பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 5 மே, 2015

ஜெ எக்ஸ்பிரஸ், ரோலர் கோஸ்டர் ஆனது....

ஜெயலலிதா, 2013 டிசம்பர் அதிமுக பொதுக்குழுவில் பேசும்போது தான் பொளந்து கட்டினார்,”அதிமுக எக்ஸ்பிரஸ், டெல்லி செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலாக மாறும்”.

ஆனால் அவரது வழக்குப் பயணம் தான் ரோலர் கோஸ்டர் பயணமாக, வானுக்கும் பூமிக்கும், தெற்கிற்கும் வடக்கிற்கும், கிழக்கிற்கும் மேற்கிற்கும் என தவ்வி தாவி தலை சுற்ற வைக்கிறது. எப்போது வேகமெடுக்கிறது, எப்போது படுக்கிறது, எந்த திசையில் பயணிக்கிறது என அவருக்கே புரியவில்லை.

              

18 ஆண்டுகள் ஸ்டேஷன், ஸ்டேஷனாக நிறுத்தி பல டிரைவர்களை ஓட விட்டு, சில டிரைவர்களை ஓட்ட வைத்து பாசஞ்சர் ரயில் போல் கூட அல்ல, குட்ஸ் ரயில் போல் தன் சவுகரியத்திற்கு ஓட வைத்தார் சொத்துக் குவிப்பு வழக்கை.

வழக்கு திசை மாறி பயணிப்பதை உணர்ந்த திமுகழகம் சிகப்புக் கொடியைக் காட்டி எச்சரித்த பிறகே பெங்களூரு நிலையம் நோக்கி கொண்டு வரப்பட்டது. அனாலும் அங்கேயும் அதனை தடம்புரட்ட, செயலிழக்க வைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஒரு வழியாக மைக்கேல் டி குன்ஹா கையில் ஸ்டியரிங் வந்த பிறகே ரயில் வேகம் பிடித்தது நாடறிந்த விஷயம். குன்ஹா ரயிலை சரியான பாதையில், சரியான வேகத்தில் செலுத்தி பார்ப்பன அக்ரஹாரா நிறுத்தத்தில் கொண்டு போய் நிறுத்திய பிறகு தான் மக்களுக்கு நம்பிக்கை பிறந்தது, நீதித்துறை மீது.

இப்போது என்ன வழி என்று பார்த்தார்கள். அப்போது தான் செங்கோட்டை ஸ்டேஷனில் அவர் கண்ணில் பட்டார், “தத்தி” திரிந்துக் கொண்டிருந்தவர். பேசினார்கள். மனு போட்டார்கள். ரயில் இழுத்து செல்ல பணிக்கப்பட்டது, பெங்களுரு கண்டோன்மெண்ட்க்கு.

அங்கே பாய்ண்ட் மேனாக பவானிசிங் அமர்த்தப்பட்டார். ஏற்கனவே பழக்கப்படுத்தப் பட்டவர். அதனால் வசதியாக இருந்தது. நினைக்கும் திசையில் எல்லாம் டிராக்கை திருப்பினார். இப்போது வசதியாக ரயிலை கவிழ்த்து விடலாம் என நினைத்தார்கள்.

குமரசாமி, வண்டியை ஓட்ட வந்தவர். அவர் ஓட்டுகிறாரா அல்லது ஒதுக்குகிறாரா என “எல்லோருக்குமே” குழப்பம். தினம் ஒரு விதமாக நடந்துக் கொண்டார். தினம் ஒரு “விதமாகவே” நடந்து கொண்டார்.

அப்போது தான் பேராசிரியர் ரீ-என்ட்ரி கொடுத்தார். பாயிண்ட் மேன் பவானிசிங்-கை மாற்றக் கோரினார். லோகூர், பானு பார்வைக்கு போனது. லோகூர் நெத்தியடி கொடுத்தார். பானு, “மதி”யை காட்டினார், சூரியன் வராதென நினைத்து. ஆனால் வந்ததே...

எதிரெதிர் முடிவுகளால், மேலே போனது. இருவர் அல்ல மூவர் என முடிவானது. “தத்தி” குதித்தவர் அவசரம் காட்டினார். நாள் குறித்தார். நெருக்கினார். நாடே வியந்தது, “நீதிக்கு இவ்வளவு அவசரமா, அக்கறையா?”

ஆனால் மூவரில் எவரும் அசரவில்லை, அசையவில்லை. வந்த தீர்ப்பு நெருப்பை அள்ளி வீசியது. பவானியின் “பவனி” செல்லாது என முடிவானது. இப்போது தான் மீண்டும் நம்பிக்கை நீதி மீது மக்களுக்கு, “தத்தி” தாவாது என.

போனவர் போனது தான், என்றிருந்த நிலையில் வந்தார் “ஆச்சார்யா”. அது ஆச்சரியம் தான், ஆனால் அதிசயம். நடந்து விட்டது, நடந்தே விட்டது.

இனி சரியாக “பாய்ண்ட்” அடிக்கப்படும், என நாடு நம்புகிறது.

# செங்கோட்டை எக்ஸ்பிரஸ், மண் கோட்டையை நோக்கி பயணிக்கட்டும் !