பிரபலமான இடுகைகள்

திங்கள், 17 மார்ச், 2014

அப்பறவை மீண்டும் சிக்கிக் கொண்டிருக்கிறது...

அன்பு சகோதரர் அரங்கன்.தமிழின் முதல் கவிதை நூல் “மனம் காட்டிக் குறிப்பு”. 
வெளியீட்டு விழா நேற்று இனிது நடைபெற்றுள்ளது. நூலை வெளியிட்டவர் கவிவேந்தர் மு.மேத்தா. நூலை பெற்றுக் கொள்ள வேண்டிய நான் பங்கேற்க இயலாமல் போனது எம் மனம் வாட்டும் குறிப்பு.


                                             

மேத்தா அவர்களும், சிலம்பொலி செல்லப்பன் அவர்களும் பங்கேற்கும் நிகழ்ச்சியில் உரையாற்றுவது என் இலக்கிய சுய விவரக்குறிப்பில் கூடுதல் பலம் கொடுக்கும் என்பதாலும், என் மண்ணின் (அரியலூர்) கவிஞர் அரங்கன் கவிதைகளின் ரசிகன் என்ற முறையில் என் ரசிப்பை பகிர வேண்டும் என்பதாலும் முயற்சித்தேன்.

ஆனால் தேர்தல் பணி சுமை அழுத்திவிட்டது. அரங்கத்தில் பகிர இழந்த வாய்ப்பை உங்களோடு பகிர்ந்து மனச் சுமை குறைக்க விரும்புகிறேன்.

முகநூலில் தான் இணைந்தேன் அரங்கனோடு. ஆனால் கண்ணுக்கு தெரியாத பிணைப்புகள் பல ஏற்கனவே இருந்ததால், இணைப்பு வலுவானது. அவர் கவிதைகள் படிக்கத் தொடங்கிய பிறகு, அவர் ரசிகனானேன்.

அது போன்றே அவருக்கு முகநூலில் நட்பான “தினஇதழ்” நாளிதழின் முதன்மை ஆசிரியர் குமாரும் ரசித்திருக்கிறர். ரசித்தவர், இந்நூலை வெளியிட தூண்டி, உதவியது சிறப்பு. அவருக்கு நன்றி.

மனம் காட்டிக் குறிப்பு. நூலின் பெயரே மனம் குடைகிறது, மரம் கொத்திப் பறவை போல. இந்தக் கவிதைகள் ஆசிரியரின் மனம் காட்டும் குறிப்பு மட்டுமல்ல, படிக்கும் நம் மனதையும் தான்.

அவரது உணர்வுகளையே, வடித்திருக்கும் வார்த்தைகளின் வலிமையால் நம் உணர்வுகள் போல் எண்ண வைப்பது கவிஞரின் வெற்றி. எளிமையான வார்த்தைகள், ஆனால் கடுமையானக் கருத்துகள்.

அட, இதைத் தான் நாம் நினைத்திருந்தோம் என எண்ண வைக்கிறார், ஆனால் இப்படி வசப்படுத்தும் வார்த்தைகளால் இவரால் தான் சொல்ல முடியும் என்பது தான் அவரது கவிதைகளின் வெற்றி.

இக்கவிதைத் தொகுப்பை படித்து திளைக்கும் முடிவில் தான், இத்தொகுப்பின் முதல் கவிதையையே உணர்கிறோம்.

விடுதலையடைந்த அப்பறவை
மீண்டும் சிக்கிக் கொண்டிருக்கிறது
அக்கவிதையின்
மீளாச்சிறையில்...”


சிக்கித் தான் கொள்கிறோம், இக்கவிதைத் தொகுப்பின் கண்ணுக்கு தெரியாத மாயவலையில்.

இவரது கவிதையில் வெறும் கவிமயக்கம் மட்டும் இல்லை. சமூகத்தின் மீதான கோபத்தை வெளிப்படுத்தும் போது நம் மயக்கத்தை தெளிய வைக்கிறார். சமூகப் பிரச்சினைகளை கண்டும் காணாமல் செல்லும் போக்கை “மரண ஊர்வலத்து ஒதுங்குதலாய்
இயல்பாய் கடந்து போவீர்கள்” என்று சொடுக்குகிறார்.

“மணல் விடு தூது” கவிதையில் மணல் கொள்ளை குறித்து மனம் பதைக்கிறார். ‘என் இனிய துரோகி’ கவிதையில் 

கைகுலுக்கி,
தோள்கள் பற்றி,
கர்வப்புன்னகை கழற்றி வீசி,
நண்பா என்று
மார்பிலணைத்தும் கொல்லலாம்
’ என துரோகம் அழிக்க பாடம் நடத்துகிறார்.

கேட்கும் கேள்வியிலும், சொல்லும் பதிலிலும் இவ்வளவு விஷயமா என “கேள் சொல்” கவிதையில் ஆச்சரியப்படுத்துகிறார். “அமிலம் அடைக்கப்பட்ட பனித்துளி, ஆணிவேருக்குள் பூக்கும் மரம்” என புதிதாய் உவமைப்படுத்தி ஆதலால் செய்வீர், காதல் என கரைந்து போகிறார்.

ப்ரியங்களின்
சமரசமில்லா யுத்தத்தில்
நீங்கள் தோற்கடிக்கப்படுவீர்கள்”
என்று கவிக் கனவுலகில் சஞ்சாரிப்பவர், 


“குட்டி யானையில் பயணிக்கின்றன
கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகள்
” என “விழாக்கால கோலத்தை விவரிப்பதற்கு, இயல் வாழ்க்கையின் நாட்டு நடப்பிற்கு சடக்கென்று குதிக்கின்றார். இது தான் இவர் வெற்றி எனக் கருகிறேன்.

கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி, குப்பை பொறுக்கும் சிறுவர் வாழ்வு, தனிமை, வாட்டப்படும் இயற்கை, காணாமல் போகும் வாழைமரம், யானை, மோகம், காமம் என நமக்கும் புலப்படும், அவருக்கு மட்டுமே புலப்பட்ட பல பாடு பொருள்களை கண்டு உணர்ந்து, உருகி கவி பாடியிருக்கிறார்.

ஆனால் எதைப் பாடினாலும் அதுவாய் இருந்து, அதுவாய் வாழ்ந்து, அதுவாய் உணர்ந்து, அதுவாய் உணர்த்தி, அதுவாகவே ஆகி கவி படைத்திருக்கிறார். தொகுப்பின் கடைசி கவிதையில் சொல்வது போல...
சிறுவர் பூங்கா ஒன்று
எதிர்படுமென்கிறாய்
வண்ணத்துப் பூச்சியாகிறேன்” 


அவர் கவி வரிகளை சொல்லியே முடிக்க விரும்புகிறேன்.
தொலைந்துவிட்ட இதயத்திற்கு
வழிகேட்கும் படலமாய் நிகழலாம்
உன்னுடனான அடுத்த சந்திப்பு”


                        

# இந்தக் கவிதை நூலில் தொலைந்துவிட்ட இதயத்தை, உம் அடுத்த நூல் தான் மீட்கும். வாழ்த்துக்கள் !
 — with அரங்கன் தமிழ்.