பிரபலமான இடுகைகள்

வியாழன், 29 ஜூன், 2017

கிராம சுகாதாரமும் 'நீட்'டும் !

குளத்தூர், ஆண்டிமடத்தில் இருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ள கிராமம். ஆண்டிமடம் தான் குளத்தூருக்கு அருகில் இருக்கும் சிறுநகரம்.  ஆண்டிமடத்தில் ஓர் ஆரம்ப சுகாதார நிலையம் உண்டு. ஏதேனும் உடல்நலக் கோளாறு என்றால், ஆண்டிமடத்தில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையமோ அல்லது தனியார் மருத்துவமனையோ தான் தஞ்சம்.

ஆண்டிமடத்தை விட்டால், குளத்தூரில் இருந்து அடுத்த 8 கி.மீட்டரில் வாரியங்காவலில் ஓர் ஆரம்ப சுகாதார நிலையம் உண்டு. குளத்தூரில் யாருக்காவது உடல் நிலை சரியில்லை என்றால் ஒரு டி.வி.எஸ்-50 அல்லது பைக் பிடித்து ஆண்டிமடம் அல்லது வாரியங்காவல் செல்ல வேண்டும்.

இப்படி இருந்த நிலையை மாற்றியவர்  அசோகசக்கரவர்த்தி. அசோக், ஆசிரியர் சுப்ரமணியன் அவர்களது  மகன். மருத்துவம் படித்தவர் சொந்த கிராமத்திலேயே சேவை செய்ய முடிவெடுத்தார்.

சந்திரகாசு அவர்களுக்கு வயது 82. ஏதும் அவசரமென்றால் இப்போது டாக்டர் அசோக்கிடம் பார்த்துக் கொள்கிறார். முன்னர் யாராவது ஹோமியோபதி டாக்டர்கள் தான் வீட்டுக்கு வந்து வைத்தியம் பார்ப்பார்கள்.

டாக்டர் கண்ணன், ஆசிரியர் தங்கராசு அவர்களது மகன். தனது கிராமமான பெரியகிருஷ்ணாபுரம் அருகில் இருக்கும் ஆண்டிமடத்தில் மருத்துவமனை கட்டி பணியாற்றுகிறார்.

டாக்டர் அறிவுச்செல்வன் தங்கள் கிராமமான இரும்புலிக்குறிச்சிக்கு அருகிலுள்ள சிறுநகரமான செந்துறையில் ஒரு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைத்துள்ளார். சுற்றி இருக்கும் பல கிராம மக்கள் இங்கு தான் சிகிச்சை பெறுகின்றனர்.

டாக்டர் ரமேஷ்குமார் காது,மூக்கு, தொண்டை சிகிச்சை நிபுணர். இவரது கிராமம் மணப்பத்தூர். இவர் அரியலூர் கூட செல்லாமல் செந்துறையிலேயே மருத்துவம் பார்க்கிறார். கிராம மக்கள் சேவை பெறுகிறார்கள்.

இவர்கள் எல்லாம் இவர்கள் பிறந்த கிராமத்திலோ அல்லது அருகில் உள்ள சிறு நகரத்திலோ மருத்துவ சேவை செய்கிறார்கள். மேற்படிப்பு படித்திருந்தாலும் பெரு நகரத்திற்கு செல்லவில்லை.

கிராமத்து அரசு பள்ளியிலோ, சிறு நகரத்து தனியார் பள்ளியிலோ படித்தவர்கள் மருத்துவம் படித்தார்கள். அவர்கள் இது போன்று கிராமப்புற சேவையில் உள்ளனர்.

கிராமப்புறத்தில் இருந்து சென்று மருத்துவம் படித்தவர்கள் தான், அரசு மருத்துவமனையில் பணிபுரிய முன் வருகிறார்கள். இவர்களால் தான் ஏழை, எளிய மக்களுக்கு அரசின் இலவச மருத்துவ சிகிச்சை கிடைக்கிறது. கிராமத்தில் இருப்பவர்கள், ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள ஏதேனும் ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்தியம் பெற வாய்ப்பிருக்கிறது.

இலையூர் கிராமத்தில் டீக்கடை நடத்தும் சாதாரண ஏழையின் மகன் ராஜா, டீக்கடையில் காலை தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி விட்டு வாரியங்காவல் அரசு மேல் நிலைப் பள்ளியில் படித்து, மாலை ஒரு மணி நேரம் கடையில் வேலை செய்து விட்டு, படித்து டாக்டர் படிப்புக்கு தேர்வானார். நீட் தேர்வுக்கு ரூபாய் ஒரு லட்சம் செலவு செய்து பயிற்சி பெற இவர்கள் குடும்பம் தாங்கியிருக்காது. நல்லகாலம், மோடி ஆட்சிக்கு முன் படிக்க போய்விட்டார். டாக்டர் ஆகிவிட்டார்.

சி.பி.எஸ்.சியில் படித்து, நகர்புற நீட் தேர்வுக்கான பயிற்சி மையத்தில் படிக்கும் வாய்ப்புள்ளவர்கள் நகரத்தில் உள்ளவர்கள், அல்லது கிராமப்புற பணக்காரர்கள் வீட்டுப் பிள்ளைகள்.

இவர்கள் மருத்துவம் படித்து விட்டு கிராமத்திற்கு வரமாட்டார்கள். இவர்கள் பெருநகரங்களில் பணிபுரியவே விரும்புவார்கள். இந்த சூழலில் கிராமப்புறத்தில் பணிபுரிய மருத்துவர்கள் இல்லாத நிலை ஏற்படும்.

கிராமப்புற மருத்துவ சேவையை நசுக்கிவிட்டால், நகர்புறத்திற்க்கு தான் மக்கள் வந்தாக வேண்டும். நகர்புறத்தில் வருங்காலத்தில் கார்ப்பரேட் மருத்துவமனைகள் தான் கோலோச்சும். இப்போது அப்போலோ, வருங்காலத்தில் ரிலையன்ஸ் உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள்.

ரிலையன்ஸ் ஜியோ விளம்பரத்தில் வந்த "பிரபல மாடல்" மோடி, அந்த மருத்துவமனை விளம்பரத்திலும் வந்து சிரிப்பார், "இங்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்" என.

# கார்ப்பரேட் மோடி வாழ்க, ஏழைகள் சாக !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக