பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 27 ஜூலை, 2014

சோழகங்கம் - சலமயமான சயத்தம்பம்

கங்கை கொண்ட சோழபுரம் பெருவுடையார் கோவிலை கட்டியதும், கடாரம், ஈழம் என வென்றதும் மாத்திரம் மாமன்னன் ராஜேந்திரனின் சாதனையாகக் கருதக் கூடாது. அவனால் வெட்டப்பட்ட "சோழகங்கம்" ஏரியானது அவனது முத்திரை அடையாளமாகும்.

            

கங்கை வரை படையெடுத்து வெற்றிக் கொண்டதை கொண்டாட, தான் வெட்டிய ஏரிக்கு "சோழகங்கம்" என்று பெயரிட்டான்.

கடந்தப் பதிவில் பார்த்தது போல், எப்படி கங்கை கொண்ட சோழபுரம் ஆலயம் இரு பயன்பாட்டுக்கு உபயோகமோ, அப்படியே சோழகங்கம் வெட்டப்பட்டதும். ஒரு செயலில் இரு பயன்பாடு.

அவ்வளவு உயரமான கோவிலை கட்ட சாரம் அமைப்பது என்பது ஆகாதக் கதை. கீழேயிருந்து சுவர்களை கட்ட கட்ட சுற்றி மண்ணை நிரப்பி, அதன் வழியாக கற்களைக் கொண்டு சென்று, மறுபடியும் சுவர் எழுப்பி, மீண்டும் மண்ணை நிரப்பி என்று தான் கோவில் கட்டப்பட்டிருக்கும் என்பது ஆய்வாளர்கள் பார்வை.

இதற்கு தேவையான மண்ணை எடுப்பதற்கு வெறுமனே நிலத்தை வெட்டாமல், அதனை ஏரியாக அமைக்கத் திட்டமிட்டு, எங்கு மண் வெட்டுவதற்கு ஏதுவாக இருக்கிறது என்று ஆய்ந்து அமைத்ததே சோழகங்கம்.

அதுவும் எங்கோ அமைத்து விட்டால் அதற்கான நீர் ஆதாரம் என்ன செய்வது என யோசித்து, தெற்கே கொள்ளிடத்தில் இருந்து நீர் கொண்டு வந்தால் எங்கு ஏரி அமைய வேண்டும் என திட்டமிட்டு, இன்னொரு புறம் வடக்கே வெள்ளாற்றில் இருந்தும் நீர் வர திட்டமிட்டு, மலைக்க வைக்கும் திட்டம்.

வழக்கமாக அணை கட்டுவதானால், இரண்டு மலைகளுக்கு இடையே கட்டுவது தான் இன்றைய காலம் வரை கடைபிடிக்கப்படும் தொழில் நுட்பம். ஆனால் கரிகால் சோழன் அமைத்த கல்லணை அப்படி இல்லாமல் சமதளத்தில், மணற்பரப்பில் கட்டினான். சிந்தித்து பார்க்க முடியாத தொழில் நுட்பம்.

அது போல் ஏரி வெட்டுவது ஆற்றை ஒட்டியோ, வாய்கால்களை ஒட்டியோ வெட்டப்படும். இங்கே ஏரி அமைப்பதற்காக வாய்கால்கள் வெட்டப்பட்டன. தமிழகத்தில் பெரும்பாலும் ஆறுகளும், அதிலிருந்து வெட்டப்படும் வாய்கால்களும் கிழக்கு, மேற்காகத் தான் இருக்கும். இங்கு வடக்கு, தெற்கு.

இப்படி எல்லாமே பிரத்தியேகமாக, வித்தியாசமாக சிந்தித்து அமைக்கப்பட்டதே சோழகங்கம். ராஜேந்திரனால் பல நூறு ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட இந்த ஏரி காலப் போக்கில் ஆக்கிரமிப்புகளால் குறுகிவிட்டது. இப்போது பல மாதங்களுக்கு நீரின்றி வறண்டும் காணப்படுகிறது.


           

இப்போதும் ஏரி, ஒரு கி.மீ அகலத்திற்கு, நான்கைந்து கி.மீ நீளத்திற்கு இருக்கிறது, அப்போதைய தோற்றத்தை நினைத்தால் சிலிர்க்கிறது. இந்த ஏரி பாசனத்தால் சுற்றி இருந்த வயல்கள் பொன் விளையும் பூமியாக மாறியதால் தான் இந்த ஏரி "பொன்னேரி" என்றழைப்படுகிறது.

எங்கள் பகுதியில் சிமெண்ட் ஆலைகளுக்காக, சுண்ணாம்பு கல் சுரங்கங்கள் உண்டு. பெரிய இயந்திரங்களையும், டிப்பர் லாரிகளையும் கொண்டு அமைக்கிறார்கள். அதனோடு ஒப்பிடும் போது, வெறும் மனித சக்தியை கொண்டு இவ்வளவு பெரிய ஏரியை வெட்டியது பிரமிப்பானது.

திருவாலங்காடு செப்பேட்டில் சோழகங்கத்தை "சலமயமான சயத்தம்பம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது கங்கை வரை சென்று வென்றதற்காக அமைக்கப்பட்ட, "நீர் மயமான வெற்றித் தூண்" என்று.

அவன் தன் வெற்றியை கொண்டாட இந்த நீராலான வெற்றித் தூணை அமைத்திருக்கலாம். ஆனால் இந்த நீர்நிலை தான் இந்தப் பகுதியின் வளத்தைப் பெருக்கியது. இந்த நீர்நிலையை அமைத்தது தான் பெரு வெற்றி. இது தான் பயனுள்ளது. இந்த வெற்றிக்கான தூண் நீராலனாதல்ல, மக்கள் மனதாலானது.

# மனமயமான சயத்தம்பம் !