பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 4 ஏப்ரல், 2017

வடசென்னை வளரட்டும் !

வடசென்னை தான் ஆதிசென்னை என்பது வடசென்னை வாசிகளின் குரல். அதற்கு பல ஆதாரங்களை அடுக்குகிறார்கள். முன்னூற்று எழுபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்கள் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டியதை கணக்கில் கொண்டு சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. சென்னப்ப நாயக்கன் பட்டினம் 'சென்னை'யாக உருமாறியது. கோட்டையில் இருந்து கூப்பிடும் தூரத்தில் துறைமுகம்.

அதன் தொடர்ச்சி ராயபுரம், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, பெரம்பூர் என விரிகிறது. ஆங்கிலேயர் காலத்தில் துணி வெளுப்போரின் குடியிருப்பு பகுதி தான் அவர்களால் 'வாஷர்மேன்பேட்' என்றழைக்கப்பட்ட வண்ணாரப்பேட்டை என்பது செய்தி. அடுத்து மீனவர் குடியிருப்புகள். இவர்கள் பூர்வீகக் குடிகள். அந்த காலகட்டத்தில் உருவானப் பகுதிகள் இவை. இதன் நீட்சியாய் விளங்கும் திருவொற்றியூர் சோழர்கால கோவிலைக் கொண்டுள்ளது.

தென் சென்னையானது அக்காலத்தில் வயல்வெளியாக இருந்தது திட்டமிட்ட நகர் பகுதியாக விரிவடைந்ததால் தான் நெருக்கடி குறைவானதாக இருக்கிறது. தமிழகத்தின் ஏனையப்பகுதிகளில் இருந்து குடிபெயர்ந்தோரே தென்சென்னையின் பெரும்பான்மை. இங்கும் பூர்வக்குடிகள் உண்டு. ஆனால் இவர்கள் எண்ணிக்கை குறைவு. வடசென்னையில் பூர்வக்குடிகள் எண்ணிக்கை அதிகம், வந்தேறியோர் குறைவு.

வடசென்னை விரிவாக்கத்திற்கு வழி இல்லாமல் போனதால், தென்சென்னை பெருத்தது, விரிந்தது. விரிவாக்க இடமில்லாத காரணத்தால் தான் மக்கள் தொகை பெருகப், பெருக வடசென்னையில் குடியிருப்புகள் நெருக்கியடித்தது. அடிப்படை வசதிகள் மேம்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. சாலைகள் விரிவாக்கம் செய்வதில் எதிர்ப்புகள். ஒரு சில சாலைகள் மாத்திரம் அகலப்படுத்தப் பட்டுள்ளன.

இந்தப் பகுதியில் சிறு தொழிற்கூடங்கள் அதிகம். இதனால் தொழிலாளர்கள் அதிகம். அதிலும் தினக்கூலியாக பணியாற்றுவோரே அதிகம். அரசுப் பள்ளிகள் தாண்டி, தென்சென்னை போல் தனியார் பள்ளிகள் கிடையாது. பெற்றோரின் குறைந்தக் கல்வி, பொருளாதார சூழல், குடும்ப சூழ்நிலைகள் காரணமாக இங்கு கல்வி வளர்ச்சி குறைவானதாகவே இருக்கிறது.

கல்வி வாய்ப்பு குறைவால் உடல் உழைப்பு பிரதானமாகிறது. இதனால் இந்தப் பகுதி மக்கள் அதை ஒட்டிய வாழ் நிலைக்கு ஆளாகின்றனர். இதனால் வடசென்னை பொருளாதாரத்தில் பின் தங்கிய பகுதியாகவே நீடிக்கிறது. இங்கு வியாபாரம் செய்து பொருளாதாரத்தில் மேம்பட்டிருப்போர் பெரும்பாலும் வட இந்தியர்கள்.

திரைப்படங்களில் வடசென்னையை வன்முறைக் களமாகவே காட்டி மனதில் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி விட்டனர். ஊரின் அமைப்பும், உழைக்கும் மக்களின் உடல்வாகும் அதற்கு சாட்சியமாக அமைகிறது. ஆனால் தென்சென்னையில் பக்கத்து வீட்டில் பிரச்சினை என்றால் எட்டிப் பார்க்க ஆள் இருக்காது,  தொழிலாளர் பகுதிகள் விதிவிலக்கு. வடசென்னை பகுதியில் முணுக்கென்றால் கூட்டம் கூடி விடுகிறார்கள். ஆதரவு கொடுக்கும் மனப்பான்மை.

ஊரின் அமைப்பு எல்லாவிதமான செயல்பாடுகளுக்கும் வசதியாக இருக்கிறது. ஆங்காங்கே கைவிடப்பட்ட தொழிற்கூடங்கள், குறுகலான சந்துகள், ஆள் நடமாட்டமில்லா பகுதிகள் என இருண்டப் பகுதிகள். அதே போல துறைமுகமும், தொழிற்சாலைகளும் பணப்புழக்கத்தோடு இருப்பதால் தொழிற் போட்டி அதிகம். அதை நிலை நிறுத்துவதில் வன்முறை தான் ஆயுதம். பணத்திற்காக முதலாளிகளின் கைப்பாவையாக இந்தப் பகுதியினர் சிலர்.  இது ஒரு சங்கிலித் தொடராக நீள்கிறது. ஆனாலும் பொதுமக்கள் அச்சமின்றியே வாழ்கின்றனர்.

கல்வியிலும், பொருளாதாரத்திலும் முன்னேறுவதற்கான வாய்ப்பும், அடிப்படை வசதிகள் மேம்பாடும் இங்கே மிக அவசியம். அரசு, மக்கள் பிரதிநிதிகள், மக்கள் என மும்முனை கூட்டு முயற்சி இருந்தால் தான் இந்தப் பகுதி 'சென்னை' போல் முன்னேற வாய்ப்பிருக்கிறது. இங்கிருக்கிற தொழிற்சாலைகள் இதற்கான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

# வடசென்னையும் வளரட்டும், வாழட்டும் !