பிரபலமான இடுகைகள்

திங்கள், 29 மே, 2017

ஹு ஆர் யூ பிரைம் மினிஸ்டர்

"ரெண்டு பரோட்டா, ஒரு ஃபீப் ப்ரை". தமிழில் சொன்னாலும் அவர்கள் புரிந்து கொள்வார்கள். ஆயிரம் ஆனாலும் அவர்கள் திராவிட மொழிக் குடும்பம் தானே. சிறு கடை தான். உள்புறம் சின்ன பெஞ்ச், சின்ன மேசைகள் வரிசையாக. குண்டு பல்ப் மஞ்சளாக ஒளி உமிழ்ந்துக் கொண்டிருந்தது. அது 2002. கிட்டத்தட்ட புரிந்திருக்கும். ஆமாம் "கடவுளின் தேசம்" கேரளா தான்.

அது தொழிற்முனைவராக இருந்த காலம்.  கேரளாவில்  ஜேசிபி வாடகைக்கு ஓடிக் கொண்டிருந்தது. அதனால் அடிக்கடி கேரளா சென்று வரும் வாய்ப்பு. போகும் போதெல்லாம் கேரள உணவை சுவைக்க கிடைக்கும் வாய்ப்பை விடுவதில்லை. காலையில் கிடைக்கும் ஆப்பம் - கொண்டக்கடலை, குழாப்புட்டு - நேந்திரம் வாழைப்பழம் எனத் துவங்கி, மதியம் மீன் பொளிச்சது, மீன் வறுத்தது என எதையும் விடவில்லை.

இப்படி இருந்தாலும் மாட்டுக்கறி "ஃபீப்" சாப்பிட வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் வாய்ப்பு கிடைத்த போது விடவில்லை. காரணம் கமல், அவர் வசனம்.  "வானத்தில பறக்கிற விமானத்தையும், கடல்ல மிதக்கிற கப்பலையும் தவிர ஊர்வன, பறப்பன, மிதப்பன எல்லாம் சாப்பிடுவேன்". அப்போ தான் கணக்கு பார்த்தேன், நாம எதெல்லாம் சாப்பிடிருக்கோம். விடுபட்டதில் முக்கியமானது மாட்டுக்கறி.

அந்த மாட்டுக்கறி சாப்பிடும் வாய்ப்பை தான் அடூரில் பெற்றேன். பரோட்டா கேரளாவில் தான் சாப்பிட வேண்டும். பொன் முறுவலா, அடடா. அதற்கு, மாட்டுக்கறி அத்தனை பிரமாதமானத் துணை. அப்போது முதன்முறை சாப்பிட்டவன், அதற்கு பிறகு கேரளா செல்லும் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் விடுவதில்லை. வெவ்வேறு வடிவத்தில், வெவ்வேறு சுவையில் ஃபீப் கிடைத்திடும்.

பிறகு அரியலூரில் ஒரு நாள் செந்துறை பைபாஸ் அருகில் ஃபீப் பிரியாணி பார்த்தேன், விடவில்லை. ரயில்வே கேட் அருகேயும் கிடைத்தது. அரியலூருக்கான சுவையோடு கிடைத்தது. கேரள சுவை இல்லாவிட்டாலும், இது ஒரு சுவை தான். சென்னையில் ஃபீப் கிடைக்கிறது.  கிடைத்தாலும், கேரள சுவைக்கு ஈடாகாது. ஃபீப் கிட்டத்தட்ட கேரளாவின் தேசிய உணவு .

இன்னொரு பக்கம் ஃபீப் என்பது தமிழகத்தில் பரவலாகக் கிடைக்காத உணவு என்று ஒருத் தோற்றம். ஆனால் நகரங்களிலும், கிராமங்களிலும் ஆங்காங்கே கிடைக்கிறது.  இப்போது ஃபீப் பிரியாணி புகழ்பெற்ற உணவாகி விட்டது.  அது ஏதோ இஸ்லாமியர்களும், ஒடுக்கப்பட்டோரும் நாடுகிற உணவு என ஊடகங்கள் கட்டமைக்க முயலுகின்றன. அது தவறு, பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட உணவாகி விட்டது மாட்டுக்கறி.

என் துணைவியார் அசைவம் சாப்பிடுகிறவர் தான்.  ஆனால், திருமணத்திற்கு முன், வாரம் மூன்று நாட்கள் விரதம் இருந்தவர். என்னால் அவரது விரதங்கள் கைவிட்டுப்  போயின. ஆயினும் மாட்டுக்கறி என்றால் வாய்ப்பே இல்லை என்று சொல்லக் கூடியவர் . அவருக்கு தெரியாமல் தான் கேரள சுவை ஃபீப். பிறகு அவரிடத்தில் சொல்லி விட்டேன்.

மருத்துவர் என்பதால், ஒரு பயிற்சிக்காக துணைவியார் கொச்சின் செல்ல வேண்டி வந்தது. அவருக்கு துணை என்ற பெயரில்  உடன் மகன்களோடு நானும் பயணித்தேன். தங்கும் அறை ஒரு மூன்று நட்சத்திர விடுதியில் ஏற்பாடு செய்திருந்தார்கள். காலை உணவு, அறை வாடகையில் சேர்ந்தது. பஃபே சிஸ்டம். ஆப்பம் கிடைத்தது. காலையிலேயே அசைவமும் இருந்தது. இரண்டு பாத்திரங்கள் இருந்தன.

ஒன்று சிக்கன் ஸ்டூ. இன்னொன்று ஃபீப் மசாலா. துணைவியாரும் மகன்களும் ஆப்பமும் சிக்கனும் சாப்பிட, நான் ஆப்பமும் ஃபீபும் சாப்பிட்டேன். மூன்று நட்சத்திர விடுதியில் கிடைத்ததால் அவர் ஒன்றும் எதிர்ப்பு சொல்லவில்லை. "எப்படி இருக்கிறது?" என்றுக் கேட்டார். "செம ஃடேஸ்ட்" என்றேன். "சரி. எஞ்சாய் பண்ணுங்க" என்று சொன்னார்.

# ஹோம் மினிஸ்டரே அனுமதித்த பிறகு, நீ யார் மேன் ப்ரைம் மினிஸ்டர் ?