பிரபலமான இடுகைகள்

வியாழன், 31 ஜூலை, 2014

மாமன்னன் இராஜேந்திர சோழன் - மேலாண்மை தலைவன் !

                   Rajendra Chola I

மாமன்னன் இராசேந்திரனின் எழுச்சிமிகு வரலாறு குறித்த கருத்தரங்கில் இல.தியாகராசன் அவர்களை கடைசியாக பேச அழைத்தார்கள். எழுத்தாளர் பாலகுமாரன், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஆகியோர் பேசிய பிறகு இவரை பேச விடுகிறார்களே என இவரை அறியாதவர்கள் பார்த்தனர்.

பேச ஆரம்பித்தார். முழுதும் நிரம்பிய மேட்டூர் அணையை திடீரென திறந்து விட்டால் எப்படி நீர் பீரிட்டு வெளியேறுமோ, அப்படி கருத்துகள் வந்து விழுந்தன. ஒரு செகண்ட் தவறினாலும் முக்கிய செய்தியை தவற விட்டுவிடுவோமோ என கூர்ந்து கவனிக்க வேண்டியதாயிற்று.

“’மண்ணின் மேல் வான் புகழ் நட்டானும், மாசு இல் சீர்ப்
பெண்ணினுள் கற்புடையாள் பெற்றானும், உண்ணு நீர்க்
கூவல் குறை இன்றித் தொட்டானும், இம் மூவர்
சாவா உடம்பு எய்தினார்’ என்று திருகடிகம் கூறியது. இதில் மூவர் என்று கூறப்பட்டது”

“ஆனால் இந்த மூன்று வாய்ப்புகளை பெற்ற ஒருவன் யாரென்றால் அது இராஜேந்திரன் தான். தன் தந்தை பெற முடியாத வெற்றிகளை பெற்று மண்ணில் வான் புகழ் நட்டான். தான் இறந்த போது உடன்கட்டை ஏறிய வீரமாதேவியை பெற்றான். நீர்வளத்தை சோழகங்கம் மூலம் பெருக்கி குறை இன்றி தொட்டான்”

“அப்போதே முதன்முதலாக, Transfer of Capital என்ற முறையை கையிலெடுத்து வறண்ட பகுதிக்கு தலைநகரை மாற்றி 86 ஊர்களை தோற்றுவித்து, இந்தப் பகுதி வளர்ச்சிக்கு வித்திட்டவன்”

“240 ஆண்டுகளுக்கு இராஜேந்திரன் உருவாக்கிய கங்கைகொண்ட சோழபுரம் தமிழ்நாட்டிற்கு தலைநகராக இருந்தது. அதைத் தாண்டி தென்னிந்தியாவிற்கு தலைநகராக இருந்தது. அதையும் தாண்டி தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு தலைநகராக விளங்கியது”

“அரியலூர் பகுதியில் ஓடும் மருதையாற்றில் வாய்கால்களை வெட்டி பாசன வசதியை பெருக்கினான். மருதையாற்றில் சிறப்பாக கலுங்கு, மதகுகளை கட்டி பெருமை பெற்றான்.”

“கடலூர் மாவட்டத்தில், திட்டக்குடி அருகே பாசன வசதிகளை பெரிய அளவில் தருகிற ‘வெலிங்டன் ஏரி’ இராஜேந்திரன் வெட்டிய ‘உத்தம சோழ பேரேரி’ ஆகும்”

( நான் ஏற்கனவே அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஊர் பெயர்கள் குறித்து பதிவிட்ட தகவலில் இல்லாத இன்னும் பல ஊர் பெயர்களுக்கு விளக்கம் சொன்னார். அப்போது கூடியிருந்தோர் அனைவரும் வியந்து போயினர்)

“இன்று இருக்கும் ‘செட்டித் திருகோணம்’ கிராமம் இராஜேந்திரன் உருவாக்கிய ‘மதுராந்தக சோழபுரம்’. விக்கிரம சோழபுரம் இன்று ‘விக்கிரமங்கலம்’. ‘வஞ்சினபுரம்’ இவை எல்லாம் வியாபார நகரங்களாக விளங்கின”

“வானவன் மாதேவி சதுர்மங்கலம் என்று உருவாக்கப்பட்ட நகர் இன்று ‘நாகமங்கலம்’ ஆகிவிட்டது. சேத்தியாத்தோப்பு அருகே உள்ள சோழதரம் ஏற்கனவே ‘சோழ உத்தமபுரம்’ என்பதாகும்”

“இலங்கை வரை படையெடுத்து பெற்ற வெற்றியையும், பாண்டியன் மணிமுடியை கைப்பற்றியதையும் இராஜேந்திரன் மிக முக்கியமானதாகக் கருதினான். அதைக் கொண்டாட 86 இடங்களுக்கு ‘முடிகொண்ட’ என துவங்குகிற பெயர்களை சூட்டினான். அவனும் ‘முடிகொண்ட சோழன்’ என புகழப்பட்டான்”

“ராஜேந்திரன் மனைவி லட்சுமிக்கு ‘சுத்தமல்லி’ என்ற பெயரும் உண்டு. அவள் பெயரால் அயன்சுத்தமல்லி, ஜெமீன்சுத்தமல்லி என ஊர்கள் உருவாக்கப்பட்டன.”

