பிரபலமான இடுகைகள்

வியாழன், 16 ஜூன், 2016

மருந்து தடவிய மயிலிறகுகள்

அந்தப் பள்ளிக்கு செல்வதென்றால் எங்களுக்கு எப்போதும்  மகிழ்ச்சி தான். காரணம், அந்தப் பள்ளிப் பிள்ளைகளின் அன்பு எங்களை அப்படி அவர்களோடு ஒன்ற வைத்து விட்டது. அது ஒரு சிறப்புப்பள்ளி. காது கேளாத, வாய் பேசாத பிள்ளைகளுக்கானப் பள்ளி. சென்னை - கும்பகோணம் சாலையில், ஜெயங்கொண்டம் குறுக்கு ரோட்டில் அமைந்துள்ள ஹெலன் கெல்லர் காது கேளாதோர் மேல்நிலைப் பள்ளி. 

வழக்கமாக தலைவர் கலைஞர் பிறந்தநாள் மற்றும் தளபதி பிறந்த நாளில் இந்தப் பிள்ளைகளோடு ஒரு வேளை கொண்டாடுவது எங்கள் வழக்கம். இந்த ஆண்டு தலைவர் பிறந்தநாளுக்கு, பொதுக்குழு உறுப்பினர்  மணிமாறன், அவர்களுக்கு காலை உணவு வழங்கினார். தேர்தல் முடிவுக்கு பதினைந்தாம் நாள்.

உணவருந்தும் ஹாலில் நுழைந்த உடனே வணக்கம் சொல்வார்கள். பேச இயலாது என்பதால் சத்தம் மட்டுமே வரும். ஆனால், அதில் அவ்வளவு உற்சாகம் வெளிப்படும். எல்லோரும் வரிசையில் கட்டுப்பாடாக அமர்ந்திருந்தனர். நான் இனிப்பு பரிமாறினேன். சிலர் குறைவான அளவு வைக்க சொல்லி சைகை காட்டினர்.

அவர்களை பராமரிக்கும் கன்னியாஸ்திரி கண்ணசைவுக்காக காத்திருந்தனர். அவர் "இன்னைக்கு என்ன விசேஷம் ?" என்று சைகையில் வினவினார். கலைஞர் என்பதற்கான சைகையை காட்டினார்கள் குழந்தைகள். அடுத்து 93 என்பதற்கான குறீயீடு செய்தார்கள். பிறகு தலைவர் கலைஞருக்காக வணங்கி ஜெபம் செய்தார்கள். பிறகு சாப்பிட ஆரம்பித்தார்கள்.

பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடியில் அமர்ந்து அவர்களுக்கு வழங்கிய உணவான கேசரி, பொங்கல், இட்லியை நாங்களும் சாப்பிட ஆரம்பித்தோம். அப்போது ஒரு பையனும், பெண்ணும் என் அருகில் வந்தார்கள். வணக்கம் வைத்தார்கள். எனக்கு தெரிந்த முகமாக இல்லை.

பையன் என்னைப் பார்த்து சைகை செய்தான், ஆனால் எனக்கு புரியவில்லை. பிறகு நான் கும்பிடுவது போல காட்டினான். தேர்தலில் நின்றதை சொல்ல வருகிறான் என்பது புரிந்தது. "ஆமாம். நின்றேன்", என்றேன். அதை புரிந்து கொண்டது அவனுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

அடுத்து ஜீப்பின் மேல் நின்று வாக்கு கேட்டதை சைகையில் சொன்னான்.  அப்போது பார்த்ததாக விளக்கினான். "எந்த ஊர்?", என்றுக் கேட்டேன். அவன் சொன்னதில் "பெ" என்பது மட்டுமே எங்களுக்கு விளங்கியது. சுற்றி இருந்தவர்கள் ஆளுக்கு ஒரு ஊர் பெயரை சொன்னார்கள். இல்லை என்று தலையசைத்தான்.

நான் பேனாவையும், துண்டு சீட்டையும் கொடுத்தேன். எழுதினான்,"பெரியத் திருக்கோணம்". அரியலூர் ஒன்றியத்தில் இருக்கும் ஊர். இப்போது இருவர் முகத்திலும் அவ்வளவு மகிழ்ச்சி. பெயர் கேட்டேன். அவர்கள் சொன்னது புரிந்தது, "பாலமுருகன், மீனா".  நன்றாக படிக்க வாழ்த்தினேன். கைக் கொடுத்து சென்றனர்.

நாங்கள் உணவருந்தி கிளம்பினோம். கார் அலுவலகத்தைத் தாண்டியது. அங்கே படிக்கட்டில் பாலமுருகனும், மீனாவும் தயாராக நின்றனர். எங்களைப் பார்த்து உற்சாகமாக கையசைத்து புன்னகைத்தனர். அந்தப் புன்னகை "நூறு பாட்டில் குளுக்கோஸ் " ஏற்றிய தெம்பு தந்தது. அந்த 2043 வாக்கை இந்த இரண்டு புன்னகை வென்றது.

# மருந்து தடவிய மயிலிறகுகள் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக