பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

லப்பைக்குடிகாடு தான், “கேட் வே ஆப் இந்தியா”...

எங்கள் குன்னம் தொகுதியின் ஒரே பேரூர் “லப்பைக்குடிக்காடு”.

முழுதும் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதி. இந்த ஊரை அரபு நாடுகளின் "மினியேச்சர்" என்றே சொல்லாம். காரணம் வீட்டுக்கு ஒருவர் அரபு நாடுகளில் பணியில் இருப்பார்கள், அதே போல வெளிநாட்டு பொருட்கள் எளிதாக, உண்மையானதாக கிடைக்கும் என்பதாலும். 

பணிபுரிய செல்பவர்கள் அந்தந்த நாட்டின் குடிமகன்கள் போலவே ஆகிவிடுவார்கள். ஆனால் வருடம் ஒரு முறை ஊர் வந்து தங்கள் பங்களிப்பை செய்ய தவறமாட்டார்கள், வீட்டுக்கு மட்டுமல்ல, ஊருக்கும்.

சுற்றிலும் இருக்கும் பல ஊர்களிலில் இருந்தும், பலரும் இதே போன்று அரபு நாடுகளிலேயே பணியாற்றுகிறார்கள். அதன் காரணமாக அந்த ஊர்களின் தோற்றமே மாறி வருகிறது. 

எங்கள் பகுதிக்கு லப்பைக்குடிகாடு தான், கிட்டத்தட்ட “கேட் வே ஆப் இந்தியா”. காரணம் சுற்றிலும் இருக்கும் கிராமத்தை சேர்ந்தவர்கள் இந்த ஊரில் இருக்கும் ஏஜெண்ட்கள் மூலமாக வெளிநாடு சென்றிருப்பார்கள், அல்லது சென்றவர்கள் மூலமாக சென்றிருப்பார்கள்.

இந்த ஊர் பெரம்பலூர் மாவட்டத்தின் எல்லையில் கடைகோடியில் இருக்கிறது. வெள்ளாற்றின் கரையில் இருக்கிறது. ஒரு கிலோ மீட்டரில் அக்கரை கடலூர் மாவட்டம். கிழக்கே பத்து கிலோமீட்டரில் அரியலூர் மாவட்டம். மேற்கே பதினைந்து கிலோமீட்டரில் சேலம் மாவட்டம். 

ஒரு தீவு போல சுற்றி பல்வேறு சமூகத்தவர்கள் வசிக்கும் கிராமங்களுக்கிடையே தான் இந்த ஊர் அமைந்திருக்கிறது. இது வரை மதப்பிரச்சினை என்பது இந்தப் பகுதியில் கிடையாது, காரணம் அனைவரிடமும் தாயாய் பிள்ளையாய் பழகுபவர்கள். 

இந்த நல்லிணக்கத்தை சீர்குலைக்க பல்வேறு முயற்சிகள் நடந்த போதும் அத்தனையும் முறியடிக்கப்பட்டு இன்றும் அதே அன்பு தொடர்கிறது. தொடரும்...

ரம்ஜான் பிரியாணி இந்த ஊரில் தயாராகிறது என்றால் சுற்றுப்பட்டு கிராமங்களில் மணக்கும், விருந்தாய் மலரும்....

# சூடான பிரியாணி சூப்பர்