பிரபலமான இடுகைகள்

வியாழன், 9 ஏப்ரல், 2015

எங்கே சென்றாய், எங்களை ஏங்க விட்டு எங்கே சென்றாய்

மாநாட்டு பந்தலுக்குள் ஒரு கூட்டம் என்றால், பந்தலுக்கு வெளியே அதே அளவு கூட்டம் இருக்கும். முக்கிய தலைவர்கள் பேச்சுக்கு உள்ளே வர கூட்டம் முண்டும்.

அதைத் தாண்டி, பேச்சல்லாத இன்னொரு நிகழ்ச்சிக்கு கூட்டம் முண்டும். கடலை கொரிக்க வெளியே போனவர்கள், தண்ணீர் குடிக்க போனவர்கள், இயற்கை அழைப்புக்கு போனவர்கள் அவசரமாக திரும்புவர்.

"அழைக்கின்றார், அழைக்கின்றார், அழைக்கின்றார் அண்ணா" அந்தக் கம்பீரக் குரல் ஆரம்பிக்கும் போதே கட்டி இழுக்கும். கொஞ்சம், கொஞ்சமாக உச்சஸ்தாயிக்கு போகும்போது கட்டிப் போட்டு விடும்.

       

ஆம். அவர் தான் நாகூர் ஹனிபா. கழகத்தின் இசை முரசு. மேடையில் ஏறிவிட்டால், மொத்த நிகழ்வையும் கபளிகரம் செய்துவிடுவார் .

சிறு வயதில், என்னை எல்லாம் ரத்த முறுக்கேற்றியவர், தன் பாடல்களால். கொள்கைகளை படிக்கும் முன், பாடல் வடிவில் என் போன்றோரின் மனதில் பதியமிட்டவர்.

"கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே, ஓடி வருகிறான் உதயசூரியன், தன்மானம் காக்கும் கழகம், எங்கே சென்றாய், கம்பீரக் கலைஞர், உடன்பிறப்பே ஓடி வா, தொல்லைகளுக்கு இடையே முல்லை சிரிப்பு, தமிழகத்தின் தவப்புதல்வன்"

இவர் பாடிய கழகக் கொள்கைப் பாடல்கள் இவை. இவர் மறைந்திருக்கலாம், ஆனால் இந்தப் பாடல்கள் என்றும் மறையாது. அவை வாழும், கழகத்தை வாழ வைக்கும்.

கழகப் பாடல்கள் மட்டுமல்லாமல், அவர் இஸ்லாத்திற்காகப் பாடிய பாடல்களும் பிரபலமானவை. குறிப்பாக, "இறைவனிடம் கையேந்துங்கள், அவன் இல்லை என்று சொல்லுவதில்லை". மதம் கடந்து எல்லோரையும் முணுமுணுக்க வைக்கும்.

திரைத்துறையில் முத்திரை உண்டு.' செம்பருத்தி' திரைப்படத்தில், இளையராஜா இசையில், "நட்ட நடுக் கடலினிலே" , 'ராமன் அப்துல்லா' படத்தில், "உன் மதமா, என் மதமா" என பாடல்கள்.

பாடல்கள் பாடியதைத் தாண்டி, நேரடி அரசியலிலும் இருந்தவர். வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு நடைப்பெற்ற இடைத்தேர்தலில் கழக வேட்பாளராகப் போட்டியிட்டார்.

வெற்றி வாய்ப்பை இழந்தாலும், துளியும் அது குறித்துக் கவலைக் கொள்ளவில்லை. அந்த சமயத்தில் வெளியானப் புகைப்படம் ஒன்று வெகு பிரசித்தி பெற்றது.

தலைவர் கலைஞர் ஒரு புறம் நிற்க, மறுபுறம் பேராசிரியர் நிற்க, நடுவில் ஹனிபா அவர்கள் நின்று தனது இரண்டு கைகளையும் அவர்கள் தோளில் போட்டு அரவணைத்து நிற்பார். அவர்கள் அவர் மீது காட்டிய அன்பின் வெளிப்பாடு அது. அவரது ஆளுமை அஃது.

    

தலைவர் கலைஞர் முதல்வரான போது, வஃக்ப் வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டு பணியாற்றினார். ஆனாலும் பல நேரங்களில் தன்னைத் தேடி வந்தப் பதவிகளை புறந்தள்ளி இசையையே முதற் பணியாய் கொண்டார்.

அந்த மொட மொடக்கும் வெள்ளை வேட்டி, முரட்டு ஜிப்பா, கழுத்தை வளைத்திருக்கும் சால்வை, கருப்பு நிறத் தொப்பி, மூக்குக் கண்ணாடியை ஊடுரும் பார்வை. இந்த பிம்பம் என்றும் மனதில் நிலைக்கும். அந்தக் குரல் என்றும் காதையும், மனதையும் நிறைக்கும்.

அவர் பாடிய "தொல்லைகளுக்கு இடையே முல்லைச் சிரிப்பு " பாடலின் இரண்டாம் வரி தான் நினைவுக்கு வருகிறது .

# எல்லையே இல்லாதது உன் சிறப்பு !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக