பிரபலமான இடுகைகள்

புதன், 24 ஆகஸ்ட், 2016

விருதுகளுக்கு கட்டுப்படாத...

ராஜபார்வை. பார்த்தவர்கள் மனதில் ஒரு பாதிப்பை ஏற்படுத்திய படம். சிங்கீதம் சீனிவாச ராவின் இயக்கமும், ராஜாவின் இசையும், கமல் நடிப்பும்  ராஜபார்வையின் கம்பீரத்தைக் கூட்டின. ராஜபார்வை "அந்திமழையை பொழிந்து, ஒவ்வொரு துளியிலும் கமல் முகத்தைக் கொண்டிருந்தது". கமல் மீது இருந்த பார்வையை மாற்றிய படம்.

'பதினாறு வயதினிலே' திரைப்படம் கமலின் திறமையை அழுத்தமாக வெளிக் காட்டியிருந்தது ஏற்கனவே. அந்த 'சப்பாணி', ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கிறான் இன்றும். அதுவரை நகரத்து நாகரீக இளைஞனாகவே அறியப்பட்டிருந்த கமல், கிராமத்து அப்பாவி இளைஞன் வேடத்தில் சிறப்பு. மற்ற கதாநாயகர்கள் தயங்குகிற கெட் அப் அந்தப் படத்தில். கோவணமே உடையாக, இழுத்து நடக்கிற நடையோடு, வெள்ளந்தி மனதாக வாழும் கனமான பாத்திரம்.

அடுத்து வந்த சகலகலாவல்லவன் கமல் மீதான பிம்பத்தை மாற்றியமைத்தது, கமர்ஷியல் ஹீரோவானார். "கடையாணி கழலாத கட்டை வண்டியாக" ஓடி, வசூலை அள்ளிக் குவித்து, பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆனது இந்தப் படம். யதார்த்தம் குறித்தக் கவலை இல்லாமல் வணிகரீதியான வெற்றியை குறித்து வைத்து அடித்தப் படம். இதற்கு பிறகு கமலின் பாதை திட்டமிட்டதை போல் சென்றது. ஒரு படம் வித்தியாசமானது என்றால் அடுத்து ஒரு கமர்ஷியல் படம்.

பாலுமகேந்திரா இயக்கத்தில் 'மூன்றாம் பிறை' திரைப்படம் கமலுக்கு ஒரு மைல்கல். ஸ்ரீதேவியும் கமலும் போட்டிப் போட்டுக் கொண்டு நடித்தப் படம். கடைசி காட்சியில் "ஆடுறா ராமா, ஆடுறா ராமா" என்று தலையில் ஒரு பாத்திரத்தை வைத்துக் கொண்டு ரயில்வே பிளாட்பாஃர்மில் கமல் உருண்டு பிறண்ட போது, ரசிகர்கள் தாமே உருண்டு பிறண்டதாக உணர்ந்தனர்.

'சலங்கை ஒலி' கமலின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்திய ஒரு முக்கியமானப் படம். நடனத் திறமையை வெளிப்படுத்துபவர், ஜெயப்பிரதாவிடம் காட்டும் நேசம், வயதானவனாக கோபங் கொண்டு கிணற்றின் மீது ஆடும் நடனம் என கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் ஸ்கோர் செய்திருப்பார் இத் திரைப்படத்தில்.

எழுத்தாளர் சுஜாதாவோடு இணைந்து அளித்த 'விக்ரம்'. கமல் நடிப்பில் ஒரு ஸ்டைல் மிளிரும். இசை, கதைக்களம், திரைக்கதை, படமாக்கம் என எல்லாவற்றிலும் ஒரு வித்தியாசத்தோடு இருக்கும் படம் இது.  வழக்கமான மசாலாவை டெக்னிக்கல் கலந்து கொடுத்தப் படம். இப்படி தமிழ் திரையுலகில் புது முயற்சிகளை தொடர்ந்து செய்பவர் கமல்.

1986ல் இருந்து ஒரு ஒவ்வொரு படத்தையும் குறிப்பிடத் தக்கதாக அமைத்துக் கொண்டார் கமல்.

'புன்னகைமன்னன்' திரைப்படத்தில் காதல் இளவரசன் பட்டத்தை வலுப்படுத்த ஒரு வேடம், சார்லிசாப்ளின் போல ஒரு வேடம் என வெளுத்துக் கட்டினார். நடனத்திலும் இப்படத்தில் முத்திரை பதித்திருப்பார். அந்த "கன்னத்தில் முத்தத்தின் ஈரம் இன்னும் காயவுமில்லை, சத்தமும் ஓயவில்லை".

