பிரபலமான இடுகைகள்

வியாழன், 11 மே, 2017

இரும்புப் பெண்ணுடன் சந்திப்பு

பயணத்தில் இருந்தோம். சாலையின் நிலை காரணமாக, கார் மெல்ல நகர்ந்துக் கொண்டிருந்தது. அதிக மக்கள் நடமாட்டம் இல்லை. சாலையின் எதிர்புறத்தில் ஒரு ஆணும், பெண்ணும் நீண்ட தொலைவில் வந்துக் கொண்டிருந்தனர். "வடநாட்டு சுற்றுலாப்பயணிகள் நடமாட்டம் அதிகரித்து விட்டது" என்று நண்பர் சொன்னார். வந்து கொண்டிருந்தவர்களைப் பார்த்து தான் சொன்னார்.

இருவரையும் கார் கடந்தது. அந்தப் பெண்ணின் முகம் மின்னலாய் வெட்டியது. தலைக்கு மேல் போட்டிருந்த துப்பட்டா லேசாக மறைத்தாலும், அந்தக் கண்களின் குழந்தைத்தனம் அடையாளம் காட்டியது.  இருந்தாலும், இந்த இடத்தில் அவரா என்ற அய்யம். காரை திருப்ப சொன்னேன். அவர்களை கடந்து கொஞ்சம் தூரம் போய் நிறுத்தி, இறங்கினோம்.

நெருங்கி வந்தார்கள். உற்றுப் பார்த்தேன், அவரே தான். திடீரென வழியில் நின்று சிலர் உற்றுப் பார்ப்பதை கவனித்த அந்த பெண்ணுக்கு தயக்கம். உடன் வந்த ஆணும் நடையை தளர்த்தினார். புன்னகையோடு பார்த்தேன். அவர் தயக்கத்தோடே பார்த்தார்.

" if I'm not wrong, you  IROM" நான் முடிக்கும் முன்பே அவர் 'ஆம்' என்று தலையசைத்தார்.  சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தமைக்கு மகிழ்ச்சி தெரிவித்தேன்.

மணிப்பூர் மாநில அரசினை எதிர்த்து, பதினாறு ஆண்டுகாலம் உண்ணாவிரதம் இருந்த இரும்பு பெண்மணி "இரோம் ஷர்மிளா" தான் அவர்.

தீவிரவாதத்தை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் "ஆயுத சட்டத்தைக்" கொண்டு வந்து, சர்வாதிகார கரம் கொண்டு, கேள்விமுறை இல்லாமல் காக்கை, குருவிகளை சுடுவது  போல் அப்பாவிப் பொதுமக்களை சுட்டுத் தள்ளியதை எதிர்த்து தான் உண்ணாவிரதம் இருந்தார் இரோம், தனி ஆளாய்.

போராளியாக இருந்தவர், பொது வாழ்க்கைக்கு வர எண்ணி, நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மாநில முதல்வரை எதிர்த்துப் போட்டியிட்டார். 90 வாக்குகள் பெற்றார். "போராளிகளுக்கு இது தான் தேர்தல் வெளியில் கிடைக்கும் மரியாதையா?", என தேசிய அளவில் இது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

அவரைத் தான் சந்தித்தோம். அவரது போராட்ட வாழ்விற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தேன்.  கைக்கூப்பி தலைவணங்கி, கூச்சத்தோடு நன்றி தெரிவித்தார். உயிரைப் பணயம் வைத்து, நீண்ட போராட்டம் நடத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் என்பதற்கான சிறு அடையாளமும் இல்லை. ஒரு பள்ளி மாணவிக்கான மென்மையோடும், கூச்சத்தோடும் இருக்கிறார்.

நான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். உடன் இருந்த 'தேஷ்பாண்டேவை' அறிமுகப்படுத்தினார். இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவன், இந்த முறை வாய்ப்பை தவற விட்டேன், என்று சொன்னேன். ஆச்சரியத்தோடு பார்த்தார். "நான் அரசியல்வாதியாக இருந்தாலும், உங்கள் போராட்டத்தை மதிக்கிறேன். அதனால் தான் நிறுத்தி, வாழ்த்து சொல்கிறேன்", என்றேன். தலைவணங்கினார்.

" தேர்தல், தகுதியை நிர்ணயிக்கும் அளவுகோல் அல்ல. உங்கள் தியாகம் என்றும் மறக்க இயலாதது. அந்த தேர்தல் அனுபவத்தை மறந்து விடுங்கள். தைரியத்தை இழக்காதீர்கள், அதே இரோம் ஷர்மிளாவாகவே செயல்படுங்கள்" என வாழ்த்தினேன். மீண்டும் அதே தலைவணங்கிய கைக்கூப்பல். மெல்லியக் குரலில் நன்றி தெரிவித்தார். கண்களில் மாறாத அதேக் குழந்தைத் தனம்.

தேர்தல் தோல்வியால் மனம் சங்கடப்பட்டே, மன ஆறுதலுக்காக அவர் இங்கே வந்திருக்க வேண்டும்.  காலமும், மக்களும் அவருக்கு இந்த சூழலை ஏற்படுத்தி இருக்கலாம், ஆனால் வரலாறு அவரது போரட்டத்தையும், தியாகத்தையும் மறைக்க இயலாது.

ஏதும் உதவி தேவை என்றால் அழையுங்கள் என என் அலைபேசி எண்ணை கொடுத்தேன். புன்னகை மாறாமல் பெற்றுக் கொண்டு நன்றி தெரிவித்தார். விடை பெற்றோம்.

ஒடிசலான அந்த தேகம் தான் பதினாறு ஆண்டுகாலம் உணவே இல்லாமல், போராடியது. தனி மனிதப் போராட்டம் தான், ஆனாலும் தளரவில்லை அவர். அப்படிப்பட்டவரை தான், இந்த தேர்தல் தளர வைத்து விட்டதோ என்று மனம்  வருந்துகிறது.

இரோம்கள் இந்தியாவுக்கு வேண்டும்.

# அன்பு தங்கை இரோம், உன் பணி தொடர வேண்டும் !