்ல எழுதுனதுன்னு விட்டுட்டேன்.

ஒருத்தர் சீரியஸாவே எழுதி இருந்தாரு. "வல்லரசா இருந்தது ரஷ்யா. கிட்ட நெருங்கவே முடியாது. கார்ப்பசேவ் வந்தாரு. பிரிச்சி உட்டுட்டாரு. இந்தியாவின் கார்ப்பசேவ் 'மோடி' வாழ்க ! ".

டிவி விவாதத்துல அய்யநாதன் அழுத்தி சொல்றாரு. " இந்திய ஒன்றியத்தின் அங்கமான தமிழ்நாடு ". USA, USSR போல USI (United States of India)ன்னு ஃபீல் கொடுக்கிறாரு.

பாஸ், என்ன தான் நடக்குதுன்னு குழப்பமாயிடிச்சி.

இன்னைக்கு ஃபேஸ்புக் வந்தா நிறைய கருப்புக் கொடி ஃபுரொபைல் பிக்சர். அப்படியே போன வருசம் இந்த அளவுக்கு 'இந்திய' தேசியக் கொடி இருந்துது. இன்னொரு பக்கம் நாட்டுப்பற்ற வலியுறுத்தி, நாடு ஒண்ணா இருக்கனும்னு வலியுறுத்தி வந்தேமாதரம், ஜெய்ஹிந்த் கோஷம்.

வலியுறுத்தல எல்லாம் அண்ணன் மான்கிபாத்க்கு தான் ரீடைரக்ட் பண்ணனும். ஏன்னா அவர் தான் மனசு வைக்கணும். எல்லோரையும் மதிச்சி நடக்கனும், உரிமைய பறிக்கக்காம இருக்கணும். இத காங்கிரசுக்கும் CC போடணும்.

சரி, இந்தியா வாழ்க. அண்ணன் மோடிக்கு கொடியரசு தின வாழ்த்துக்கள். அடுத்த வருசமும் சொல்றது உங்கக் கைல தான் இருக்கு.

# பாத்து மனசு வைங்க அண்ணன் மோடி !

சனி, 21 ஜனவரி, 2017

மர்மப் புன்னகை ஓ.பி.எஸ்

"நல்லது நடக்கும். பொறுத்திருங்கள்", இதை சொல்லிவிட்டு ஒரு மர்மப் புன்னகை பூத்தார் தமிழக முதல்வர் ஓ.பி.எஸ் டெல்லியில். பிரதமர் மோடியை சந்தித்த பிறகு அளித்த பேட்டி இது.

"தமிழக அரசே இதற்கு அவசர சட்டம் இயற்றிக் கொள்ளலாம்", மத்திய அரசின் வழக்கறிஞர் வாய் திறந்தார்.

இடைவேளைக்கு பிறகான ரஜினி படம் போல காட்சிகள் சூடுபிடித்தன.

மறுநாள் காலை தமிழக அரசின் வழக்கறிஞர் வரைவு சட்டம் தயார் செய்தார்.

மதியம் சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. மாலை கலாச்சார அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இரவே உள்துறை ஒப்புதல் அளித்தது.

இது ஒவ்வொன்றுக்கும் ஊடகங்கள், பிளாஷ் நியூஸ், பிக் நியூஸ், தற்போதைய செய்தி என பிண்ணனி இசையோடு தலைப்பிட்டு அதகளம் செய்தார்கள்.

"நானே வந்து வாடி வாசல் திறப்பேன். ஜல்லிக்கட்டு நடக்கும்", வெற்றிப் புன்னகை பூத்தார் ஓ.பி.எஸ்.

2009ல் இது போன்ற நிலையில் தான் "தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம்" கொண்டு வந்து ஜல்லிக்கட்டை நடத்திக் காட்டினார் தலைவர் கலைஞர்.

அதிமுக ஆட்சியில் ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடை வந்தப்போது, இது போன்ற அவசர சட்டத்தை நிறைவேற்றத் தான் தலைவர் கலைஞர் அவர்கள் வலியுறுத்தினார்கள்.

அப்போதை முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் எழுதினார். ஆனால் அவசர சட்டம் இயற்ற முன்வரவில்லை ஜெ.