அடுத்து " நாயகன்". மணிரத்தினத்தின் இயக்கம், இசைஞானியின் இசை, கமலின் ஈடு இணையற்ற நடிப்பு ஒன்றுக்கொன்று போட்டி தான். ஆனால் இயக்கமும், இசையும் உயிர்பெற்றது கமலால் என்றால், அவர்களிருவரும் ஒப்புக் கொள்வார்கள். மனிதனின் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் கமலின் நடிப்பு அபாரம். வரதாபாயாக வாழ்ந்து காட்டியிருப்பார், வரதாபாய் ராஜ்ஜியம் இன்றும் நீடித்திருக்கிறது.

எதிர்மறை, கோபக்கார இளைஞனாக சமூகத்தை எதிர்கொள்ளும் 'சத்யா'விலும், சாத்வீகமாக நன்முறையில் சமூகத்தை திருத்தும் இளைஞனாக 'உன்னால் முடியும் தம்பி'யிலும் வித்தியாசம் காட்டியிருப்பார்.

'அபூர்வ சகோதரர்கள்' திரைப்படத்தில் அப்புவாக நடிக்க அவர் எடுத்த சிரத்தையும், அதற்காக அவரது உழைப்பும், உடலை வருத்திக் கொண்டதும் வேறு நடிகர் நினைத்துப் பார்த்திராதது. 'ராஜா கைய வச்சி ராங்கா போகவில்லை' படத்தின் வெற்றியிலும்.

காமெடிக்கு இலக்கணம் எழுதுமளவு 'மைக்கேல் மதனகாமராஜன்' படத்தில் கமலின் நடிப்பு. ஸ்டைலான பணக்கார இளைஞன், பாலக்காட்டு அய்யங்கார், ஃபயர்மேன், முரட்டு ரவுடி என நான்கு வேடங்கள் ஏற்று நம் வயிற்றை பதம் பார்த்தார். "சுந்தரன் நானும் சுந்தரி நீயும்" இன்றும் கொடிகட்டிப் பறக்கிறார்கள்.

"குணா" வில் அபிராமியை பார்த்து கமல் உருகியதைவிட, அவரைப் பார்த்து ரசிகர்கள் கொண்ட காதல் கூடுதலானது, அதையும் தாண்டி புனிதமானது. 'தேவர் மகன்'ல் நடிகர் திலகத்தின் மகனாக வன்முறையை வெறுத்து ஒதுக்கும் இளைஞனாக இருந்து, தவிர்க்க இயலாமல் வன்முறைப் பாதையில் திரும்பி பொருமுவது 'மறக்க மனம் கூடுதில்லையே'.

'அவ்வை சண்முகி'யில் கமலின் பெண் வேட நளினத்தைக் கண்டு கவிழ்ந்து போனது காதல் மன்னன் ஜெமினிகணேசனும், மணிவண்ணனும் மாத்திரமல்ல, தமிழ் ரசிகர்களும் தான். இப்படி கமலின் ஒவ்வொருப் படத்தையும் விவரித்துக் கொண்டே போகலாம்.

'விருமாண்டி' என்னைப் பொறுத்தவரை கமலின் உச்சம் . எழுதி, இயக்கி, நடித்தது மாத்திரமல்ல விருமாண்டியாகவே மாறியிருப்பார் இத்திரைப்படத்தில். தன் பகுதி மண்ணின் இசையை இசைஞானியிடம் பிழிந்து எடுத்திருப்பார். எப்போதும் வெளிப்படுத்தும் சண்டித்தனமும், நாயகியிடம் காட்டும் கனிவும், பின்பாதியில் காட்டும் முரட்டுத்தனமும் இன்னும் கண்களில் நிற்கிறது.

ஆறு வயதில் 'களத்தூர் கண்ணம்மா'வில் நடித்து, முதல் படத்திற்கே குடியரசு தலைவரின் தங்கப்பதக்கத்தை பெற்றவருக்கு, முப்பது வயதில் தேசிய விருது, அறுபத்திரெண்டு வயதில் செவாலியே விருது.

# கமல், விருதுகளுக்கு கட்டுப்படாத விஸ்வரூபம் !