பிரபலமான இடுகைகள்

சனி, 15 ஏப்ரல், 2017

அம்பேத்கர் - இந்தியாவின் தலைவர்

நான்காண்டுகளுக்கு முன் தென் தமிழ்நாட்டில் ஒரு சம்பவம். ஒரு கிராமத்தின் தெரு வழியாக சென்ற பள்ளிச் சிறுவனொருவன்
மறிக்கப்பட்டான். அவன் அணிந்திருந்த செருப்பு, அவன் தலை மீது சுமத்தப்பட்டு அனுப்பப் பட்டான். காரணம், தலித் சிறுவன் அவன்.

தமிழகத்தை விட, வட இந்தியாவில் நிலை இன்னும் மோசம். தொழில்நுட்பங்கள் முன்னேறி, உலகம் வளர்ச்சி கண்டுள்ள 2000க்கு பிறகே  இந்த நிலை என்றால், 1900களுக்கு முன் எப்படி இருந்திருக்கும், அதுவும் மகராஷ்டிராவில்.

அம்பேத்கருக்கு ஏற்பட்ட அனுபவம் வேறொருவருக்கு கிட்டியிருந்தால் முளையிலேயே கருகியிருப்பர். ராணுவத்தில் பணியாற்றிய தந்தை அமைந்தக் காரணத்தால் பள்ளி செல்லும் வாய்ப்பு அம்பேத்கருக்கும், அவரது சகோதரர்களுக்கும். ஆனால் அவரது சகோதரர்களால் பள்ளி படிப்பை தாண்ட இயவில்லை. அம்பேத்கர் பள்ளியை மட்டும் தாண்டவில்லை, உயர் கல்விக்காக நாட்டையே தாண்டி பயணித்தார்.

அயல்நாட்டுக் கல்வி பெறுதல் அந்த காலத்தில் கிடைத்தற்கரிய வாய்ப்பு. அதுவும் மிக, மிக ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு கிடைக்கவே கிடைக்காது. ஆனால் அம்பேத்கர் சாதித்தார். தன் அறிவுக் கூர்மையால், விடா முயற்சியால் அயல்நாடு சென்று கல்வி கற்றார். பம்பாய் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர், நியூயார்க் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் முதுகலை படிப்பில் சேர்ந்தார். எம்.ஏ படித்து முடித்தார். இதற்கு அப்போதைய பரோடா அரசு நிதி உதவி வழங்கியது.

சட்டம், பொருளாதாரம், சமூக அறிவியல் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டு தன் அறிவுப் பெருக்கை வெளிப்படுத்தினார். அந்தக் கல்வி அறிவை சுய முன்னேற்றத்திற்கு மாத்திரம் பயன்படுத்தாமல், நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தியக் காரணத்தால் தான், இறந்து அறுபத்தோரு ஆண்டுகளுக்கு பிறகும் நினைவுக் கூறப்படுகிறார், கொண்டாடப் படுகிறார்.

வழக்கறிஞராக பணியாற்றிய போதே, தன் சமூகப் பணியை துவங்கி விட்டார். பத்திரிக்கைகள் துவங்கி, அதன் மூலம் தலித் மக்களுக்காக குரல் எழுப்பினார். சைமன் கமிஷன் வருகை தந்த போது அரசியல் நுழைவு நிகழ்ந்தது. அப்போது எதிர்காலத்தில் இந்தியா அமைவதற்கான அறிக்கையை தயாரித்தார். அவரது அந்த தொலைநோக்கு பார்வை தான் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உருவாக அவரது பெரும் பங்களிப்பு.

இந்து மதம் என்ற பெயரால் சாதிகளாகப் பிரிக்கப்பட்டு, அடித்தட்டு மக்களை ஒடுக்கியதை நேரடியாக அனுபவித்தக் காரணத்தால், அதன் மூல வேரை கண்டுபிடித்து சிகிச்சையை துவங்கினார். சாதிகள் குறித்த அவரது ஆழ்ந்த அறிவு தான் லண்டனில் அவரது ஆய்வறிக்கையாக வெளிப்பட்டது. அதன் தலைப்பு, "இந்தியாவில் சாதிகள் - அதன் செயற்பாடு, தோற்றம், வளர்ச்சி". இது தான் இந்தியா குறித்த உண்மைத் தன்மையை உலகின் பார்வைக்கு கொண்டு வந்தது.

சாதிகள் பெயரால், மதத்தின் பெயரால் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மாத்திரம் ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்றி, கோலோச்சி வந்ததை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியது. இது தலித்களுக்கு மாத்திரமான குரலல்ல. சூத்திரர்கள் என்று பிற்படுத்தப்பட்ட இனத்துக்குமான குரலாகவும் அமைந்தது. இதைத் தீர்க்க ஒரே வழி சாதிகளின் வேரை அறுப்பது தான் என்று முடிவெடுத்தார். சாதிகளை நிறுவிய "மனுநீதி"யை எதிர்ப்பதே சமூக விடுதலைக்கான வழியாக கண்டறிந்தார்.

"மனுநீதி"யை எரிக்கும் போராட்டத்தைத்  துவங்கினார். அந்தக் காலக்கட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் போராடுவதே பெரும் விஷயம். அதிலும் ஆளும் இனத்தின் வேத நூலை எரித்துப் போராடுவது கனவிலும் நடவாத விஷயம். நடத்திக் காட்டினார் அம்பேத்கர். அதிலும் இந்த மனுநீதியைக் கொண்டாடும் ஆர்.எஸ்.எஸ்ஸின் பூமியான மகராஷ்டிராவில், மனுநீதியை எரித்தது தான் அம்பேத்கரின் அடையாளம். இப்படித் துவங்கிய அரசியல் வாழ்வு தான் அவரை உச்சத்தில் கொண்டு வந்து அமர்த்தியது.

சுதந்திரம் பெற்ற இந்தியாவின்  முதல் சட்ட அமைச்சராகப் பதவியேற்றார். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை வடிவமைத்தக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்று இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டத்தை வடிவமைத்தார். இது அவரது அறிவின் ஆழத்தை நாட்டுக்கு வெளிப்படுத்தியது. அம்பேத்கர் குறித்து எழுதுவதற்கு பக்கங்கள் போதாது. அம்பேத்கர் எழுதிய பக்கங்களின் எண்ணிக்கையை எழுத, இனி இன்னொரு அரசியல் தலைவரால் இயலாது. அதிலும் அறிவார்ந்த, கருத்து செறிந்த அந்த பார்வை யாருக்கும் வராது.

அம்பேத்கரை தலித் தலைவராக சிறு வட்டத்தில் அடைக்க இன்னும் மதவாத சக்திகள் முனைகின்றன. அவர் அரசியல் மேதை, பொருளாதார நிபுணர், சமூக மருத்துவர், இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்.

# அம்பேத்கர் இந்தியாவின் தலைவர் !