பிரபலமான இடுகைகள்

திங்கள், 30 நவம்பர், 2015

வாட்ஸ் அப் வாழ்க, குரூப்ஸ் ஒழிக

"பணிச் சுமை காரணமாக, குழுக்களில் இயங்க இயலாத சூழலில் விலகுகிறேன். முக்கியத் தகவல் எனில் நேரடியாக அனுப்பலாம்.

விலகலுக்கு மன்னிக்கவும்.

🙏🙏🙏"   

இப்படி "வாட்ஸ் அப்ல" குரூப்ஸ்ல, ஒவ்வொரு குரூப்பா தேடித்தேடி  மெசேஜ் போடற நிலைமைக்கு வந்துட்டேன் இன்னைக்கு.

காரணம், என் நிலமை அப்படி ஆயிடிச்சி. ஆமாம், போன வாரம் 100வது குரூப்ல மெம்பர் ஆக்கிட்டாங்க. வடிவேலுக்கு "நூறாவது திருட்டுக்கு" விழா எடுத்த மாதிரி, விழா எடுக்காதது  ஒண்ணு தான் குறை.

பேஸ்புக், டிவிட்டர், பிளாக், கூகுள் பிளஸ், வாட்ஸ் அப் இப்படின்னு வாழ்க்கையே பத்தாது போல. இதுல இந்த குரூப் படுத்துறப் பாடு இருக்கே, படாதபாடு. பாம்புன்னு மிதிக்கவும் முடியாது, பழுதுன்னு தாண்டவும் முடியாது.

ஒரு குரூப்லயும் செய்தி போடற சூழல்ல  இல்ல, நான். நேர நெருக்கடி. ஆனா, அவங்க அத பத்தி கவலப் படல. ஏன்னா, அவங்க போட்டுகிட்டே இருந்தாங்க, இருக்காங்க.

சில நாளைக்கு மொபைல ஓப்பன் பண்ணினா, 5,000 மெசேஜ் பெண்டிங் காட்டும். அது ஓப்பன் பண்ணினா, 200 thread.  ஒரு கட்டத்துல என்ன செய்யறதுன்னு தெரியாத நில வந்துடுச்சி. அத்தனையும் ஓப்பன் பண்ணி படிக்கனும்னா 24 மணி நேரம் பத்தாது.

இது இல்லாம, இண்டிவிஜுவல் மெசேஜ் வேற. குட்மார்னிங், குட் ஆப்டர் நூன், குட் ஈவினிங், குட் நைட், இப்படி படை எடுக்கும். இல்லைன்னா, தூயத் தமிழ்ல, இனிய காலை வணக்கம், இனிய இரவு வணக்கம் அப்படின்னு.

அப்புறம் வீடியோ போடுவாங்க. குறிப்பு இருக்காது. அது தலையும் புரியாது, வாலும் புரியாது. முக்கியமானதுன்னு டவுன்லோட் பண்ணினா, கடைசியா ஒரு பொம்ம தலைய விரிச்சிப் போட்டுகிட்டு சிரிக்கும். அது "பேய்"நு நினைக்கனுமாம், பயப்படனுமாம்.

குரூப்லேயே கட்சி குரூப், கட்சி இல்லாத குரூப், காலேஜ் குரூப், இயர்மேட் குரூப், டிபார்ட்மெண்ட் குரூப், ஸ்கூல் குரூப், சொந்த ஊர் குரூப், இருக்கற ஊர் குரூப், வெளிநாடு குரூப், வேற்று கிரக குரூப் அப்படின்னு நாடே ஒரு குரூப்பா தான் திரியறாங்க.

இத எல்லாம் தாண்டி குரூப்ல குடியிருந்தாலும், அங்க ஆயிரம் அக்கப்போர். இவன எப்படி சேர்த்த, அவன எப்படி எடுத்த, இந்த மெசேஜ் ஏன் போட்ட, அந்த ஸ்மைலி ஏன் வச்ச அப்படின்னு ஒரே அடிதடி.

அக்கப்போர், அடிதடில்லாம் மிடீல. அதான் இந்த முடிவு.

