பிரபலமான இடுகைகள்

வியாழன், 18 ஜூன், 2015

சிங்கப்பூர் மக்க எல்லாம் வந்துட்டாக, வாம்மா மின்னல்

"குடிக்க தண்ணி வேணும் மாம்ஸ்" நான்.  பொறுமையாக எழுந்து,"இங்க வா"என்றார் முகில். உடன் சென்றேன். சமையலறை. "இந்தப் பைப்பு, அந்தப் பைப்பு, அந்தா உள்ளாற இருக்கற பைப்பு எல்லாத்திலயும் வர்றது ஒரேத் தண்ணி தான். எந்த இடத்தில உனக்கு புடிக்குதோ, அங்கப் புடிச்சிக் குடி".

இந்த லெக்சர் கொடுத்த நேரம் விடியற்காலை 2.00 மணி. நாங்களே வீடு கண்டுபிடிக்க முடியாம ஒரு மணி நேரம் தெரு சுத்தி, தொண்ட வறண்டு போயிருந்தோம். அது முகிலின் சிங்கப்பூர் வீடு. தண்ணிய குடிச்சிட்டு படுத்தோம்.

காலை எழுந்தோம். "இது டீ, இது மைலோ. எது சாப்புடுற". "காலையில நூடுல்ஸ் இருக்கு. இங்க சாப்பிடுறீயா? ஹோட்டல் போய் சாப்பிட்டுகிறியா?". "மதியத்துக்கு சாப்பாடு, சாம்பார் செய்வேன். புடிச்சா சாப்பிடு". "என் சிம் கார்ட எடுத்துக்க. நான் இன்னைக்கு பிஸி, உன் கூட வர முடியாது. நாளைக்கு ஜாயின் பண்ணிக்கிறேன்"

இது தான் முகில். வெரி மச் பிராக்டிகல். சிங்கப்பூரில் மூன்று நாட்களும் முகில் வீட்டில் தான் தங்கியிருந்தோம். முடிந்தால் உண்டு, இல்லை என்றால் இல்லை, வழவழா கொழகொழாவே கிடையாது. எனது கல்லூரி நண்பர். 3000 பேருக்கு மேல் சிங்கப்பூரில் வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்து வழிகாட்டியவர். அதனால் எங்களுக்கு இவர் ஒரு என்சைக்ளோபீடியா.

***************

"எங்கடா போகனும்?"கலை. "மொபைல் வாங்கப் போறேன்"நான். "சரி வா. போலாம்". "இல்லடா. வேலைய பார்றா. நான் போயிட்டு வந்துடறேன்". "இதவிட என்னடா வேல. வாடா போலாம்". "இல்ல பரவாயில்ல மாம்ஸ்". "நான் வர்றது புடிக்கலையாடா". இது கலை.

சிங்கப்பூர் போகும் நண்பர்களை உபசரித்தே கொல்வான். "ஏய் மாப்பிள்ள, நாளைக்கு சாப்பிட வீட்டுக்கு வரணும்". "மாம்ஸ், பிளைட்ட புடிக்கனும்". "ஏய், கிறிஸ்துமஸ்க்கு சாப்பிட வீட்டுக்கு நீ வர்றன்னு வீட்டுக்காரங்க கிட்ட சொல்லிட்டேன். வரலன்னா அவங்க கிட்ட சொல்லிக்க".

அப்புறம் என்ன பதில் சொல்ல, போய் நின்று விட்டேன். செம விருந்து. அது வரை கிறிஸ்துமஸை நான் அப்படி கொண்டாடியதில்லை. தான் மட்டுமல்லாமல் நண்பர்களையும் மகிழ்வித்து வாழ்பவர் நண்பர் கலைவாணன். திட்டக்குடியில் இருந்து சிங்கப்பூர் வேலைக்கு போய் இன்று தொழில் செய்பவர். உழைத்து முன்னேறியவர். இவரை கேட்டுவிட்டு தான் இரவில் ஹோட்டலை மூடுவார்கள். அதனால் இவர் ஒரு டான்.

***************

மீனாட்சி, மீனாட்சி என நண்பர்களால் அழைக்கப்படும் மீனாட்சிசுந்தரம். SMS. "ஏய், மாப்பிள்ள எப்ப வர்றே?. நேரா முகில் வீட்டுக்கு வந்திடு. பேச்சிலரா தான் இருக்கான்". "நான் காலையில வந்துடறேன். ரெடியா இரு. எஙக போகனுமோ, அங்க டிராப் பண்ணிடறேன்".

