பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 11 டிசம்பர், 2016

மன்னிப்பாயா ராஜராஜா ?

"அந்திமழை" டிசம்பர் மாத இதழில் வெளியாகியுள்ள எனது 'விருந்தினர் பக்கம்' பத்தி.

இடைத்தேர்தல் பணிக்காக அடுத்த பதினைந்து நாட்கள் தஞ்சை  வாசம் தான் என்ற போது அளவு கடந்த மகிழ்ச்சி. காரணம் சோழப் பேரரசின் தலைமகன் ராஜராஜனின் தலைநகரில் அத்தனை நாட்கள் உலாவப் போகிறோம் என்பது தான். அருகில் இருக்கும் ஊர் தான், அடிக்கடி செல்லும் ஊர் தான். ஆனால் அங்கேயே தங்கும் வாய்ப்பு என்பதால் இந்த ஆனந்தம்.

தஞ்சையில் தேர்தல் பணியில்  முதலில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதி பள்ளி அக்ரஹாரம் முதல் வடக்கு வாசல் வரை. பள்ளி அக்ரஹாரம் என்பது, மாமன்னன் ராஜராஜன் காலத்தில், பெரிய கோவிலில் பூஜை செய்ய அழைத்து வரப்பட்ட பார்ப்பனர்கள் குடியமர்த்தப்பட்ட பகுதி. அடுத்தப் பகுதி கருந்தட்டான்குடி என்னும் கரந்தை. இது வடவாற்றின் கரையில் அமைந்துள்ளப் பகுதி.

இதுவும் வரலாற்று தொடர்புடைய பகுதி தான். சுங்கம் தவிர்த்த சோழ நல்லூர் என்று சோழர் காலத்தில் அழைக்கப்பட்ட பகுதி. சுங்க வரியை நீக்கிய குலோத்துங்க சோழன் பெயரால் வழங்கப்பட்டது. அதுவே கருந்திட்டைக்குடி ஆனது. வாக்கு சேகரிப்பு நிகழ்வின் போது, இந்தப் பகுதி முழுதும் நடந்தே சுற்றி வரும் வாய்ப்பு. ஆனால் இங்கு சோழர் கால அடையாளங்கள் இல்லை.

கடைசியில் இந்தப் பகுதிகள் எல்லாம் மற்றவர்களுக்கு ஒதுங்கி, எங்களுக்கு வடக்கு வாசல் பகுதி மட்டுமே மிஞ்சியது. இங்கும் எந்த வரலாற்று அடையாளமும் கிட்டவில்லை. வடக்கு வாசலில் இருந்து பெரிய கோவில் செல்லும் பாதையில் தான் அரண்மனை. ஆன அது பிற்கால நாயக்கர் காலத்து அரண்மனை. பெரிய கோவிலை தவிர சோழர் காலத்து தஞ்சை நகர் எப்படி இருந்திருக்கும் என அறிய ஆவல். வரலாற்று நூல்களின் உதவியை நாடினேன்.

டாக்டர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் "தஞ்சாவூர்" நூல் தான் உதவியது. தஞ்சை பெரிய கோவிலின் 1001-வது ஆண்டு சிறப்பு வெளியீடாக தஞ்சை 'அன்னம்' பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர். அதை வாசித்த போது தான், சோழர் கால தஞ்சை அழிக்கப்பட்ட வரலாறு தெரிந்தது. பாண்டிய மன்னன் மாறவர்மன் சுந்தரபாண்டியன் தஞ்சை நகரை தீயிட்டு அழித்து, அரண்மனையை இடித்துத் தள்ளி, கழுதை கொண்டு ஏர் உழுது வரகு விதைத்துள்ளான்.

வரலாற்று ஆரவம் கொண்டவர்களுக்கு சோழர் கால தஞ்சையை கற்பனை செய்து, அதனை காணும் ஆர்வம் இருக்கும். கத்தார், துபாய் நாடுகளுக்கு சென்ற போது அவர்கள் இருநூறு, முன்னூறு ஆண்டுகால வரலாற்றை உயிர்பித்து காட்சியாக வைத்திருப்பதைக் கண்ணுற்றேன். ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்டது பெரிய கோவில். அதற்கு முந்தைய வரலாறு கொண்டது தஞ்சை நகர்.

