பிரபலமான இடுகைகள்

வியாழன், 16 மே, 2013

கண்கள் ஒத்துழைக்காமலே ஒளிரும் கல்விமணி, கலைமணி“மார்க்கு எவ்வளவும்மா ? “
“வரலாறுல 200 சார். மாநிலத்தில இரண்டாமிடம்.”
“மத்த பாடத்தில எல்லாம் ? “
“காமர்ஸ் 200, எக்கனாமிக்ஸ் 198, அக்கவுண்டன்சி 186, தமிழ் 185, ஆங்கிலம் 179, மொத்தம் 1148 சார் “

பெயர் கலைமணி, குடும்பத்தின் கண்மணி, கண்கள் ஒத்துழைக்காமலே ஒளிரும் கல்விமணி, 90% பார்வை குறைப்பாட்டோடு இன்று சாதனைமணி.
அரியலூர் மாவட்டத்தின் உள்ளடங்கிய பரணம் கிராமத்தை சேர்ந்தவர். உள்ளூர் அரசு துவக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை பயின்றார்.

புத்தகத்தை கண்ணின் மிகஅருகே வைத்து படிக்க வேண்டிய சூழலில், படிப்பே சுமையானது. பத்து வருடத்திற்கு முன்பே தந்தையை இழந்த சூழலில் தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார் கலைமணி.

பாட்டி சரஸ்வதிக்கு பெருமிதம் “ இங்க படிக்க கஷ்டப்பட்டுச்சி, பெரம்பலூர் ஸ்கூல்ல சேர்த்தோம். அவிங்க புள்ளைங்க மாதிரியே பார்த்துக்கிட்டாங்க. இப்போ மாநிலத்தில இரண்டாமிடமாம். அதுவும் இதுமாதிரி பசங்கள்ள முதலிடமாம்”.

அது பெரம்பலூரில் உள்ள அன்னை ஈவாமேரி ஹாக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி. அங்கிருக்கும் பயிற்றுனர்களே அன்னையராக திகழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் பாடங்களை கேசட்டில் பதிந்து கொடுத்ததை கேட்டு இந்தத் தேர்ச்சி.

ஹெலன் ஜெயராணி, ஹேமா ஆரோக்கிய மேரி, ஜெயா மேரி, பெல்சி என நான்கு ஆசிரியத் தாய்களையும் நன்றி பாராட்டுகிறார். தேர்விலும் கலைமணி சொல்வதை கேட்டு எழுதிய ஆசிரியர் அப்போதே பாராட்டியிருக்கிறார், “ நீ சாதிக்கப் போகிறாய்”.

இன்று சென்று பாராட்டி வந்தேன் மண்ணின் பெருமைக்குரிய மகளை. மேலே படிப்பது எதுவரை முடியுமோ, அதுவரை படிக்க வலியுறுத்தி, உதவிட நாங்களிருக்கிறோம் என்று தைரியமளித்து வந்தேன்.

# கலைமணி நீ எங்கள் பொன்மணி !