பிரபலமான இடுகைகள்

புதன், 16 ஜூலை, 2014

தமிழர்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், ஆந்திராவில் !

இது தான் நகரிக்கு செல்வது முதல் முறை. திருப்பதி செல்லும் வழியில் இருக்கும் அதே நகரி தான். கல்லூரி கால அறை நண்பர் பாலகிருஷ்ணனின் தந்தை மறைந்த செய்தி கேட்டு நண்பர்கள் விரைந்தோம்.

பாலா யு.எஸ்ஸிலிருந்து காலை தான் வந்து இறங்கியிருந்தார். நாங்கள் மதியம் போய் சேர்ந்தோம். திருப்பதி செல்லும் சாலையில் தடக்கென இடதுபுறம் திரும்புகிறது. நகரி, சிறு நகரம்.

உள்ளே நுழைந்தவுடன் பிரம்மாண்ட சிலை. 10 அடி உயரத்தில் மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டி கம்பீரமாக. நாலுரோட்டில் நாலாப்புறமும் டிஜிட்டல் தட்டி. எல்லாத் தட்டியிலும், அட “நடிகை ரோஜா”. அவர் தான் இப்போ நகரி எம்.எல்.ஏ.

கடைகளில் ஜாங்கிரியை பிய்த்து போட்டது போல் தெலுகு போர்டுகள். மூளையில் லாங்குவேஜ் ஆப்சனில் ‘தெலுகை’ ஆக்டிவேட் செய்து வழி கேட்க தயாரானேன். கண்ணீர் அஞ்சலி நோட்டீஸ் கண்ணில் பட்டது,”தாமோதரம் மறைவு”.

அதை காட்டிக் கேட்க முனைந்த நண்பருக்கு பதில் வந்தது தமிழில், “அந்த ரோட்டில் போனீங்கன்னா ரெண்டாவது சந்து”. இறங்கி அவர் காட்டிய ரோட்டில் நுழைந்தோம். “கடக், கடக்” முதல் வீட்டில் இருந்து சத்தம் வந்தது.

ஒவ்வொரு வீட்டிலிருந்தும் அதே சத்தம். பவர்லூம் தறி சத்தம். காது நிரம்பியது. இந்த கடக்கை தாண்டுவதற்குள் அடுத்த வீட்டு “கடக்”. இதில் ஒரு வீட்டில் உச்சஸ்தாயியில் ரேடியோ அலறியது, “பொன்னெழில் பூத்தது”

நண்பர் வீட்டை அடைந்தோம். பறை இசை முழங்கிக் கொண்டிருந்தது. உடலை குளிப்பாட்டி இறுதிக் கட்ட சாங்கியங்கள். பெண்கள் சுற்றி வந்து அழுது கொண்டிருந்தார்கள்.


               (படம் - ஓவியர் மணிவர்மா)

பூ அலங்காரத்துடன் எளிய பாடை. அப்படியே தமிழ்நாட்டு கிராமத்து சடங்குகள். ‘கோவிந்தா, கோவிந்தா” என்று முழங்கி இறுதி ஊர்வலம் கிளம்பியது. நண்பனுக்கு ஆறுதல் கூறியவாறு உடன் நடந்தோம்.

அரை கிலோ மீட்டர் தூர பயணம். வழியில் ஒரு நூலகம் கண்ணில் பட்டது. தமிழ்மக்கள் நிதியளித்து கட்டியது போல. தமிழிலேயே கல்வெட்டுகள், நிதியளித்தோர், திறப்பாளர் விபரங்களுடன்.

வழியெங்கும் வீடுகள் முன் கோலங்கள். சுவர்களில் சுபாரி பாக்கு விளம்பரம் மட்டும் தெலுகில் இருந்தது. மற்றபடி தமிழ் போஸ்டர்கள், நோட்டீஸ்கள். சன் டைரக்ட் டிஷ் ஆண்டெனாக்கள்.

ஊரில் நுழைந்ததிலிருந்து கிளம்பும் வரை ஒரு போஸ்டர் நீக்கமற நிறைந்திருந்தது, “விஜய் பிறந்தநாள் போஸ்டர்” சித்தூர் மாவட்ட ரசிகர்கள் சார்பாக.

இடுகாட்டை அடைந்தோம். பாடையுடன் இடுகாட்டை மூன்று சுற்று, விறகு அடுக்கி, மேலே விராட்டி அடுக்கி, மேலே வைக்கோல் போட்டு உடலைக் கிடத்தி அப்படியே நம் கிராம நடைமுறைகள்.

இடுகாட்டை சூழ்ந்திருந்த சிறு குன்றுகளுக்கு அப்புறமிருந்து ஸ்பீக்கரில் தொடர்ந்து தமிழ் சினிமாப் பாடல்கள், கல்யாண வீடு போலும். வந்திருந்த உறவினர்கள் செல்லிலும் தமிழ் ரிங் டோன்.

சடங்குகள் தொடர்ந்தன. “வாய்க்கரிசி போடறவங்க வரலாம்”. ஆங்காங்கே பேசிக் கொண்டிருந்தவர்கள் நூறு வார்த்தை பேசினால் இரண்டு வார்த்தைகள் தெலுகில், மற்றபடி முழுதும் தமிழ் தான். தமிழ்நாட்டு பார்டரில் இருப்பதால் இப்படி இருக்கலாம்.

ஆனால் அடுத்து என் கண்ணில் பட்டது தான் ஹைலைட். அங்கே அரசு சார்பில் கட்டிக் கொடுத்திருந்த இறுதி காரியங்களுக்கான பொதுநல சமுதாயக் கூடம். அதன் திறப்பு விழா கல்வெட்டு.

2005-ல் திறக்கப்பட்ட போது அன்றைய நகரி எம்,எல்.ஏ செங்கா ரெட்டி, திருப்பதி எம்.பி சிந்தாமோகன் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டது குறித்த கல்வெட்டு, தமிழில்.

ஒரு எழுத்துக் கூட தெலுகில் இல்லை, அனைத்தும் தமிழில். ஆந்திர அரசாங்கம் அமைத்தது.

# நகரி மக்கள் தமிழோடும், தமிழ் உணர்வோடும் தமிழர்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், ஆந்திராவில் !