பிரபலமான இடுகைகள்

புதன், 30 செப்டம்பர், 2015

தற்பெருமை பறை சாற்றா மனிதர்

நான் கடந்த வாரத்தில் உள்ளாட்சித் துறை மானியத்தில் பேசி இருந்தேன். இந்த வாரத்தில் மின் துறை மானியத்தில் பேச வேண்டியவர் திடீர் என வர முடியவில்லை.

இரண்டு நாட்களுக்கு முன் திடீர் என என்னை பேசச் சொல்லி சொன்னார்கள் முன்னாள் அமைச்சர் அண்ணன் ஏ.வ.வேலு அவர்களும், கொறடா அண்ணன் சக்கரபாணி அவர்களும்.

மின் துறை மானியத்தில் பேசுவது என்றவுடன் லேசாக தலை சுற்றியது. காரணம் அந்தத் துறை அமைச்சரை நினைத்து தான். காரணம் அண்ணன் அவ்வளவு பவர். டிபார்ட்மெண்ட் மட்டுமல்ல ஆளே பவர் தான் அண்ணன் நத்தம்.

கேள்வி நேரத்தில், சிறு கேள்வி கேட்டால் மற்ற அமைச்சர்கள் அய்ந்து வரியில் பதில் சொன்னால், அண்ணன் நத்தம் அய்ம்பது வரியில் தான் பதில் சொல்வார். அதற்கு மேல் அடுத்த கேள்வியே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விடவேண்டும்.

நீண்ட பதில் சொல்வது கூட பரவாயில்லை என்றிருக்கும் அவரது ஸ்டைல். கோர்வையாக இருக்காது, தெளிவாக இருக்காது. அதைத் தாண்டி நக்கலும் நையாண்டியும் ரொம்ப தூக்கலாக இருக்கும். தனி மனித தாக்குதல் வேறு. அப்படியே எதிராளியை கோபப்படுத்தி திசை திருப்பி விடுவார்.

அடுத்து இப்போது ஏன் மின்வெட்டு என்று கேட்டால், நான்கரை ஆண்டுகளுக்கு முந்தைய கழக ஆட்சியை குறித்தே பேசுவார். திமுக ஆரம்பித்தத் திட்டங்களை, அம்மாவின் சாதனை என்பார். மீறி தவறுகளை சுட்டிக் காட்டினால், ஆதாரம் இல்லை என்று சொல்லி சபாநாயகரை விட்டு அவைக் குறிப்பிலிருந்து பேச்சை நீக்க வைப்பார். ஆதாரம் காட்டினாலும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

இவரை சமாளிக்க ஒருவரை துணைக்கு அழைப்பது என்று முடிவெடுத்தேன். அவரது சட்டமன்ற உரைகள் புத்தகத்தை எடுத்தேன். 48 ஆண்டுகளுக்கு முன் அவர் ஆற்றிய உரை இப்போது  எனது முன்னுரையாக சொல்ல பயன்பட்டது.

குறிப்பெடுத்துக் கொண்டு பேசினேன். அவர்களால் குறுக்கிட முடியவில்லை. வரவேற்பையும் பெற்றது அந்த உரை.

புத்தகத்தை புரட்டினேன். கடந்த வாரத்தில் நான் என்ன உள்ளாட்சி மானியத்தில் பேசினேனோ, அதை அவர் முன்பே பேசி இருந்தார். சோழர் கால வரலாற்றை கோடிட்டு காட்டியிருந்தார்.

கேட்போர் மனம் புண்படாதவாறு தவறுகளை சுட்டிக் காட்டி இருந்தார். தற்பெருமை பறை சாற்றாமல்  வெற்றிகளை பட்டியல் இட்டிருந்தார். அரசியலில் இருப்போர் பாடப் புத்தகமாக கொள்ள வேண்டிய உரைகள்.

அதுவும் "எனது ஆட்சி"யின் முதல்வரும், "போற்றி, போற்றி" அமைச்சர் பெருமக்களும் படித்தல் நலம்.

கட்சியின் பெயரிலும், கட்சிக் கொடியிலும் அவரை கொண்டிருந்தால் போதுமா? நெஞ்சில் இருக்க வேண்டும்.

# அன்பு, அடக்கம், அறிவு. அவர் தான் அண்ணா !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக