பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 25 ஜூலை, 2014

கங்கை கொண்ட சோழபுரம் - ஆலயம் மட்டுமல்ல...

ஆன்மீகவாதிகளுக்கு அது சிறப்பானதொரு ஆலயம். உள்ளே உள்ள பெருவுடையார் என அழைக்கப்படுகிற சிவலிங்கம் தஞ்சாவூர் பெரியகோவிலில் உள்ள பெருவுடையாரை விட அளவில் பெரிது என மகிழ்வோரும் உளர்.

             

ஆனால் கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள ஆலயம் கட்டப்பட்ட போது, மாமன்னன் ராசேந்திரன் மனதில் என்ன எண்ணம் இருந்திருக்கும் என்பது புரியவில்லை.

அரச குடும்பம் தங்குவதற்கு மாளிகைமேடு பகுதியில் அமைக்கப்பட்ட அரண்மனை அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. மைசூர் போன்ற மற்ற அரண்மனைகளை ஒப்பிடும் போது இது சிறிய அளவிலேயே உள்ளது.

அரண்மனையை ஒப்பிடும் போது கோவிலுக்கு ராஜேந்திரசோழன் கொடுத்த முக்கியத்துவம் கூடுதலாகவே தெரிகிறது. பாதுகாப்புக்கு அமைக்கப்பட்ட சுற்று சுவரானது வழக்கமான சோழர் கால ஆலயத்தை போலவே அமைக்கப்பட்டிருந்தாலும் தனித்துவம் தெரிகிறது.

கோவில் உள் நந்தியை தாண்டி நுழைந்தால் பெரிய மண்டபம். நூற்றுக்கும் மேல் தூண்களை கொண்ட மண்டபம் உள்ளது. இது மகாமண்டபம் என அழைக்கப்பட்டுள்ளது. மற்ற கோவில்களில் மண்டபம் தனியாக இருக்கும் அல்லது கர்ப்பகிரகத்தை சுற்றி அமைக்கப்பட்டிருக்கும்.

மற்றக் கோவில்களில் இந்த மண்டபங்கள் ஆயிரங்கால் மண்டபம், மணிமண்டபம் என அழைக்கப்படும். இது நடன நிகழ்ச்சிகள் மற்றும் ஆன்மிக கூட்டங்களுக்காக அமைக்கப்பட்டிருந்தாலும், இங்குள்ள அமைப்பு சமயங்களில் அரசவை கூடுவதற்காகவும் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் தான் மகாமண்டபமோ.


            

கர்ப்பகிரகத்திற்கு முன்புறமுள்ள படிக்கட்டுகளில் ஏறினால், கர்ப்பகிரகத்திற்கு மேலுள்ள அறைகளுக்கு செல்ல முடியும். இது கோபுரத்திற்கு கீழுள்ள பகுதி. இந்தப் பகுதி பொருட்களை சேகரித்து வைக்கக்கூடிய இடமாகவும் பயன்பட்டிருக்கிறது.

போர்காலங்களிலோ அல்லது மற்ற காலங்களிலோ அரசாங்கத்தின் களஞ்சியமாக இருந்திருக்கக்கூடும். ரகசியமாக மற்றோர் பார்வைக்கு படாமல் இருக்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

அதே போல, இந்த மேலே உள்ள அறை சுற்றி மூடப்பட்டிருந்தாலும் காற்று அருமையாக வருகிறது, குளிர்ச்சியாகவும் இருக்கிறது. அவசரகாலங்களில் ஒளிந்து கொள்ளவும் வசதியாக இருக்கும். மேலேயுள்ள கோபுர அடுக்கின் மேல் ஏறினால் பல கிலோமீட்டர் தூரத்திற்கு பார்க்க முடியும், கண்காணிப்பு கோபுரமாக பயன்பட்டிருக்கிறது.


            

கீழே கர்ப்பகிரகத்திலும் இதே போன்று குளிர்ச்சியாகத் தான் இருக்கும். சிறப்பான கட்டிடக்கலை. கோபுரம் அமைக்கப்பட்டுள்ள முறையும் யோசித்துப் பார்க்க முடியாத கட்டிடக் கலை. அதிலும் தஞ்சை கோவிலிலிருந்து வித்தியாசப்படுத்தி நிறைய அம்சங்கள்.

இவ்வளவு தொழில்நுட்பம் முன்னேறியுள்ள இந்தக் காலத்தில் இந்த கோவிலுக்கு வரைபடம் வரைவதென்றாலும், பொருட்களை சேகரிப்பதென்றாலும், கட்டிமுடிப்பதென்றாலும் நினைத்து பார்க்க முடியாத விஷயம்.

ஆனால் அந்த காலத்தில் போக்குவரத்து வசதியில்லாமல், எந்திரங்கள் இல்லாமல், தொழில் நுட்ப வசதியில்லாமல் இத்தகைய பிரம்மாண்ட கோயிலை கட்டியது அசாத்திய சாதனை.

நுணுக்கமான திட்டமிடல், துல்லியமான ஒருங்கிணைப்பு, பெரும் மனித உழைப்பு என இத்தனையையும் கொண்டு வெறும் ஆலயமாக மாத்திரம் அமைத்திடாமல் அது பல கண்ணோட்டத்தோடே அமைக்கப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது.

கண்காணிப்புக் கோபுரம், ரகசிய பாதுகாப்பிடம், களஞ்சியம், கூட்ட அரங்கம் என பலவகையில் பயன்படும் முறையில் ஆட்சியையும் கணக்கில் கொண்டு இக் கோவிலை அமைத்துள்ளான் மாமன்னன் ராஜேந்திரன். அதனால் தான் வித்தியாசப்பட்டு உயர்ந்து நிற்கிறான்.

                        

# அரியணை ஏறி ஆயிரம் ஆண்டு, வரலாறாய் இருப்பாய் கணக்கில்லா ஆண்டு !