# குரூப், குரூப்பாய் திரிவதெல்லாம் குரூப்பல்ல !

வெள்ளி, 20 நவம்பர், 2015

இதயத்தால் இயங்கிடுக

பில்கேட்ஸும், அம்பானியும் உட்கார்ந்த இடத்தில் பல நிறுவனங்களை நிர்வாகம் செய்யவில்லையா, முதல்வர் ஜெயலலிதாவை மாத்திரம் ஏன் விமர்சனம் செய்கிறீர்கள் ?. இது ஒரு நண்பரின் கேள்வி.

நல்ல கேள்வி. அதிலும் ஜெயலலிதாவின் நிர்வாகத் திறன் குறித்து அறிந்த பிறகு இந்தக் கேள்வி எழவேக் கூடாது தான். நிர்வாகத் திறன் என்பதைத் தாண்டி அவரது ஆளுமை அப்படிப் பட்டது.

தனியாக அவர் நிர்வாகத் திறமையை வெளிப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. அவர் குறித்தான செய்திகளே நிர்வாகத்தை வழி நடத்தி விடும். அவர் கடுமையானவர் என்ற பயமே மற்றவர்களை பணி செய்ய வைக்கும்.

யாராவது சரி இல்லை என்றால் உடனே மாற்றி விடுவார். பட்டென்று முடிவெடுப்பார்.  எதற்கும் பயப்பட மாட்டார், துணிச்சலானவர் என்பதான அந்த செய்திகள் தான் அந்த நிர்வாகத் திறனின் பின்புலம். அதில். ஒன்றும் தவறும் இல்லை.

அடுத்து அவர்கள் முன் நிறுத்துகிற முதன்மை செய்தி, இருந்த இடத்தில் இருந்து வேலை செய்ய இயலும் என்பது. அதிலும் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. உலகத்தின் பல நாடுகளில் இருக்கும் கிளை அலுவலகங்களை தலைமையகத்தில் இருந்து கட்டுப்படுத்த இயலும் தான்.

ஒரு முதல்வரும், மாநிலத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் நேரடியாகச் சென்று பணியாற்றுவது இயலவே இயலாத காரியம் தான். இருந்த இடத்தில் இருந்து பணிகளை செயற்படுத்துவதே நிர்வாகத் திறமை.

இதுவரை எந்த கருத்து வேறுபாடும் இல்லை அந்த நண்பர்களோடு.

முதல்வர் சாதாரண நாட்களில் தமிழகம் முழுதும் சுற்றுப் பயணம் மேற் கொள்ள வேண்டும் என்று யாரும் கோரவும் இல்லை. ஒரு இயற்கை பேரிடர் நிகழ்வு என்பதால் தான் இந்தக் கோரிக்கையும்.

பில் கேட்ஸாக இருந்தாலும், அம்பானியாக இருந்தாலும் அவர்களும் மனிதர்களே. அம்பானிக்கு குஜராத்தில் பெட்ரோ கேஸ் புராஜெக்ட் உள்ளது. அந்த நிறுவனத்தில் ஒரு பெரும் தீவிபத்து ஏற்பட்டு, உயிரிழப்பு ஏற்படுகிறது எனவே கொள்வோம்.

இரண்டு காரணங்களில் ஏதாவது ஒரு காரணத்திற்காக அம்பானியும் அங்கு சென்றே  தீர வேண்டிய நிலை ஏற்பட்டே தீரும். முதல் காரணம், அந்த உயிரிழப்புக்கு ஆறுதல் கூற வேண்டிய மனிதாபிமானம், இது பொது நலம். இரண்டாவது, தன் நிறுவனத்தில் ஏற்பட்ட இழப்பை நேரில் காண வேண்டிய சுயநலம்.

ஒரு நிறுவனத்திலேயே அந்த நிலை என்றால், நாட்டிற்கு என்ன நிலை.

நிறுவனத்தை இயந்திர கதியில் நிர்வகித்து விடலாம். ஆனால் நாட்டை இதயத்தால் நிர்வகிக்க வேண்டும்.

ஒரு மனிதன் வெளிநாட்டில் இருக்கும் போது, தன் குடும்பத்தை பணத்தால், அலைபேசி மூலம் இயக்க முடியும். ஆனால் குடும்பத்தில் ஒரு இழப்பு என்றால் பறந்து வந்தே ஆக வேண்டும்.

இழப்பு தமிழகம் என்ற குடும்பத்தில். நாட்டின் தலைமை பொறுப்பில் இருப்பவருக்கு கடமை இருக்கிறது.

