பிரபலமான இடுகைகள்

திங்கள், 20 ஜூலை, 2015

தெறி மாஸ். செம ஹிட் !

காலையிலிருந்து வர ஆரம்பித்த அலைபேசி அழைப்புகளே "நீதி கேட்கும் பேரணி" நிகழ்ச்சியின்  வெற்றிக்கு கட்டியம் கூற ஆரம்பித்தன.

"அண்ண, கிராமத்தில இருந்து வந்த வேனெல்லாம் இல்லாம, நிறைய பேரு வந்துட்டாங்க. கைகாட்டியில ரெண்டு வேன் எக்ஸ்ட்ரா  இப்போ எடுத்தோம். எல்லா வேன்லயும் ஸ்டேண்டிங் தான்." அரியலூர் ஒன்றிய செயலாளர் ஜோதிவேல்.

"வர்றன்னு சொன்னவங்கள விட கூடுதலா இருக்கு வண்டி. ஆண்டிமடத்தில் அசம்பிள் ஆகிட்டோம் . கிளம்புறோம் ", ஆண்டிமடத்தில் இருந்து ஒன்றிய செயலாளர் தர்மதுரையும், துணை செயலாளர் முருகனும்.

"அய்யா, எங்க வேன் நிறைஞ்சி, நின்னுகிட்டு வர்ற நிலம ஆயிடுச்சி. நானும் நின்னுகிட்டு தான் வர்றேன், அப்ப தான் நின்னு கிட்டு வர்ற மத்தவங்க சங்கடப்படாம வருவாங்க " அசாவீரன் குடிகாடு ஊராட்சி செயலாளர்  கோடி.

வேப்பூர் ஒன்றிய செயலாளர் மதியழகன் அவர்களிடம் இருந்து குறுஞ்செய்தி "வேன் 23, கார் 52". மாணவரணி சுரேஷ் "கிளம்பிவிட்டதாக" முகநூலில் படத்துடன் செய்தி.  தா.பழூர் ஒன்றிய செயலாளர் கண்ணன் வாட்ஸ் அப்பில் படச் செய்தி. 

மணி 01.30.  தீப்பாஞ்சா கோவில் அருகே செந்துறை ஒன்றிய செயலாளர் ஞானமூர்த்தி, வரும் வாகனங்களுக்கு வழி சொல்லி, கணக்கு எடுத்துக் கொண்டிருந்தார். பரங்கிப்பேட்டை தாண்டி பெரம்பலூர் மா.செ அண்ணன் குன்னம் ராஜேந்திரன் இணைந்தார் . அண்ணன் பரமேஷ்குமார் உணவளித்தார். மணி 02.30.

மேடையை அடைய இரண்டு பர்லாங் இருக்கும் போதே லேசாக டிராபிக். சமாளித்து பயணித்தோம். தளவாய் தோழர்கள் பாதை அமைத்துக் கொடுத்தார்கள். மேடை பின்புறம் அடைந்தோம். ஒரு சிறு பந்தலில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் அமர்ந்திருந்தனர். மணி 03.00.

கும்பகோணம் ரத்தினசாமி புகைப்படத்திற்கு அழைக்க இந்தப் பக்கம் வந்தேன் . அருகில்  அண்ணன் பெரியண்ணன் அரசு இருந்தார். வாத்து மேய்ப்பது போல ஒரு குச்சியோடு வந்த பாண்டி அரவிந்த் அண்ணன் அரசு, அண்ணன் பாண்டி சிவா ஆகியோரோடு என்னையும் நிறுத்தி செல்ஃபி எடுத்தார். அந்தக் குச்சி செல்ஃபி ஸ்டிக்.

மேடையை நோக்கி நகர்ந்தோம். ஒரு கார் மேடை வரை வந்தது. முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி. உடல்நிலை சரியில்லை, நடை சிரமம், ஆனால் கழக உணர்வு அவரை வீட்டில் இருக்க விடவில்லை. வெயில் தாக்க, கிரேன் கேமராவின் ஒட்டு நிழலில் அமர்ந்தார்.

மணி 03.30. மேடையில் திருமுட்டம் ஆனந்தன் மைக் மூலம் கூட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார். சிதம்பரம் நகரம் செந்தில் கடைசி நிமிட மேடைப் பணிகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தார். ஒன்றிய செயலாளர் முத்து பெருமாள் மேடையில் மற்றவர்கள் ஏறாமல் இருக்க தொண்டரணிக்கு அறிவுறுத்தினார். ஜாபர் அலி இணையப் பணிக்கு தயாராக ஐபேடோடு உலாவிக் கொண்டிருந்தார். எதிரே திடல் நிரம்பிக் கொண்டிருந்தது.

03.45. "தளபதி கடலூரில் இருந்து கிளம்பி விட்டார்கள். 20 நிமிடங்களில் வந்து விடுவார்கள். மாவட்ட செயலாளர்கள் மேடையில் அமருங்கள்" என்றார்கள். மேடையில் 18 நாற்காலிகள். தளபதி மற்றும் பங்கேற்கும் 17 மாவட்டங்களின் செயலாளர்களுக்கு. பின் வரிசையில் ஒன்றியம் முத்து.பெருமாள், ஊ.ம.தலைவர் ஆகிய இருவருக்கு.