இரும்பு பெண்மணியை கேள்வி கேட்க  பத்திரிக்கைகள், ஊடகங்கள் முன்வரவில்லை.

இந்த ஆண்டும் திமுகவும் ஜல்லிக்கட்டு பேரவையினரும் போராட்டம் நடத்திய போதும்,  மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும்,  முதல்வர் ஓ.பி.எஸ்ஸும் "ஜல்லிக்கட்டு நடந்தே தீரும்" என்று தொடர்ந்து முழங்கி வந்தனர்.

பொங்கல் போது தான், நீதிமன்றத்தைக் காரணம் காட்டி ஜல்லிக்கட்டு நடத்த வாய்ப்பில்லை என பின் வாங்கினார்கள்.

மாணவர்கள் திரண்டு போராட, ஒட்டு மொத்த தமிழகமும் எதிர்ப்பை காட்டிய பிறகு தான் மோடிக்கு உதறல். ஓ.பி.எஸ்ஸை டெல்லி வர சொல்லி இந்த 'அவசர சட்டத்திற்கு' அறிவுரை வழங்கி இருக்கிறார். சட்டமும்  வரப்போகிறது.

படத்திற்கு 'சுபம்' போட்டு முடிக்க ஆசைப்படுகிறார்கள். இது 'இடைவேளை' தான், 'முடிவு அல்ல' என மாணவர்கள் கூறுகிறார்கள். நிரந்தர முடிவு தான் தேவை என அவர்கள் கோரிக்கை.

அது கூட அப்புறம் விவாதிப்போம்.

இந்த அவசர சட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொண்டு வராததன் காரணம் என்ன? ஜனவரி ஆரம்பத்திலேயே கொண்டு வராததன் நோக்கம் என்ன ? ஜல்லிக்கட்டு நடக்கக் கூடாது என்பது தானே.

"காலம் கடத்தி ஜல்லிக்கட்டு நடத்த இடையூறாக இருந்தது யார் "? என தலைப்பு வைத்து விவாத களம் நடத்த எந்த ஊடகமும் முன்வராதது ஏன்? வரமாட்டார்கள். அவர்கள் முன்வர வேண்டாம், உணரக்கூடியவர்கள் உணர்ந்தால் போதும்.

கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுவதாக நினைத்து விளையாடிய மோடியும், ஓ.பி.எஸ்ஸும் மாட்டியிருப்பது ஜல்லிக்கட்டு திடலில்.

# தமிழ் காளை கொம்பில் சிக்கி திணறுகிறார்கள். தொடரும் !



திமுக போராடனுமா?

ஊடகம்: திமுக உண்ணாவிரதப் போராட்டமாமே?
திமுக தொண்டன்: ஆமாம். கழக செயல் தலைவர் தளபதி தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உண்ணாவிரதப் போராட்டம்.

ஊடகம்: இன்னும் பழைய காலத்திலேயே இருக்கீங்க? 60 வருசத்துக்கு முன்ன மாதிரியே உண்ணாவிரதம், ரயில் மறியல்னு இருக்கீங்களே?
திமுக தொண்டன்: அறுபது வருசத்து முன்னாடி உங்க வீட்டுல என்ன சாப்பிட்டாங்க?

ஊ: சோறு தான்.
தொ: இப்போ என்னா சாப்பிடுறீங்க?

ஊ: சோறு தான்.
தொ: அது தான்யா வாழ்க்கை. சில நேரங்கள்ல போராட்ட உத்திய மாத்தலாம், போரட்டத்த மாத்த முடியாது. போராட்டம் அறவழியில தான் செய்ய முடியும். ஒரு இயக்கம் இப்படி தான் இருக்க முடியும்.

ஊ: இல்ல ரயில் மறியல்?
தொ: அப்ப என்ன ஃபிளைட்ட மறிக்கனுமா? என்னா சார் பேசறிங்க? பஸ்ச மறிச்சா மாநில அரசுக்கு தான் தெரியும். ரயில மறிச்சா தான் மத்திய அரசுக்கு தெரியும்.