உடல்நலம் ஒத்துழைக்கவில்லை என்றால் கொடநாடு சென்றது போல், ஹெலிகாப்டர் பயணமாவது மேற் கொள்ளலாம்.

இவ்வளவுக்கும் அப்புறம், உங்கள் வக்காலத்தையும் தாண்டி ஜெயலலிதாவே வெள்ளத்தை பார்வையிட்டு இருக்கிறார் . அவருக்கும் வேலை இல்லையா. அப்போ இதுக்கு என்ன பதில் ?

# இதயத்தால் இயங்கிடுக !

செவ்வாய், 17 நவம்பர், 2015

வெள்ளத்தில் மூழ்கும் தமிழகம்

அவர் முதல்வர் அல்ல, எதிர்கட்சித் தலைவரும் அல்ல, ஆனால் அவர் தான் பம்பரமாக சுழன்றுக் கொண்டிருக்கிறார். காரணம் அவர் கடமையாளர்.  தான் இயங்கினால், தானாக எல்லாம் இயங்கும்  என்பதை தளபதி உணர்ந்திருப்பார் போலும்.

நமக்கு நாமே பயணம் மூன்று கட்டமாக முடிந்திருந்தது அப்போது. 11,000 கிலோமீட்டர் தூர நீண்ட பயணம். ஒவ்வொரு நாளும் காலை 08.00 மணிக்கு தயாரானால், நிகழ்ச்சி முடிவு இரவு 10.00க்கா, 12.00க்கா என்பது யாருக்கும் தெரியாது. அப்போது தான் இரவு உணவு.

இப்படியே நடைபயணமாக, சைக்கிள் பயணமாக, வாகனப் பயணமாக சென்று மக்களை சந்தித்து வந்த நேரம் அது. ஒரு நாள் பயணத்திற்கே ஒய்வு தேவை என்பது பலரின் நிலை இன்று. ஆனால் இவருடையதோ இடையறதா, ஓய்வில்லாதப் பயணம்.

அதனால் அவர் ஓய்வெடுப்பார் என்று நினைத்திருக்கும் போது தான் அந்த செய்தி. கடலூர் மாவட்டம் கன மழையால் பாதித்தது என்ற செய்தி.

மொத்த மாவட்டமும் நீரில் மிதக்கிறது. நெய்வேலியில் ஒரே நாளில் 47 செ.மீ மழை. இது வரை காணாத வெள்ளம். பல ஊர்களில் சாலையை காணவில்லை. குறிஞ்சிப்பாடி பகுதியில் வீடுகள் இடிந்தன. ஒவ்வொரு நாளும் உயிர்சேதக் கணக்கு கூடுகிறது. இப்படி கடலூர், "கண்ணீர் ஊர்" ஆனது.

கடலூர் மாவட்டம் அவர் தொகுதியும் அல்ல. அங்கு திமுக எம்.எல்.ஏக்கள் யாருமில்லை. ஆனாலும் அவர் விரைந்தார். ஒவ்வொரு பகுதியாக சென்றார். மக்களை சந்தித்தார், ஆறுதல் கூறினார், தேற்றினார்.

சென்னையிலும் தன் தொகுதியான 'கொளத்தூரோடு' பயணத்தை முடித்துக் கொள்ளவில்லை அவர். எங்கெங்கு பாதிப்போ, அங்கெல்லாம் சென்றார். முழங்கால் அளவு நீரில் அசராமல் நடந்தார். கழிவு நீரும்  சில இடங்களில் கலந்தே சென்றது.

வாகனம் செல்லாத இடங்களில் இரு சக்கர வாகனமான ஸ்கூட்டியில் சென்றார். எப்படியோ, எந்த வகையிலோ பாதிக்கப்பட்டோரை சென்றடைந்தார். ஆறுதல் கூறினார், நிவாரண உதவிகளை வழங்கினார்.

தெருவில் சாக்கடை கலந்த நீர் பெருக்கெடுத்தாலே, வீட்டை விட்டு வெளியே வர மாட்டார்கள் பலர். வெள்ளம் பெருக்கெடுத்தாலே சிலர் வெளியே வரமாட்டார்கள். மக்கள் பிரதிநிதிகளும் பலர் அப்படித் தான்.

ஆனால் இவர் வந்தார், இவர் மட்டுமே வந்தார்.