காலையில் இருந்து பத்து போன் அழைப்பு. சிங்கப்பூர் வந்தது எப்படி தெரியும் என்று கேட்டால், மீனாட்சி சொன்னான் என்பதே பதில். நண்பர்கள் நெட்வொர்க்கை கையாள்வதில் விருப்பமானவர். நண்பர்களுக்கு உதவ காத்திருப்பவர்.

இந்த நண்பர்கள் சந்திப்பிற்கு அயராமல் பணியாற்றி வருபவர். சங்கடப்படாமல் எல்லோரிடமும் தொடந்து பேசி, சந்திப்பிற்கு வருபவர்களின் எண்ணிக்கையை உயர்த்தியவர். வேலைக்கு சென்று, இன்று தொழில் செய்து முன்னேறுபவர். சிங்கப்பூரில் அண்ணாமலை நண்பர்கள் சந்திப்பென்றால், "ஆர்கனைசர்" மீனாட்சியாகத் தான் இருக்கும்.

***************

"சிவா, எத்தனை நாள் சிங்கப்பூர்ல இருக்க, என்ன புரோகிராம் ?" சுந்தரம். கணேசன் சுந்தரம் என்று அப்பா பெயரோடு சேர்த்து சொன்னால் தான் தெரியும் சிங்கப்பூரில். "மூன்று நாட்கள் தான். நண்பர்களை சந்திப்பதே முக்கியப் பணி".

"சுத்திப் பார்க்காம போனா நல்லா இருக்காதம்மா". "டைம் இல்லயே சுந்தரம்". "நீ ரெடியா இரு வர்ரேன்" என்றவர், வந்தார். காரில் ஏற்றினார். அவ்வளவு தான், சிங்கப்பூரை ஒரு ரவுண்ட் அடித்துக் காட்டி விட்டார்.

சிங்கப்பூர் பார்லிமெண்ட், சிங்க சிலை அமைந்த கரை, பாங்குகள் நிறைந்த வீதி என பார்வையாளர்கள்  பார்க்கக் வேண்டிய அவசிய அடையாளங்களை சுற்றிக் காட்டினார். எனக்கு "கைடு" இவர் தான்.

***************

"சிவா, வந்துட்டியா?". "வந்துட்டேன் மூர்த்தி". "ஈவினிங் வந்துடறேம்மா". மாலை, "சிவா, ஒரு மீட்டிங். டின்னருக்கு வந்துடறேன்". இரவு, "சிவா, எம்.பியோட ஒரு அப்பாயிண்ட்மெண்ட். காலையில பார்க்குறேன்".

அடுத்த நாள்,"சிவா, பொங்கல் விழா பத்தி மீட்டிங். மத்தியானம் பாக்கறன்". இப்படியே மூன்றாம் நாள் காலை தான் பார்த்தேன். மூர்த்தி இப்போ சிங்கப்பூர் அரசியல்வாதி, உண்மையாகவே.

மூன்றாம் நாள் வந்தவர், அடித்து வீட்டுக்கு  அழைத்து போய் டிபன் போட்டு தான் அனுப்பினார். வருங்கால "எம்.பி" கவிஞர் மூர்த்தி.

***************

"வாசு எப்ப திரும்ப சிங்கப்பூர் வந்த?" "போன மாசம் சிவா". டின்னரில் தான் பார்த்தேன். வாசுவிடம் இருந்து வார்த்தைகள்  இப்போது அளந்து தான் வருகிறது. அப்போ எல்லாம்...

பல விஷயங்களில் வாசு தான் பலருக்கு குரு. எதையாவது பேசி வாதத்தை கொண்டு வருவதில் கிங். சுற்றியுள்ள நண்பர்களை அரசியலில் கூர்மைப்படுத்தியவர் வாசு. குறிப்பாக என்னை. "குரு".

***************

நெடுஞ்செழியன். கால்பந்து வீரர் பல்கலைக்கழகத்தில். இப்போ கவிஞர். வேலைக்கு போனவர், வேலையை மட்டும் பார்க்காமல் கவிதை, புத்தகம் என தமிழ் பணி ஆற்றிக் கொண்டிருக்கிறார்.

அத்தோடு இல்லாமல் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சங்கத்தின் சிங்கப்பூர் முகாம் தலைவர். பழைய அரசியல்வாசம் விடாமல் துரத்துகிறது. "தலைவர்".

***************

# சிங்கப்பூர்லேருந்து முகில் வந்துட்டாக, கலை வந்துட்டாக, மீனாட்சி, சுந்தரம், மூர்த்தி, வாசு, நெடு மற்றும் மக்கமார் எல்லாம் வந்துட்டாக. வாம்மா மின்னல் !