பிரபலமான இடுகைகள்

வியாழன், 23 ஜனவரி, 2014

"நில்லுங்க" என்றார் பேராசிரியர்...

இரவே பேராசிரியர் அவர்களது கையெழுத்தை பெறுவது என முடிவெடுத்தப் போது, இரவு 8.30. மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்ப்பாளர் அண்ணன் திருச்சி.சிவா அவர்களது வேட்புமனுவை தயாரிக்கும் பணியில் இருந்தோம் அப்போது, அறிவாலயத்தில்.

வழக்கறிஞர்கள், ஆடிட்டர் என்று ஒரு குழுவே அந்தப் பணியில் இருந்தது. கழகத்தின் வேட்பாளர் என்ற அங்கீகாரச் சான்றிதழ் வேட்புமனுவோடு இணைக்கப்பட வேண்டும். அதில் கழகப் பொது செயலாளர் என்ற முறையில் பேராசிரியர் அவர்கள் கையொப்பம் இட வேண்டும்.

                                             

அப்போது தான் தலைவர் கலைஞர் அவர்கள் புறப்பட்டிருந்ததால், நிர்வாகிகளும் கிளம்பி இருந்தனர். அதனால் என்னை சென்று கையொப்பம் பெற்று வர, அண்ணன் சிவா அவர்களும், கொறடா அண்ணன் சக்கரபாணி அவர்களும் பணித்தார்கள்.

பேராசிரியர் அவர்களது உதவியாளர் நடராஜனை தொடர்பு கொள்ள முயன்றோம், முடியவில்லை. அவரது ஓட்டுனரை தொடர்பு கொண்டோம். "அய்யா பத்தரை மணிக்கு தான் படுப்பார்கள். சென்றால் கையெழுத்து பெறலாம்" என்றார்.

தயக்கத்தோடு சென்றேன், ஓய்விலிருந்தால் தொந்தரவாகி விடுமோ என்று. வீட்டில், உதவியாளர் ஒரு சிறு பையன் இருந்தார். எனக்கு அறிமுகம் இல்லாதவர். "சாப்பிடுகிறார்கள். காத்திருங்கள்" என்றார். பெயர் கேட்டார், சொன்னேன்.

அய்ந்து நிமிடத்தில் அழைத்தார். உள் அறையில், ஒரு சுழல் நாற்காலியில் பேராசிரியர் அமர்ந்திருந்தார். உள்ளே நுழைந்தேன். மேசையில் பேனாவைத் தேடிக் கொண்டிருந்தார். கைலியும், தைத்த பனியனுமான எளிய கோலம்.

அறையில் ஏ.சி கிடையாது. ஒரு நாற்காலி, மேசை தவிர, அறை முழுதும் கண்ணாடி அலமாரிகள். அலமாரி முழுதும் புத்தகங்கள், ஆயிரக் கணக்கில் இருக்கும். செல்வம். மேசை முழுதும் புத்தகங்களே. இரண்டு புத்தகங்கள் விரித்தபடி இருந்தன. பக்கத்தில் குறிப்பெடுக்க நோட்டு.

பேனாவை எடுத்தார். படிவத்தை கொடுத்தேன். கையொப்பமிட்டார். மணி 9.30. எத்தகைய அறிவார்ந்தவரின் கையெழுத்து. எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கையெழுத்து. பெருமிதமாய் வாங்கி பைலில் வைத்தேன்.

வணங்கி விடை பெற்றேன். அப்போது தான் என்னை கவனித்தார், அது வரை தன் பணியில் கவனமாய் இருந்தவர். நான் அறைக் கதவை தாண்டி வெளியே வந்து விட்டேன். "நில்லுங்க" என்றார் பேராசிரியர். நின்றேன்.

"ஆண்டிமடம் சிவசங்கரா ?" என்றார். திரும்பி அறைக்குள் சென்றேன். "அறிவாலயத்தில் இருந்து வந்திருக்கிறார்கள் என்றதால் கவனிக்கவில்லை" என்றார். நானும் பேண்ட், சர்ட்டில் இருந்தேன். அருகில் அழைத்து கைக்குலுக்கி, தோளில் தட்டிக் கொடுத்தார்.

# அன்போடு இயைந்த வழக்கென்ப !