பிரபலமான இடுகைகள்

வியாழன், 5 நவம்பர், 2015

கத்தாரிடம் கற்போம்

மியூசியம் போகலாம், என அழைத்த உடன் நம்மூர் மியூசியம் நினைப்பில் போனேன். முன்புறத் தோற்றமே மிரட்டியது. கத்தாரில் இருக்கிறோம் என்பதை நினைவுப் படுத்தியது. பரந்தப் புல்வெளி. பெரிய, சிறப்பான வாகன நிறுத்த வசதி. அங்கிருந்து மேல் தளத்திற்கு, கண்ணாடிக் கூண்டு மின் தூக்கி.

அது Museum of Islamic Arts.

முன்புறம் செயற்கை நீர் ஊற்று, சாரலில் நனைக்கிறது.  தானியங்கி கண்ணாடிக் கதவு விலகியது. திரைப்படத்தில் வரும் அரபு ஷேக் உடையில் ஒருவர் நின்றார். கைக்காட்டினார். இரும்பு கண்டுபிடிப்பான், நுண் கூர்மைக் கருவி என பாதுகாப்பு சோதனைகள்.

முடிந்து நிமிர்ந்தால், அய்ந்து நட்சத்திர விடுதி தோற்றம். இரண்டு அடுக்கு மாடி அளவிற்கு உயர்ந்த கூரை. பிரம்மாண்டத் தோற்றம். மிகப் பெரிய கண்ணாடி சன்னல்களுக்கு பின்புறம் பரந்தக் கடல், வானுயர்ந்த கட்டிடங்கள். முன்புறம் வசதியான இருக்கைகள் போடப்பட்டு, சின்ன உணவு விடுதி. அருங்காட்சியகம் என்ற எண்ணமே ஏற்படவில்லை.

இரண்டு தளங்களில் தொன்மையான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. முழுதும் குளிரூட்டப்பட்ட கட்டிடம் அது. உள்ளே இருக்கும் பொருட்களும் சேதம் இல்லாமல் இருக்கும். காண்போரும் சோர்வு இல்லாமல் காணக் கூடிய வாய்ப்பு.

மிக நேர்த்தியாக எல்லாப் பொருட்களையும் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். ஒரு வாள் காட்சியில் இருந்தால், அதற்கு தனி வெளிச்ச வசதி, அது குறித்த வரலாறு என சிறப்பான ஏற்பாடு.

வரலாற்று ரீதியான வாள், கேடயம் போன்ற போர் கருவிகள், அரண்மனையில் பயன்படுத்தியப் பொருட்கள், அரசர் உடைகள், கம்பளங்கள், கட்டிடக் கலையை பிரதிபலிக்கும் பொருட்கள் என பழைய காலத்திற்கே கொண்டு செல்கின்றது.

கத்தார் கழகத் தோழர்களுடன், நாங்கள் பத்து பேர் சென்றிருந்தோம். ஒரு பள்ளியின் வரலாற்றுப் பிரிவு மாணவர்கள் குழு போல் ஒவ்வொரு பொருளாக பார்த்து மகிழ்ந்தோம். அது குறித்து விவாதித்தோம்.

ஒரு விஷயம் பெரும்பாலானோர் கவனத்தைக் கவர்ந்தது. ஒரு குதிரையும், அதன் மேலமர்ந்த வீரனும் தான். போர் வீரன் தரிக்கும் பாதுகாப்பு கவசம் இது வரை நாம் அறிந்தது. இங்கு வீரன் தரித்த கவசத்தை விட, குதிரைக்கு அணிவிக்கப்பட்டிருந்த கவசம் கவனம் கவர்ந்தது.

இடையில் ஒதுங்கிடம் சென்றோம். கை, முகம் கழுவி விட்டுப் பார்த்தால், அங்கு ஒரு கைக்கடிகாரம் இருந்தது. உடன் வந்த குமார் அவசரமாக வெளியேறினார். அருங்காட்சியகப் பாதுகாவலரை அழைத்து வந்து, அதனைக் காட்டி, அவரிடம் ஒப்படைத்தப் பிறகே நகர்ந்தார். கத்தார் கட்டுப்பாடு புரிந்தது.

காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் பத்து நூற்றாண்டு காலத்திற்கானவை. அவை பல நாட்டில் இருந்து வந்தவை. அதிலும் இந்தியாவில் இருந்து வந்தப் பொருட்கள் பல. ஆனால் கத்தார் வரலாறு என்று பார்த்தால் ஒரு இருநூறு ஆண்டுகளுக்கான தான்.

இது தான் மனதில் ஒரு சங்கடத்தை ஏற்படுத்தியது. இருநூறு ஆண்டு வரலாறு இவ்வாறு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என்றால், நம் தமிழகத்தின் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கான சாட்சிகள் கண் முன் நிற்பவற்றைப் பாதுகாக்க, காட்சிப்படுத்த எவ்வளவு தவறி இருக்கிறோம்.

#கத்தாரிடம் கற்போம் !