பிரபலமான இடுகைகள்

திங்கள், 20 ஜூன், 2016

தோல்வியும் நல்லதே

மறுபடியும் தேர்தல் கதையா என சங்கடப்பட வேண்டாம். ஒரு நண்பர் கூட சமீபத்தில் ஸ்டேடஸ் போட்டிருந்தாரு, "ஏன்யா அந்த இழவயே கட்டிக்கிட்டு அழறீங்க?"அப்படின்னு. வேற வழி இல்ல, இ-விகடன்ல போட்டு உட்டுட்டாங்க நம்ம எலெக்சன் கதைய. அதனால் இத எழுத வேண்டிய கட்டாயம்.

வாக்கு எண்ணிக்கைக்கு முதல் நாள் அசோகன் சார் அழைத்தார். "அந்திமழை" மாத இதழின் ஆசிரியர் அசோகன். நிறைய இலக்கியம் பேசும் புத்தகம் அந்திமழை, கொஞ்சம் கமர்ஷியலும் உண்டு. நம்மையும் கணக்கில் வச்சு, விருந்தினர் பக்கம் எழுத சொன்னார் அசோகன் சார். அதில் எழுத ஆரம்பிச்ச பிறகு, சில முக்கியஸ்தர்கள் கண்ணில் நம்ம எழுத்து சிக்க ஆரம்பிச்சிருக்கு.

முதல்ல அசோகன் சார், பத்தி கேட்டப்ப கொஞ்சம் கிறுகிறுப்பாகத் தான் இருந்தது, பயமாகவும் இருந்தது. அதில் எழுதறவங்க எல்லாம் அப்புடி, இலக்கியவாதிகள், தமிழுலகம் அறிந்த எழுத்தாளர்கள் . இருந்தாலும் சமாளிச்சி ஆறு மாசம் எழுதிட்டேன். இப்படித்தான், இலக்கிய வண்டி மெதுவா ஓடிக்கிட்டு இருக்கு.

17.05.2016. அசோகன் சார் மொபைலில் அழைத்தார். "சார், அடுத்த இரண்டு நாள்ல நிறைய பிசி ஆயிடுவிங்க, அப்ப பேச முடியாது. அதனால தான் இப்பவே கூப்பிட்டுட்டேன். வெற்றி மகிழ்ச்சியில் இருப்பீங்க. இருந்தாலும் மறக்காம பத்தி எழுதிடுங்க. தேர்தல் குறித்து இருந்தாலும் பரவாயில்ல. எப்படியோ எழுத்த மட்டும் விட்டுடாதீங்க".

"சார், எவ்வளவு வேல இருந்தாலும் எழுதி அனுப்புறேன். எழுத்த விட முடியாது சார், அப்படி ஆயிடுச்சி" என்றேன்.

19.05.2016. தேர்தல் முடிவு வந்தது. வெற்றி விழா, தோல்வி விழா ஆனது. நான் முடிவு வருவதற்கு முன்பே தயாராக இருந்தேன், அதனால் எதிர்கொண்டேன். ஆனால் மற்றவர்கள் தயாராக இல்லாத காரணத்தால் துவண்டு விட்டார்கள், தோல்வியால். எதிர்பாராத தோல்வி என்ற காரணத்தால், மீள்வது சிரமமாகிவிட்டது அவர்களுக்கு.

24.05.2016. மாலை அசோகன் சார் அழைத்தார். "சார், பேச சங்கடமாத் தான் இருக்கு. ஆனா நீங்க மீண்டு வரனும். அதற்காகவாவது எழுதனும் சார். ஏதாவது நம்ம புத்தகத்துக்கு எழுதுங்க சார்",என்றார். "சார், நான் எழுதிட்டேன். மெயில் அனுப்பி ஒரு மணி நேரம் ஆச்சி",என்றேன். "சார்,எழுதிட்டீங்களா?.  இது தான் சார் எஸ்.எஸ். என்ன சப்ஜெக்ட் சார்?".

"தேர்தல் தான் சார் சப்ஜெக்ட். அது தான இப்ப டைமிங். படிச்சிட்டு சொல்லுங்க சார்",என்றேன். அடுத்த அய்ந்து நிமிடத்தில் அழைத்தார். "சார், கலக்கிட்டீங்க. இதத் தான் சார் நெனைச்சேன். வேற யாரும்னா எழுத மாட்டாங்க, தோல்விக்கு அப்புறம். எஸ்.எஸ் கிட்ட கேக்கலாமா, கேட்டா என்னா எழுதுவார்னு நான் நெனைச்சனோ, அதயே எழுதி இருக்கீங்க. டாப் சார்", என்றார்.

அந்திமழை இதழில் பத்தி வெளியானது. பலரும் பாராட்டினார்கள். நான் விட்டுவிட்டேன், பெரிது படுத்தாமல். ஆனால் இன்று Vikatan.comல் இது வெளியாகி விட்டது. அதில் அவர்கள் கொடுத்துள்ள அறிமுகம் சூப்பர். தோல்வி இதையும் கொடுத்துள்ளது.

விகடனின் அறிமுகம். "தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.எஸ்.சிவசங்கர் நுட்பமாக எழுதுவதில் கை தேர்ந்தவர். சமூக வலைத்தளங்களில் அவர் பதிவு செய்யும் கருத்துக்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே உண்டு. சட்டமன்றத் தேர்தலில் அரியலூர் தொகுதியில் தோல்வி அடைந்தது பற்றி வரலாற்றுப் பார்வையோடு மிகுந்த நகைச்சுவையோடு தனது கருத்துக்களை அப்டேட் செய்திருந்தார்". (பத்தி நாளை வரும்).

# தோல்வியும் நல்லதே, மற்ற திறமைகள் வெளிப்பட !