பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

கையில கறை, தொகுதிக்கும்...

“கையில் மை வச்சாச்சி, இனி நிம்மதி திரும்பிடும் திருவரங்க மக்கள் மைண்ட் வாய்ஸ்.

       

திருவரங்க தேர்தல் திருவிழா இன்று மாலையோடு நிறைவுற்றது. இன்று தொகுதி மக்கள் நிம்மதியாக உறங்கப் போவார்கள்.

தொகுதி மக்கள் கடந்த ஒரு மாதமாய் காலையில் கண் விழித்ததே அரசியல்வாதிகள் முகத்தில் தான். வாக்கு கேட்டு வந்தோரின் குரல் காதில் ரீங்கரிக்கத் தான் இரவில் தூங்கப் போனார்கள்.

ஒரு கட்டத்தில் அவர்கள் உதட்டில் புன்னகை உறைந்தே போயிற்று. யாரைப் பார்த்தாலும் இன்முகம் காட்டி, “உங்களுக்கு தான் ஓட்டுஎன சொல்ல பழகிப் போனார்கள்.

ஒரு காலத்தில் அரசியல்வாதிகள் தான் இப்படி சொல்லிப் பழகியவர்கள் என்பது பொதுப் பார்வை. இப்போது மக்கள் இப்படி சொல்லிப் பழகி, தேர்ந்த அரசியல்வாதி ஆகிப் போனார்கள்.

அவர்களுக்கும் வேறு வழியில்லை. இவர்கள் ஆளுங்கட்சி, ஊருக்கும் நமக்கும் நல்லது நடக்க வேண்டும். அவர்கள் எதிர்கட்சி தான், ஆனால் அடுத்தத் தேர்தல் என்னாகுமோ ? அதனால் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம் என்றாகிப் போனார்கள்.

இன்றைக்கு ஓட்டும் போட்டாச்சு. நாளை முதல் இயல்பு வாழ்க்கை திரும்பிடும். ஊருக்குள் திரிந்துக் கொண்டிருந்த கார்கள் நாளை முதல் இருக்காது.

தெரு முக்கில் கொட்டகை போட்டு, அலுவலகத்தில் உட்கார்ந்திருந்த கூட்டம் கிளம்பியிருக்கும். காலை டீ குடிக்கப் போனால், டீ தீர்ந்து போச்சி என்ற குரல் நாளை முதல் கேட்காது.

சாலையோரம் குவிந்துக் கொண்டிருந்த குவார்ட்டர் பாட்டில்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தே போகும். முடிச்சு முடிச்சாய் கிடந்த, பரோட்டாவுக்கு சால்னா கட்டிய பாலித்தீன் பைகள் அராஜகம் ஒழியும்.

கதற கதற மைக்கை அலற விட்டு டர், புர்ரென்று சுற்றி வந்த ஆட்டோக்கள் நகருக்கு திரும்பி விடும். கொத்து கொத்தாய் மக்களை அள்ளித்  திரிந்த குட்டி யானைகள், மூட்டை சுமக்க போய் விடும்.

        

மைக்கும், கேமராவுமாய் சுற்றி வந்த ஊடகங்கள் அடுத்த “அவசர செய்திக்கு பறந்து விடும். இரவு பகல் இல்லாமல் உலா வந்த காவல்துறை மாமூல் வாழ்க்கைக்கு திரும்பி விடும்.

இனி காலை நேர வழக்கமான பணிகளுக்கு தைரியமாய் செல்லலாம். நிம்மதியாய் நடந்து ஊரை அளக்கலாம். பொருட்கள் எல்லாம் வழக்கமான விலைக்கு திரும்பி விடும். குழந்தைகள் விளையாட்டுக்கு திரும்புவர். அமைதியான இரவு நிலைக்கும்.

      

திருவரங்கத்து ரங்கநாதரே இன்று அமைதியாய் பள்ளி கொள்வார்.

“ஆரம்பத்தில் இந்த தேர்தல் திருவிழா வேடிக்கையாய் இருந்திருக்கும். ஒரு கட்டத்தில் வெறுப்பே மிகுந்திருக்கும். அதனால் இனி இது நடக்கக் கூடாது என்ற மன ஓட்டமே இப்போது மக்களிடத்தில் மிஞ்சியிருக்கும்.

இப்படித் தான் நினைப்பார்கள்... “அப்போ அந்தம்மா ஒழுங்கா கையடக்கமா இருந்திருந்தா, இந்தத் தொல்லை எல்லாம் வந்திருக்காது


# அந்தம்மாவால தான் கையில் இந்தக் கறை !