ஊ: மாணவர்கள் தான் போராடுறாங்களே. நீங்க ஏன் குறுக்கப் போறீங்க?
தொ: அலங்காநல்லூரில் ஜனவரி3ந் தேதியே முதல் போராட்டம் நடத்தியவர் தளபதி தான். அதுக்கு அப்புறம் போகி அன்னைக்கு மாநிலம் தழுவி போராட்டம். இன்னைக்கு ரயில்மறியல், அடுத்து உண்ணாவிரதம். நாங்க முன்னாடியே துவங்கிட்டோம், தொடருகிறோம்...

மாணவர் போராட்டம் மெய்சிலிர்க்க வைக்கிறதுன்னு எங்க தளபதி பாராட்டியிருக்கார். அதனால் நாங்க குறுக்க போகல. உடன் பயணிக்கிறோம்.

அடுத்து இன்னைக்கு வணிகர் சங்கம், தொழிற்சங்கங்கள் அப்படின்னு பலரும் போராடி இருக்காங்க.  த.மா.கா, இந்திய கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிச்சிருக்காங்க. அவங்களும் குறுக்க வரல. கிட்டத்தட்ட பந்த்.

ஊ: இல்ல நீங்க போராடாம இருக்கலாம்ல?
தொ: 89 எம்.எல்.ஏக்கள எங்கக் கட்சியில் மக்கள் தேர்ந்தெடுத்திருக்காங்க. அதற்கான பணி இந்தப் போராட்டம். இல்லன்ன ஜெயிச்ச எம்.எல்.ஏலாம் என்னா பண்றாங்கன்னு கேப்பீங்க.

ஊ : அப்ப இன்னும் வேற மாதிரி?
தொ: 135 எம்.எல்.ஏக்கள அதிமுகவுக்கு மக்கள் கொடுத்திருக்காங்க. அவங்கள ஏதும் கேள்வி கேட்டீங்களா?

ஊ: இல்ல, அது வந்து... நீங்க தானே போராடுறீங்க. அதனால உங்கள தான் கேக்க முடியும்.
தொ: அப்போ ஜெயலலிதா மாதிரி தோத்தா கொடநாட்டுக்கு போயிட்டா கேள்வி கேக்க மாட்டீங்க. தோத்தாலும் போராடுற எங்கள தான் கேப்பீங்க.

ஊ: சரி, சரி. ஜல்லிக்கட்டு உங்களால தான நின்னுதாம்?
தொ: 2011 எங்க ஆட்சி வரை ஜல்லிக்கட்டு நடந்தது. அப்புறம் வந்த அம்மா ஆட்சியில தான் ஜல்லிக்கட்டு நின்னுது. இப்போ மாநில அரசு தானே அவசர சட்டம் கொண்டு வருது. இத முன்னமே கொண்டு வந்திருக்கலாமே. அப்புறம் எப்படி திமுகவ குறை சொல்ல முடியும் ?

ஊ: காளையை காட்சிப் பட்டியலில் சேர்த்தது தான் ஜல்லிக்கட்டு நிக்கக் காரணம்னு சொல்றாங்களே?
தொ: அப்போ அந்தப் பட்டியல தான இப்போ சரி செய்யனும். மாநில சட்டத்த திருத்தறாங்களே, அப்போ அது பிரச்சினை இல்லைன்னு அவங்களே ஒத்துக்கிறாங்களா?

ஊ: மாணவர்கள் அரசியல் கூடாதுன்னு சொல்றாங்களே?
தொ: அது நீங்க மறைக்கிறது தான். ஒரு பொண்ணு, "வர சொல்லு, வர சொல்லு, பன்னீர வரசொல்லுன்னு. சின்னம்மா, சின்னம்மா, ஓபிஎஸ் எங்கம்மா?" அப்படின்னு கோஷம் போட்டு வாட்ஸ் அப் அலறுதே. நீங்க பாக்கலையா?

நியூஸ்7ல ஒரு பொண்ணு பேசும் போது,"ஆர்.எஸ்.எஸ் தான் காரணம்"னு சொன்ன உடனே செந்தில் பதறி "அவங்க இங்க இல்ல. குற்றம்சாட்டாதீங்க"னு கட் பண்ணினாரே பாத்தீங்களா?