மேடையேறி அமர்ந்தோம். வெயில் இப்போது கொஞ்சம் டிகிரியை கூட்டியது. அண்ணன் நாகை மா.செ விஜயன், டிராபிக் ஜாமால் 4 கி.மீ நடந்து வந்து சேர்ந்தார். மேடைக்கு எதிரே மாநில அளவிலான நிர்வாகிகள், மற்ற மாவட்ட செயலாளர்கள் வந்து அமர்ந்தனர்.

04.30. இன்னும் தளபதி அவர்கள் வந்து சேரவில்லை. விசாரிக்கலாம் என்றால் அலைபேசி அசையவில்லை. லட்சக்கணக்கான மொபைல்கள் ஒரே இடத்தில் குவிந்ததால், நெட்வொர்க் ஜாம். இளைஞரணி கார்த்தியை கேட்டால் கடலூர் ரோட் ஜாம், அதான் லேட். பாலமுருகன் தண்ணீர் கொடுத்து எங்களை காத்தார்.

05.00 அண்ணன் பொன்முடி மைக்கை பிடித்து கூட்டத்தை ஒழுங்குப்படுத்திக் கொண்டிருந்தார். கிடைத்த காட்சிகளை அண்ணன் ஜெயின் கூபி கேமராவால் சுட்டுத் தள்ளினார். வீடியோவில் வந்த "நீதி கேட்போம்" பாடல் ஒலிபரப்பாகி முறுக்கேற்றிக் கொண்டிருந்தது.

05.30. கூட்டம் அலைமோத ஆரம்பித்தது. மேடைக்கு இடப்புறம் திடலை தாண்டி சாலை வரை மக்கள் வெள்ளம். எதிர்புறத்தில் தான் கண் கொள்ளாக் காட்சி. கடலூர்-சிதம்பரம் சாலையில் வாகனம் மாட்டியவர்கள் பத்து கிலோமீட்டருக்கும் மேற்பட்ட தூரம் நடந்து திடலில் நுழைந்த காட்சி சினிமா போர்காட்சி போல இருந்தது.

05.45. இருபது நிமிடத்தில் வந்திருக்க வேண்டிய பயணத்தை, இரண்டு மணி நேரம் பயணித்து தளபதி அவர்களின் வாகனம் மக்கள் வெள்ளத்தில் நீந்தி வந்துக் கொண்டிருந்தது. எலெக்ட்ரிக் ஷாக் போல லட்சக்கணக்கில் திரண்டிருந்த ஒட்டு மொத்தக் கூட்டமும் எழுந்து நின்றது. கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றி பெற்றால் கிரிக்கெட் மைதானத்தில் ஏற்படுகிற ஆனந்த அலை இங்கே.

தளபதி வாகனம் மேடையை ஒட்டி நின்றது. தளபதி இறங்கினார். மகிழ்ச்சி ஆரவாரம். படிகளில் ஏறினார், காலை நேர சூரியனை போல ஒளிப் பிழம்பாக. மேடை ஏறினார். மக்களை நோக்கி கையசைத்தார். மக்கள் கடலில் இருந்து அலை அடித்தது போல ஹோவென முழக்கம்.

தளபதி மேடையின் இடப்புறத்திலிருந்து மையப்பகுதியை நோக்கி நடந்தவாறு தொண்டர்களை பார்த்து வணங்கினார். அங்கிருந்து வலப்புறம் வரை கையசைத்து நடந்தார். மொத்தக் கூட்டமும் துள்ளிக் குதித்து கையசைத்தது, ஒட்டு மொத்த திடலும் அசைந்தது போல இருந்தது. ரஜினி படத்து ஓப்பனிங் பாடல் போல் அதிர்வு அடங்க வெகு நேரமானது. ஒரு வாரமாக பணியாற்றிக் கொண்டிருக்கும் ராக்போர்ட் இன்பாவும், இளைஞரணி நெய்வேலி ராஜேஷும் ஆனந்தமாய் பார்த்துக் கொண்டிருந்தனர். வெற்றியின் ஆனந்தம்.

மா.செ வெ.கணேசன் வரவேற்றிட, அண்ணன் பொன்முடி முன்னிலை உரை. இரண்டு மாதமாக பந்தல், கூட்ட ஏற்பாடு என உழைத்த அண்ணன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை உரையாற்றினார்.

நீதி கேட்கும் பேரணியின் கதாநாயகன் ஒலிவாங்கி முன் வந்து நின்றார். "வானத்து விண்மீன்கள் இறங்கி வந்தது போல் திரண்டிருக்கிற உங்களை " என்று  பன்ச் அடிக்க, எழுந்த கரவொலி விண்ணை எட்டியது. அதற்கு மேல் சரவெடியென முழங்கினார்.

முதல் வரியிலேயே வசியப்படுத்தியவர், கடைசி வரை கட்டிப் போட்டார்.

# தெறி மாஸ். செம ஹிட் !