பிரபலமான இடுகைகள்

திங்கள், 31 டிசம்பர், 2012

சட்டமன்ற உறுப்பினருக்கான பயிற்சி பட்டறை IIMB - 5


வகுப்புகளையும் பாடங்களையும் பற்றி சொல்வதற்கு இடையில் IIM –ன் கட்டிட வடிவமைப்பு குறித்து சொல்லியே ஆக வேண்டும்.

பெங்களூருக்கு மத்தியில், நூறு ஏக்கர் சோலைவனமாக திகழ்கிறது இந்த வளாகம். எந்தப் பக்கம் திரும்பினாலும் உயர்ந்து வளர்ந்த மரங்களும், செடிகளும், கொடிகளும் என பசுமை வனம்.

நேர்த்தியான புல்வெளியும், வெட்டிவிடப்பட்ட செடிகளும், சீராக பாய்ச்சப்படுகின்ற நீரும் என பராமரிக்கப்படுகின்றது இயற்கை. ஆட்கள் பணியாற்றியபடியே இருக்கிறார்கள்.



IIM-ன் கட்டிடங்கள், கட்டிடக் கலையின் உச்சம் என்று சொல்லலாம்.

எங்கு நோக்கினும் கருங்கல் பாறைகளாலான சுவர்களும், வர்ணம் பூசப்படாத கான்கிரீட் சுவர்களும், அதில் பசுங்கொடிகள் படர்ந்த அழகுமாக மிளிர்கிறது.

நீண்ட நீண்ட நடைபாதைகளே அந்த கட்டிட வடிவமைப்பின் சிறப்பம்சம். ஒவ்வொரு நடைபாதையும் ஒரு பர்லாங்க் தொலைவு இருக்கும். நடைபாதையுடைய மேற்கூறையின் (roof) உயரம் தான் பிரமிக்கவைத்தது.

ஒரு கட்டிடத்தின் மூன்றாவது மாடியின் கூறை என்ன உயரமோ, அந்த உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது நடைபாதையின் கூறை. கூறையும் முழுவதுமாக மூடப்பட்டதாக அமைக்கப்படவில்லை.


சில இடங்களில் மூடப்பட்டும், சில இடங்களில் திறந்த வெளியாகவும், சில இடங்களில் சிறுசிறு திறப்புமாக, சில இடங்களில் கொடிகள் படர்ந்ததாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது கூறை.

இப்படி கொடி போல் படர்ந்திருக்கிற நடைபாதையின் இருபுறமும், வகுப்பறைகளும், அலுவலக அறைகளும், நூலகமும், அங்காடியும், வங்கியுமாக சீரான இடைவெளியில் கிளைத்திருக்கின்றன.


கட்டிடக் கலை பயில்கிற மாணவர்கள் இந்த வளாகத்திற்கு வந்து, தங்களது இறுதியாண்டிற்கான ஆய்வறிக்கைகளை தயார் செய்கிற அளவிற்கு, சிறப்பான வடிவமைப்பு.

எந்த சூழலிலும் இயற்கையான ஒளியும், காற்றும் நிறைந்திருக்கின்ற கட்டிட வடிவமைப்பு.

அந்த நடைபாதையில் நடந்துக் கொண்டிருந்தோம் ச.ம.உ கணேஷ் மற்றும் சேகர் உடன் நானும். பயிற்சி இடம் Central Pergola என போடப்பட்டிருக்கிறதே, என்ன அர்த்தம் என்ற விவாதம் வந்தது.


சற்று விவாதத்திற்கு பிறகு விடை காணப்பட்டது. மூன்று பேரும் பொறியியல் படித்தவர்கள் தான். இருப்பினும் சரியான விடையை சொன்னவர் கணேஷ்.

அவர்கள் இருவரும் இயந்திரவியல் படித்தவர்கள், நானோ மின்னியல் மற்றும் மின்ண்ணுவியல். அந்த வார்த்தையோ கட்டிடப் பொறியியல் தொடர்புடையது. கொடிகள் படர்ந்த தொங்கும் தோட்டம் போன்ற மேற்கூறை என்பதே அதன் அர்த்தம்.

இந்த இயற்கை சூழலில் படிக்கின்ற மாணவர்கள், கொடுத்து வைத்தவர்கள் என்றே சொல்ல வேண்டும்...

( தொடரும்... )