இதை சில அறிவாளிகள் 'நாடகம்' என்று எள்ளி நகையாடுகிறார்களாம்.

இருக்கட்டும், தன் சகோதரன் அடிப்பட்டால் துடிப்பதையும் நாடகம் என்று அவர்கள் சொல்வார்களேயானால், அதில் நாம் சிறந்த நடிகராக இருப்பது தவறு இல்லை.

தன்னலம் மறந்து, பொது நலம் காக்கின்ற தலைவன் அவர். அவர் நடிகர் என்றால், நாமெல்லாம் நடிகர்களாக முயற்சிக்க வேண்டும்.

# இவரது அன்பு வெள்ளத்தில் மூழ்குகிறது தமிழகம் !

திங்கள், 16 நவம்பர், 2015

கதைத்த சேதி

கதைத்ததில் நேரம் போனதே தெரியவில்லை. வவுனியா தமிழ் என்னைக் கட்டிப் போட்டது. சில நேரங்களில் அர்த்தம் புரியாமல் தடுமாறினேன். அப்போது எல்லாம் பிரேக் போட்டு, திரும்ப சொல்லக் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டேன்.

ஆமாம் அந்த ஈழத் தமிழ் நண்பரை சந்தித்தேன். முகநூல் மூலம் தான் அறிமுகம். ஒரு நாள் தலைவர் கலைஞரை வியந்து பாராட்டி ஒரு பதிவு போட்டார். பதிவைக் கண்டு வியந்தேன்.  பிறகு அதனை பகிர்ந்தேன். அதன் பிறகு நெருக்கமானார். அடிக்கடி உள்டப்பியில் கதைப்போம்.

சென்னை வருவேன், சந்திப்போம் என்றார். நெருக்கடியானப் பணிகளுக்கு இடையில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. நல்ல வாய்ப்பு. உண்மையான ஈழத்து நிலவரம் பிடிபட்டது. அக்குவேறு, ஆணிவேறாக எடுத்துரைத்தார்.

"ஆன்றன் பாலசிங்கம் நின்றிருந்தா, இந்த நிலை இல்ல. அவர் உலகத் தலைவர்களை, இந்தியத் தலைவர்களை சந்தித்து நிலைமையை சரி செய்து இருப்பார். காலம் உதவவில்லை", என்றார். இப்படி பல செய்திகளை சொன்னார்.

பிசியோதெரபி படித்து, ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில், போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனையில் பணிபுரிந்தவாறே உதவி இருக்கிறார். இதனை சிங்கள ராணுவம் மோப்பம் பிடித்த வேளையில், ரெட் கிராஸ் உதவிக்கு வந்திருக்கிறது.

இவரது பணியால் கவரப்பட்ட செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள், இலங்கையை விட்டு வெளியேற ஏற்பாடு செய்தனர். சுவிட்சர்லாந்து போக விசா ஏற்பாடு செய்துள்ளனர். தப்பினார், இல்லை என்றால் இன்று ஆள் இருந்திருப்பாரா என்பதே சந்தேகம் தான். ஆனால் அவர் இதை சர்வ சாதாரணமாக சொன்னார். மிரண்டுப் போனேன்.

இப்போது சுவிட்சர்லாந்தில் மருத்துவத் துறையில் பணிபுரிகிறார். ஒரு மணி நேரம் அளவளாவினோம். தாய், தந்தை, சகோதரிகள் இலங்கையில் தான்.  "இன்னும் பத்து வருடம் நாட்டுக்கு போக முடியாது. போனால், அடுத்த நொடி திருப்பி விடுவார்கள்". அவர்கள் ஒருபுறம், இவர் ஒருபுறம். என்ன வாழ்க்கை.

ஆனாலும் மனிதர் அசரவில்லை. வாழ்க்கையின் ஒவ்வொரு முடிச்சையும் லாகவமாகவே அவிழ்கிறார். இத்தனை துன்பங்களுக்கும் இடையே சர்வதேச அரசியலை பிரித்து மேய்கிறார்.

"சென்னைக்கு எப்போது முதலாவதாக வந்தீர்கள் ?". "இது தான் முதல் முறை".