தந்தி டீவில, போராட்ட ஆதரவாளர, பாண்டே கட்சிக்காரர் மாதிரி டீல் பண்ண, அவர் எகிற, பாண்டே சமாளிச்சத பாத்தீங்களா? அவரும் அரசாங்கத்த குற்றம் சொன்னத பாண்டே கண்ட்ரோல் பண்ணியத நாடே பார்த்ததே? நீங்கப் பார்க்கலையா?

ஊ: நான் கேள்வி கேட்டா, திருப்பி என்ன கேக்கறீங்களே?
தொ: நான் என்ன பேசா கட்சியா? திமுக தொண்டன்ங்க.

ஊ: நீங்க ஏதும் கேக்க ஆசப்படறீங்களா?
தொ: நிறைய கேக்கனும். ஒன்னு மட்டும் கேக்கறன். நாங்க ஆட்சிய இழந்துட்டோம். அதிமுக இரண்டாவது முற ஆட்சிக்கு வந்திருக்கு. மோடி ஆட்சிக்கு வந்து இரண்டரை வருசம் ஆயிடுச்சி. நீங்க என்னா செஞ்சிங்கன்னு அவங்கள போய் கேள்வி கேளுங்க. இல்லன்னா, 'அவரு'கிட்ட மிக்சர் வாங்கி சாப்பிட்டுக்கிட்டு ஒதுங்கி நில்லுங்க.

நாங்க போராடுறோம். மாணவர்கள் போராடுறாங்க. நீங்க ஒதுங்கி வேடிக்க பாருங்க.

# ஒதுங்கு, ஒதுங்கு, ஓரமா ஒதுங்கு !

வெள்ளி, 20 ஜனவரி, 2017

மாணவர் போராட்டம் வெற்றி

மாணவர்கள் போராட்டம் வெற்றி !

இனி ஜல்லிக்கட்டுக்கான தீர்வு எப்போது வந்தாலும், மாணவர்களின் போராட்டம் வெற்றி தான்.

அது எப்படி அதற்குள் வெற்றியாகும்?

பொதுவாக ஒரு பேச்சு உண்டு. இன்றைய மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் பொதுப் பிரச்சினையில் அக்கறை இல்லை, அரசியல் புரிதல் இல்லை, போராட்டக் குணம் இல்லை. இப்படியானப் பேச்சுகளை தகர்த்தெறிந்தது இந்த போராட்டம். இது முதல் வெற்றி.

துவக்க நாளில் எவ்வளவு நேரம் நீடிக்கும் என்ற பேச்சு இருந்தது போக, "தொடர்ந்து" மூன்றாவது நாளாக இன்று வெற்றிகரமாக கடந்து கொண்டிருக்கிறது.

மாணவர்கள் போராட்டம் தானே ?

அலங்காநல்லூரில் துவங்கியது, மெரீனா கடற்கரையை குலுங்க வைத்துக் கொண்டிருக்கிறது. மற்ற மாவட்டங்களுக்கும் பரவி தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.

கல்லூரி மாணவர்களில் துவங்கியது, இளைஞர்கள்,  பெண்கள் ஆதரவையும் பெற்று குழந்தைகள் வரை சென்று விட்டது. அரசு பணியில் இருப்போர், தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர், தொழில் புரிவோர் என அனைவரின் பார்வையையும் ஜல்லிக்கட்டு நோக்கி திருப்பியது மாணவர்கள் போராட்டம்.

மாணவர்களில் பெரும்பாலோர் ஜல்லிக்கட்டை பார்த்திராதவர்கள், இவர்கள் எப்படி இவ்வளவு தீவிரமாக போராடுகிறார்கள் ?

ஜல்லிக்கட்டை பார்த்திராதவர்களாக இருக்கலாம், பங்கேற்காதவர்களாக இருக்கலாம் ஆனால் ஜல்லிக்கட்டின் மீதான தடை, தமிழர்களின் தன்மானத்திற்கு விடப்பட்ட சவாலாக  அவர்களால் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.

