பிரபலமான இடுகைகள்

புதன், 21 ஆகஸ்ட், 2013

இவங்க திரும்பி வந்து சுதந்திரம் வாங்கி, போச்சுடா..."

" நாங்க எல்லாம் சுதந்திரத்திற்காக போராடும் போது ஆங்கிலேயர்கள் அவ்வளவு துன்புறுத்துவாங்க. மகாத்மா காந்தியோட தலைமையேற்று அவரது ஆணைப்படி நாங்க போராட்டக் களத்துல இருந்தோம்"

அது ஆண்டிமடம் அரசு மேல்நிலைப்பள்ளி. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எம்.எஸ்.தங்கராசு படையாட்சி வழக்கம் போல் கொடியேற்றி வைத்து பேச ஆரம்பித்தார். நான் ஏழாம் வகுப்பு மாணவன். மாணவர்கள் எல்லாம் கொடிமரத்திற்கு எதிரில் திடலில் அமர்ந்திருக்கிறோம்.

திடலை சுற்றிலும் வேப்பமரங்கள். ஆனால் காலை எட்டு மணி என்பதால் கிழக்கில் இருந்து எழும்பும் சூரியன் எங்கள் முகத்தை தான் தாக்கும். எதிர் வெயில். நேரம் ஆகஆக மெல்ல வெப்பம் அதிகரிக்கும். வியர்வை தலைகாட்ட ஆரம்பிக்கும்.

" உப்பு சத்தியாக்கிரகத்தின் போது மகாத்மா காந்தி தண்டிக்கு யாத்திரை போனார். அப்போ நாங்க எல்லாம் ராஜாஜி தலைமைல திருச்சிலேருந்து வேதாரண்யம் கிளம்பினோம். அப்ப இருந்த சுதந்திர உணர்ச்சி அப்படி. சொந்த வேலய விட்டுட்டு சுதந்திரத்துக்கு போராடுனோம்."

யதார்த்தமா, ஜோடனை இல்லாம எளிமையா பேசுவார் எம்.எஸ்.டி அவர்கள். முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர், முன்னாள் ஜில்லா போர்டு மெம்பர், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் மூத்த காங்கிரஸ் தலைவர், சுதந்திர போராட்டத்தில் நேரடியாக பங்கேற்றவர்.

ஆண்டிமடம் அரசு மேல்நிலைப் பள்ளியின் வளர்ச்சியில் முழுமையான பங்காற்றியவர். அவர் மறையும் வரை அவர் தான் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர். உடல் நலம் சரியாக இருந்தவரை அவர் தான் ஒவ்வொரு வருடமும் கொடியேற்றி வைத்து உரையாற்றுவார். ஆனால் எல்லோருக்கும் அவர் அருமை தெரியுமா...

பின்னாடி இருந்து லேசா முணுமுணு பேச்சு கேட்க ஆரம்பிக்கும். பத்தாவதுல ஒரு அராத்து செட் இருக்கும். அங்கேருந்து தான் கமெண்ட் வரும். "இப்போதாண்டா வேதாரண்யம் கிளம்பியிருக்காங்க. இவங்க திரும்பி வந்து சுதந்திரம் வாங்கி, போச்சுடா..."

"குடுக்கறது நார்த்தங்கா மிட்டாய். இதுக்கு எவ்வளவு நேரம்டா உட்கார்ந்துருக்கறது" இது அடுத்த செட். பேச்சு கேட்கும் திசை நோக்கி பி.டி.மாஸ்டர் சாம்சன் நகர்வார். அவரை பார்த்து சத்தம் லேசாக அடங்கும். ஒவ்வொரு வருடமும் இது வழக்கம்.

எம்.எல்.ஏ-வான பிறகு, ஒரு பள்ளியில் என்னை கொடி ஏற்றி வைக்க அழைத்திருந்தார்கள். கொடி ஏற்றி வைத்து பேச ஆரம்பித்தேன். "நமக்கு சுதந்திரம் பெற்று தர நம் முன்னோர்கள் சிந்திய ரத்தத்தையும் அவர்களது தியாகத்தையும் நாம் நினைத்து பார்க்க வேண்டும்". நீண்ட உரை தயார்.

மாணவர்களின் கடைசி வரிசையில் ஒருவர் வாட்சை பார்க்க, ஒருவர் சூரியனை பார்க்க, ரெண்டு பேர் முணுமுணுக்க, என் மனக் கண்ணில் பழையக் காட்சிகளில் ரீவைண்டாகியது.

" அந்த சுதந்திரத்தை நாம் பேணி காக்க வேண்டும், மதிக்க வேண்டும். வணக்கம்" பேச்சை முடித்துக் கொண்டேன். ஒரே நிமிடம்.

# கொடி வணக்கம், ஜெய்ஹிந்த் !!