பிரபலமான இடுகைகள்

புதன், 24 ஜூன், 2015

மீண்டும் காலேஜுக்கு -1

ஹோட்டல் லீலா பேலஸ். எம். ஆர்.சி நகர், சென்னை. 20.06.2015. சனிக்கிழமை. காலை 09.00 மணி.

"ஏமப்பா, ஏவி.சுந்தர்ராஜ்க்கு தோள்ல பைய மாட்டி விட்டா,  காலேஜுக்கு அனுப்பிடலாம் போல, அப்படியே இருக்கான்". "இது யாருப்பா புரொபசர் மாதிரி?". "நம்ம சிவில் ராஜாமணி தான். முழுசும் வெளுத்து போச்சி". 

"நந்தா எங்க இருக்க?" "பெங்களூரு தான்பா". "சிங்கப்பூர் குரூப் எல்லாம் வந்தாச்சா?" "சொன்னவன் எல்லாம் வந்துட்டான். சுரேஷ் மட்டும் நாளைக்கு காலைல வர்றான்". "இந்த மீனாட்சிசுந்தரம் மதுரைல இருந்து கிளம்பினதுல இருந்து வாட்ஸ் அப் குருப்ல மெசேஜ் போட்டுகிட்டே இருக்கான். வந்து சேரலடா".

"இவங்க தாம்பா என் ஒயிப், பையன், பொண்ணு. ரெண்டு பேரும் மெடிக்கல் படிக்கிறாங்க" இது ராமசாமி, எக்ஸிகியூட்டிவ் எஞ்சினியர். "அது யார்றா கைக்குழந்தையோட?" "நம்ம சிவில் வெற்றி தான்டா".

ஒவ்வொரு குடும்பமாக வரவர ஒரு குழு நின்று வரவேற்றது. ஹோட்டல்  ரிசப்சன் நிரம்பி வழிந்தது. அங்கேயே நின்று அறிமுகப்படலம், நலம் விசாரிப்பு என்று போனது. ஒரு கட்டத்தில் நிர்வாகத்தினர் வந்து, லாபியில் சென்று உட்காருங்கள் என்று கேட்க வேண்டிய நிலை வந்தது.

25 ஆண்டுகள் கழித்து தான் பலரை சந்திக்கின்ற வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதனால் வந்திருக்கின்ற ஒவ்வொருவரும் அடுத்து யார் வருகிறார்கள் என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

வருபவர்களை ரிசப்ஷனுக்கு அனுப்ப, அங்கு அறைகள் ஒதுக்கப்பட்டது. பஃபே முறையில் காலை உணவு. அடுத்தத் தளத்தில் நிகழ்ச்சி நடக்கும் கூடம். நிகழ்ச்சியை நடத்த ஈவன்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

அவர்கள் ஒரு பதிவு மையம் வைத்து ஒரு படிவம் அளித்து, விருந்தினர்களின் விபரங்களை பெற்றுக் கொண்டனர். ஒரு கிட் அளிக்கப்பட்டது. அதில் ஒரு டி-ஷர்ட், குக்கீஸ் பெட்டி, குடும்ப உறுப்பினர்களுக்கும் அடையாள அட்டை ஆகியன இருந்தன.

அப்போதே கல்லூரி நிகழ்வுக்கு வந்த உணர்வு எழ ஆரம்பித்தது. ரீயுனியன் குறித்த டிஜிட்டல் போர்டுகள் அழகாக வைக்கப்பட்டிருந்தது. அதன் முன் நின்று குடும்பம் குடும்பமாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள், செல்பியும்.

காலைப் பொழுது நண்பர்கள் வருகையிலேயே கழிந்தது. ஆங்காங்கே நண்பர்கள் குடும்பங்களுக்குள்  அறிமுகம் நடந்தது. ஒரு மணிக்கு மதிய உணவு ஆரம்பித்தது. இரண்டு மணி வரை தொடர்ந்தது.

அதற்கு பிறகு நிகழ்ச்சிகள் துவங்கின...
(தொடரும்...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக