பிரபலமான இடுகைகள்

வியாழன், 12 ஜனவரி, 2017

தமிழ்காளை திமிறும் !

ஜல்லிக்கட்டு தடை மெல்ல, மெல்ல தமிழகத்தின் பிரச்சினையாகிறது.

தஞ்சை மாவட்ட எல்லை துவங்கி, தென்மாவட்டம் முழுதும் நெருப்பாய் தகிக்கும் பிரச்சினை, ஜல்லிக்கட்டு பிரச்சினை. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு என்பது பத்திரிகை வாயிலாக பிரபலமாகி தான் வட தமிழ்நாட்டில் பாமர மக்களுக்கு அறிமுகம். அதிலும் வரலாற்று சினிமாக்களில் துவங்கி கமலின் 'விருமாண்டி' வரை ஜல்லிக்கட்டை தமிழ்மக்கள் மனதில் இருத்தின. சங்கத் தமிழ் நூல்களில் ஆர்வம் கொண்டோருக்கு 'ஏறுதழுவுதல்' நல்ல அறிமுகம்.

சிந்து சமவெளி நாகரீக ஆதாரங்களிலேயே ஜல்லிக்கட்டுக்கான அடையாளம் இருக்கிறது. பிற்காலங்களில் ஆண்களின் வீரத்தை நிரூபிப்பதில் துவங்கி, திருமண உறுதிக்கான வழி என்பது போக கிராமத்து இளைஞர்களின் உற்சாக விளையாட்டாக உருவெடுத்தது. பொங்கல் திருவிழா போது இயற்கையை வணங்குவோம் என்ற தமிழர் வழிபாட்டில் கால்நடைகளுக்கு முக்கிய இடம் உண்டு.

கால்நடைகளில் காளையையும், பசுவையும் சிறப்பாக வழிபடுவது காலகாலமாக நம் மரபு. டிராக்டர் பெருகுவதற்கு முன்பாக மாட்டுவண்டிகளை நம்பி காலம் தள்ளிய காலத்தில், காளைகளை அலங்கரித்து, படைத்து, வண்டியில் பூட்டி கொண்டாடியதற்கு நானே சாட்சி. அதன் தொடர்ச்சியாக, மாட்டுப் பொங்கலுக்கு மறுநாள் காணும் பொங்கல் அன்று, அதே காளை மாட்டை விரட்டி விளையாடும் விளையாட்டு தான் சல்லிக்கட்டாக உருவெடுத்தது.

தமிழகத்தின் சில பகுதிகளில் மட்டும் சல்லிக்கட்டு தொடர்ந்து நடந்தது. இதை தடை செய்ய சில விலங்குகள் நல அமைப்புகள் திடீரென அவதாரமெடுத்தன. காளைகளை சித்திரவதை செய்வதாக அவர்கள் வானத்திற்கும் பூமிக்குமாய் குதித்தனர். 2008ல், மேனகா காந்தி நீதிமன்றம் சென்றார், தடை வாங்கினார். 2009ஆம் ஆண்டு இதற்கு தீர்வு காண "தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம் 2009"  கொண்டு வரப்பட்டது. நீதிமன்ற வழிகாட்டுதல்கள்படி பாதுகாப்போடு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.

பிறகு 2011ல் தடை  வந்தது. 2012ல் மீண்டும் கடும் நிபந்தனைகளுக்கு இடையில் ஜல்லிக்கட்டு நடந்தது. தொடர்ந்து ''பெடா" அமைப்பு இதற்கு எதிரான வேலைகள் செய்தது. இதன் தலைவராக வெளிநாட்டுக்காரர் ஒருவர் அமர்ந்து கொண்டு, இந்த வேலைகளை செய்கிறார். இது தான் இப்போது பல சந்தேகங்களுக்கு இடமளிக்கிறது. உள்நாட்டு மாட்டினங்களை அழிக்கும் முயற்சி இது. 'பெடா' அமைப்பை நிர்வகிப்பவரே மத்திய அரசின் கொள்கை வகுக்கும் குழுவில் இருக்கிறார்.

ஏற்கனவே டிராக்டர் பெருக்கத்தாலும், செயற்கை கருத்தறிப்பாலும் தமிழக அடையாளமான காளை இனங்களின் வளர்ப்பு குறைந்து விட்டது. ஜல்லிக்கட்டு தடையும் நீடித்தால், காங்கேயம் காளைகள் போன்ற தமிழக இனங்கள் காணாமல் போகும். இது என்ன பெரிய விஷயம் என சில பிரகஸ்பதிகள் கேட்கலாம். ஒரு கட்டத்தில் தமிழக அடையாளம் காணாமல் போகும். வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம், பால் உற்பத்தி போன்று எல்லாவற்றிலும் மேலோங்கும்.

இது 'நீதிமன்ற உத்திரவு' என சொல்லி மத்திய, மாநில அரசுகள்  தட்டிக் கழிக்கலாம்.

"செல்லாக்காசு" விவகாரத்தில் மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற ஏகப்பட்ட அறிவிப்புகளையும், செல்லாத 500,1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் சிறை தண்டனை என சொல்லி, அதை மறுநாள் மாற்றிய மத்திய அரசுக்கு, ஜல்லிக்கட்டு பிரச்சினையில் அவசர சட்டம் கொண்டு வர கசக்கிறது. ஆட்சிக்கு வந்து அவசர கோல சட்டங்கள் பலவற்றை கொண்டு வந்த பா.ஜ.க இதில் மட்டும் பழைய பஞ்சாங்கத்தை புரட்டிக் கொண்டிருக்கிறது.

மாநில அரசை பொறுத்த மட்டில் ஜெயலலிதாவிற்கு பாரதரத்னா கொடுக்க வேண்டும், சிலை வைக்க வேண்டும் என பிரதமரிடம் மனு கொடுக்கத் தான் நேரம் இருக்கிறது. மத்திய அரசின் மின்துறையின் 'உதய்' திட்டத்திற்கு கையெழுத்து போட்டவர்களுக்கு இதை பேச மனம் இல்லை, கவலை இல்லை.

தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறந்துவிட உத்தரவிட்டும், கர்நாடக அரசு பணியவில்லை. அதை கேட்க நாதியில்லாத நீதிமன்றங்கள் இந்த ஜல்லிக்கட்டுக்கு இவ்வளவு முட்டுக்கட்டை போட காரணம் என்ன? யானையை வைத்து, ஒட்டகத்தை வைத்து மற்ற மாநிலங்களில் பல விளையாட்டுகள் நடக்கின்றன, இதை நீதிமன்றங்கள் கண்டு கொள்ளாது. உயிருக்கு ஆபத்தான கார் ரேஸ்களை நீதிபதிகளே துவக்கி வைப்பார்கள். இவை சரியா?

இந்தக் கேள்விகள் தான்  தமிழக இளைஞர்களை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக களத்தில் இறக்கி இருப்பதாக தோன்றுகிறது. மெரீனாவில் கூடியவர்களும், மதுரை துவங்கி பல நகரங்களில் திரண்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எழுச்சி யாருடைய ஏற்பாடும் இல்லாமல் தன்னெழுச்சியாக நடந்தவை.

நீட் தேர்வு, பொதுக்கல்வி என வேறுபட்ட அடையாளங்களை அழித்து, ஒரே அடையாளத்தை ஏற்படுத்த நினைக்கும் முயற்சியின் இன்னொரு வழியாகத் தான் இது இருக்கிறது.

பல்வேறு மொழிகளை அழித்து, ஒரே மொழி, ஒரே தேசம் என்ற முயற்சியாக இந்தியை திணிக்க முனைந்த போது தான் இந்தி எதிர்ப்பு 'தீ'யாக பரவியது. அதுவும் மாணவர் சமுதாயத்தின் போராட்டமாக உருவெடுத்தது.

இப்போது ஜல்லிக்கட்டு தடையும் தமிழினத்தின் அடையாளத்தை அழிக்கும் முயற்சியாக கொள்ளப்படுகிறது. அதன் வெளிப்பாடு தான், இந்த ஆண்டு நடைபெறும் மாணவர் போராட்டம்.

நீங்கள் அறியாமல் பொறியை கிளப்பி வீட்டிர்கள், தீ பரவும்.

# சட்டம் மிரட்ட மிரட்ட,   தமிழ் காளை திமிறும் !