பிரபலமான இடுகைகள்

புதன், 24 மே, 2017

மறக்க இயலாது இராமதாசனை

உட்கோட்டை என்று ஊர் பெயர் சொன்னால், ஜெயங்கொண்டம் ஒன்றிய திமுக தோழர்களுக்கு அண்ணன் இராமதாசன் பெயர் தான் நினைவு வரும். அந்த அளவிற்கு சிறப்பான கழகத் தொண்டர். மூத்த நிர்வாகி. முப்பது ஆண்டுகள் மாவட்டப் பிரதிநிதியாகப் பணியாற்றியவர். மாவட்டப் பிரதிநிதி என்பது மாவட்ட செயலாளரை தேர்ந்தெடுக்கும் வாக்குரிமை உள்ள பதவி. ஒரு மாவட்டக் கழகத்தை நிர்வகிக்கும் பதவி மாவட்ட செயலாளர்.

அண்ணன் ராமதாசன் 25 வயதுகளிலேயே மாவட்டப் பிரதிநிதியாகி விட்டார். அவர் வாக்களித்தத் தேர்தலில் மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்கப் பட்டவர் அய்யா அன்பில் தர்மலிங்கம் அவர்கள். தலைவர் கலைஞரின் அணுக்கத் தோழரும், கழக மூத்தத் தலைவர்களில் ஒருவருமான அன்பிலாரோடு பணியாற்றினார் ராமதாசன். அப்போது ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம்.

உறவினர் இல்லத்திற்கு ஆண்டிமடம் வருவார். ஆனால் அங்கு செல்லும் முன், அப்போதைய மாவட்ட துணை செயலாளரான என் தந்தை சிவசுப்ரமணியன் அவர்களை முதலில் சந்திப்பார். கழகம் தான் முதலில். அப்போது நான் பள்ளி மாணவன். அன்றிலிருந்து அவரைப் பார்க்கிறேன். எப்போதும் திமுக கரை வேட்டி, கையில் ஒரு கைப்பை, ஒரு திமுக கரை போட்ட துண்டு என இருப்பார். கடைசி வரை அப்படித் தான்.

அதிர்ந்து பேசமாட்டார். அவர் உடல் மொழியில் பணிவு நிறைந்திருக்கும். குழைந்த சிரிப்போடு அன்பானப் பேச்சு தான் எப்போதும். சைக்கிள், லாரி, பஸ் என பயணித்து கழகப் பணியாற்றியவர்.

எளிய நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர், உழைப்பால் முன்னேறியவர். நேரத்தின் பெரும்பகுதியை கழக வளர்ச்சிக்கு செலவிடுவார். 1978ல் திமுக எதிர்கட்சியான சமயத்தில் தலைவர் கலைஞரை உட்கோட்டை கிராமத்திற்கு அழைத்து வந்து பொதுக் கூட்டம் நடத்தினார். பின்னர் தளபதி அவர்களையும் அழைத்து கூட்டம் நடத்தியவர். கழக முண்ணனித் தலைவர்கள் பலரையும் ஊருக்கு அழைத்து வந்து கூட்டங்கள் நடத்தியவர்.

கழகத்தில் இருந்த நிர்வாகிகள் சிலர் துரோகம் இழைத்து வெளியேறிய நேரத்திலும் எஃகு தூணாக நின்றவர் இராமதாசன். பெரும்பான்மை சமூக எதிர்ப்புகளுக்கு பயப்படாமல் துணிந்து கழகப் பணியாற்றியவர். தேர்தலில் வாக்களித்தால் பிரச்சினை வரும் என்ற சூழலிலும் 1989 தேர்தலில் அண்ணன் க.சொ.கணேசன் அவர்களுக்கு கடுமையாக தேர்தல் பணியாற்றியவர்.

மறைந்த முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி அவர்களின் மனம் கவர்ந்த சிஷ்யர். அவர் ஆலோசனை பெற்று தான் செயல்படுவார். அவர் தலைமையில் தான் அண்ணன் இராமதாசன் இல்ல நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால் அவர் அமைச்சராக இருக்கும் போது ஒரு நாளும் உதவி நாடி செல்ல மாட்டார். அண்ணன் இராமதாசனுக்கு மூத்த அமைச்சர்கள் பலரோடு நெருங்கியப் பழக்கம். ஆனால் சுயநலத்திற்காக அவர்களை அணுக மாட்டார்.

கடந்த மார்ச் மாதம் தளபதி அவர்களுடைய பிறந்தநாள் நிகழ்ச்சி உட்கோட்டையில். அப்போது தான் சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வில் இருந்தார் அண்ணன் இராமதாசன். வீட்டிற்கு சென்று சந்தித்தோம். தன் உடல் நிலையை விட கழகப் பணிகள் குறித்தே எங்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

தலைவர் கலைஞர் பிறந்தநாள், பேராசிரியர் பிறந்தநாள், தளபதி பிறந்தநாள் ஆகிய நாட்களில் காலை 7.00 மணிக்கு அழைப்பார். "மாவட்டம், நான் சென்னை வந்துட்டேன். தலைவர் வீட்டில் இருக்கிறேன்" என தகவல் தந்து விடுவார். அது மாத்திரமல்லாமல், மாவட்டத்தில் பொதுக் கூட்டம், போராட்டம் என்றால் முதல் ஆளாக இருப்பார். நிகழ்ச்சிக்கு அரை மணி நேரம் முன்பே அங்கு இருப்பார்.

கடந்த 22ம் தேதி ஜெயங்கொண்டம் நகரில் கழகப் பொதுக் கூட்டம். அண்ணன் இராமதாசன் கண்ணில் படவில்லை. கூட்டம் முடிந்த அரியலூர் பயணிக்கும் போது அலைபேசியில் மெசெஞ்சர் பார்த்தேன். அண்ணன் ராமதாசன் மகன் அருள் செல்வன் ஒரு செய்தி அனுப்பி இருந்தார்.

"அண்ணா வணக்கம்,
என் தகப்பனார் உட்கோட்டை இராமதாசன் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சென்னை விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
ஆதலால் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமைக்கு மிகவும் வருந்துகிறார்..".

" அப்பா எப்படி இருக்கிறார்கள்?" எனக் கேட்டு இரவு 11.30க்கு பதில் அனுப்பினேன்.

நேற்று மாலை 4 மணி வாக்கில் அருள் பதில் அனுப்பி இருந்தார். "இன்று ஆஞ்சியோகிராம். இருதய அறுவை சிகிச்சை செய்ய டாக்டர் அறிவுரை வழங்கியுள்ளார்".

இன்று காலை 7.00 மணிக்கு அந்த செய்தி வந்துவிட்டது, "அண்ணன் இராமதாசன் மறைந்து விட்டார்".

இறுதி அஞ்சலி செலுத்தும் போது, அருள் அழுகைக்கு இடையே சொன்னார், " நேற்றைய மாலையும் அப்பா தான் பதில் அனுப்ப சொன்னாங்க. இரவு இப்படி ஆயிடுச்சி".

மரணத் தருவாயிலும் கழக நினைவு தான்.

# மறக்க இயலாது அண்ணன் இராமதாசனை !