"சென்னை எப்படி இருக்கிறது?". "நான் நினைத்ததற்கு நேர் எதிராக".  "ஏன்?".  "தளபதி மேயராக இருந்த போது கட்டப்பட்ட மேம்பாலங்கள் போல பல வசதிகள் செய்யப்பட்டு சென்னை சிறப்பாக இருக்கும் என்று நினைத்து வந்தேன். வருத்தமாக இருக்கிறது".

"சென்னை வெள்ளக் காடாக இருக்கிறது.  கழக ஆட்சி என்றால் இந்நேரம் தளபதி வந்து நின்றிருப்பாராம். ஆட்டோ டிரைவர்கள் சொல்கிறார்கள். ஆனால் ஏன் மக்கள் மாற்றி முடிவெடுத்தார்கள்? இப்போது அவதிப் படுகிறார்களே"

"சரி, தலைவர் கலைஞரை பாராட்டுகிறீர்களே, உங்களுக்கு பிரச்சினை இல்லையா?". "இருக்கிறது தான்". "யாரால்?". "இன்றைய இளைஞர்களால்"".

"இயக்கத் தோழர்களால்?".  "அவர்களுக்கு உண்மை தெரியும். இன்றைய சிறுவர்களுக்கு தெரியாது. சிலர்,'நான் தான் முதல்வர். முதல்வரான அடுத்த மூன்று மணி நேரத்தில், ஈழம் அமைக்கப்படும்' என முழங்கி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு தெரியும், இந்தியாவில் பல மாநிலங்கள் இருக்கின்றன, அதில் ஒன்று தான் தமிழ்நாடு என்பது. ஆனால் இவர்கள் அது தெரியாமல் அள்ளிக் கொடுக்கிறார்கள்".

அவர் பெயர் விவேகானந்த ரூபன், அன்பு சகோதரர்.

# உண்மை தெரிந்தவர் உரைக்கிறார். உணர்வீர் ! 

வியாழன், 12 நவம்பர், 2015

எல்லாப் புகழும் மோடிக்கே

உள் அறையில் இருந்து எட்டிப் பார்த்தேன். ஹாலில், டிவியில் சினிமா ஓடிக் கொண்டிருந்தது. டிவி பார்க்கும் வாய்ப்பு குறைவு என்பதால், பார்க்கலாமா என்ற எண்ணம். நான் போனால் மற்றவர்கள் பார்ப்பது பாதிக்கும், வேண்டாம் என முடிவெடுத்தேன்.

சரி, பீகார் தேர்தல் குறித்து ஒரு நிலைத் தகவல் போடுவோம் என அலைபேசியை எடுத்தேன். அண்ணன் மோடியை நினைத்தவுடன் அருள்வாக்கு சொல்வது போல் கடகடவென அவர் குறித்த செய்திகள், மனதில் ஃப்ளாஷ் அடிக்க ஆரம்பித்தன.

20 நிமிடங்கள் தான். ஸ்டேடஸ் ரெடி. சில சமயம் இரண்டு  நாட்களுக்கு  மூளையை குழப்பிக் கொண்டே இருக்கும்  சில நிலைத் தகவல்கள். சில இப்படித் தான், நிமிடக் கணக்கிலேயே  உருவெடுத்து விடும் .

ஆனா கொஞ்ச நேரத்தில் உருவான இந்த  நிலைத் தகவல் படுத்துற பாடு தான் தாங்கல. உள்டப்பாவில் வந்து அறிவுரை நிறைய சொல்றாங்க. ஒருத்தர் "senseless letter"ன்னு வெடிக்கிறாரு. இன்னொருத்தர் "உன் வேலைய பாரு. பிரதமருக்கு லெட்டர் எழுதறது உன் வேலை இல்ல"ங்கிறார்.

"It is harassing" அப்படின்னு ஒரு தாக்கீது. "It is spam"அப்படின்னு ஒரு ஓலை. இப்படியே பல சட்டப்பூர்வ எச்சரிக்கைகள். கடைசியா மோடி தான் இன்னும் பேசல, அண்ணன் ஹெச்.ராஜா திட்டல. மொத்தமா இப்ப ஸ்டேடச காணோம்.

ஆனா, இன்னொரு பக்கம் ஆரவாரமா போவுது. ஸ்டேடச போட்டுட்டு நான் தூங்கிட்டேன், ஆனா அது தூங்கல. காலையில் 1300 விருப்ப சொடுக்குகள். மாலை 2,100, மறுநாள் காலை 3,500 லைக்குகள். அப்புறம் தான் ஸ்டேடச காணோம்.