காவிரியில் நீர் வராமல் கிட்டத்தட்ட 200 விவசாயிகள் இறந்தபோது, அதைப் போன்ற இன்னபிற வாழ்வாதார பிரச்சினைகளில் அவர்கள் பெற்றோரே கூட பாதிக்கப்பட்ட போது போராட வரவில்லையே இந்த மாணவர்கள்?

அப்போதும் அந்த கோபம் இருந்தது. பொதுத் தளம் கிடைக்கவில்லை.  அது தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியின் பிரச்சினையாக இருந்தது. ஜல்லிக்கட்டு தமிழகத்தை இணைத்து விட்டது. இப்போது இந்தப் பொறி, நெருப்பாகிவிட்டது.

வள்ளுவர் கூறியது போல, "பீலிப் பெய் சாக்காடும்". இது கடைசியாக விழுந்த மயிலிறகு தான், ஆனால் வண்டியின் அச்சாணி முறிந்துவிட்டது. கோபம் எல்லை மீறி வெளியில் வந்து விட்டார்கள்.

இதை எப்படி சொல்ல முடியும்?

போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளவர்களின் தொலைக்காட்சி பேட்டிகளிலும், வாட்ஸ் அப் பகிர்தலிலும் வெளிப்படுகிறதே அந்த கோபம்.

ஒவ்வொரு கோரிக்கையையும் வலியுறுத்துகிறார்களே...
காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும்,
பவானி ஆற்றில் கேரளா தடுப்பணை கட்டக்கூடாது,
முல்லைப் பெரியார் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்,
நாட்டுமாடுகளை காக்க வேண்டும்,
வெளிநாட்டு பானங்களை புறக்கணிப்போம்,
நீட் தேர்வு கூடாது....
இது எல்லாவற்றையும் இளைஞர்கள் ஆளுக்கொருப் பக்கம் வலியுறுத்துகிறார்கள். இது எல்லாம் பொதுப் பிச்சினைகளில் அவர்கள் பார்வையை தானே வெளிப்படுத்துகிறதே.

ஆனால், அரசியல் கூடாது என்கிறார்களே?

அரசியல் சாயம் கூடாது என்பது தான் அவர்கள் நிலைப்பாடாக இருக்கிறது. ஆனால் எப்போது போராட்டக் களத்திற்கு வந்தார்களோ, அப்போதே அரசியலுக்கு வந்துவிட்டார்கள்.

போராட்டத்தை குறித்த கருத்து ?

மிக கவனமாக எந்த தவறுகளும் நேர்ந்து விடாமல், கண்ணியத்தோடு, ஒரு ஒழுங்கோடு, கட்டுப்பாட்டோடு, தன்னெழுச்சியோடு ஒரு முதல் போராட்டம் இது. பாராட்டுக்குறியது.

சில போஸ்டர்களில் " மிக்ஸர்" போன்றவற்றின் மூலம் எல்லை மீறுகிறார்களே?

இவர்கள் இதுவரை தங்கள் கோபத்தை மீம்ஸ் மூலம் வெளிப்படுத்தியவர்கள். அதை ஒட்டி சில மீம்ஸ்களை, போஸ்டர்களாக வெளிப்படுத்தி உள்ளார்கள். சமூக வலைதளங்களில் கிடைத்த சுதந்திரம், பொதுவெளியில் வெளிப்பட்டு விட்டது.

இந்த போராட்டம் என்ன வித்தியாசம்?

இது புதிய தலைமுறையின் போராட்டம். செல்போனை வைத்துக் கொண்டு எப்போதும் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என நேரம் போக்குகிறவர்கள் என்ற நக்கலுக்கு ஆளானவர்கள். இப்போது செல்போன் மூலமே எதிர்ப்பை துவக்கி, போராட்டத்தை ஒருங்கிணைத்து, வேகப்படுத்தியுள்ளார்கள்.  உச்சகட்டமாக இன்று இரவு மெரீனா கடற்கரையில் செல்போன் பிளாஃஷ்களை மின்ன வைத்து உலக போராட்டத்தில் புதிய யுக்தியை வெளிப் படுத்தியுள்ளார்கள்.

மொத்தத்தில்?

# மாணவர்கள் போராட்டம் வெற்றி, இந்த நொடியே !