பிரபலமான இடுகைகள்

புதன், 9 டிசம்பர், 2015

கடலூருக்கு கை கொடுப்போம்

பெயர் தான் "கள்ளுக்கடைமேடு". ஆனால் அது 'தண்ணீரில் மூழ்கிய பள்ளம்' ஆகி விட்டது. மழைக்காலம் என்றாலே இவர்களுக்கு கண்ணீர் காலம் தான். கடலூர் நகரில் இருந்து 20 கி.மீ தூரத்தில், சிதம்பரம் சாலையில் இருக்கும் ஊர்.

வழக்கமான மழைக்காலத்தை விட இது கொடுங்காலம் ஆகிவிட்டது. குள்ளஞ்சாவடி அருகில் இருக்கும் பெருமாள் ஏரி நிரம்பி விட்டது. திறந்துவிட்ட தண்ணீர் பரவனாற்றில் மிதந்து போகிறது.

மிதந்து போகும் நீர் ஆற்றை மட்டும் நிரப்பி போகவில்லை. சுற்றி இருக்கும் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை மூழ்கடித்து செல்கிறது. அப்படியே இடையில் குறுக்கிடும் கடலூர் - சிதம்பரம் சாலையில் இருக்கும் பாலம் அதற்கு போதாமல் போய் விட்டது.

எனவே அந்த இடத்தில் அப்படியே சாலை மீதேறி மொத்த நிலப்பரப்பையும் மூடி சென்றிருக்கிறது பரவனாறு. இது தீபாவளியை ஒட்டி பெய்த மழையில். அப்படிப் போன வெள்ளம் பக்கத்தில் இருக்கும் கள்ளுக்கடைமேடு ஊரை விட்டு வைக்கவில்லை.

உள்ளே புகுந்த நீர் வீடுகளில் நுழைந்து வெளியேறியது. வீட்டில் எந்தப் பொருளும் தப்பவில்லை. அன்றிலிருந்து இது வரை மூன்று முறை பதம் பார்த்து விட்டது மழை வெள்ளம். அப்போதிலிருந்து எந்த வேலைக்கும் செல்ல முடியாத நிலை ஊர் மக்களுக்கு. வருமானமுமில்லை.

கிராமத்தை சேர்ந்த அசோக் சொன்னார்,"கலைஞர் கெவுர்மெண்ட் இருக்கும் போது, இந்தத் தண்ணி நேரா கடல்ல கலக்கற மாதிரி ஒரு வாய்க்கால் திட்டம் போட்டாங்க. 'அருவா மூக்குத் திட்டம்'. அத இந்த அரசாங்கம் அப்படியே போட்டுட்டாங்க".

தீபாவளி மழைக்கு அப்புறம் இப்படியே அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  20 கார்ல போனாரு. நாங்க மறிச்சு நிறுத்தினோம். எங்க மனுவக் கூட வாங்கல. என்னன்னும் கேக்கல. கும்பிட்டுட்டு போயிட்டாரு. இது வரைக்கும் அரசாங்க உதவியும் இல்ல. ஆளுங்கட்சில இருந்தும் யாரும் வரல.

ஒரு வாரம் மழை நிக்காதப்ப, எல்லார் வீட்டுல இருக்கற பொருளையும் சேத்து சமைச்சி சாப்பிட்டோம். அப்புறம் சில பேரு சாப்பாடு கொண்டாந்து கொடுத்தாங்க. இந்தப் பொருள்லாம் கொடுத்ததுக்கு நன்றி சார்".

ஓரிரு கட்டடங்களை தவிர மீதியெல்லாம் குடிசைகள். கூடி இருந்தவர்களில் ஓரிருவரை தவிர மீதி அனைவரும் ஏழ்மையானவர்களாகவே இருந்தனர். உதவிப் பொருட்களை பெற்றுக் கொண்டு நன்றியோடு வணங்கினர்.

அடுத்து மேட்டுப்பாளையம் கிராமம் சென்றோம். அங்கும் இதே நிலை. நிவாரணப் பொருட்கள் வழங்கி விடைபெற்றோம். செந்துறை ஒன்றிய திமுகழகத் தோழர்கள் திரட்டிய பொருட்கள்.

அவர்கள் நிலையை பார்த்த தோழர்களுக்கு, நம்மால் முடிந்த உதவி என்ற ஒரு திருப்தி.

ஊருக்குள் நுழையும் போது லேசாக இருந்தத் தூறல் இப்போது வலுக்க ஆரம்பித்திருந்தது. அவர்களுக்கு மற்றுமொரு சோதனை துவங்குகிறது .

#கடலூர் மாவட்டத்திற்கு கை கொடுப்போம் !