அப்புறம் மீள்பதிவு போட்டு  அது இப்போ 2,500 லைக்குகள் தாண்டி இருக்கு.

ஒரு அதிமுக நண்பரிடமிருந்து அலைபேசி அழைப்பு. "அண்ணா, உங்க ஸ்டேடச எங்கக் கட்சிக்காரங்க நான்கு, அய்ந்து பேரு ஷேர் பண்ணி இருக்கறத பார்த்தேன். மகிழ்ச்சி" என்றார்.

நைஜீரியாவில் இருந்து ஒரு தோழர், "சார், உங்க கடிதத்த 'ஒன் இண்டியா'வில் பார்த்தேன். சந்தோஷம். எழுத்து நல்லா இருக்கு". அப்புறம் News Hunt, Tutyonline என இணைய இதழ்களில் வெளிவந்த செய்திகள் குறித்தத் தகவல்கள்.

இன்னொரு அதிமுக தம்பி,"அண்ணே சான்ஸ்லெஸ். பிரிண்ட் அவுட் எடுத்து இரண்டு அமைச்சர்களிடம் கொடுத்தேன். பாராட்டினார்கள்" என்றார். ஆயிரம் இருந்தாலும் திராவிட ரத்தம் தானே.

இன்று இரண்டு அழைப்புகள். தி.க மண்டலத் தலைவர் அண்ணன் காமராஜ்,  விடுதலை நிருபர் ஶ்ரீதர். "விடுதலை நாளிதழில் உங்கள் கடிதம் வெளியிடப் பட்டிருக்கிறது. சிறப்பாக உள்ளது". பாராட்டினார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சென்றிருந்தேன். சகோதரர் தீன் திருமண வரவேற்பு. பத்து இளைஞர்கள் நின்றிருந்தனர். ஒரு இளைஞர் முன்னால் வந்தார். "அண்ணே, மோடிக்கு கடிதம் எழுதிய எம்.எல்.ஏ நீங்க தானே ?". "ஆமாம்". இப்போது  அனைவரும் கைக் குலுக்கினார்கள்.

இது அண்ணன் மோடிக்கு கிடைத்த வெற்றி. அவர் மீதான அன்பு தான் இத்தனையும். எல்லாப் புகழும் அண்ணன் மோடிக்கு தான்.

# தெறிக்க விடறார்ல அண்ணன் மோடி !

திங்கள், 9 நவம்பர், 2015

அன்பு அண்ணன் மோடி அவர்களுக்கு

அன்பிற்குரிய அண்ணன் பிரதமர் மோடி அவர்களுக்கு,

நமோஸ்கார். உங்களுக்கு ஹிந்தியில் சொன்னால் தானே பிடிக்கும்.

நான் ஷாங்காய் சென்றதில்லை, ஆனால் நல்ல காலமாய் அகமதாபாத் வந்திருக்கிறேன். அதனால் சீனாவில் உள்ள ஷாங்காய் பேருந்து நிலையத்தை, அகமதாபாத் பேருந்து நிலையம் என்று உங்கள் டிஜிட்டல் டீம் சொன்ன போது நான் நம்பவில்லை.

ஆனால் தேசம் நம்பியது. உங்களைக் காட்டி எதைச் சொன்னாலும் நம்பும் நிலையில் நாடு இருந்தது. ஒரு ஆபத்பாந்தவன் வரமாட்டானா என வட இந்தியா காத்திருந்தது. நீங்கள் 'டிஜிட்டல் கிருஷ்ணனாய்' குதித்தீர்கள். "சம்பவாமி யுகே யுகே" என எங்கும் பஜனை ஓங்கி ஒலித்தது. வடக்குடன், தெற்கும் லேசாய் அசைந்து விட்டது.

'டீ ஆற்றியவன் பிரதமர் ஆகக்கூடாதா?' என டேக் லைன் பிடித்தீர்கள். நம் மக்கள் மனம் இளகியது. "கொடுப்பதை மெஜாரிட்டியாய் கொடுங்கள்",என்றீர்கள். அள்ளி, அள்ளி கொடுத்தார்கள் மக்களும், மகா மெஜாரிட்டியை.  இது தான் சந்தர்ப்பம் என அமித்ஷாவை கொண்டு வந்து இறக்கினீர்கள்.