“சோழர்களின் சம்பந்திகள் பழவேட்டரையர்கள். இவர்கள் தலை நகர் ‘மேலப்பழவூர்’ ஆகும். இதற்கு அருகில் பவித்திரமாணிக்க பேரேரி என்று வெட்டப்பட்டது இப்போது ‘மலத்தான் குளம்’ ஆகும்”

“கங்கை வரை சென்று கங்கை நீரை கொண்டு வந்த வெற்றியை கொண்டாடும் விதமாக இரண்டு ஊர்களை அமைத்தான். அவை விழுப்புரம் அருகிலுள்ள ‘எண்ணாயிரம் கோவில்’, இன்னொன்று குத்தாலம் அருகேயுள்ள 'திரைலோக்கி”

“திருவாரூர் கோவிலை கற்றளியாக்க வேண்டிய ராஜேந்திரனின் ‘அணுக்கி’ பரவை நினைவாக அமைந்த ஊர் குன்னம் அருகேயுள்ள பரவாய். இதே போல பரவைபுரம் என்ற ஊரும் உருவாக்கப்பட்டது”

“படைவீரர்களுக்கு நிலங்களை தானமாக அளித்தான் ராஜேந்திரன். ‘குலோத்துங்க நல்லூர்’ உள்ளிட்ட ஊர்கள், வீரர்கள் அனுபவிக்க ‘வீரபோகமாக’ அளிக்கப்பட்டது”

“ராஜேந்திரனின் மகன் ராஜாதிராஜன் பெயரில் ஜெயங்கொண்ட சோழபுரம் என்ற நகரம் அமைக்கப்பட்டது. ஜெயங்கொண்ட சோழபுரம் முன்னர் நெம்மேலி என்ற கிராமம். இது அதிகம் நெல் விளையும் ஊர் என்பதால் ஏற்பட்ட பெயர்.”

“வாரியங்காவல் கேரளாவில் உள்ள ஆரியங்காவு பெயரில் ஏற்படுத்தப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து வரும் பொருட்கள் கேரளா துறைமுகங்களில் இறங்கி கங்கைகொண்ட சோழபுரம் வரும் வணிகப்பாதையில் (trade route) இந்த ஊர்கள் அமைந்தன“

கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து ஜெயங்கொண்டம், வாரியங்காவல், செந்துறை, ராயம்புரம், அரியலூர், பழவூர், திருமழப்பாடி வரையிலான பாதை பெருவழிப் பாதை என அழைக்கப்பட்டது. அந்த நினைவாக அமைக்கப்பட்ட கோவில் ‘பெருவழியப்பா கோவில்’ உஞ்சினி கிராமத்தில் தற்போது உள்ளது”

“மாமன்னன் இராஜேந்திர சோழன், வணிக மேலாண்மை, நீர் மேலாண்மை, உள்ளாட்சி மேலாண்மை, நுண்கலை மேலாண்மை என ஆட்சியை சிறப்பாக நடத்தியதால் தான் மிகுந்த புகழ் பெற்று விளங்குகிறான்”

இப்படி இன்னும் பல அரிய, அறியாதத் தகவல்களை அள்ளிக் கொட்டினார். சுருக்கெழுத்து தெரியாததால் இவ்வளவு தான் குறிப்பெடுத்ததைக் கொண்டும், நினைவில் இருத்தியவையைக் கொண்டும் பதிவிட்டுள்ளேன்.

இந்த உரையை வழங்கிய பேராசிரியர் இல.தியாகராஜன், தொல்பொருள் ஆய்வாளர். அரியலூர் அரசுக் கலைக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவர் கொடுத்த தகவல்களை பார்த்தால் மாமன்னன் இராஜேந்திரனோடே, கங்கைகொண்ட சோழபுரத்தில் வாழ்ந்திருப்பாரோ என்ற சந்தேகம் எழுகிறது.

# அவன் அந்த சிறப்புப் பெயருக்கு முழுக்கத் தகுதியானவன் – அதிசய சோழன் !