பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

அரசின் மணல் மஃபியா

சன்னாசிநல்லூரிலிருந்து தொடர்ந்து அலைபேசியில் அழைப்பு. "இதோ கிளம்பி விட்டேன்". "திருச்சி தாண்டுகிறேன்". "பெரம்பலூர் தாண்டிவிட்டேன்". "இப்போ அங்கனூர்" என்றவாறு சென்றடைந்த போது மணி காலை 11.30.

10.30-க்கு முற்றுகை போராட்டம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தாமதமாகி விட்டதே என்ற சங்கடத்தோடு போனேன். ஆனால் மக்கள் கசப்பில்லாமல் காத்திருந்தனர். காவலர்கள் ஐம்பது பேரோடு இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ என காவல்துறையினரும் காத்திருந்தனர். இது இக்கரையில்.

          

சன்னாசி நல்லூர் கிராமம், அரியலூர் மாவட்டத்தின், செந்துறை ஒன்றியத்தின் கடைகோடி கிராமம். வெள்ளாற்று கரை மீது அமைந்துள்ளது. எப்போதும் உரிமைக்காக போராடக் கூடிய கிராமம்.

வெள்ளாற்றில் இயங்கும் மணல் குவாரி தான் பிரச்சினைக்கு காரணம். இந்த கிராமத்து எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கணக்கு வழக்கில்லாமல் மணல் எடுத்துள்ளனர்.

ஆழம் அதிகமாக மணலை எடுத்த பகுதியில் ஆடு, மாடுகள் விழுந்து இறந்துள்ளன. மனிதர்கள் இருவர் இறந்து விட்டதாகவும் ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர். இத்னால் மக்களுக்கு மணல் குவாரிக்கு எதிரான மன நிலை ஏற்பட ஆரம்பித்தது.

இந்த கிராமத்து மக்கள் பயன்படுத்தும் ஆற்றில் இருந்த சுடுகாட்டை கூட விட்டு வைக்காமல் தோண்டி மணல் எடுக்க ஆரம்பித்த போது பிரச்சினை வெடிக்க ஆரம்பித்தது.

இதனால் மணல் குவாரி நடத்தும் நபர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே பிரச்சினை மூள ஆரம்பித்தது. உடனே ஆற்றின் அக்கரையில் இருக்கும் கடலூர் மாவட்டத்து நபர்கள சிலரை விலைக்கு வாங்கினர்.

அவர்களை கொண்டு இதை இரண்டு ஊர்களுக்கு இடையேயான பிரச்சினையாக திசை திருப்பினர் மணல் குவாரி நடத்தும் நபர்கள். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவத் துவங்கியது.

இதற்கிடையில் பத்து நாட்களுக்கு முன்பாக, கொதிப்படைந்த மக்கள் குவாரி உள் புகுந்தனர். அங்கே அளவில்லாமல் மணலை அள்ளிக் கொண்டிருந்த ஆறு பொக்லைன்கள், டிப்பர் லாரிகளை சிறை பிடித்து ஊருக்குள் கொண்டு வந்து நிறுத்தி விட்டனர் பொதுமக்கள்.

அப்போது பேச்சு வார்த்தைக்கு வந்த அரசு அதிகாரிகள், மக்களோடு சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே மீண்டும் குவாரியை இயக்குவோம் என எழுதிக் கொடுத்து விட்டு, வாகனங்களை மீட்டுக் கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் மறுநாளே போலீஸ் பாதுகாப்புடன் குவாரியை தொடர்ந்து நடத்த ஆரம்பித்து விட்டனர்.

இந்தக் கட்டத்தில் தான் ஊர் பொதுமக்கள் என்னைத் தொடர்பு கொண்டனர்.
(தொடரும்...)