இளையோருக்கு வாய்ப்பு என்று, மூத்த தலைவர்களை தட்டி எறிந்தீர்கள். கட்சியை வளைத்துக் கைக்குள் கொண்டு வந்தீர்கள். மாநில முதல்வர்களாக கைப் பிள்ளைகளை இருத்தினீர்கள். வழக்கம் போல் மக்கள், இது உங்கள் 'விஸ்வரூபம்' எனக் கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள்.

வெளிநாட்டு பயணம் கிளம்பினீர்கள்.  இந்தியா திரும்பி, விமான சக்கர சூடு ஆறுவதற்குள், அடுத்த நாட்டு பயணத்தை அறிவித்தீர்கள். உலகம் உங்கள் கண் அசைவுக்கு காத்திருக்கிறது என்றார்கள். நீங்கள் 'உலகத் தலைவராய்' உயர்வதாக உளம் மகிழ்ந்தார்கள் மக்கள்.

'மான் கீ பாத்' என்று ரேடியோவில் பேசியதை, தன்னிடம் நேரடியாக பேசியதாக நம்பினார்கள். 'ஸ்வச் பாரத்' மூலம் இந்தியாவின் அத்தனை அழுக்குகளையும் அகற்றி விடுவீர்கள் என நினைத்தார்கள்.

ஓபாமாவை கவர நீங்கள் போட்ட பத்து லட்ச ரூபாய் கோட் தான், உங்கள் 'எளிமையை' பறைசாற்றியது. அதானியை உடன் அழைத்து சென்று, ஆஸ்திரேலியாவில் நிலக்கரி வயலை பிடித்துக் கொடுத்து, பாரத ஸ்டேட் வங்கியை ஆஸ்திரேலியாவிற்கே வரவைத்து 50,000 கோடி கடன் வாங்கிக் கொடுத்த போது தான், நீங்கள் "ஏழைப் பங்காளன்" என்பதை நிரூபித்தது. அப்புறம் தான் இந்தியனின் மயக்கம் தெளிந்தது.

சிவராஜ் சௌகானின் மத்தியப் பிரதேச வெற்றியையும், ராமன் சிங்கின் சட்டிஸ்கர் வெற்றியையும், உங்கள் கணக்கில் நீங்களே சேர்த்துக் கொண்டீர்கள். மற்ற மாநிலங்களின் ஆளுங்கட்சி தோல்விகளை உங்கள் வெற்றி என்றே கொண்டாடினார்கள்.

இப்போது பிகார் தோல்வியை யார் கணக்கில் சேர்க்கப் போகிறீர்கள்?

மக்கள் உங்களுக்கு கொடுத்த வேலை, நாடாளுமன்ற தேர்தல் போது, நீங்கள் அள்ளி வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது. ஆனால் அது உங்களுக்கு கசக்கிறது.

கொடுத்த வாக்குறுதிப் படி, வெளிநாட்டில் இருக்கும் கருப்புப் பணத்தைக் கொண்டு வந்து சேர்க்கவில்லை. உள்நாட்டு ஏழை விவசாயிகள் நிலத்தை அடித்துப் பிடுங்க துடிக்கிறீர்கள். மதச்சகிப்புத் தன்மை என்பதை மொத்தமாய் துடைத்தெறிய பார்த்தீர்கள். செத்த சமஸ்கிருதத்தை பல்லக்கில் தூக்கிக் கொண்டு திரிந்தீர்கள்.

வளர்ச்சி எனும் உங்கள் 'டிசைனர் பைஜாமா'வுக்குள் இருக்கும் முரட்டு ஆர்.எஸ்.எஸ் 'காக்கி டவுசர்' ரொம்பவே நீண்டு விட்டது பைஜாமாவைத் தாண்டி.

மோதும் இடம் பார்த்து மோத வேண்டும். நீங்கள் 33 பெரிய பேரணிகளை நடத்திய நேரத்தில், அந்தக் கூட்டத்தின் இண்டு இடுக்குகளில் புகுந்து வெளியே வந்து விட்டார் நிதிஷ்.  உலகத் தலைவராய் பிஹாரில் வாக்கு கேட்டீர்கள். "பிஹாரியா(நிதீஷ்), பஹாரியா (வெளியூர் ஆளா)" என்ற ஒற்றை வரியில் உங்கள் நீண்ட, நீண்ட உரைகளுக்கு பதில் கொடுத்து விட்டார் நிதீஷ்.

