பிரபலமான இடுகைகள்

வியாழன், 10 ஜூலை, 2014

அய்யனார்கள் ஆட்சியாளராகனும்....

மதுரைக்கு மீனாட்சி ஆலயம் அடையாளம் என்பது தெரிந்ததே. இன்னொரு அடையாளம் உணவு. இன்றைய சென்னையின் முருகன் இட்லி கடையின் பூர்வீகம் மதுரை.

அது போல பல இட்லி கடைகள், மெஸ்கள், ரெஸ்டாரண்ட்கள் என கணக்கற்ற உணவகங்கள். அதில் இட்லி கடைக்கு போனால் பத்துக்கும் மேற்பட்ட சட்னி வகைகள் கொடுத்து அசத்துவார்கள்.

அன்று ஒரு நண்பர் ஒரு மெஸ்ஸை பரிந்துரைத்தார். “இல்லை, சைவம் தான். எங்கு போகலாம் ?” என்றோம். “வடக்கு மாசி வீதி தாண்டி போனால் வடக்கு வடம் போக்கி தெருவும், கிருஷ்ண தெப்பகுளம் தெருவும் சந்திக்கிற சிக்னல் வரும்.” வந்தது.

“எதிரில் போனால் புதிய நாயக்கர் தெரு. அதில் சக்தி சிவன் தியேட்டர்” என்றார். இருந்தது. அதிலும் “சைவம்” திரைப்படம் தான். “எதிரில் நிற்கிற தள்ளுவண்டிக்கு போய் பாருங்கள். அப்புறம் நீங்களே சொல்வீர்கள்” என்றார்.

போனோம். தள்ளுவண்டி இருந்தது, இரவு நேரக் கடைக்கான அத்தனை அடையாளங்களோடும். மூன்று டைனிங் டேபிள்கள். காத்திருந்து இடம் கிடைத்தது. அடுத்த மேசையில் பரிமாறிய சிறுவன் வந்தான். “என்ன இருக்கிறது ?”


“இட்லி, தோசை, தோசையில் பொடி தோசை, பூண்டுப் பொடி தோசை, பருப்புப் பொடி தோசை, மிளகுப் பொடி தோசை, புதினா தோசை, கருவேப்பிலை தோசை, கொத்தமல்லி பொடி, எள்ளு பொடி தோசை என எட்டு வகை தோசைகள்”என்றான். சற்றே மிரண்டோம்.

“இட்லி, அப்புறம் பூண்டுப் பொடி தோசை”. சிறுவன் பம்பரமாக சுழன்றான். இலை வைத்ததும் தெரியவில்லை, இட்லி வைத்ததும் தெரியவில்லை. ஒரு பெரியவர் சட்னி எடுத்துக் கொடுத்தார். இன்னொருவர் தோசைகல்லை கையாண்டார்.

அடுத்த டேபிளுக்கு புதிதாக வந்தவர்கள் தோசை கேட்க, “முதலில் இரண்டு இட்லி சாப்பிடுங்க. சூடா இருக்கு” என்றான். அவர்களும் மறுக்கவில்லை. பெரியவரிடம்,”அரை ஈடு இட்லி தான் இருக்கு, முடிச்சிடுறேன்” என்றான் கிசுகிசுப்பாக.

கவனம் ஈர்த்தான். பூண்டு பொடி தோசை வைத்தான். “அடுத்து புதினா தோசை கொடுக்கவா ?” என்றான். “பெயர் என்ன?”என்றேன். “அய்யனார்” என்றான். “என்ன படிச்சிருக்க?” என் வழக்கமான கேள்வியை கேட்டேன். “படிக்கிறேன்” என்றான்.

நிமிர்ந்து உட்கார்ந்தேன்,”என்ன படிக்கிறப்பா?”. “டி.எம்.இ”. “எங்கே?“. “கல்லுப்பட்டியில் இருக்கும் பாலிடெக்னிக்கில்”.இதற்கிடையில் பக்கத்து மேசைகளுக்கும் தவறாமல் பரிமாறிக் கொண்டிருந்தான். இடையிடையே பெரியவருக்கும், இன்னொருவருக்கும் உத்தரவு போட்டுக் கொண்டிருந்தான்.


                              Photo: தானே உழைத்து, கல்வி கற்கும் அய்யனார்.

எனது ஜூலை-7ம் தேதிய நிலைத்தகவலில் இடம் பெற்ற அய்யனாரை சந்தித்து புகைப்படத்தை கமெண்ட்டில் இடம் பெற செய்த அண்ணன் மாடக்குளம் பிரபாகரன் அவர்களுக்கு நன்றி.

# வெள்ளந்தி சிரிப்புடன் வெல்வாய் அய்யனார் !

“முதலாளி யார்?”என்றேன். பெரியவரை காட்டினான், இன்னொருவரைக் காட்டி,“அவர் மகன்” என்றான். “நான் பகலில் காலேஜ் போயிட்டு இங்க இரவு வேலைக்கு வரேன்” என்றான். சொன்னவன் அடுத்த மேசைக்கு தோசையோடு சென்றான். உணவு முடிந்தது.

கிளம்பும் போது பெரியவரைப் பார்த்து சொன்னேன், “தம்பி படிப்ப தொடரணும். பார்த்துக்கங்க”. “கண்டிப்பாக பார்த்துக்கறேன். அவன் பெரியாளா வருவான்ங்க”என்றார். உயர்ந்த உள்ளம்.

# இந்த அய்யனார்கள் கல்வியிலும், வாழ்விலும் உயர வேண்டும் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக