பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 24 ஜனவரி, 2016

ஒரு கட்டுரையின் கதை

சட்டமன்றக் கூட்டத் தொடரின் கடைசி நாள். நக்கீரன் அலுவலகத்தில் இருந்து இணை ஆசிரியர் அண்ணன் லெனின் அழைத்தார். "சட்டப்பேரவையின் இறுதிக் கூட்டத் தொடர். விமர்சனம் எழுதிரலாமா?". "அனுப்பிடறேன் அண்ணா" என்றேன். "நாளைக் காலை 10மணிக்கு அனுப்பிடுங்க".

சென்னையில் இருந்து அரியலூருக்கு கிளம்பினேன். கார் பயணம்.  ஏறி அமர்ந்ததும் அலைபேசியை எடுத்து விமர்சனக் கட்டுரையை தட்டச்ச ஆரம்பித்தேன். தொடர்ந்து வந்த அலைபேசி அழைப்புகளுக்கு இடையில் தட்டச்சு தொடர்ந்தது.

இடையில் சிங்கப்பூரில் இருந்து ஒரு அழைப்பு. அந்த அழைப்பு தான் இந்த நிலைத் தகவலுக்கு காரணம். அதை கடைசியில் சொல்கிறேன்.

பாதி கட்டுரையில் தூங்கிப் போனேன். நள்ளிரவு அரியலூர் வந்தேன். காலையில் 10 மணிக்கு தொண்டப்பாடி கவுன்சிலர் மகராஜன் புதுமனைப் புகுவிழா சென்று விட்டு, ஜெயங்கொண்டம் பயணத்தில் கட்டுரையை தயார் செய்யலாம் என்று இருந்தேன். அப்போது தான் அந்த செய்தி.

புதுமனைப் புகுவிழாவுக்கு வந்த டாடா ஏஸ் கவிழ்ந்து 20 பேர் கடுமையாக அடிபட்டு அரியலூர் மருத்துவமனையில் உள்ளார்கள். நேரே மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் கூறி, மருத்துவர்களை சந்தித்து விட்டு கிளம்பும் போது மணி 11.30. கட்டுரை தயாராகவில்லை. அண்ணன் லெனின் அழைத்துவிட்டார். நேரம் வாங்கினேன்.

ஜெயங்கொண்டம் நகராட்சி கவுன்சிலர் தேவீஸ்வரி புதுமனைப் புகுவிழா. கலந்து கொண்டு கங்கை கொண்ட சோழபுரம் விரைந்தேன். கத்தார் சென்ற போது உடன் இருந்து உபசரித்த  குமார் புதுமனைப் புகுவிழா. இதற்கிடையில் அலைபேசி அழைப்புகள். "மருதூர் துக்கத்திற்கு எப்ப வர்றீங்க?".

12.30 இடைப்பட்ட பயணத்தில் இரண்டு பத்தி தயாராகியது. 01.20 மருதூர் கிராமத்தை அடைந்தேன். செயலாளர் விஸ்வநாதன் உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினேன். "கீழப்பட்டி கங்காசலம் இறந்துட்டாரு. மாலை வச்சிடலாமா?". "சரி, போகலாம்".

அங்கிருந்து வாளரக்குறிச்சி பயணம். மதியம் 02.15க்கு அடைந்தேன். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கண்ணன் பாட்டி வள்ளியம்மை படத்திறப்பு விழா. 12.30க்கு சென்றிருக்க வேண்டிய நிகழ்ச்சி. படத்தை திறந்து வைத்து இரங்கல் உரையாற்றினேன். அதற்கிடையே அண்ணன் லெனின் அழைத்து விட்டார்.

"அண்ணா, தொடர் பயணம். தயாராகிக்கிட்டு இருக்கு". "04.30க்குள் அனுப்பிடுங்க". காரில் ஏறியவுடன் மீண்டும் தட்டச்சு.  நிண்ணியூரை சென்றோம். "சாமிநாதன்-தையல்நாயகி" தம்பதியினரின் திருமணம் நடந்து அறுபதாம் ஆண்டு விழா. வாழ்த்து பெற்றோம்.

அங்கிருந்து முள்ளுக்குறிச்சி பயணம். மணி மாலை 04.00. ஊராட்சி செயலாளர் பாண்டியன் இல்லத்தில் தேநீர் அருந்துவதற்குள் ஒரு பத்தி. வெள்ளாற்றில் சேதமடைந்த தரைப்பாலத்தை பார்வையிட ஒன்றிய செயலாளர் அண்ணன் ஞானமூர்த்தி அழைத்தார். பயணத்தில் இறுதி பத்தி தட்டச்சு.

வெள்ளாற்றை பார்வையிட்டோம். காரில் ஏறி கட்டுரையை முடித்து இமெயில் அனுப்ப முயன்றால், சிக்னல் இல்லை. கொஞ்சம் பயணித்து, சிக்னல் வந்தவுடன் மெயிலை அனுப்பி அலைபேசியை வைத்தேன். அண்ணன் லெனின் அழைத்தார். மணி 05.00.

ஒரு கட்டுரை தயாராக இவ்வளவு நெருக்கடி. என்னிடம் பெறுவதற்குள் அண்ணன் லெனினுக்கு ரத்த அழுத்தம் எகிறி இருக்கும். இப்போ இந்த நிலைத் தகவலும் நடிகர் வாகை சந்திரசேகர் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் பொதுக் கூட்ட மேடையில் தட்டச்சியது.

எதுக்கு இவ்வளவு பில்டப்ன்னு கேட்பீங்க. சிங்கப்பூரில் இருந்து வந்த அந்த அழைப்பு தான் காரணம். கல்லக்குடி மது அழைத்தார். "அண்ணா, ரொம்ப நாள் சந்தேகம். நீங்க தான் எழுதுறீங்களா? நீங்களே டைப் பண்றீங்களா?". இதுக்கு எப்படி நேரம் கிடைக்குது?". இது போல நிறையப் பேருக்கு சந்தேகம். சிலர் கேட்கிறாங்க, பலர் கேட்பதில்லை.

இப்படித்த்த் தான் எழுதறேன் மது.

# ஒரு கட்டுரையே,  ஒரு கட்டுரையை உருவாக்கிட்டுதே !