மனிதனை பார்க்க சொன்னால், மாட்டைக் கட்டிக் கொண்டு அழுதீர்கள். மக்கள் சாட்டையை எடுத்திருக்கிறார்கள். இந்துத்துவா கண்ணாடியை கழற்றி விட்டு தேசத்தை பாருங்கள். மக்களை கவனியுங்கள்.

பெரியார் தேசத்திலிருந்து
சிவசங்கர்.

சனி, 7 நவம்பர், 2015

தமிழகம் காத்திருக்கிறது

தளபதி  இதற்கு முன்பாகவும் தமிழகம் முழுதும்  பயணித்திருக்கிறார். "நமக்கு நாமே" பயணத்தை விட கூடுதல் தூரமும் பயணித்திருப்பார். தேர்தல் பிரச்சாரத்தில், இதைவிட சில உள் பகுதிகளுக்கும் போயிருப்பார்.

ஆனால் இந்தப் பயணம் தான் கவனம் ஈர்த்து விட்டது.

இப்போது சந்தித்தது போலவே மக்களை தொடர்ந்து சந்தித்தும் வந்திருக்கிறார். துணை முதல்வராக, அரசு நிகழ்ச்சிகளில் பொதுமக்களை சந்தித்திருக்கிறார் . சுழல்நிதி வழங்கும் நிகழ்ச்சியில் மகளிரை சந்தித்திருக்கிறார்.

ஆனால் இப்போதைய சந்திப்பு தான் செய்தியாகி இருக்கிறது.

கட்சிக்காரர்களுக்கு பயணத்திற்கு முன்பு வருத்தம். காரணம், வழக்கமாக தளபதி பயணம் என்றால் அலைகடலென திரண்டு வாருங்கள் என்று அழைப்பது வழக்கம். வரவேற்பு அளிக்க அனுமதிக்கப் படுவர்.

ஆனால் இப்போது கூட்டம் கூட்டக் கூடாது, பொது மக்களை இயல்பாக சந்திக்க விட வேண்டும்,  பொதுமக்களை சந்திக்க இடைஞ்சலாக இருக்கக் கூடாது என அடுக்கடுக்கானக் கட்டுப்பாடுகள்.

இந்தக் கட்டுப்பாடுகள் காரணமாகத் தான், சாலையில் இறங்கி நடப்பது சாத்தியமாயிற்று.  நினைத்த இடத்தில் நின்று மக்களோடு உரையாடுவது நடந்தேறியது. செல்ஃபி எடுக்கப் பிரியப்பட்ட குழந்தைகளுக்கு வாய்ப்பு கிட்டியது.

இதுவரை அவர் உரையாற்றி தான் மற்றவர்கள் கேட்பது வழக்கம். இந்தப் பயணத்தில் விருப்பப் பட்டோரை எல்லாம் பேச விட்டு காது குளிரக் கேட்டார். அவர் பேசிய நேரத்தை விட, மற்றவர்கள்  பேசிய நேரம் அதிகம். மகளிர், விவசாயி, மாணவர், நெசவாளர், தொழிலாளர் என எல்லாத் தட்டு மக்களும் தங்கள் குறைகளை பேசித் தீர்த்தனர்.

இது தான் அத்தனைப் பார்வையையும் இவர் பக்கம் திருப்பி இருக்கிறது.

இதனால் தான் 'விடியல் மீட்புப் பயணம்' மக்களைத் திரும்பிப் பார்க்க வைத்தது மாத்திரமல்ல, அவர்களை கவர்ந்தும் விட்டது. அதனால்  தான் எதிர்கட்சிகளின் கண்களுக்கு உறுத்தலாகவும் அமைந்து விட்டது.

தம் குறை கேட்க, காது கொடுக்க ஒரு தலைவன் வந்து விட்டான் என்பதே மக்களின் வருத்தம் போக்கி இருக்கிறது, மகிழ்ச்சி அளித்திருக்கிறது.

அந்த மகிழ்ச்சி தான் இந்த அன்பு, அரவணைப்பு. படத்தில் உள்ள மூதாட்டி ஒரு குறியீடு தான்.

# தமிழகமும் காத்திருக்கிறது, வாரி அணைக்க !