பிரபலமான இடுகைகள்

திங்கள், 3 ஜூலை, 2017

இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்

"இந்தி படிக்காமல் பின் தங்கி விட்டோம். இல்லைன்னா, பாலாறும், தேனாறும் ஓடியிருக்கும். தமிழ்நாட்ட தவிர அத்தனை மாநிலமும் ஹிந்தி கற்றவர்கள்" என்று சொல்லும் அன்பு 'ஹிந்தியர்கள்' கொண்டது தான் நம் தமிழகம்.

நானும், தமிழரல்லா இந்தியர்கள் அனைவருக்கும் ஹிந்தி தெரியும் என்று நினைத்த காலமும் உண்டு. பெங்களூரில் நான் பணியாற்றும் போது தான், 'தமிழ் மாத்திரமே தெரிந்த' ஆடிட்டர் அண்ணன் நெடுமாறன் பதினைந்து ஆண்டுகள் கன்னடர்களுக்கு 'கணக்கு-வழக்கு' பார்த்த விபரம் அறிந்தேன். கன்னடமும் தெரியாது, இந்தியும் தெரியாது.

என் அப்பா சிகிச்சைக்கு ஹைதராபாத் சென்ற போது ஆட்டோ டிரைவரிடம் நான் தெலுகில் பேச, அவர் விழிக்க, அடுத்த கதை தெரிந்தது. வெறும் 'உருது' மாத்திரமே தெரிந்த அந்த ஆட்டோ டிரைவர், பிறந்தது வளர்ந்தது அத்தனையும் 'ஹைதராபாத்' தான். அவருக்கு 'தெலுகும் தெரியாது, இந்தியும் தெரியாது'.

குன்னம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது, சட்டமன்ற உறுப்பினர்கள் பயிற்சிபட்டறைக்கு டெல்லிக்கு சென்ற போது தான் இந்தியாவின் இன்னொரு முகம் தெரிந்தது. பயிற்சி வகுப்பை இந்தியில் எடுக்க எதிர்ப்பு தெரிவித்தவர்கள், வடகிழக்கு மாநிலத்தவர்கள்.

அப்புறம் தான் நாங்கள், தமிழக ச.ம.உக்கள் குரல் கொடுத்தோம். அடுத்து குஜராத், ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்களும் எதிர்த்தார்கள். உத்தரபிரதேசத்தை சுற்றியுள்ள சில மாநிலங்கள் தான் ஹிந்தியை ஏற்றுக் கொண்டவர்கள்.

சமீபத்தில் கார்ப்பரேட் மோடி கைங்கர்யத்தில், இன்னும் சில மாநிலங்கள் 'இந்தி திணிப்பு - எதிர்ப்பு' படையில் இணைந்துள்ளன. அதற்கு முதலில் நன்றி 'மோடி அண்ணா'. 

ஆனால், மோடியை தனியாகக் கேட்டால், அவரும் குஜராத்தி மொழிக்கு ஆதரவாகத் தான் இருப்பார். ஆனால் 'ஏக இந்தியா' கார்ப்பரேட்களின் நெருக்கடியில் அவரும் 'ஹிந்தி ரட்சகனாக'  உருவெடுத்து விட்டார்.

இப்போது எதிர்பாராத இடத்தில் இருந்து எதிர்ப்பு.  எதற்குமே மத்திய அரசை எதிர்க்காத மாநிலம் ஒடிசா. அவ்வளவு பின் தங்கிய மாநிலம். அதன் முதல்வர் நவீன் பட்நாயக், இந்தி  திணிப்பிற்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார்.

மைல்கல்களில் ஒடிய மொழியை தவிர்த்து, இந்தியில் எழுதியதற்கு தான் அந்த எதிர்குரல். மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு ஒரு கடிதம் எழுதினார். "ஒடிய மொழி புறக்கணிக்கப்பட்டதற்கு கடும் கண்டனம்".

அடுத்த குரல் கேரளத்தில் இருந்து. கேரள முதல்வர் பினராயி விஜயன், பள்ளிகளில் "மலையாளம் கட்டாயம் " என்று அறிவிப்பு கொடுத்தார்.  இந்தி திணிப்பிற்கான எதிர்குரல் தான் அது.

அடுத்து கர்நாடகம்.  கர்நாடக முதல்வர் சித்தராமையா, இந்தி திணிப்பை எதிர்ப்போம் என்று குரல் கொடுத்தார். அவர் மாத்திரமல்ல, சாதாரண மக்களும் குரல் கொடுத்தனர்.

குறிப்பாக, பெங்களூரு மெட்ரோ ரயில் நிலைய அறிவிப்பு பலகையில் இந்தி இடம் பெறுவதை, பெங்களூரு மக்கள் கடுமையாக எதிர்த்தனர். சமூக வலைதளங்களில் அனல் பறக்க ஆரம்பித்தது. இப்போது அறிவிப்பு பலகையில் இடம்பெற்றுள்ள இந்தி மறைக்கப்படுகிறது.