வெளிநாட்டினர் கேமரா உடன் அணு, அணுவாக கோவிலின் ஒவ்வொரு புள்ளியையும் ரசித்தார்கள். ஆனால்  கோவிலுக்கு வரும் நம் நாட்டினர் செருப்பை கழட்டி விட்டுவிட்டு பக்திமயமாக உள்ளே நுழைகின்றனர். கையில் பூவும், சூடமும், அர்ச்சனை சீட்டுமாக நேரே கர்ப்பகிரகம் நோக்கி படையெடுக்கிறார்கள். சண்டீகேஸ்வரர் காதில் விரல் சொடுக்கி பிரார்த்திக்கிறார்கள்.

எனக்கு அவர்கள் காதில் சொடுக்கி, பெருவுடையாரை தரிசியுங்கள், அதே சமயம் இந்த கட்டிடக் கலையையும் ரசியுங்கள், இதனை கட்ட ராஜராஜன் மேற்கொண்டிருக்கக் கூடிய திட்டமிடல் குறித்து சிந்தியுங்கள், ஒவ்வொரு கோபுர வாயிலுக்கும் அருண்மொழி சூட்டிய பெயர்களையும் அதன் காரணத்தையும் கேளுங்கள், கோவில் சுவரில் வெட்டப்பட்டிருக்கும் கல்வெட்டுகளை காணுங்கள் என கதற வேண்டும் போல் தான் இருந்தது.

வெறுத்து வந்து விட்டேன். நாங்கள் பணியாற்றிய வடக்கு வாசல் வரலாற்று தொடர்புடைய பெயர். வடவாறு தாண்டி நகருக்குள் வடக்கு பகுதியில் இருந்து நுழையும் பகுதி என்பதால் வடக்கு வாசல் என பெயர் பெற்றிருக்க வேண்டும். ஆனால் எந்த அடையாளமும் இல்லை. வாக்கு கேட்டு செல்லும் போது தெரு பெயரைப் பார்த்தேன்.  சுண்ணாம்புக் காளவாய் தெரு. சோழருக்கு முந்தைய முத்தரையர் காலத்தில் சுண்ணாம்பால் கட்டப்பட்ட மாடமாளிகைகள் இருந்தன என்ற செய்தி, சுண்ணாம்புக் காளவாய் தெரு பெயருக்கு உயிர் கொடுக்கிறது. இந்த சாலை சென்று அடையும் ஊர் களிமேடு. இதுவும் வரலாற்றில் உள்ள பெயர். ஆனால் உள்ளூரில் யாருக்கும் இந்தத் தொடர்புகள் புரியவில்லை. மனசு கஷ்டமாக இருந்தது.

வாக்கு சேகரிப்பின் கடைசி நாள். வடக்கு அலங்கம் துவங்கி, வடக்கு வாசல் பகுதிகளில் வாக்குக் கேட்டு வடவாற்றுப் பாலத்தை அடைந்தோம். பாலத்தை ஒட்டி ஒத்தையடிப் பாதை. "அண்ணே இது படித்துறைப் பகுதி. முப்பத்தஞ்சு ஓட்டு இருக்கு. போவோம்". போனோம். சின்ன சந்தில் நுழைந்தோம். "அண்ணே இதப் பாருங்க". நான்கு செங்கற் தூண்கள் மீது கேரள ஓடு போட்ட ஒரு திறந்தவெளி கட்டிட அமைப்பு. மாடு கட்டுவது கூட சிரமம். " என்ன இது?". "இங்க தாண்ணே டைரக்டர் பாலா 'தாரை தப்பட்டை' படம் எடுத்தாரு. இப்போ ரொம்ப பேமஸ் இடம் இது".

மன்னிப்பாயா ராஜராஜா ?