காங்கிரஸ்காரர்களும் , பொதுமக்களும் மாத்திரம் எதிர்க்கவில்லை, பா.ஜ.கவினரும் எதிர்க்கிறார்கள். அது தான் கவனிக்கப்பட வேண்டியது.

சி.டி.ரவி. இவர் பா.ஜ.கவின் சிக்மகளூர் தொகுதி எம்.எல்.ஏ, மூன்று முறையாக.

"Ministries and Departments should take immediate step to #StopHindiImperialism and ensure primacy for all the recognized languages in India" என ட்வீட் செய்தார்.

"அமைச்சரகங்களும், துறைகளும் இந்தி ஆதிக்கத்தை நிறுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல் மற்ற இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும்". இது தான் ரவியின் ட்வீட். இந்தி திணிப்பு என்பதைத் தாண்டி, இந்தி ஆதிக்கம் என வலியுறுத்துகிறார் இவர்.

அடுத்து, பா.ஜ.க எம்.பி பிரதாப் சிம்ஹா, மைசூரு தொகுதி. "Imposition of Hindi in schools. Respected @RashtrapathiBhavan. Sir pls don't impose Hindi on us. #OurKannadaOurPride.", என ட்வீட் செய்துள்ளார்.

" எங்கள் பள்ளிகளில் இந்தி திணிக்கப்படுகிறது. மதிப்பிற்குரிய ஜனாதிபதி, இந்தியை எங்கள் மீது திணிக்காதீர்கள். எங்கள் கன்னடம், எங்கள் பெருமை" என்பது எம்.பி பிரதாப்பின் ட்வீட். இவர் பிரதமரை விட்டுவிட்டு ஜனாதிபதிக்கு ட்விட்டியிருந்தாலும், இந்தி திணிப்பு எதிர்ப்பு தான் சப்ஜெக்ட்.

பொறியாளர் குருபிரசாத்தின் கேள்வி இன்னும் ஷார்ப். "ஐந்து கோடி மக்கள் தொகை கொண்டது கர்நாடகம். இதில் எழுபத்தைந்து சதவீத மக்களே படித்தவர்கள். மீதி இருக்கிற படிக்காதவர்கள் மீது இந்தியை திணித்து என்ன செய்யப் போகிறீர்கள்? ".

கர்நாடக மக்களுக்கு தெரிந்தது கன்னடம் மாத்திரமே. படித்த 75% மக்களில் பள்ளிப் படிப்பை முடித்தவர்களே பெரும்பான்மை. அதில் ஹிந்தியை, "பாஸ்  மார்க்" கிற்காக படித்தவர்கள் தான் அதிகம். அவர்களுக்கு  இந்தியை படிக்கத் தான் தெரியும், ஆனால் பேச தெரியாது. அது தான் கொடுமை. இது புரியாம ஹிந்தி படிக்கணும்னு கதறும் கோஷ்டி தான் கவனிக்க வேண்டும்.

மராத்தி எழுத்துக்கள், அப்படியே இந்தியை ஒத்தவை. மராத்தி பேசுபவர்களுக்கு, இந்தி பேசுவது எளிது. ஆனால் மராத்தியர்களும் இந்தி திணிப்பிற்கு எதிர் குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

மகராஷ்டிராவில் 'மோடி' என்று ஒரு மொழி உண்டு. இந்தி திணிப்பால், மோடி அழியும் நிலை. அதற்காகவும் குரல் எழும்ப ஆரம்பித்து விட்டது. இன்னும் பல மொழிகள், இந்தி திணிப்பால் அழியும் கதை இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவர ஆரம்பித்திருக்கிறது.

ஆழி.செந்தில்நாதன் அவர்களால் நான் ஒரு குழுவில் இணைக்கப் பட்டேன். "மொழி சமத்துவம் ஊக்குவிப்போம். இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல" என்பது அந்தக் குழு. அதில் இணைந்த பிறகு பல இந்தி பேசும் மாநிலங்களிலேயே 'இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு' இருக்கிறது என்பது புரிய வருகிறது.

இன்றைய செய்தி:

மும்பையில் இன்றைய ட்வீட் ட்ரெண்ட்.

#AapliMetroHindiNako
#StopHindiImposition

"எங்கள் மெட்ரோவில் இந்தி வேண்டாம்.
இந்தி திணிப்பை நிறுத்து".

80 ஆண்டுகளுக்கு முன்  இந்தியை எதிர்த்த முதல் மாநிலம் "தமிழ்நாடு". இன்று மற்ற மாநிலங்கள் பின் தொடர்கின்றன.

Inferiority complex-ஐ விட்டுத் தொலையுங்கள் ஹிந்தி-தமிழர்களே !

இந்தியை எதிர்க்கவில்லை, ஆனால் இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்.

# இப்போ இந்தியாவே திரள்கிறது, இந்தி எதிர்ப்பில் !